சனி, 1 அக்டோபர், 2011

மரணம் மரிப்பதில்லை இம்மண்ணில்...!

சியோலிலிருந்து சிதம்பரம் நோக்கிய மற்றுமொரு விடுமுறைப்பயணம்.  கடந்த விடுமுறைப் பயணத்தில் பாதியிலே விட்ட அதே புத்தகத்தை இந்த பயணத்தில் கவனமாக எடுத்து வைத்தேன், படித்து முடித்துவிடலாம் என்று மிக நம்பிக்கையாக. ஆனால் நம்பிக்கை துரோகம் இழைத்து நீண்ட இப்பயணத்தை தூங்கியும், சில பாலிவுட் மசாலா படங்களைப் பார்த்தும் கடந்தேன். என்னவோ தெரியவில்லை புத்தகம் படிக்க அனேக நேரங்கள் கிடைத்தாலும், குரங்கு மனம் என்னவோ அம்மரத்தை பற்றிப் பிடிப்பதே இல்லை. விமானப் பயணங்களும் வர, வர வெறுப்பை கொடுக்கின்றன. ஆனால் பகிர்வதற்கு விதைகளாய் அற்புதமான அனுபவச் சம்பவங்கள் கிடைப்பது இந்த விமானப் பயணங்களில் தான். இம்முறை குறிப்பாக இரு நிகழ்வுகளும் அவை எனக்கு உணர்த்திச் சென்ற சில குறிப்புகளும் இங்கே.

முதலானது, ப்ளாட்டிலிருந்து விமான நிலையம் வரையிலான டாக்சிப் பயணத்தில் கிடைத்த கொரிய ஓட்டுனரின் நட்பும், அவருடனான அரை மணி நேர உரையாடல்களும். அவர் பெயர் லீ. நாற்பதுகளின் மத்தியில் வயது. ஒரு கால் சற்றே ஊனம், தாங்கி தாங்கித்தான் நடக்கிறார். இரு பள்ளி செல் ஆண் குழந்தைகள். மனைவி வீட்டு வேலைகளை பார்த்து கொள்கிறார். மிகவும் சந்தோஷமான ஆச்சரியம்-அந்த அதிகாலை ஆளரவமற்ற வேளையில், ஆங்கிலத்தை புரிந்து கொண்டு சற்று தெளிவான பதிலையும் கொடுக்கக் கூடியவராய் அவர் இருந்தது தான். அகல சிரித்து எனது ஆச்சரியத்தை அவரிடம் பகிர்ந்து கொள்ள, அவரும் அதிரச் சிரித்தார்.

லீ சியோல் பல்கலைக் கழகத்தில் ஆங்கில இலக்கியம் பயின்று, சில காலம் தனியார் நிறுவனத்தில் முழு நேர ஊழியராக பணியாற்றியும் இருக்கிறார். பின்னர், கிடைக்கும் வருமானம் மிக சொற்பமாய் தோன்றவே அந்தப் பணியை உதறி விட்டு டாக்சி ஓட்டுனர் அவதாரம் எடுத்திருக்கிறார். பேச்சு அவருடைய தற்போதைய மாத வருமானம் பற்றி திரும்பியது. "கிடைக்கும் வருமானம் எனது மகன்களின் படிப்புச் செலவுக்கே சரியாக இருக்கிறது, என் நாட்டின் அரசியல்வாதிகள் போடும் திட்டங்களும், அதன் பயன்களும் லட்சாதிபதிகளை கோடீஸ்வரர்களாகவும், ஏழைகளை பரம ஏழைகளாகவும் தான் ஆக்குகின்றன. அரசியல்வாதிகள் மிகப் பெரிய ஊழல்வாதிகளாய் இருக்கின்றார்கள்", என்று விரக்தியுடன் கூறினார் ஒரு சராசரி இந்திய டாக்சி ஓட்டுனர் தலைநகரான டில்லியில் ஈட்டும் மாத வருமானத்தைக் காட்டிலும் 15-20 மடங்கு அதிகம் ஈட்டும் இந்த கொரிய ஏழை டாக்சி ஓட்டுனர் :-)

