வெள்ளி, 28 ஜனவரி, 2011

அப்பாவுக்கு வயசாச்சில்லப்பா...!

ஐந்து வருடங்களுக்கு முன் பணி நிமித்தமாக ஹரியானாவில் உள்ள 'பாவல்' என்ற தொழில் நகருக்கு சென்றிருந்தேன்.  'பாவல்' NCR என்று சொல்லப்படும் தேசிய தலைநகர் மண்டலத்துக்குட்பட்டது.  'டெல்லி-ஜெய்பூர்' தேசிய நெடுஞ்சாலை NH-8'ல் டெல்லியிலிருந்து நூறாவது கிலோமீட்டரில் அமைந்திருக்கும் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் சிறப்பு பொருளாதார மண்டலப் பகுதி.  தேசிய நெடுஞ்சாலையின் இரு மருங்கிலும் பொட்டலாய் தரிசு நிலங்களே.  பாக்டரி, அலுவலகம், இரண்டுமே பாவல்'லில் தான்.  நான் தங்கியிருந்த கெஸ்ட் ஹவுஸ் ராஜஸ்தானில் உள்ள 'பிவாடி' என்ற இடத்தில் இருந்தது. 'ஆஷியானா கார்டென்ஸ்' என்ற ரம்மியமான அப்பார்ட்மென்ட்சில் தான் என்னுடைய நான்கு  மாத ஜாகை.  அந்த சமயத்தில் பணி மாத்திரமே ஜனித்திருந்த, தனிமை அதிகம் நிறைந்த என்னுடைய நொடி, நிமிட, மணித்துளிகளை மாற்றியவர்கள் இருவர்.

ஒருவர் நண்பர் 'மனீஷ் நிநாவே', குவாலியர் தான் பூர்வீகம்.   நான் இருந்த பிளாட்டிற்கு எதிரே இருந்த பிளாட்டில் தங்கி இருந்தவர்.  எங்களுடைய நட்பு முதல் சந்திப்பில் "ஹே ட்யுட்...! வாஸ்ஸப்..??"  என்று பீட்டரின் இலக்கிய நடையில் அவர் எடுத்து விட்ட இரண்டு பிட்டிலேயே தொடங்கியது.  இருவரில் மற்றொருவர் என்று நான் குறிப்பட்டது ஒரே ஒருவரை அல்ல, ஒரு குடும்பத்தை.  அந்த குடும்பத்துடனான முதல் சந்திப்பு மிகவும் சுவையானதொரு சம்பவம்.  பணியும் ப்ளாட்டுமாக ஆமையாய் நகர்ந்த ஆரம்ப நாட்களில் ஒரு நாள், மாடிப்படி வழியாக மேலே சென்று கொண்டிருந்த போது, நன்கு பரிச்சயமான தென்னிந்திய திரைப்பட பாடல் ஒன்று எங்கிருந்தோ மிகவும் மெலிதாக ஒலித்து கொண்டிருந்தது.  பாடல் வந்த திசையை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். 'பார்த்த முதல் நாளே..... பாடல் இப்போது தெளிவாக காதுகளில் விழுந்தது.  பாடல் ஒலித்துக் கொண்டிருந்த தரைதள  முதல் பிளாட்டின் முன் நின்றேன்.  கதவு திறந்தே இருந்தது. இரண்டு முறை அழைப்பு மணியை  அழுத்தியும் யாரும் வரவே இல்லை.  மீண்டும் ஒரு முறை அழுந்த அழுத்திவிட்டு உள் நுழைந்தேன். "கோன் ஹை? கியா சாஹியே?", என்று சற்றே பீதியுடன் எதிர் வந்து நின்றார் முப்பதுகளின் தொடக்கத்தில் இருக்கும் ஒரு பெண். நான் தமிழ் பாடல் என்னை அழைத்து வந்த கதையை சொன்னவுடன் தான் தாமதம், "தமிழா நீங்கள்...!, வாங்க..!, வாங்க...!", என்று குதூகலமாய் வரவேற்று, சில பல விசாரிப்புகளுக்கு பிறகு  தடபுடலாய் உபசரித்தார்.   அவர் கணவர் 'பாவல்' நகரில் ஓர் நிறுவனத்தில் மேலாலளராக பணியாற்றுவதாகவும், ஐந்து வயதில் ஒரு ஆண் குழ்ந்தை இருப்பதாகவும் கூறினார்.

வார நாட்களின் மாலை பொழுதுகளை மனீஷுடன் சிறு நடைகளிலும், உரையாடல்களிலும், வார இறுதி நாட்களை பாசமிக்க தமிழ் குடும்பத்துடனும் கழித்து வந்தேன்.மனீஷ் 'ஆஷியானா கார்டென்ஸ்'யின் பின் திசையில் சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் ஒரு கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று நீண்ட நாட்களாக கூறிக் கொண்டே இருந்தார். அந்த சனிக்கிழமை போகலாம் என்று முடிவெடுத்து என்னுடைய 'கேர்டேகர்' காந்திலாலிடம் விஷயத்தை தெரிவித்தோம்.  திரும்ப சிறிது தாமதம் ஆனாலும் ஆகலாம்,  இரவு உணவை தயாரித்து வைத்துவிட்டு காத்திருக்கும் படியும் கூறினோம். அவர் சற்றே பீதி கலந்த பதட்டத்துடன், "கருக்கலில் செல்வதற்கு கோவில் செல்லும் பாதை உகந்தது அல்ல, தாங்கள் இருவரும் நாளை காலை செல்லலாமே",...என்றார் தயக்கத்துடன்.  புலி, நரி என்று உயிருக்கு ஆபத்தான காட்டு விலங்குகள் திரியும் காட்டு பகுதி வழியாகவே அந்த கோவிலுக்கு செல்ல முடியும் என்று கூறி என்னை மிரள வைத்தார். ஆனால், மனீஷ் போயே தீர வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கவே அங்கயே பழம் தின்று கொட்டை போட்டு ஆல விருட்சமாய் விரிந்திருக்கும் காந்திலாலின் பேச்சை புறந்தள்ளி புறப்பட்டோம். மணி அப்போது மாலை 6.30ஐ தொட்டிருந்தது.  அப்பார்ட்மென்ட்சின் வெளிப்புற இடது பக்கத்து காம்பவுண்ட் சுவரை ஒட்டியிருந்த ஒற்றையடிப் பாதையில் நடக்கலானோம்.

