சனி, 11 டிசம்பர், 2010

என் முதல் அலுவலகப் பயணம்..! (பகுதி-2)

கிட்டத்தட்ட 24 மணிநேர ரயில் பயணம், எப்படா கீழே இறங்குவோமென்று ஆகிவிட்டது. ரயில், நிலையத்தில் நிலை கொள்ளும் முன்னரே முதல் ஆளாய் பாய்ந்து இறங்க முயல, என் தோளில் தொங்கிக்கொண்டிருந்த 'தோல் பை தோழன்' அருகில் நின்ற உ.பி. மகளிரணியை லேசாக பதம் பார்த்து விட, நான் உரைத்த "சாரி" சமாதானத்தையும் ஏற்காமல் அந்த ஐம்பது வயதையொத்த 'கன்னிபெண்' என்னை ரொம்பவே புகழ்ந்தார். அவர் பேசியது ஹிந்தி என்பதை தவிர வேறு எதுவுமே புரியவில்லை எனக்கு, அதனால் அவர் புகழ்ச்சியை தாங்காமல் விரிய, விரிய சிரித்துக் கொண்டே இருந்தேன். அதற்குள் அங்கே அவரின் இரு ஆண் மெய்க்காப்பாளர்கள் வர நமக்கு கொஞ்சம் உதரலெடுக்க ஆரம்பித்தது. இருக்காதா பின்னே, ஒவ்வொருவரும் வேளைக்கு நோகாமல் இருபது, இருபத்தைந்து ரொட்டியை மல்லுகட்டும் சைசில் இருக்க, "அப்பு! பேச்சு பேச்சாத்தான் இருக்கணும் " என்கிற ரீதியில் மறுபடியும் ஒரு 'சமாதான சாரியை' சோகமான தொனியில் சொன்னேன். இவர்களும் அந்த கன்னியின் வழியிலேயே எனது சமாதானத்தை விரும்பாமல், அவர்கள் பங்குக்கு புகழோ புகழென்று புகழ்ந்து தள்ளி விட்டு சென்றார்கள். சரி விடு! சமுதாயப்பணி என்று வந்துவிட்டால் இதை மாதிரி பல இன்னல்களை, சரிவுகளை சந்தித்து தானே ஆக வேண்டும் என்று என்னையே தேற்றிக்கொண்டு அவர்கள் முதலில் இறங்கி போகட்டுமென்று வழிவிட்டேன். போகும் போது அந்த 'கன்னிப்பெண்' கடைசியாக ஒரு பச்சை மிளகாய் பார்வையை வீச, நாம் "சுப்ரமணியபுரம்" ஜெய் மாதிரி தலையை ஆட்டி கொண்டே "கோல்கெட்" புன்னகையை வீசினோம். 


கம்பெனி கெஸ்ட் ஹவுசிற்கு அழைத்துச்செல்ல எனக்காக ரயில் நிலைய வாசலில் பெயர்ப் பலகையை பிடித்துக் கொண்டு வாகன ஓட்டுனர் காத்திருப்பார் என்று மேனேஜர் கூறியதால் நிலையத்தை விட்டு வெளியே வந்து தேடலானேன். கண்ணுக்கெட்டிய தூரம் வரை பெயர் பலகையும் கையுமாய் ஒருவரையும் காணோம். மீண்டும் ஒரு முறை ரயில் நிலைய வாசல் வரை சென்று நன்றாக தேடி விட்டு வந்தேன். ம்ம்ஹும்ம் கண்ணில் ஒருவரும் தென் படவே இல்லை; பயணிகளையும், அவர்களை பின் தொடரும் ஆட்டோக்காரர்களையும் தவிர. கொஞ்சம் நேரம் காத்திருப்போம் என்று மூட்டை முடிச்சுகளை கீழே இறக்கி வைத்துக்கொண்டு நின்றிகொண்டிருந்தேன்.


