ஞாயிறு, 5 டிசம்பர், 2010

தலைகுனிவு...!

இதமானதொரு காலை பொழுது. 'Itaewon' செல்வதற்காக காத்திருந்தேன் 'Dongdaemun' சப்வே ரயில் நிலையத்தில். இங்கும் அங்குமாய், குறுக்கும் நெடுக்குமாய், இடதும் வலதுமாய், அணைப்பும் விலகலுமாய், தோழமையும் அந்நியமுமாய், நிசப்தமும் சப்தமுமாய், இளமையும் முதுமையுமாய் என மக்கள் கூட்டம் மொய்த்து கொண்டிருந்த பரபரப்பானதொரு ஞாயிறு. ஆம், இங்கே வாழ்க்கை முறை சற்று வித்தியாசமானது தான். வார இறுதி நாட்கள் நம்மை போல சியோல்(Seoul) வாழ் கொரியர்களுக்கும் பேரின்பமானதே, ஆனால் நம்மைபோல் வீட்டில் ஓய்வாக செலவிட அல்ல, குடும்பத்துடன் வெளியே சென்று பொழுதை இனிமையாய் கழிக்க. 


பக்கத்தில் எனதருகே நின்றிருந்த கொரிய இளஞ்ஜோடி தன்னை மறந்து காதல் இன்பத்தில் லயித்திருந்தது அவர்களின் அதீத அணைப்பிலும், பரஸ்பர முத்தங்களிலும் பளிச்சென்று தெரிந்தது. காதல் அவர்களை தம்நிலை மட்டும் மறக்க செய்யவில்லை, அவர்களின் அருகிலயே மூத்த குடிமக்களும், சிறு குழந்தைகளும் நிற்கிறார்கள், அவர்கள் முன் இப்படி நடந்து கொள்வது முறையல்ல என்ற எண்ணத்தையும் தான் மறக்கச் செய்திருந்தது. மேற்கத்திய அமெரிக்க கலாசாரத்தை முழுமையாக பருக நினைக்கும் கொரிய இளம் சமுதாயமும், பொருளாதார வளர்ச்சியை மேற்கின் தாக்கத்தினாலேயே வெளிப்படுத்தத் முடியும் என்னும் ஆள்வோர் எண்ணத்தினாலும் கொரியர்கள் தங்களின் மேலான கலாச்சார அடையாளங்களை வெகு விரைவில் இழந்து வருகிறார்கள் என்ற கூற்று பல தருணங்களில் உண்மை என்றே தோன்றுகிறது. கொரியர்கள் அசுர பொருளாதார வளர்ச்சிக்கு கொடுத்த விலை தங்கள் கலாச்சாரம் என்பதை நினைக்கும்போது, இந்தியாவின் தற்போதைய வளர்ச்சியும், நிலையும் கூட கலாச்சார தடம்புரள்வை தவிர்க்க இயலாது என்றே நமக்கு தோன்றுகிறது. ஒரே ஆறுதல், அது அத்தனை விரைவாகவும், ஆழமாகவும், முழு வீச்சுடனும் இருக்காது என்று நாம் கொண்டிருக்கும் விருப்பமும், நம்பிக்கையும் தான்.    



இத்தனை பரபரப்பான மனிதர்களுக்கு நடுவே, எனது பார்வையும், கவனமும் அங்கே எனது வலது புறத்தில் இருக்கும் படிக்கட்டுகளில், தலையை குனிந்த படியே அமர்ந்திருந்த ஒரு மனிதரின் மேல் நங்கூரமிட்டது. நேர்த்தியான உடை, முடியை மூடி மறைத்த தொப்பி, காலணி என்று அனைத்திலும் ஒரு கொரியரின் அடையாளங்களாய் அம்மனிதர். வயது ஏறக்குரைய 50 களின் இறுதியில் இருக்கலாம்; ஒரு அனுமானமே, ஏனெனில் கொரியர்களை நேரில் பார்த்து வயதை சரியாக கூற முயல்வதே கடினமான ஒன்று, அதுவும் ஒருவரின் முகத்தை பார்க்காமல், வெறும் அமர்ந்திருக்கும் நிலையை வைத்து மட்டும் கணித்து கூறுவது முற்றிலும் சிரமமே. வாழ்க்கை முறையும், உணவு பழக்கவழக்கமும் அவர்களை எப்போதும் இளமையாகவே வைத்திருக்கும் காரணிகளாகும். அதிக ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழும் (Life Expectancy) மக்களின் பட்டியலில் கொரியர்கள் உலகில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்கள் என்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. 