தென் கொரியா-Samsung, Hyundai, LG, Lotte, Fila, GS என்று இன்று தனது நிறுவனங்களால் உலகை ஸ்திரமாக முற்றுகை இட்டிருக்கும் ஆசியப் புலிகளுள் ஒன்று. உலகத்தின் மிகச் சக்தி வாய்ந்த பொருளாதார மையமாய் கடின உழைப்பால் பலரையும் பின்னுக்கு தள்ளி வீறு நடை போட்டுக் கொண்டிருக்கும் தேசம். ஒரு முனையிலிருந்து வெறும் நான்கே மணி நேரத்தில் தென் கொரிய நாட்டின் இன்னொரு முனைக்கு சாலை வழிச் சென்று விடலாம்; விமானப் பயணம் என்றால் வெறும் 55 நிமிடங்கள்தான். அவ்வளவு மிகச் சிறிய நாடு. இந்நாட்டின் முப்பதாண்டு கால எழுச்சியை "The Miracle of Han River" என்றே குறிப்பிடுகிறது வையம். அப்படிப்பட்ட தேசத்திலும் ஒரு பாட்டாளியின் வேதனையான வார்த்தைகள் "அரசியல்வாதிகள் எங்கும் அரசியல்வாதிகள் தான்" என்றே நினைக்கத் தோன்றியது. 

பின் சுதாரித்தவராய், "அனைவரும் ஊழல்வாதிகள் இல்லை, மிகச் சொற்பமானவர்களே, உங்களுக்கே தெரியும் இன்றைய கொரியாவின் ஏற்றமிகு பொருளாதார வளர்ச்சி..." என்று கூறி ஒரு டிபிகல் தேசபக்தி கொரியராய் மறுவிளக்கம் கொடுத்தார் லீ. ஏறக்குறைய உண்மையும் அதுதான். ஊழல் என்பது கண்ணுக்கே தெரியாத அளவு தான் அங்கே, தெரிந்து விட்டால் "பதவியைத் துற..." என்று யாரும் வாய்த் திறவும் முன்னரே உயிர் துறவும் விவரமற்ற (இந்திய பாஷையில்) ஆட்கள் தான் கொரிய அரசியல்வாதிகள். லீ கனிவான மற்றும் மிகப் பணிவான விடை கொடுத்தார்.


இரண்டாவது நிகழ்வு. வாயில் எண் ஒன்பது வழியாக "இஞ்சியான்" விமான நிலையத்திற்குள் நுழைந்தேன். போர்டிங் பாஸ் பெற கவுன்ட்டர் K'ஐ நெருங்க, எனது வலப் புறத்தில் யாரோ என்னைப் பார்த்து சிரிப்பது போன்றும், வரவேற்று தலையை அசைப்பது போன்றும் தெரிய, நிதானித்து அவர் நோக்கி பார்வையை திருப்பினேன். அவர் நன்கு சிரித்தார் இப்பொழுது, நானும் சிரிப்பை பகிர்ந்தேன். எழிலாய் உடையணிந்திருந்த, கருத்த மெல்லிய தேகம் கொண்டவராய் இருந்தார். பங்களாதேஷிலிருந்து வந்தவர்கள் கணிசமான எண்ணிக்கையில் கொரியாவில் பணி செய்வதால், அவர் ஒரு பங்களாதேஷியாக இருப்பாரோ என்று எண்ணிக் கொண்டே அவர் இடம்  அடைந்தேன். 

அவர் என்னிடம் ஏதோ கேட்க, எனக்கு புரியாமல் மறுபடியும் விளிக்குமாறு கூறினேன். அவர் மறுபடியும் கூற, இப்போதும் எனக்கு விளங்கவில்லை. அது ஏதோ வேறு மொழியாய்த் தோன்றியது எனக்கு. ஆங்கிலமும் இல்லை ஹிந்தியும் இல்லை. ஓரளவு வங்காள மொழியும் எனக்கு தெரியும் ஆதலால், அவர் பேசியது வங்காளமும் இல்லை என்று உணர்ந்து கொண்டேன். ஆக, அவர் இந்தியரும் இல்லை, பங்களாதேஷியும் இல்லை. இங்கே கொரியாவில் பாகிஸ்தானியர்கள் குறிப்பிடத்தக்க அளவில் வாணிபம் செய்பவர்களாய் இருக்கிறார்கள். அவர்களும் ஒரு சராசரி வட இந்தியர் பேசும் ஹிந்தியை விட அற்புதமான, தூய்மையான ஹிந்தி பேசுபவர்களாக இருப்பார்கள். ஆக இவர் பாகிஸ்தானியும் இல்லை.

