வெள்ளி, 13 மே, 2011

தமிழன் கையிலெடுத்த சாட்டை...!


"தமிழ்நாடு"-இந்தியாவின் வேறு எந்தப் பகுதியிலும் இம்மண்ணில் வெடித்து கிளம்பியது போன்று மொழி எழுச்சியும், திராவிடச் சிந்தனையும், பகுத்தறிவு வாதங்களும், கடவுள் மறுப்பு இயக்கங்களும் துளிர்த்து வேர் விட்டிருக்கிறதா என்றால், அதற்கு பதிலுரைப்பது கடினமே. தேசமே மத, சாதிச் சண்டைகளில் மிருகத் தனமாய் உலா வந்த தேதிகளில் இங்கே "கடவுளா...எங்கே என் கண் முன் வரச் சொல்..." என்று பொங்கியும், அரிசன ஆலயப் பிரவேசங்கள் நிகழ்த்தியும் மற்றோருக்கு புத்தியுரைத்தது இந்த பகுத்தறிவு புரட்சி பூமி. ஆயிரமாண்டுகளுக்கு முன்னரே அணை கண்டு நீர் தேக்கி முப்போகம் விளைத்த சோழ மாமன்னனிலிருந்து , உலகை வியப்பிலாழ்த்திய விஞ்ஞானிகள் சர் சி.வி. ராமன், சந்திரசேகர், வெங்கட்ராமன், அப்துல் கலாம் மற்றும் வீரர்கள், கலைஞர்களான விஸ்வநாதன் ஆனந்த், ஏ. ஆர். ரஹ்மான் வரை என்று இந்த அறிவார்ந்த சமூகம் இந்த தேசத்திற்கு மட்டுமின்றி பாருக்கே கொடுத்த, கொடுத்துக் கொண்டிருக்கிற கொடைக்கு நிறுத்தற்குறிகளே இல்லை எனலாம். 
ஆனால் இப்படிப்பட்ட ஒரு அறிவாற்றல் செறிந்த சமூகத்தை ஆள  ஐயா காமராசரைத் தவிர்த்து நாம் தேர்ந்தெடுத்த தலைவர்கள் எந்த விதத்தில் நம்மையும் நம் வல்லமையையும் அடையாள படுத்தும் வண்ணம் இருந்திருக்கிறார்கள் என்றால், எவரும் இல்லை என்றே எண்ண தோன்றுகிறது. அறிஞர் அண்ணாவின் கால்கள் கோட்டையில் பதிந்த தினத்திலிருந்து இன்று வரை தேசியக் கட்சிகளை வேரறுத்து திராவிடக் கட்சிகளை அரியணை ஏற்றியே அழகு பார்த்து வருகிறது எமது தாய்த் தமிழ் பூமி. மிக குறுகிய காலத்திலேயே காலன் கவர்ந்து கொண்டான் அண்ணாவை.  "அறுபதுகளின் இறுதிகளில், ஒரு இளைஞனின் செய்கைகள் மாநிலத்தையே உற்று நோக்க வைத்தன, அந்த இளைஞன் ஒரு சக்திமிக்க, மாநிலத்தின் எதிர்கால அரசியல் சின்னமாக கருதப்பட்டான். இளைஞர் பட்டாளங்களை தன் பக்கம் காந்தமாக இழுத்து கட்டி வைத்திருந்தான். அந்த இளைஞன் வேறு யாருமல்ல, இன்று தன் அனைத்து திறமைகளையும் நூதனமாய் கொள்ளைகள் அடிப்பதிலும், அண்ணா தோற்றுவித்த கட்சியை குடும்பம் கூறு போட இடம் கொடுத்ததிலும் செலவிட்டு அவைகளை தொலைத்தே விட்ட கருணாநிதி தான் அந்த இளைஞன்" என்று என் நண்பன் ஒருவனின் தந்தை கூறியது ஞாபகத்திற்கு வருகிறது இப்போது. இவருக்கு பின் வந்த எம்.ஜி.ஆரோ நோவுற்றே மறித்துப் போனார். ஜெயலலிதா அம்மையாரோ இம்மண்ணின் நாடித்துடிப்பான ஏழை விவசாயிகளை நெருங்கவே முயலவில்லை இத்தனை வருடங்களில். 