அங்கே நின்றிருந்த யாரும் அவரை கவனித்த மாதிரி தெரியவில்லை, அவரும் யாரையும் நிமிர்ந்து பார்க்கவுமில்லை. காலையிலேயே குடித்துவிட்டு வந்து அமர்ந்திருப்பாரோ?, இல்லை, முதுமையின் வலி தாளாமல் அமர்ந்த நிலையிலேயே தூங்கி விட்டாரோ? அல்லது ஒரு வேளை மயக்கமடைந்து விழுந்து விட்டாரோ? என் மனதில் கேள்வி மேல் கேள்வி எழுந்து கொண்டே இருந்தது. மிக மெல்லிய உடலசைவுகளே அவர் உயிரோடுதான் இருக்கிறார் என்பதை உறுதிபடுத்தி கொண்டிருந்தது. பின் எனது கவனம் ரயிலை நோக்கித் திரும்பியது. 

சில நிமிடங்களுக்கு பிறகு அவரின் ஞாபகம் வந்து அவரை நோக்கினேன். அட, அவர் தூக்கத்திலோ, மயக்கத்திலோ இல்லை. அருகில் இருந்த தனது கைப்பையை இழுத்து எதையோ எடுத்துவிட்டு மீண்டும் அதை தமதருகிலே வைத்துக்கொண்டார்; ஆனாலும், தலை குனிந்தே இருந்தது. இதற்கிடையே நான் காத்திருந்த ரயில் வரவே நான் ஏறத் தயாரானேன். கடைசியாக, எதுவோ என்னை அவரை மீண்டும் ஒரு முறை பார்க்கத் தூண்டியது. பார்த்தேன், கூட்டம் ரயிலை நோக்கி சூழ்ந்திருந்ததால் அவர் இப்போது மிகத்தெளிவாய் தெரிந்தார் (தலை குனிந்தே). ஒரு ரயில் பயணி அவர் முன் நின்று தன் பையிலிருந்து எதையோ எடுத்தார். நீலநிற கொரிய பணம் '1000 Won'. (கொரியாவின் பணமதிப்பு நிறங்களில் வேறுபட்டது). அந்தப்பயணி அப்பெரியவரை நோக்கி குனிந்த போதுதான் முன்னே ஒரு தட்டு இருப்பதை நான் பார்த்தேன், அதிர்ந்தேன். அவர் ஒரு 'பிச்சைக்காரர்'. கொரியாவில், சியோலில் நான் பார்த்த முதல்'பிச்சைக்காரர்'. அந்தப்பயணி பணத்தை அவரின் பிச்சை பாத்திரத்தில் போட்ட போதும், பின்பு நகர்ந்த போதும் கூட அவரின் தலை குனிந்தே இருந்தது. 

உடன் வந்த நண்பரும் இதை கவனித்தே வந்தார். பின் நாங்கள் தொடர்ந்த பயணத்தில், அந்தபெரியவரின் குனிந்த தலையும், அவருடைய அமர்ந்த நிலையும் என்னை அமைதியாக இருக்க விடவேயில்லை. பிச்சையெடுப்பதை எந்த அளவுக்கு கேவலமாக, அவமானமாக கருதியிருந்தால் வெட்கி தலை குனிந்தே அமர்ந்திருப்பார் அவர்.  "தன்னிலை வருந்தத்தக்கதே, அதன் வருத்தத்தையும் மீறியது தன் மனம் தன்னை கேட்கும் கேள்விகளும், செய்யும் கேலிகளும் தான்" என்று அவர் சொல்வதாகவே இருந்தது எனக்கு அவரின் தலைகுனிவு. என் இந்தியாவில் 'பிச்சை' என்பது ஒரு பெருங்கூட்டத்தின் தினசரி தொழிலாக இருப்பது என் மனக்கண்ணில் நிழலாய்......

(படம் தந்த கூகுள்'க்கு நன்றி)
--விளையாடும் வெண்ணிலா....

14 கருத்துகள்:

ஹரிஸ் Harish சொன்னது…

கொரியர்கள் அசுர பொருளாதார வளர்ச்சிக்கு கொடுத்த விலை தங்கள் கலாச்சாரம்//

இந்தியாவிலும் இந்த மாற்றம் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது,,ஆனால் பொருளாதாரவளர்ச்சி நிதானமாக..அதனால் கலாச்சாரமாற்றமும் நிதானமாக...