இருள் மெல்ல படர தொடங்கி இருந்தது. ஒற்றையடிப்பாதை தாண்டி இப்போது தரிசு நிலத்தில் எங்கள் பயணம்.  வெளிச்சமின்மையும், ஆள் நடமாட்டமின்மையும் எனக்குள்  சிறு பயத்தை விதைக்க, அதை போக்க மனீஷுடன் பேச்சுக் கொடுத்துக் கொண்டே வந்தேன்.  அவரும் ஆர்வத்துடனும், பலத்த சிரிப்புகளுடனேயும் மிகுந்த உற்சாகத்துடன் உரையாடி கொண்டே வந்தார்.  எதிர் திசையில், தூரத்தில் இரு உருவங்கள் எங்களை நோக்கி வந்து கொண்டிருப்பதை போன்று நிழலாடியது. ஆணும், பெண்ணுமாய் இருவர் -இப்போது அவர்களுக்கும் எங்களுக்குமான இடைவெளி குறைந்து இருந்தது.  உற்று நோக்கிய பார்வையுடன், கனத்த அமைதியுடன் கடந்து சென்றார்கள் எங்களை.  இருள் இப்போது அடர்த்தியாய் பரவி இருந்தது.  எங்கோ விலங்குகள் ஊளையிடும் சத்தம் எங்கள் பாதங்கள் முன்னேற, முன்னேற வலுத்துக் கொண்டே சென்றன.  பாதை இப்போது இரு புறத்திலும் மரங்களடர்ந்த வழியினூடே பயணித்தது.  காந்திலால் சொன்ன காட்டுப்பகுதி இதுவாக இருக்குமோ என்று யூகித்துக் கொண்டேன்.  "என்ன ரொம்ப தூரம் வந்து விட்டோம் இன்னும் கோவில் இருக்கும் திசையே கண்ணுக்கு தெரியவில்லையே..?",  என்றேன் மனீஷிடம்.  "முதலில் ஒரு கிராமம் வரும், அதை தாண்டி தான் அந்த கோவிலுக்கு செல்ல முடியும் என்று காந்திலால் சொன்னார்" என்றார் மனீஷ்.  "என்னது சொன்னாரா... அப்போ உங்களுக்கு தெரியாதா...வெளங்கிடும்...", என்று கேட்டு கொண்டே தொடர்ந்தேன்.

கனத்த அமைதியில் காட்டுப் பூச்சிகளின் பேரிரைச்சல் பயத்தை அதிகப்படுத்தியது.  "ஒரு ஐடியா ட்யுட்...!" என்று உரத்த குரலில் அலறினார் மனீஷ். அருகில் இருந்த ஒரு கோதுமை வைககோல்போரை காட்டி இதன் அருகில் நான் நிற்பது போல் ஒரு போட்டோ எடுங்கள் என்றார். உங்களுக்கு எப்படி இப்படி நடுக்காட்டில் இது மாதிரி எல்லாம் தோன்றுகிறது, இந்த இருட்டில் ஒன்றுமே தெரியாது வாங்க போகலாம் என்று நான் கூறியதை ஏற்காமல், அவருடைய 'சோனி' மொபைல் கேமராவில் என்னை படமெடுக்க வைத்தார். "அல்டிமேட்...!" என்று எடுத்த புகைப்படத்தை பார்த்து மீண்டும் ஒரு அலறல் அவரிடமிருந்து. என்ன அல்டிமேட்டோ...நிஜத்தை விட பேரிருளாய் தெரிந்தது புகைப்படம்.

அந்த காட்டு பாதையை கடந்து விட்டதை போன்ற உணர்வு எனக்கு வந்தது.  எங்கோ தூரத்திலிருந்து மனித சத்தங்கள் காதில் விழத்தொடங்கின.  இன்னும் சிறுது நேர நடைக்குப் பிறகு, இங்கும் அங்குமாய் மனிதத் தலைகள் தெரிய ஆரம்பித்தன. "கிராமம் அடைந்து விட்டோம் என்று நினைக்கிறேன்", என்றேன் நான். வீடுகள் நிறைந்த பகுதிக்குள் பாதை நீண்டது. கிராமமே இருளில் மூழ்கி இருந்தது. ஒவ்வொரு வீடும் சராசரியாக இரண்டு அல்லது மூன்று மாடிகளை கொண்டிருந்தன. விசாலாமான, பெரிய வீடுகள். அகலமான பரந்த முன் வாசல்கள், மரங்கள் என்று நாம் ஒரு காட்டுப்பகுதியின் வாயிலாக தான் இந்த கிராமத்தை அடைந்தோம் என்று நம்பவே முடியாத அமைப்பிலான வீடுகள்.  பெரும்பாலான வீடுகளின் முன்பு குறைந்தது ஒரு நான்கு சக்கர வாகனத்தைக் காண முடிந்தது. பல வீடுகளின் முன் இரண்டு மூன்று வாகனங்களும், ஒரு ட்ராக்டரும் என்று வசதியின் வனப்பு வாசலை தாண்டி பிதுங்கி வழிந்து கொண்டிருந்ததன.   "மின்வெட்டு போல் இருக்கிறது, இட்ஸ் எ பேட் ஈவ்னிங் டுடே" என்ற என்னை மனீஷின் "திஸ் வில்லேஜ் இஸ் எட் டு பி எலெக்ட்ரிபைட்" என்னும் வார்த்தைகள் அதிரத்தான் வைத்தன. "அரசாங்கம் இந்த பகுதியை சிறப்பு பொருளாதார பகுதியாக அறிவித்து தொழில் தொடங்க அனுமதி அளித்தது. வேண்டிய நிலங்களை நேரடியாக விவசாயிகளிடமேயே தொழில் தொடங்க விழைவோர் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று ஆணையும் பிறப்பித்தது. தொழிலதிபர்கள் அலை கடலென திரண்டு இவர்களின் விலை மதிப்பில்லா நிலங்களை பல கோடி ரூபாய் கொடுத்து வாங்கியதால் தான் இப்படி ஒரு விசித்திரமானதொரு விஷயத்தை நாம் காண்கிறோம்", என்றார் மனீஷ்.மெலிதான தென்றல் மனித சத்தங்களின் வழியே எங்களை வருடி சென்றது. கிராமத்து வாசம் கமழ்ந்திருந்த சுகந்தமான காற்று. வானத்தில் தவழ்ந்து கொண்டிருந்த அந்த நிலாவினை ரசித்த படியே மனம் மகிழ்ச்சியில் திளைக்க நடந்து கொண்டிருந்தேன். ஒவ்வொரு வீட்டிலும், குடும்பத்து உறுப்பினர்கள் அனைவரும் அகன்று விரிந்த, வெளிப்புற முற்றத்தில் அமர்ந்து அளவாலாவிக் கொண்டிருந்தனர். குழந்தைகள் இங்கும் அங்கும் விளையாடி கொண்டிருந்தனர். அருகிலேயே, அடுப்பை மூட்டி, பெண்கள் தங்கள் கைகளாலேயே ரொட்டியை சுட்டு சுடச்சுட அனைவருக்கும் பரிமாறி
கொண்டிருந்தார்கள். பாட்டியின் கதை கேட்கும் பேரன், தாத்தாவின் கழுத்தை சுற்றி படர்ந்திருக்கும் பேத்தி, தந்தையின் தலை வருடும் மகள், தாயின் இடுப்பை அணைத்த மகன், தாயின் தோளில் உறங்கும் குழந்தை, "எப்படியொரு சொர்க்க வாழ்க்கை வாழ்கிறேன் பார்..." என்கிற பெருமித முகத்துடன் குடும்பத் தலைவன் என்று ஒவ்வொரு வீட்டிலும் நிறைந்திருந்த அந்த அற்புதமான, வார்த்தையிலடங்கா வாழ்க்கையை எப்படி உரைப்பது.  இந்த அருமையான காட்சியில் எங்களை இழந்து நாங்கள் ஒவ்வொரு வீடாக நகரும் போது, பல வீடுகளில் எங்களையும் பாசத்துடன் அவர்களின் இரவு உணவில் கலந்து கொள்ள அழைத்தனர்.  அவர்களின் அன்பான அழைப்புகளை நன்றியுடன் மறுத்து முன்னேறினோம்.  எதிரெதிர் வீடுகளில் பல மாதங்கள் வசித்தாலும், முகம் பாரா நவ நாகரீக நகரத்து கலாச்சாரத்தை நினைக்க, நினைக்க வேதனையாய் இருந்தது.  இவர்களின் இயற்கையோடு இணைந்த அர்த்தமிக்க பரிவான வாழ்க்கையை, முகமறியா மனிதர்களுக்கும் பந்தியிட்டு உணவு பகிரும் உன்னத குணத்தை எண்ணி எண்ணி சிலாகித்துக் கொண்டிருந்தேன்.  