நிலையத்தில் கூட்டம் கரையத் தொடங்கியது. என்னை இரு கண்கள் நோட்டமிட்டே இருப்பது போன்றதொரு உணர்வு எனக்கு. முரட்டு மீசை, தாடியுடன், என் வலது பக்கத்தில் ஒரு ஐந்தாறு அடி தூரத்திலிருந்து அதற்கு மேல் அழுக்கே ஆகா முடியாத ஒரு ஜிப்பா போன்ற உடையுடன் என்னை குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருந்தான் அவன். நான் பார்த்தவுடன் தலையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டு ஏதோ இப்போது தான் கண் பார்வை கிடைத்து உலகத்தை பார்ப்போது போன்று ஒரு பாவனை செய்வதும், பார்க்காத போது குறுகுறுவென்று பார்ப்பதுமாகவே இருந்தான். "இதென்னடா வம்பா போச்சுன்னு" நான் அவனிருந்த திசைக்கே ஒரு கும்புடு போட்டுவிட்டு கொஞ்சம் முன்னே நகர்ந்து நின்றேன். ஆனால் இப்போது அவன் என்னை நோக்கி வர ஆரம்பித்தான். வந்தான். என்னை தாண்டி சென்றான். பின் ஓரிடத்தில் நின்று மறுபடியும் அதே 'குறுகுறு'. மீண்டும் அவன் ஒரு முறை என்னை கடந்து சென்று தான் முன் நின்ற பழைய இடத்தை அடைந்து 'குறுகுறு'வை தொடர்ந்தான். "நம் பெட்டி படுக்கைகளுக்கு ஆதரவு கொடுக்கலாம்னு நிக்கிறானா?" என்று யோசித்து, நான், ஏற்கனவே மிக அருகிலிருந்த எனது மூட்டை, முடிச்சுகளை மீண்டும் அருகில் நகர்த்துவதைப் போல் நகர்த்தி எனது எச்சரிக்கையுணர்வைக் காட்டினேன். இல்லை...., ஒரு வேளை இவன் "அவனா நீ பார்ட்டியா?, ஆனா நான் அவன் இல்லடா, போய் வேற எடம் பாரு" என்று நினைத்துக்கொண்டே என்னுடைய கைப்பேசியை பேன்ட் பாக்கெட்டிலிருந்து எடுக்க முயல, பின்னால் யாரோ என்னை அழுத்தமாக உரசி விட்டு செல்வது போன்று இருந்தது. திரும்பிப் பார்த்தால் நம் 'குறுகுறு' பார்ட்டி தான் என்னை இடித்துவிட்டு ஓடி கொண்டிருந்தான். தடுமாறிய சிறு பதற்றத்தில் என்னை அறியாமல் என் கை பின்சென்று என் பர்ஸ் பத்திரமாக இருக்கிறதா என்று உறுதி செய்ய முயல, மின்சாரம் தாக்கியதைப் போல் ஓரதிர்ச்சி எனக்கு. பர்ஸ் இல்லை, நான் களவாடப்பட்டுவிட்டேன். 