இலங்கையை சேர்ந்தவராக இருப்பாரோ..?! ஏனெனில், இங்கே இலங்கையிலிருந்தும் கடின பணிகளுக்கு ஆட்கள் அழைத்து வரப்படுகிறார்கள். பின்னர் அபூர்வமாய் அவருடைய சம்பாஷணையில் இங்கும் அங்கும் வந்து விழுந்த ஆங்கில வார்த்தைகளைக் கொண்டு அவர் பெயர்  சரத் ஏதோ ஒரு 'கா' , (ஆனால் 'பொன்சேகா' அல்ல) என்பதும், சிங்களவர் என்பதும், பேசியது சிங்கள மொழி என்பதையும் தெரிந்து கொண்டேன். நான் சிங்களம் அறியேன் என்று அவரிடம் தெரிவித்தும், அவர் சிங்கள மொழியிலேயே வாசித்துக் கொண்டிருக்க, எனக்கு கிர்ரென்று இருந்தது. ஆங்கிலம், ஹிந்தி, பெங்காலி அல்லது கொஞ்சம் கொஞ்சம் கொரிய மொழி என்று இவற்றில் ஏதாவது சம்பாஷிக்க வருமா என்று கேட்டதற்கு உதட்டை பிதுக்கினார். பின்னர் நடந்த சைகைச் சுற்றுகளில், அவர் நான்கு வருடங்களாக கொரியாவில் பணி செய்வதையும், இப்போது இலங்கைக்கே சென்று தனது குடும்பத் தொழிலை கவனிக்க போவதாகவும் தெரிந்தது. 

சிங்களம் தவிர வேறு மொழி அறியாமல் அவர் கொரியாவில் பணி செய்தது மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்தது எனக்கு. அந்த மிகக் குறைந்த ஆங்கில அறிவை வைத்தே பிழைத்திருக்கிறார் மனுஷன். வெறும் "ரூபவாஹினியை" வைத்து கொண்டு எப்படி நான்கு வருடங்கள் இங்கே காலம் தள்ளினீர்கள்...என்று ஆங்கிலத்தில் நான் விசாரித்தால் ஏதோ 'கைமாத்தா ஐம்பது லட்சம் கொடுங்கள்' என்று கேட்டதைப் போல அவர் ஒரு அதிர்ச்சிப் பார்வை பார்க்க, எனக்கு எப்படா இந்த அறுவைகிட்டே இருந்து தப்பிப்போம் என்று ஆகிவிட்டது. எகிறி 'Internet Zone' சென்று அமர்ந்தேன். அவர் நிலை கொஞ்சம் பரிதாபமாகவும் இருந்தது. இருந்தாலும், நான் செல்லும் அதே விமானத்தில்தான் அவரும் பயணிக்கிறார் என்ற செய்தி வேறு என்னை உச்சத்திற்கு அச்சுறுத்தவே, அவரை மனதில் ஒரு மூலையில் வெறுத்து ஒதுக்கி இன்டர்நெட்டில் மூழ்கினேன். 

போர்டிங் செய்ய இன்னும் பத்து நிமிடங்களே உள்ளன. Internet Zone'ஐ  விட்டு வெளியேறி போர்டிங் கேட்டை அடைந்தேன். கூட்டமின்றி காணப்பட்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. தூரத்தில் ஒருவர் என்னை பார்த்து கையசைத்தபடியே என்னை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தார். "Oh My God...அதே சரத்' தான்...! கவனியாதது போல் முகத்தை திருப்பிக் கொண்டேன். வேகமாக வந்து, Gate....Change, Gate....Change....என்று பதட்டத்துடன் கூறினார். நான் பதறாமல், கேட் இதுதான் என்று கூற, Gate....Change, Gate....Change....என்று மறுபடியும் கூறி என் கைப் பற்றி இழுக்க நான் சற்று எரிச்சலடைந்தேன். பின்னர் தான் தெரிந்தது, நான் செல்ல வேண்டிய விமானத்தின் போர்டிங் கேட் எண் மாற்றப்பட்டு விட்டது என்று. கபடமில்லாமல் என் கைப்பற்றி இழுக்கும் அந்த கறுப்புத் தோழனின் சிரிப்பு என்னை சவுக்கால் அடிப்பதை போன்று இருந்தது. அவரை தவிர்த்த என் செய்கை என்னை வெட்கித் தலை குனியச் செய்தது. இன்று அவரின் நினைவாக என்னிடம் இருப்பது அவரின் அந்த சிரித்த முகமும், அவருடைய பெயரும் தான்.