"அவசர வாழ்க்கைக்காக பல அவசிய குணங்களை அவிழ்த்து எறிந்து விட்டு ஓடிக் கொண்டிருக்கும் நம்மை போன்ற நகர வாசிகள் இன்னும் என்னென்னவெல்லாம் இழக்க காத்து கொண்டிருக்கிறோமோ தெரியவில்லை".

வழியில் சிலரை விசாரித்து கோவிலை அடைந்தோம். சிறியதாகவும், மிக சுத்தமாகவும் இருந்தது வளாகம். அப்போதும் சில பெண் பக்தர்கள் விளக்குகள் ஏற்றி கொண்டும், விக்ரஹங்களை சுற்றி வந்து கொண்டும் இருந்தார்கள். பெரியவர்கள் கோவில் மரத்தடியில் அமர்ந்து பேசிகொண்டிருந்தார்கள். கோவிலை சுற்றி வந்து விட்டு, சிறிது நேரம் அமர்ந்துவிட்டு பின் புறப்படத் தயாரானோம். திரும்புகையில் பெரும்பாலான வீடுகளில் இரவு உணவு நிறைவுற்று இருந்தது. வெளியே போடப்பட்டிருந்த கட்டில்களில் அவரவர் அகன்ற வானத்தை பார்த்து மகிழ்ச்சியாக உரையாடிக் கொண்டிருந்தார்கள். இப்போது இவர்களின் ரம்மியமான வாழ்க்கை சூழல் என் மனதில் எல்லையற்று வியாபித்திருந்ததால் வழி நெடுகிலும், காட்டுப்பாதையின் திகிலும்,கும்மிருட்டும், மனீஷின் உரையாடல்களும் முறையே என் சிந்தையிலும் செவியிலும் விழவே இல்லை.அந்த சுகமான நினைவுகளோடே என் ப்ளாட்டை அடைந்தேன், சூரியனை ஒத்த வெளிச்சத்தினை மின் விளக்குகள் பாய்ச்ச, இமயமலை சாரலாய் குளிர் சாதனப் பெட்டியிலிருந்து காற்று வீச, அந்த கிராமத்து இருளும், மென் தென்றலும் ஏற்படுத்திய தாக்கத்தை இம்மியளவும் அசைக்க கூட முடியவில்லை இவைகளால். மேசையின் மேல் மையமிட்டிருந்த 'மடிச்சனியன்' என்னை உள் விழுங்க தருணம் பார்த்துக் கொண்டிருந்தான்.

எனக்கும் அந்த சொர்க்க வாழ்கை வாழ வழி இருந்தது, இன்னும் இருக்கிறது. நான் தான் அதற்கான பாதையை தவிர்த்து இந்த பாதையை தேர்ந்தெடுதேன் என் சுற்றுப்புறங்களுடைய விருப்பங்களின் தாக்கத்தினால். என்னை சுற்றி இருந்தவர்கள் யாவரும் நிம்மதி என்பது பொறியியல் துறையிலும், மருத்துவ  துறையிலும், மாட மாளிகைகளிலும், நகரத்து, பெருநகரத்து வாழ்க்கையிலும் தான் இருப்பதாக வலியுறுத்தி வழி காட்டினார்கள்.


"நிகழ் கால கஷ்ட நஷ்டங்களை, சுக துக்கங்களை கடந்தகாலமான பிறகு அசைபோட்டு ரசிப்பதையே மனித மனம் விரும்பும் என்ற வாழ்க்கையின் சாராம்சம் புரிந்திருந்தாலும், "இக்கரைக்கு அக்கரைப் பச்சை" என்று நோக்குவதே மனிதர்களின் இயல்பு என்று தெரிந்திருந்தாலும், சில தவிப்புகளை, இழப்புகளை பொறுத்துக் கொள்ள முடிவதே இல்லை".

எதை எதையோ தேடி மூச்சிரைக்க ஓடிய கால்கள், வலியெடுத்து  நிற்க திரும்பிப் பார்த்தால் எங்கோ வெகு தூரத்தில் தனியாக நான் மட்டும் ஒற்றையாய் நின்று கொண்டிருக்கிறேன். என் இளரத்தச் சூடு என்னை உந்தித் தள்ளிய தூரத்தின் வீரியம் அம்முறை நான் என் விடுமுறைக்கு வீடு சென்ற போது தான் தெரிந்தது.

தைரியத்தின், ஆளுமையின், ஆண்மையின், அன்பின், அறிவின், உழைப்பின், மொத்த உருவமாய், என் முதல் கதாநாயகனாய் மிடுக்கான தோற்றத்துடன் இருந்த என் தந்தையின் முதுமையில் தான் தெரிந்தது எனது தொலை தூர அர்த்தமற்ற பயணத்தின் விளைவு. செயலில் வேகமாய், புயலாய் நான் பெருமையுடன் கைகளையும், தோள்களையும் பற்றி நடந்த அந்த உத்தமரின் "அப்பாவுக்கு வயசாச்சில்லப்பா" என்னும் சொற்கள் என்னை மிகவும் திடுக்கிடச் செய்து பெரு வேதனைக்குள்ளாக்கியது.  இந்த எனது அவசர ஓட்டம் என் தந்தை முதுமை அடைந்து கொண்டிருக்கிறார் என்பதையே என்னை மறக்கச் செய்து விட்டது.  என் மனம் அவர் சொற்களை நம்ப மறுத்து மறுபடியும் இறைச்சலிடத் தொடங்கி இருந்தது.  "நீ தேர்ந்தெடுத்த பாதை உனக்கு கொடுத்ததென்ன தெரியுமா...???  நீ உன் அருகாமையை விட வேறு என்ன பேரின்பத்தை கொடுத்து விட முடியும் உன் தந்தைக்கு...??"