என்னையும் மீறி அனிச்சையாய் திருடன்..., திருடன்... பிடிங்க..., பிடிங்க...! என்று நான் தமிழில் கீதமிசைக்க கேட்பாரில்லை அங்கே. எத்தனை முறை சோர்.. சோர்.. பக்கடோ...பக்கடோ...என்று 'பதினைந்து ரூபாய்' புத்தகத்தில் படித்து பதிவு செய்த ஒரு வாக்கியம் எனக்கு 'அல்வாவும், பக்கோடாவும்' கொடுத்துவிட்டு எங்கே போய் தொலைந்ததென்றே தெரியவில்லை. எனக்கு நன்கு தெரிந்த "ஏக் காவ்ன் மெய்ன் ஏக் கிஸ்ஸான் ரகு தாத்தா" என்ற 'பாக்யராஜ்'ன் இலக்கிய ஹிந்தி கூட மறந்து போக, என்ன செய்வதென்றே தெரியாமல், என்னுடைய மூட்டை முடிச்சுகளை தூக்கி கொண்டு அவனை விரட்ட எத்தனித்த போது தான் அந்த அதிசயத்தை எனது இடது பக்கத்தில் பார்த்தேன். ஒரு வினாடியில் போன உயிர், மறு வினாடியில் உடலுடன் ஐக்கியமான அதிசயம். குப்பையில் கிடைத்த கோமேதகமாய் எனது பர்ஸ் கீழே.  "கடவுள்னு ஒருத்தன் இருக்கான்யா" என்று ஆனந்தப்பட்டுக்கொண்டே அதை கையிலெடுத்து, எல்லாம் இருக்கிறதா என்று சரி பார்த்தேன். முருகன், பெற்றெடுத்த மவராசியும், மவராசனும், நான்கு விசிடிங் கார்ட்கள், இரு நூறு ரூபாய்ப் பணம், மற்றும் சில குப்பை கூளங்கள் என்று அனைத்துமே இருந்தன. ச்ச் ச்ச்ச்சு ஏமாந்திட்டியே செல்லம்..., என்று ''குறுகுறு' பிக்பாகெட் பார்ட்டியை நினைத்துக் சிரித்துக் கொண்டேன். இதை நண்பர் ஒருவரிடம் பின்னாளில் பகிர்ந்து கொண்ட போது அவர் சொன்னது "அவன் உங்க பர்ஸை அடிச்சிட்டு ஓடிருந்தாலும் ஏமாந்துதான் போயிருப்பான்". ஹும்ம்ம்... வயிற்றெரிச்சல் கேசுகள்.  


பின்னர் கான்பூர் பேக்டரி 'HR' மேனேஜருக்கு போனை போட்டு காறி, காறி துப்பி விட்டு ஒரு ஆட்டோவை பிடித்துச் சென்றேன். ஆட்டோவில் மீட்டரும் இல்லை ஒரு மண்ணும் இல்லை. ஒரு கண்டத்தில் இருந்து இப்போது தான் தப்பி வந்ததினாலும்,களைப்பினாலும், எதை பற்றியும் கேட்காமல் ஏறி அமர்ந்தேன் அது ஒரு வில்லங்கத்தில் விடியுமென்று யோசிக்காமலேயே. நான் அடைய வேண்டிய 'கிளாசிக் அபார்ட்மன்ட்சை' வெறும் ஏழெட்டு நிமிடத்தில் அடைந்தது ஆட்டோ. இந்த மிக நீண்ட!!! ஆட்டோ பயணத்திற்கு அந்த ஆட்டோக்கார புண்ணியவான் கேட்ட இருநூறு ருபாய் கூலியை எதிர்த்து நான் ரோட்டிலயே என்னுடைய ஹிந்தி புலமையால் வாதிட, அவனுக்கு நன்றாகவே புரிந்துவிட்டது நான் ஒரு ஹிந்தி தெரியாத மாக்கானென்று. அப்புறம் அந்த வழயில் தொப்பையை குறைக்க ஜாக்கிங் போய்கொண்டிருந்த ஒரு ஜென்டில்மேனை பஞ்சாயத்துக்கு வந்து தலைமையேற்று பைசல் பண்ணித்தருமாறு சர்வதேச மொழியின் துணையால் அழைப்புவிடுத்தேன். அவரும் அழைப்பையேற்று அந்த 'ஆட்டோ சங்கரை' ஒரு பிடி பிடியென்று பிடித்து, செருப்பாலடிக்காத குறையாய், எண்பது ரூபாய்க்கு அவனை படியச் செய்தார். "உங்களை மாதிரி ஆளுங்களாலதான்யா எல்லா ஆட்டோகாரங்களுக்கும் கெட்ட பேர்" என்று ஒரு பஞ்ச் கொடுத்து அடி வயித்திலிருந்து காறி, காறி துப்பிவிட்டு சென்றார். அந்த ஆட்டோக்கார அண்ணாச்சி 'இஞ்சி தின்ன மங்கி' மாதிரி விழித்ததை பார்ப்பதற்கு ரொம்பவே குஷியாயிருந்தது. கான்பூர் கண்ணியவானுக்கு ஒரு ராயல் சல்யுட் அடித்தேன். அந்த அபார்ட்மன்டிலேயே கிட்டத்தட்ட மூன்று மாதத்திற்கும் மேலான ஜாகை எனது, இருந்தும் அவரை மறுபடியும் ஒரு முறை கூட சந்திக்க இயலாமல் போனது வருத்தமே....!