ஹரிஸ் Harish சொன்னது…

இந்தியாவில் 'பிச்சை' என்பது ஒரு பெருங்கூட்டத்தின் தினசரி தொழிலாக இருப்பது நமக்கு தலைகுனிவு..

ஹரிஸ் Harish சொன்னது…

மிக நல்ல எழுத்துநடை தொடர்ந்து எழுதுங்கள் நண்பா...

பெயரில்லா சொன்னது…

mama,nee eluthuna vishayathai vidu...nee ivlo alagha eluthunuthe,nalla irrukuda.

pichaikaaran சொன்னது…

கவனிப்புத்தன்மை அபாரம்// அதை எழுத்தில் கச்சிதமாக கொண்டு வந்ததற்கு பாராட்டுக்கள்

Sathish Kumar சொன்னது…

//இந்தியாவிலும் இந்த மாற்றம் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது,ஆனால் பொருளாதாரவளர்ச்சி நிதானமாக..அதனால் கலாச்சாரமாற்றமும் நிதானமாக...//


மிக்க சரி ஹரிஷ்..
மேலும் நான் எழுதும் பொழுது கிடைக்காமல் போன பொருத்தமான வார்த்தையை உங்கள் கருத்துரையில் கண்டேன்.அந்த வார்த்தை "நிதானமாக"

Sathish Kumar சொன்னது…

//இந்தியாவில் 'பிச்சை' என்பது ஒரு பெருங்கூட்டத்தின் தினசரி தொழிலாக இருப்பது நமக்கு தலைகுனிவு..//

வெட்கித் தலைகுனிகிறேன் நண்பா..

Sathish Kumar சொன்னது…

//மிக நல்ல எழுத்துநடை தொடர்ந்து எழுதுங்கள் நண்பா...//

பாராட்டுக்கு மிக்க நன்றி...
அத்தோடு எமது பாராட்டையும் பிடியுங்கள் மாப்ள சார்....
தமிழ்மணத்தில் 15'ம் இடம்பிடித்ததற்க்காக...!
நான் முன்பே சொன்னது போல் உங்கள் பதிவுகளின் வளர்ச்சி அபாரம்...

Sathish Kumar சொன்னது…

//mama,nee eluthuna vishayathai vidu...nee ivlo alagha eluthunuthe,nalla irrukuda//

பாராட்டுக்கு நன்றி...
இந்த பெயர் வெளியிடா நபர் என் ஆருயிர் நண்பர் "dheetcha"வாக இருந்தால் மகிழ்ச்சியே...

Sathish Kumar சொன்னது…

//கவனிப்புத்தன்மை அபாரம்.அதை எழுத்தில் கச்சிதமாக கொண்டு வந்ததற்கு பாராட்டுக்கள்//


சிரம் தாழ்ந்து ஏற்றுக்கொள்கிறேன்....
பாராட்டுக்கு மிக்க நன்றி..

சக்தி கல்வி மையம் சொன்னது…

மிக மிக நன்றாக உள்ளது.
தொடர்ந்து எழுதுங்கள் நண்பா...
நன்றி நண்பரே.உங்கள் நண்பர்களிடம் என்னை அறிமுகபடுத்தவும்.
http://sakthistudycentre.blogspot.com

Sathish Kumar சொன்னது…

@sakthistudycentre.blogspot.com சொன்னது
//மிக மிக நன்றாக உள்ளது.
தொடர்ந்து எழுதுங்கள் நண்பா...
நன்றி நண்பரே.உங்கள் நண்பர்களிடம் என்னை அறிமுகபடுத்தவும்.
http://sakthistudycentre.blogspot.com//

வருகைக்கும் கருத்துக்கும் கோடானு கோடி நன்றிகள் நண்பா...!
Study Centre'ஐ கண்டேன் கலந்தேன் தோழா...!
தொடரட்டும்... வாழ்த்துக்கள்...!

பனித்துளி சங்கர் சொன்னது…

சிறப்பானதொரு பதிவு நேர்த்தியாக எழுதி இருக்கிறீர்கள் . பகிர்வுக்கு நன்றி . தொடர்ந்து எழுதுங்கள்

Sathish Kumar சொன்னது…

1091 பேரின் பாசத்தை பெற்ற ஒருவரின் வருகை என்னை பெருமிதப்படுத்துகிறது...
உங்களின் வார்த்தை என்னை உத்வேகப்படுத்துகிறது...
மிக்க நன்றி...!

கருத்துரையிடுக