மயான அமைதி...மனமோ பேரிரைச்சலில்...!!!

(படம் தந்த கூகுள்' க்கு நன்றி)
--விளையாடும் வெண்ணிலா....

திங்கள், 10 ஜனவரி, 2011

பார்ட்டி...பார்ட்டி...பார்ட்டி...!
சோஜுவும் வாத்துக்கறியும்...! (பகுதி-2)

அந்த கொரிய பணிப்பெண் என்னுடைய எதிர்வினையின் வேகத்தையும், அதனால் உண்டான வேதனையையும் கூட பொருட்படுத்தாமல், முன்பை விட மிகுந்த புன்னைகையுடன் மறுபடியும் என் தொடை அருகே கையை கொண்டு வந்து என்னை கீழே தலையை குனிந்து பார்க்கும்படி செய்கை செய்தார். குனிந்து பார்த்தேன். அவர் சுட்டிய திசையில் சமையல் வாயு செல்லும் குழாயும், வால்வும் இருந்தது. பணிப்பெண் என் தொடையருகே இருந்த அந்த வால்வை திறக்கத்தான் தனது கையை கொண்டு வந்திருக்கிறார் என்பது எனக்கு அப்போதுதான் மண்டையில் உரைத்தது. பச்சை வாத்து மாமிசத்தை கொண்டு வந்து மேஜை நடுவில் தோசைக்கல் போன்ற ஒன்றில் கொட்டி விட்டு சென்றதாக சொன்னேனே..., அது மாதிரி அல்ல அது தோசைக்கல்லே தான். மாமிசத்தை பதமாய் அவரவரே புரட்டி, புரட்டி எடுத்து உண்பதுதான் இந்த ரெஸ்டாரெண்டின்   வழக்கம் என்பது எனக்கு அப்போது தான் புரிந்தது. ஒரு வித குற்ற உணர்ச்சியில் தயக்கத்துடன் அந்த பணிப்பெண்ணை நோக்கினேன், அவர் இப்போதும் சிரித்துக்கொண்டே அதே செய்கையை செய்து விட்டு நகர்ந்தார்.

எனது அருகில் அமர்ந்திருந்த அப்புகுட்டியார் நடந்ததை எல்லாம் கவனித்துவிட்டார் என்பது 'அசிங்கபட்டான் ஆட்டோக்காரன்' என்கிற ரீதியிலான அவரது பார்வையிலையே விளங்கியது. நம் அப்புக்குட்டி ஒருவரை நக்கலடித்து நாறடிப்பதில் படு கில்லாடி, யாருக்கும் சளைத்தவரில்லை.  "கண்டவுடன் கன்னிகளை வீழ்த்தும் கட்டழகு காமரூப சுந்தரனா என்ன? நாம் தான் தினமும் நம் திருமுகத்தை நிலைக்கண்ணாடியில் பார்க்கிறோமே...! இரண்டு செகண்டுக்கு மேல நமக்கே ஒரு மாதிரி தானே இருக்கு..!" என்று படு நக்கலான கமெண்டுடன் ஒரு அஷ்டகோணல் சிரிப்பையும் வீசினார் அப்புக்குட்டி சிரத்தையாக.  நானும், இருக்கட்டும் அரிசிமூட்டை...., எனக்கு ஒரு சமயம் கிடைக்காமலா போய்விடும் என்று நினைத்து மனதை தேற்றிக் கொண்டேன். 

ஒவ்வொவொரு மேஜைககும் தனித்தனி பிரத்யேக பணிப்பெண்கள். எங்கள் மேஜைக்கு எனது கை அவசரப்பட்டு அடித்த அதே பணிபெண் தான்.  சோஜு பாட்டில்களையும், இறால்களையும் ப்ளேட்டில் எடுத்து வந்து மேஜையில் வைத்து கொண்டிருந்தார். ஒவ்வொரு தடவை அவர் அருகில் வரும்போதெல்லாம் அப்புக்குட்டி என்னை பார்த்து கண்ணடித்து வெறுப்பேற்றி கொண்டே இருந்தார். பார்ட்டி ஆரம்பமானது. முதலில் துறைத்தலைவர் எழுந்து புதிதாக பணியில் சேர்ந்தவர்களை வரவேற்று பேசிவிட்டு, சோஜு பாட்டிலை திறந்து நாங்கள் அமர்ந்திருந்த இடம் நோக்கி வந்தார். என்னருகில் இருந்த அரிசிமூட்டை "அவர் உன்னை நோக்கித்தான் வருகிறார், கொரிய பழக்கத்தின் படி, நீ எழுந்து நின்று அந்த கோப்பையில் அவர் ஊற்றும் சோஜுவை வாங்கி அவர் முன்பே முழுக்க பருக வேண்டும், மறுத்துவிடாதே! அனைவரும் தவறாக எடுத்துக் கொள்வார்கள்", என்று பெரிய குண்டை தூக்கி போட்டது.  "நான் மதுவை தொட்டது கூட இல்லை என்று ஏற்கனவே உன்னிடம் கூறினேன் அல்லவா..." என்று அவருக்கு பதில் அளிக்கும் முன்பே துறைத்தலைவர் பெருத்த மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் என்னை அடைந்தே விட்டார்.

நான் எழுந்து நின்றேன் ஆனால் வெறுங்கையுடன். என்னிலையை அவரிடம் விளக்கினேன். அவர், "அப்படியா, மது அருந்தும் பழக்கமில்லாதவரா நீங்கள்? என்னை மன்னியுங்கள், வேறு என்ன சாப்பிடுவீர்கள்? " என்று என்னை கேட்டார். நான் ஒரு கோக் என்று கூறினேன். "இந்தியர்கள் பெரும்பாலும் மாமிசமும் உண்பதில்லை என்று கேள்விப் பட்டு இருக்கிறேன். நீங்கள் எப்படி?", என்று நான் மறந்து போய் இருந்த வாத்து மாமிசத்தை அவரே நல்ல வேலையாக ஞாபகப்படுத்தினார். ஆமாம்..ஆமாம்... நான் சிக்கனை தவிர வேறு புலால் உணவை உண்டரியாதவன் என்று எடுத்துரைதேன். "இந்த ரெஸ்டாரெண்டில் அது கிடைக்க வாய்ப்பில்லை, சரி நான் ஏற்பாடு செய்கிறேன்", என்று நகர முயன்றவரை, நமது அப்புக்குட்டியார், மதுகோப்பையும், கையுமாய் வழி மறித்தார். அட அசிங்கம் புடிச்ச அரிசிமூட்டை...!  மதுப்பழக்கத்தை கை விட்டு விட்டதாக கூறிவிட்டு இப்படி  கண்டு கொள்ளாமல் போறவரை துரத்தி போய் தண்ணி வரம் கேட்குதே....., இதை எந்த வகையில் சேர்ப்பது என்று நினைத்துக் கொண்டேன்.