கிட்டத்தட்ட நாற்பது வருடங்களாக இரட்டை ஆட்சி முறையே நடை பெற்றுக்கொண்டிருக்கிறது தமிழகத்தில். எவரும் இங்கே தம் நற்செயலுக்காக வென்று வருவதில்லை. மாறாக, முந்தைய ஆட்சியாளரின் செயலற்ற தன்மை, ஒழுக்கம், நேர்மை சிறிதுமற்ற, களவுகள் நிறைந்த ஆட்சியால் விளைந்த தோல்வியே மற்றவரை வெற்றி பெற வைக்கிறது. நாற்பது ஆண்டுகளுக்கு முன் தேசியக் கட்சியை மண்ணை கவ்வ வைத்த தலைவர்களைப் போன்று இன்று இந்த இரு திராவிட கழகங்களை தூக்கி எறிய வல்ல ஆற்றல் கொண்ட எவரும் மக்களால் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. மக்களும் தம் வாழ்க்கை குறைகளை நிவர்த்தி செய்யும் வல்லமை வெள்ளித் திரைக்கே இருப்பதாக அதைச் சுற்றியே தம் அரசியலறிவை வளர்க்கிறார்கள். மிக அருகில் இருக்கும் மாநிலமான கேரளத்திலும், யூனியன் பிரேதசமான புதுச்சேரியிலும் இத்தேர்தலில் வழக்கமான முடிவுகளை தவிர்த்து மாற்றங்களை நிகழ்த்திக்காட்டிய மக்களின் எண்ணவோட்டமும், மனவோட்டமும் என்று நமக்கு வரப் போகிறது என்று தெரியவில்லை. 

ஆனாலும், ஒரு பெரு மகிழ்ச்சி தமிழக தேர்தல் முடிவுகளிலிருந்து. மக்கள் பணம் பெற்றுக் கொண்டு வாக்களிக்கிறார்கள்; இலவசங்களுக்கு விலை போகிறார்கள் என்பன போன்ற ஊடக செய்திகள் எந்த ஒரு கட்சி சார்பற்ற, வளர்ச்சி நோக்குற்ற தமிழரின் நெஞ்சை பிளந்தே இருக்கும். ஆனால் பணத்தை பெற்றுக்கொண்டு அறிவை விற்று விலை போனவர்களாகவும், தூக்கி எறியப்பட்ட இலவசங்களை பொறுக்கிச் செல்லும் பிச்சைக்காரர்களாகவும் தம்மை கருதியிருந்த அரசியல்வாதிகளை, பெருமளவில் வெளியே வந்து வாக்களித்து, தங்களின் விரல் நுனி தீர்ப்பால் அவர்களின் எண்ணத்தை தம் பாதகைகள் கொண்டு அடித்திருக்கிறார்கள். எழுபத்து எட்டு சதவிகித வாக்குப்பதிவும், அதை ஒட்டிய தீர்ப்பும் இதையே கட்டியம் கூறுகின்றன.


இதோ மறுபடியும் ஒரே மாதிரியாக சுழலும் தீர்ப்பு. இம்முறை கலைஞரின் தவறுகள் ஜெயலலிதாவை அரியணை ஏற்றி இருக்கின்றன. விலைவாசி என்பது எந்தக் காலத்திலும் இறக்கத்தை சந்திக்கப் போவதில்லை, அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை "உலகமயமாக்கல்" உதவியுடன் மெல்ல, மெல்ல மக்களும் அடைந்து கொண்டே வருகிறார்கள்.  ஆதலால், வெற்று துவேஷ  கோஷங்களையும், இலவச வாக்குறுதிகளையும் மட்டும் நிறைவேற்றி, வாக்களித்த மக்களை மறுபடியும் மூடர்கள் ஆக்காமல், நல்ல பயனுள்ள திட்டங்கள் வகுத்து மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல முனைப்போடு செயல்பட வேண்டும். மக்களின் நம்பிக்கையை பொய்யாக்காமல், அவர்களின் மேலான தீர்ப்பு தவறல்ல என்று நிரூபிக்க வேண்டும். 