இவ்விரண்டு சம்பவமுமே ஒரு வெளிநாட்டவர், ஒரு இந்தியனிடம் நடந்து கொண்ட விதத்தை உரைப்பனவாய் இருக்கின்றன. உள்ளே...., நமது தேசத்தின் உள்ளே என்ன நடக்கிறது. நிலம், நீர், மொழி, மதம், சாதி என்று பிரிந்து பகைமை பாராட்டி ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டும், வெட்டிக் கொண்டும், சுட்டுக் கொண்டும் சாகிறோம். இதன் விளைவுகளால் நாம் இழப்பது எத்தனை விலை கொடுத்தாலும் திரும்பக் கிடைக்காத உயிர்கள் என்பதை நாம் உணர்வதே இல்லை.

"போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஏழு பேர் பலி" என்ற செய்தி ஆறாத ஒரு ரணத்தை மறுபடியும் கூராயுதம் கொண்டு கீறி சென்றிருக்கிறது. கோபம், ஆற்றாமை, சலிப்பு, வேதனை, விரக்தி, குழப்பம் என்று ஒரு வித தவிப்பு கலந்த அதிர்வுகளால் மற்றொருமுறை இதயம் தனது துடிப்பை நிறுத்தி சென்றிருக்கிறது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகரில் கடந்த வாரத்தில் தொலைக்காட்சியில் தொடர்ச்சியாக ஒளிபரபப்பாகிய அந்த காட்சி "Tamils have been referred to as the last surviving Classical Civilisation on Earth" (Citation: Wikipedia) என்ற அந்த வாக்கியத்தின் உண்மைத்தன்மையை எள்ளி நகையாடிச் சென்றிருக்கிறது.

இந்நூற்றாண்டிலும் மனிதர்கள் சாதி, மதம் என்று பிரிவினை பேசி வாழ்ந்து வருவதும், அதன் பெயரால் செத்து மடிவதும், இத்தேசத்தில் மனித உயிர்கள் தாம் மிக மலிந்த பொருட்கள் என்பதை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது நம் தமிழ் பூமி. "செய்யும் தொழிலால் நீங்கள் சாதியை பிரித்தீர்களானால், ஒரு சராசரி இந்தியப் பொறியாளன் இங்கே வாழும் வாழ்க்கைமுறையையும், ஈட்டும் பொருளையும் விட மேம்பட்ட  வாழ்வு வாழும் எனது கொரிய செருப்பு தைக்கும் தொழிலாளியையும், சாக்கடை சுத்தம் செய்யும் தொழிலாளியையும் எந்த வகையில் அடக்குவீர் நீங்கள்...?"- எனது கொரிய சக பணியாளரின் இக்கேள்விக்கணை எனது இந்திய தேசத்தின் பொய்ப்பெருமையையும், எனது தமிழ் நாகரீகத்தின் சில போலித்தன்மையையும், டாம்பீகத்தையும் செருப்பால் அடித்து செல்கிறது.  

சாதியை மனதில் இருந்து அகற்றி, மதத்தை பூஜை அறைக்குள் நிறுத்தி, மனிதனாய் தெருவீதிகளில் நடக்க பழகிடாத  இத்தேசம் தான் எனது வேர் என்பதை நினைத்தால் விஷமருந்த எத்தனிக்கிறது நெஞ்சம்.



(படம் தந்த கூகிள்'க்கு நன்றி)
 --விளையாடும் வெண்ணிலா....