தலைவர் நிரப்பிய கோப்பையை, நாம் நம் கோவிலில் தீர்த்தம் வாங்கும் போது வலது கை முட்டியை இடது கையினால் பிடித்து பவ்யமாய் வாங்குவோமே அதே மாதிரி வாங்கி, அப்படியே அவர் முன்பே ஒரே மடக்கில் உள்தள்ளினார் அப்புக்குட்டி.  தள்ளிவிட்டு ஏதோ போர்முனைக்கு சென்று திரும்பிய வீரனைப் போல் ஒரு பெருமித பார்வையையும், பதினைந்து சென்டிமீட்டருக்கு சற்றும் குறையாத இளிப்பையும் என்னை நோக்கி வீசினார்.  பின் அதே கோப்பையை துறைத்தலைவர் கையில் கொடுத்து, அப்புக்குட்டி ஊற்ற,  தலைவர் அதே மாதிரி ஒரே மடக்கில் சரக்கை உள் தள்ளினார்.  இருவரும் ஏதோ உலகில் யாருமே செய்ய முடியாத அதிசய அற்புதத்தை நிகழ்த்தியதைப் போல் ஒரு அட்டகாச புன்னகையை அனைவருக்கும் செலுத்த, எனக்கா... கொட்ட கொட்ட விழித்திருந்து தாடி தெய்வமான "வீராசாமியின்" பேட்டியை டி.வி.யில் பார்ப்பது போல் டரியலாய் இருந்தது.


மறுபடியும் மூன்று முறை தனது கோப்பையை துறை தலைவர் மூலம் நிரப்பி, பின் தன் பெரிய பிரம்மாண்ட கீழ்தேக்க தொட்டியில் நீர் இறக்கம் செய்துவிட்டு, விரிய விரிய சிரித்துக் கொண்டே காண்டாமிருக ஏப்பத்துடன் வந்து அருகில் அமர்ந்தார். நான் ஒன்றுமே சொல்லவில்லை அவரே தொடங்கினார். "கொரிய கலாச்சாரப்படி வயது மூத்தவர்கள் நம் கோப்பையில் மதுவை ஊற்றினால் அதை 'பாட்டம்ஸ் அப்' செய்து குடிக்க வேண்டும், அப்படி செய்தால் அவர்கள் பெரிதும் உளம் மகிழ்வர்" என்று லெக்சர் வேறு எடுத்தது அரிசிமூட்டை.  மதுப்பழக்கத்தை விட்டு விட்டதாக அவர் சொன்னதைப்பற்றி கேட்டதற்கு, "ஆமாம் ரெண்டு நாளாக தொடவே இல்லை" என்று கண்ணை சிமிட்டி மறுபடியும் அஷ்ட கோணலாய் இளித்தார். பின் அருகில் மஞ்சளும், சிவப்பும் என்று பல வண்ணங்களில் இருந்த பெரிய பெரிய இறால்களை அப்படியே அள்ளி, பானையில் புளியை திணிப்பது போல வாயில் திணித்தார்.  பச்சை வெண்டைக்காயை கடிக்கும் ஓசை எழவே நான் விவரம் கேட்கும் தொனியில் புருவத்தை உயர்த்தி கேள்விக்குறியை கண்களில் வைத்தேன். "இது செமி குக்ட் பிரான், கிட்டத்தட்ட பச்சை இறால் தான்",  என்று சராமாரியாக குண்டு மழை பொழிந்துவிட்டு ஒன்றுமே நடக்காதது போல் ஒவ்வொவொரு மேசையாக சென்று வாங்கி குடிப்பதும், பின் ஊற்றிக்கொடுப்பதுவுமாகவே இருந்தார். தூரத்தில் என் சக பெண் தோழியர்கள் ஏற்கனவே வெளிறி இருக்கும் தங்கள் நிறத்தை குடித்து குடித்து சிவப்பேற்றி கொண்டிருந்தார்கள். 

எனக்காக வெளியிலிருந்து ஆர்டர் செய்து கொண்டு வரப்பட கோக்கும், சிக்கனும் பணிப்பெண்ணால் எனக்கு பரிமாறப்பட்டது. உண்ண எத்தனிக்கும் போது 'மிஸ்டர் மூன்' வந்து என்னருகில் அமர்ந்து தனது பேச்சை தொடர்ந்தார்.  பார்ப்பதற்கு கம்பி மத்தாப்புக்கு சட்டை, பேன்ட் அணிவித்தது போல் இருப்பார். ரொம்ப நல்ல மனிதர். கொரியர்கள் இந்தியர்களை பற்றி கூறும் முதல் இரண்டு நல்ல விஷயங்கள் மகாத்மா காந்தியும், இந்தியர்களின் கணித திறமையும் ஆகும். அடுத்து அவர்கள் கேட்பதெல்லாமே, இந்நூற்றாண்டிலும் அழியாத அவமானங்களான, சாதிக் கொடுமை, ஏழ்மை, லஞ்சம், மதக்கலவரங்கள், இந்திய-பாகிஸ்தான் ரணம், விளையாட்டு துறையில் மக்கள் தொகைகேற்ற வளர்ச்சியின்மை என்று நீண்டு கொண்டே போகும். இவரும் அப்படியே.

மிஸ்டர் மூன் எனக்கு திருமணம் ஆகவில்லை என்பதை என்னிடம் கேட்டு அறிந்து கொண்டார். "நீங்கள் ஒரு கொரிய பெண்ணை திருமணம் செய்து கொள்ளத் தயாரா?" என்று திடீரென்று சற்றும் எதிப்பாராத ஒரு வினாவை வைத்தார். "அவ்வாறு நீங்கள் விரும்பினால் உங்கள் தாய், தந்தை அதை ஏற்றுக் கொள்வார்களா?", என்றும் கேட்டார்.  இரு வேறு பட்ட மதம், மொழி, இனம், தேசம், கலாச்சார திருமணத்தை ஏற்று கொள்ளும் பக்குவத்தை என்றோ இந்தியா ஓரளவிற்கு அடைந்து விட்டது என்று எடுத்துரைத்தேன். மேற்கூறிய (சாதி, மதம்) பல விஷயங்களின் தாக்கத்தின் வீரியம் வலுவாக, அவர்களின் பள்ளி புத்தகங்களில் அச்சிடப்பட்டு இருப்பதால், இந்திய துணைக்கண்டத்து மாற்றங்கள் இன்னும் பெரும்பான்மையான கொரியர்களுக்கு எட்டவில்லை என்று தான் கூற வேண்டும்.  அதனால் அவரின் கேள்வியின் நோக்கம் என்னை ஆச்சரியப் படுத்தவில்லை. இது இந்தியாவில் இப்பொழுது ஒரு பெரிய விஷயமில்லை என்று அவருக்கு ஒரு சிறிய விளக்கம் அளித்தேன். இருப்பினும் நான், சடைபின்னி,  பூச்சூடி, சேலையணியும் என் தேசத்து பெண்ணையே திருமணம் செய்வேன் என்ற கூறியதும், ஏன் கொரியப் பெண்கள் அழகில்லையா என்று வினவினார். நான் அப்படி சொல்லவில்லை, இந்த மணாளனின் மங்கை எனது தேசத்தில் தான் பிறந்திருக்கிறார் என்று ஏதோ வரிசையில் இந்தியாவில் நமக்கென்று காத்திருப்பதைப் போல், பீற்று  பீற்றென்று பீற்றினேன். நான் ஏற்கனவே கூறியது போல் அவர் ரொம்ப நல்லவர். எவ்வளவு அடித்தாலும் வலிக்காத மாதிரியே இருப்பார்.