ஆக, பத்து கிலோமீட்டர் நம் செந்தமிழ் நாட்டின் எல்லையை கடந்து விட்டாலே என் தாய் தமிழும் ஆபத்துக்கு உதவிக்குகந்ததில்லை, அரைகுறையாக படித்த பதினைந்து ரூபாய் புத்தகமும் உதவிக்கு வரவில்லை. ஆகையால் முதலில் நாம் வளர்வோம் (மற்ற தேவையான மொழிகளையும் அரவணைத்து), நம் மொழி வளர்க்க. 
(அப்பாடா...! மெசேஜுன்னு ஒரு பிட்ட போட்டாச்சு, இனி நிம்மதியா தூங்குவேன்....!)


--விளையாடும் வெண்ணிலா....

10 கருத்துகள்:

Butter_cutter சொன்னது…

நல்லா இருக்கு

pichaikaaran சொன்னது…

"கடவுள்னு ஒருத்தன் இருக்கான்யா" என்று ஆனந்தப்பட்டுக்கொண்டே அதை கையிலெடுத்து”

ஹ ஹா ஹாஆ

Unknown சொன்னது…

//போகும் போது அந்த 'கன்னிப்பெண்' கடைசியாக ஒரு பச்சை மிளகாய் பார்வையை வீச, நாம் "சுப்ரமணியபுரம்" ஜெய் மாதிரி தலையை ஆட்டி கொண்டே "கோல்கெட்" புன்னகையை வீசினோம்//
super! :-)

Sathish Kumar சொன்னது…

//Hameed சொன்னது...
நல்லா இருக்கு//

வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி தோழரே....!

Sathish Kumar சொன்னது…

//பார்வையாளன் சொன்னது...
"கடவுள்னு ஒருத்தன் இருக்கான்யா" என்று ஆனந்தப்பட்டுக்கொண்டே அதை கையிலெடுத்து”
ஹ ஹா ஹாஆ//


என்னை குளிர வைத்த கருத்துரைக்கு நன்றி பார்வையாளரே...!

Sathish Kumar சொன்னது…

//ஜீ... சொன்னது…
போகும் போது அந்த 'கன்னிப்பெண்' கடைசியாக ஒரு பச்சை மிளகாய் பார்வையை வீச, நாம் "சுப்ரமணியபுரம்" ஜெய் மாதிரி தலையை ஆட்டி கொண்டே "கோல்கெட்" புன்னகையை வீசினோம்//
super! :-)//

மிக்க நன்றி தலைவா...!

ஆனந்தி.. சொன்னது…

very very nice:)))

Sathish Kumar சொன்னது…

//ஆனந்தி.. சொன்னது…
very very nice:)))//

வாங்க மதுரைக்காரி...!
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஆனந்தி..!

சௌந்தர் சொன்னது…

ஹா ஹா ஹிந்தி தெரியலனை என்ன என்ன கஷ்டம்...உங்க அனுபவத்தை ரொம்ப நல்லா சொல்லி இருக்கீங்க

Sathish Kumar சொன்னது…

நன்றி சௌந்தர் ....ஆனா, நம்ம நண்பர்கள் ஹிந்தி தெரியாம அனுபவிச்ச கொடுமைகளுக்கு முன்னாடி இதெல்லாம் ஒன்னுமே இல்லீங்க...!

நாம் எல்லாரும் ஹிந்தி ஓரளவுக்காவது கத்து வச்சிக்கனுமுங்க...!

கருத்துரையிடுக