இலவசங்கள் தேவைதான். ஆனால் அவை நம் அரசியலர்கள் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் சொந்த பணத்தில் வாரி இறைப்பதைப் போல் பீற்றிக் கொள்ளும் தொலைக்காட்சியையும் , மடிக்கணிணியையும் இன்னும் பல மனமகிழ் பொருள்களையும் குறிப்பதல்ல. இவற்றை எல்லாம் கொடுத்து நொடி நேர தனிமனித சந்தோஷத்தை ஏற்படுத்தி அதன் மூலம் அரசியல் லாபம் அடைவது மட்டுமே அவர்கள் நோக்கம்.  மாறாக, நமக்குத் உண்மையிலேயே தேவையான இலவசங்கள் இவைகளே...
  • மக்கள் நோய்களற்ற ஆரோக்கிய வாழ்க்கை வாழ வழி வகை செய்ய வேண்டும். பணம் நோய் தீர்க்கும் மருந்தாய் இருப்பதை மாற்ற வேண்டும். அரசு மருத்துவமனைகள் புனித சேவைத் தளங்களாய் உருப் பெறல் வேண்டும். 
  • இளம் தொழிலதிபர்களையும், ஆராய்ச்சி மாணவர்களையும் ஊக்கப்படுத்துதல் வேண்டும். இலவச பயிற்சியும் தேவையான பொருளுதவிகளும், ஆலோசனைகளும் நல்ல பயன்கள் தரும் வகையில் வடிவம் பெற வேண்டும். இதற்கான துறைகள் ஏற்கனவே இருந்தாலும், பயனாளிகளின் எண்ணிக்கையை பார்த்தாலே நமக்கு புரிந்து விடும் இவற்றின் செயல்பாடுகள். 
  • உலகின் அசுர வளர்ச்சிக்கேற்ப உலகத்தரம் வாய்ந்த தரமான கல்வி கடைக்கோடி தமிழனுக்கும் இலவசமாய் கொடுக்கப்பட வேண்டும்.
  • சுகாதாரமான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். 
மேலும், 
  • மக்களை உயர்ந்த பண்புகளுடைய மனிதர்களாய் மாற்றம் பெற செய்ய வேண்டும். மாசு மருவற்ற சமூகம் செய்ய வேண்டும். 
  • சுதந்திரம் பெற்று அறுபது ஆண்டுகள் கழிந்தும் எந்த அடிப்படை வசதிகளிலும் (குடிநீர், உணவு, உறைவிடம், மின்சாரம்) தன்னிறைவை அடையாத நிலை களையப்பட வேண்டும். 
  • ஒழுக்கம், தூய்மை இவற்றை பேணி உழைக்கத் தயங்காத மக்களை உருவாக்க முனைதல் வேண்டும். 
  • விவசாயம் முடங்கியே போய் விட்டது. நூறு ஆண்டு கால அண்டை மாநிலகளுடனான நதிநீர்ப் பங்கீட்டு பிரச்சினைகளால் தரிசாகிப் போன அவர்களின் வாழ்க்கையை உயிர் பெறச் செய்ய வேண்டும். அந்த பகுதிகளில் தொழில் தொடங்க உலக/இந்திய நிறுவனங்களை ஊக்கப்படுத்த வேண்டும். அவர்களுக்கு முன்னுரிமைகளையும் சலுகைகளையும் கொடுத்து அந்நகரங்களை தொழில் நகரங்களாகவும், கல்வி நகரங்களாகவும் மாற்ற வேண்டும். 
  • சென்னை நகர் மட்டுமின்றி மாநிலத்தின் பிற பகுதிகளும் தொழில் மயமாதல் வேண்டும். 
இவைகள் யாவும் ஒரு ஆட்சியாளர் முன் உள்ள சவால்கள் அல்ல. இவைகள் ஒரு ஆட்சியாளரின் பணிகளில் சில. 

சரி, வென்றவரின் கடமைகளை பார்த்தாகி விட்டது. தோற்ற கலைஞர்....? எந்த காலத்தில் தமிழகம் சிறப்பான எதிர்க்கட்சியை கண்டிருக்கிறது. அப்படி என்றால்....!!?? அவருக்குத்தான் அவருடைய முழு நேர தொழிலான திரைப்படம் பார்த்தல், கதை வசனம் எழுதுதல், பாராட்டு விழாக்களில் பாராட்டு மழைகளில் நனைதல் என்று பல தலை போகிற அலுவல்கள் இருக்கின்றதே. மக்களே...., ஜாக்கிரதை,  மிகுந்த எச்சரிக்கையாய் இருங்கள். இனி பல பொன்னர் சங்கர்களும், பெண் சிங்கங்களும், இளைஞன்களும் சீறி வெளிவரக் கூடும். 

(படம் தந்த கூகிள்'க்கு நன்றி)
--விளையாடும் வெண்ணிலா....