பசி வயிற்றை பிராண்ட, ஒரு சிக்கன் பீசை எடுத்து வாயில் வைத்தேன். பேரதிர்ச்சி...! சர்க்கரை பொங்கலை போல் இனித்தது சிக்கன். " டேய்...!,  இது எங்கேயாவது அடுக்குமா..?, ஜின்ஜெர், சில்லி, 65'ன்னு  கண், மூக்கு, வாயெல்லாம் திரவப் பிரவாகத்தை பீறி டச் செய்து,  ஒரே கார சாரமா இருக்க வேண்டிய ஒரு சமாச்சாரத்த, நாட்டு சக்கரைய அள்ளி கொட்டி யாருடா இப்படியெல்லாம் புரட்சி பண்றது. வயித்துல ஈரத்துணிய கட்ட வச்சுட்டீங்கலேடா...!"  என்று நொந்து அந்த சிக்கனை கண் மற்றும் கைக்கு எட்டாத திசைக்கு நகர்த்தி வைத்து விட்டு கோக்கை மட்டும் குடித்து கொண்டிருந்தேன். தூரத்தில் அரிசிமூட்டை, முழுக்க நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. நின்ற இடத்திலயே எட்டு போட்டு லைசென்ஸ் எடுத்து கொண்டிருந்தது. பலரும் அவரவர் இருக்கைகளை விட்டெழுந்து என்னிருக்கை வந்து சில பல வார்த்தை விசாரிப்புகளை முடித்து சென்று தங்கள் தலையாய சோஜு கடமையில் மூழ்கினார்கள். 

அருகிலிருந்த 'மிஸ்டர் மூன்' இதை ட்ரை பண்ணுங்களேன் என்று வாத்துக்கறியை காட்டினார். "இப்படியெல்லாம் வாயில்லா பூச்சியான வயிற்றுக்கு எதிர்ப்பாராத ஷாக்கெல்லாம் தரக்கூடாது மிஸ்டர் மூன்",  என்று அழாத குறையாக நான் கூறினேன்.  இருந்தாலும், பசி மிகவும் வயிற்றை கிள்ளவே, நானும் முயற்சி செய்ய எத்தனித்தேன். என் ஆசிரியை தாய் கையில் பிரம்புடன் மனக்கண்ணில் தோன்ற, போட்டு விட்டேன் கீழே.  மகாராஷ்டிரா, டில்லி, ராஜஸ்தான், ஹரியானா, உத்தரபிரதேசம், கர்நாடகா என்று  இந்தியா முழுக்க பணி நிமித்தமாக நான் சுற்றிய காலத்தில் அவர்,  அசைவம், மாமிசமென்றால்,  வீட்டில் வந்து தான் செய்வதைத்தான் உண்ண வேண்டும் என்றும்,  வெளியில் எங்கும் சாப்பிடக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்திருந்தார். நானும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வீட்டிற்கு சென்று அவர் கையால் தான் சாப்பிடுவேன்.  

தாய்க்கு கொடுத்த சபதத்தை காக்க உயிரோடு இருக்க வேண்டியது அவசியம் என்ற பேருண்மையை உணர்ந்து என் வாழ்வின் முதல் வாத்துக்கறியை ருசித்தேன். நிஜமாகவே அருமையாய் இருந்தது. மட்டனுக்கும், சிக்கனுக்கும் இடையேயான பதமும், மிருதுவும், ருசியும் கொண்டது வாத்து மாமிசம்.  ஓரளவுக்கு வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு, என்னுடைய பிளாட்டுக்கு கிளம்பினேன். என்னை தவிர அனைவரும் ஊற்றவோ...?, உட்கொள்ளவோ...? என்று சோஜுவில் நீந்தி கொண்டிருந்தார்கள். இதன் பின்னர் இவர்கள், 'செகண்ட் பார்ட்டி'க்கு இன்னொரு ரெஸ்டாரெண்டிற்கும், 'தேர்ட் பார்ட்டி'க்கு வேறொரு ரெஸ்டாரெண்டிற்கும் சென்று குடித்தும், குடிக்க கொடுத்தும் வீடு செல்ல விடிந்து விடும்.

அங்கே அப்பு குட்டி, அலங்கோலமாய், தொப்புள் தெரிய, பிளந்த வாயில் இறாலுடன், கண்கள் சொருகி, உத்தரத்தை நோக்கிய முகத்துடன், முக்கி முனகிக் கொண்டு, பார்ப்பதற்கு மல்லாக்கப் போடப்பட்ட ராட்சச பிள்ளைத்தாச்சி தவளை போல் சரிந்து கிடந்தார்.  மிக ஹைலைட்டான விஷயம் யாரோ சக தோழி அவர் கழுத்தில் தொங்க விட்டுச் சென்றிருந்த ஹேண்ட்பேக் தான். இப்படி ஒரு அசாதாரண நிலையில் நம் அப்புக்குட்டியை அன்று கண்டதை இப்போது நினைத்தாலும் குபீரென்று சிரிப்பை வரவழைக்கும். மறு நாள் விசாரித்ததில், டாய்லெட் போன நம் அப்புக்குட்டியார் அங்கயே உட்கார்ந்த நிலையிலேயே நித்திரையில் ஆழ்ந்துவிட, பின் பொல பொலவென்று புலர்ந்த சனிக்கிழமை காலை, அவரை அவர் பிளாட்டிற்கு கொண்டு வந்து கிடத்தி விட்டு போனதாக நண்பர்கள் சொல்லி சொல்லி எல்லா பக்கத்தாலேயும் சிரியோ சிரியென்று சிரித்து விட்டார்கள்...!

(படம் தந்த கூகுள்' க்கு நன்றி) 
--விளையாடும் வெண்ணிலா....

புதன், 5 ஜனவரி, 2011

பார்ட்டி...பார்ட்டி...பார்ட்டி...!
சோஜுவும் வாத்துக்கறியும்...! (பகுதி-1)

லூசு பார்ட்டி, கேனப் பார்ட்டி, கிறுக்கு பார்ட்டி, நக்கல் பார்ட்டி, நமைச்சல்  பார்ட்டி என்று மனிதப் பார்ட்டிகளை பற்றிய பதிவு இல்லைங்க இது.


இந்தப் பதிவு என்னுடைய அலுவலக பார்ட்டி கொண்டாட்டங்களைப் பற்றியது.  நானும் ஒரு கடமை தவறாத, கண்ணியமிக்க, கணினியில் இருந்து கணப்பொழுதும் கண்ணசையா பொறிஞர் (என்னுடைய சர்டிபிகேட்'ல அப்படிதாங்க போட்டிருக்கு) ஆன பிறகு எனது விருப்பம், ஆசை, எண்ணம் இது எதற்கும் இடமளிக்காமல், எனது நண்பர்களும், உயரதிகாரிகளும் (இந்தத் தொழிலதிபருங்க தொல்லை தாங்க முடியலப்பா..!)  கருணா காரூண்யமின்றி  தர, தரவென்று இழுத்துச் சென்று கும்பலோடு கும்பலாக கும்மி அடிக்க வைத்து, சிரிப்பா சிரிச்சிப் போன மிகச் சில பார்ட்டிகளை பற்றியது தாங்க இந்தப் பதிவு.

சியோல் வந்து பணியைத் தொடங்கிய ஆரம்பத்தில், துறைத்தலைவர் அளித்த "New Joiners" வரவேற்பு பார்ட்டி தான் என்னுடைய முதல் பார்ட்டி அனுபவம் கொரியாவில். இங்கே மற்ற நிறுவனங்களை பற்றி எனக்கு தெரியாது, ஆனால் நான் பணி புரியும் நிறுவனத்தில் பெரும்பாலும் சராசரியாக வாரம் இரு பார்ட்டி கொண்டாட்டங்களை சந்தித்தே தீர வேண்டியது இன்றியமையாத, தவிர்க்க இயலாத விஷயமாகும். சரி, இப்போது பார்ட்டிக்கு போவோம்.

மாலை ஆறு மணிக்கு பார்ட்டி துவங்கும் என்று முன்னரே எனக்கு தெரிவித்தாகிவிட்டது. இருந்தாலும் நான் ஒரு வித பயத்தில் அதற்கான முஸ்தீபுகளில் ஆர்வமின்றி கிடா வெட்டுக்கு வந்த மந்திரித்து விடப்பட்ட ஆடு மாதிரி அப்படியே பம்மிக் கொண்டு அமர்ந்திருந்தேன்.  ஏனென்றால் பல வருடங்களாக இந்நாட்டிலேயே பணியாற்றி வரும் சக இந்திய அண்ணன்மார்கள் "ராஜா பாத்து,  இவனுங்க ஆச்டோபசு, மீனு, நண்டு, எறா'ன்னு  எல்லாத்தையுமே உயிரோட சாப்பிடுவானுகப்பா, அது மட்டுமா மாடு, பன்னி, வாத்து, நாய்'ன்னு ஒன்ன விட மாட்டனுங்க"  என்று தங்களின் கொரிய பார்ட்டி அனுபவங்களை அளவுக்கு மீறி என் உட்செலுத்தி விட்டிருந்தார்கள்.

மிஸ்டர் கிருஷ் , மிஸ்டர் கிருஷ்.. என்று இரண்டு முறை சத்தம் வர வேண்டா வெறுப்பாக தலையை திருப்பி சத்தம் வந்த திசையை நோக்கினேன். என்னையும் மீறி என் கண்கள் அகல விரிய; கால்கள் தரையில் உறுதியாக பதிய முயன்றன. இருக்கையை விட்டு எழுந்து நின்றே விட்டேன். ஏனெனில், என் பின்னே என்னுடைய துறைத் தலைவரும், அவர் பின்னே மொத்த டீமும் நின்று கொண்டிருந்தார்கள் என்னை பார்த்து புன்னகைத்தவாறு. சிக்கிச்சிடா சிறுத்த..! இன்னைக்குன்னு பாத்து பலத்த சூறாவளியுடன் பாசமழை கொட்டுதே என்று நினைத்தவாறே புறப்பட்டேன்.

எங்கள் குழுவில் இந்தியாவிலருந்து நானும், பிலிப்பின்ஸிலிருந்து (அதாங்க தமிழ்'ல 'பிலிப்பைன்ஸ்') ரயான் என்ற நண்பரும் தான் எக்ஸ்பாட் பொறிஞர்கள்.  நான் நம் பழக்க தோஷத்தில் 'பிலிப்பைன்ஸ் பிலிப்பைன்ஸ்' என்று கூவிக் கொண்டே இருந்ததை பொறுக்க மாட்டாமல் ரயான்,  "சதீஷ், இட்ஸ் பிலிப்பின்ஸ், நாட் பிலிப்பைன்ஸ்" என்று மகுடி வாசித்து திருத்தினார். நானும் என்னை திருத்திக் கொண்டேன்.

ஆனால் தம் பிடிச்சு எத்தனை தடவை கொரிய நண்பர்கள் காதில் நான் 'தவில்' வாசிச்சாலும் அவர்கள் இந்தியாவை 'இந்தோ' என்று விளிப்பதை என்னால் மாற்றவே முடியவில்லை. கொரியர்களின் இந்த பழக்கமும் நம் இமயமலை மகான் உரைத்த மகோன்னத மந்திரச் சொற்களில் (அதாங்க.. "இந்த தும்மலு, விக்கலு, இருமலு இதெல்லாம் எப்போ வரும், எப்படி வரும்னு யாராலையும் சொல்ல முடியாது. வந்தாலும் நிறுத்த முடியாது, வரலன்னாலும் ஏன்னு கேக்க முடியாது") உள்ள தும்மல், விக்கல் இத்யாதிகளும் ஒரே வகையறாக்களை சார்ந்ததாக இருக்குமோ என்பது எனது ஐயப்பாடு.

நண்பர் ரயான் இருக்கிறாரே, அவர் பார்ப்பதற்கு அப்பொழுது தான் அமுக்கி பிடித்த 'அரிசிக் கொழுக்கட்டை' மாதிரியே ப்ரெஷாக இருப்பார். சைஸ்'ல இல்லைங்க, ஷேப்'ல. அவருக்கு நான் வைத்திருக்கும் செல்லப் பெயர் "அரிசிமூட்ட அப்புக்குட்டி".  ஏனென்றால் அவர் முதுகு ஐம்பது கிலோ அரிசி மூட்டை மாதிரியே, பெரிய சமவெளி போன்று இருக்கும்.  இந்த பெயர் காரணத்தை ஒரு தடவை அவரிடம் கூறிய போது, அவர் "நான் ரெகுலரா ஜிம் போறதுனால தான் இப்படி பாடிய மெயின்டைன் பண்ண முடியுது" என்றார் படு சீரியசாக. நானும், அவரிடம் "எங்கள் ஊரிலும் உங்களை மாதிரி உசிலைமணி, குண்டு கல்யாணம், சின்னவனே, பெரியவனே" என்று நிறைய பாடி பில்டர்ஸ் இருக்கிறார்கள் என்று அவரை விட முகத்தை மட்டும் சீரியசாக வைத்துக்கொண்டு சொன்னேன்.  வழி நெடுக நம் 'அப்புக்குட்டி' நன்றாக, முனை தீட்டப்பட்டு, அதிகூரான தனது நாவன்மையால் என்னை வெட்டி வெட்டி சாய்த்துக் கொண்டே வந்து கொண்டிருந்தார். இவர் ஏன் என் கழுத்தின் மேல் இந்த குத்தாட்டம் போடுகிறார் என்று எனக்கு விளங்கவே இல்லை.

நான் ஒரு 'டீடோடலர்' (நெசமாத்தான் நம்புங்க) என்பதையும், இந்திய கோழிகளையும், மீன்களையும் என் தாய் கைச் சமையலில் ரசித்து ருசித்ததை தவிர வேறு புலால் உணவுகளை இம்மியளவும் தீண்டாத 'தாவிரப் பிராணி' என்பதையும் என்னிடமிருந்து அறிந்து கொண்டார்.  தானும் அப்படிதான் என்று அழுத்தம் திருத்தமாக எனக்கு ஒரு செய்தியும் கொடுத்தார், அப்புக்குட்டி. மேலும், தான் கொரிய உணவுகளில் முற்றிலும் விருப்பமில்லாதவன் என்றும், மது பழக்கத்தையும் கைவிட்டு விட்டதாகவும் என்னிடம் நான் கேட்காமலே ஒரு தன்னிலை விளக்கத்தையும் தரத் தவறவில்லை பல வருடங்களாக இந்நாட்டில் பணிபுரியும் அவர்.

 "இந்தியா பிரிட்டனுடைய காலனி நாடாக இருந்தது இல்லையா, ஆனால், பிலிப்பின்ஸ் அமெரிக்காவின் காலனி நாடாக இருந்தது, அதனால் தான் எங்கள் பெயர்கள், வாழ்க்கைமுறை எல்லாம் வெஸ்டர்ன் ஸ்டைல்ல இருக்கிறது", அவர் கொத்திய கொடூர கொத்துகளில் இதுவும் ஒன்று. அவருக்கு தன் நாடு அடிமை படுத்தப்பட்டது தற்போதுள்ள ஒரு கனவு தேசத்தினால் என்பதில் அவ்வளவு பெருமை. நீங்களே சொல்லுங்கள் நண்பர்களே, செருப்படியில் என்ன நல்ல செருப்படி, பிஞ்ச செருப்படி.ரெஸ்டாரண்டை அடைந்தாகி விட்டது. ரெஸ்ட் ஹட் போன்றதொரு வசீகர தோற்றப் பொலிவுடனான அலங்காரம் என்னை பெரிதும் கவர்ந்தது. என்ன 'மெனு' என்று நம் அப்புக்குட்டியிடம் கேட்டேன். 'சோஜு', 'ஓடிகோகி' என்றார் கொரிய மொழியில், நான் என்னவோ அம்மொழியில் முனைவர் பட்டம் பெற்றவன் என்ற நினைவில். பின் சுதாரித்தவராய், 'கொரியன் ட்ரடிஷனல் பீர் அண்ட் டக் மீட்" என்று மொழி பெயர்த்தார். கொரிய மொழியில் 'கோகி' என்றால் இறைச்சி/கறி என்று பொருள் படும். இந்த 'கோகி' முன் நாம் எந்த பிராணியை சேர்க்கிறோமா அந்த பிராணியின் இறைச்சி என்று பொருள்படும்.  நம் ஊரில் ஆட்டுக்கறி, கோழிக்கறி என்று கூறுவதைப் போல தான்.   ஓடி (வாத்து),  புல் (பன்றி),  சோ (மாடு),  தாக் (கோழி), கே (நாய்)  என்ற வார்த்தைகளுக்கு பின் கோகி சேர்ந்து வரும் அவ்வளவு தான்.

சரி, பார்ட்டிக்கு வருவோம். நம் அரிசி மூட்டையின் மொழிப்பெயர்ப்பை கேட்ட மாத்திரத்திலேயே எனக்கு தூக்கி வாரிப் போட்டது.  "என்னது வாத்துக்கறியும், பீருமா..? அட கருமாந்திரம் புடிச்சவனுகளா...! இந்த சைவ ஐட்டமான சிக்கன்'லாம் கிடையாதா..என்று கேட்டதற்கு,  "இந்த ரெஸ்டாரன்ட்'ல டக், பிரான் தான் ரொம்ப ஸ்பெஷல்" என்று கூறி மேலும் என் பிராணனை வாங்கியது அரிசிமூட்டை.  இந்த சோஜு இருக்கிறதே, இது கொரியர்களின் பாரம்பரிய மது பானம், 20-45% ஆல்கஹல் செறிந்த பானம்.

நான் திரு திருன்னு முழிச்சிகிட்டு இருக்கும் போதே எங்கள் இருக்கையின் முன் இருக்கும் மேசையில் அகல, கரிய தோசைக்கல் போன்ற ஒன்றில், கொரிய பணிப்பெண் ஒருவர் பெரிய பாத்திரத்தில் தான் கொண்டு வந்த அந்த பச்சை வாத்து மாமிசத்தை அப்படியே குவியலாக கொட்டி விட்டு சென்றார். என்னுடைய இரு விழிகளும் வெளியே தெறித்து வந்து விழுந்து விட்டதை போன்றதொரு உணர்வு எனக்கு. அப்புறம் சில இலை  தழை குவியல்களை கொண்டு வந்து அதன் மேலேயே கொட்டிவிட்டு, என் தொடைக்கு அருகில் தனது கையை கொண்டு வர நான் சடாரென்று என்னையுமறியாமல் அவரது கையை வெடுக்கென தட்டி விட்டேன். கொஞ்சம் பலமாகத்தான். அதற்கப்புறம் தான் மிகப்பெரிய கூத்தெல்லாம் நடந்தது...! ஏற்கனவே பதிவின் நீளம் அதிகமாகிவிட்டதால், அந்த மஹா கூத்தையெல்லாம் அடுத்த பதிவில் பகிர்கிறேன்.


(படம் தந்த கூகுள்'க்கு நன்றி...!! )
--விளையாடும் வெண்ணிலா....