சனி, 13 ஆகஸ்ட், 2016

பாட்டி...!!!

ரெங்கா பாட்டி என்று தான் அந்த தெரு முழுக்க பரிச்சயம். கோட்டோவியம் போல் மிக மெல்லிய உருவம், நைந்து போன நார் போன்ற அடர்த்தியற்ற முடியில் சின்னதாய் ஒரு கொண்டை, ஒரு கையளவுக்கும் சற்றே கூடுதலான நீள்வட்ட முகம், தெற்றுப்பல், ஒடுங்கிய கன்னம்...இது தான் ரெங்கா பாட்டி. எழுபதை கடந்த சோர்வு அவள் முகத்திலோ செயலலிலோ தென் படவே படாது. யார் பார்த்தாலும் முதலில் ஒரு பரிதாபமும், பின் வாரி அணைத்து கொள்ள வேண்டும் என்ற அன்பும் உடனே தோன்றும் ஒரு ஜீவன். பாட்டிக்கு பிடித்தவர், பிடிக்காதவர், உறவினர், எதிரி என்ற வித்தியாசமெல்லாம் கிடையாது, எல்லோரும் ஒன்றே! யார் வந்து எது கேட்டாலும், தன்னிடம் உள்ள அனைத்தையும் கொடுத்துவிடுவாள். அடுத்தவர் கஷ்டம், பசி பொறுக்க மாட்டாள்.

ரோஷக்காரிதான்....என்றாலும் அவளை பிடிக்காதவரும் உண்டா என்ன...! அவள் தூங்கி பார்த்திருக்க மாட்டார் யாரும். ஒரு நிமிடம் ஓய்வென்று இருக்க மாட்டாள். கோழி கூவும் முன்பே விழித்துவிடும் அவள் கண்கள். அனைவரும் அடங்கியபின் தான் ஓரிடத்தில் நிலை கொள்ளும் அவள் கால்கள். இரு மகள்களை கட்டி கொடுத்து, மகன்களுக்கு மணமுடித்து மருமகள்கள் வீடடைந்த பின்னும் கூட கருக்கலில் குளித்து, வாசல் தெளித்து, கோலம் போட்டு, பாத்திரம் துலக்கி, தண்ணீர் பிடித்து, மூன்று மகன் வயிற்று பேரன் பேத்திகளுக்கு தேநீர், சிற்றுண்டி தயாரித்து, தாத்தாவிற்கு வெந்நீர் வைத்து என்று நீளும் அவள் காலை பணிகள். அவள் தன சின்னஞ்சிறிய வயிற்றுக்கு சிறிது தீனி போட அது ஆகும் பகல் 11 அல்லது 12. துரதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் யாரேனும் வாடிய முகத்தில் வாசல் நின்றால் தன் ஒட்டிய வயிறை பாராமல் உணவை வந்தவர்க்கு ஈந்து விடுவாள் பாட்டி. மூன்று வேளையும் நிற்காமல் ஓடி கொண்டே இருப்பாள். தன்னை பற்றி கொஞ்சமும் நினைக்கமாட்டாள். ஆச்சரியம் என்னவென்றால்....இப்படி தன் வயிற்றை பார்க்காமலேயே வற்றலாகி வெறும் கூடாய் போன அவ்வுடம்பில் எங்கிருந்துதான் நாளெல்லாம் பாடுபட தெம்பு வருகிறதோ தெரியவில்லை.

தாத்தாவும், மகன்களும், மருமகள்களும் சரி....இந்த ஜீவனின் நிலையை யாரும் உணர்ந்ததும் இல்லை, பொருட்படுத்தியதும் இல்லை. அவளும் அது வேண்டும், இது வேண்டும் என்றோ....,"எனக்கு யார் இருக்கா", என்று ஏக்கமோ அங்கலாய்ப்போ எதுவும் செய்வாள் இல்லை. பகல் உச்சிப்பொழுதில் நெல், கடலை, மிளகாய், உளுந்து என்று எதையாவது புடைத்து வாசலில் காயவைத்து கொண்டிருப்பாள். அவள் முறத்தில் தானியங்களை புடைக்கும் அழகே தனி. ஒவ்வொரு முறை தானியங்கள் முறத்தை விட்டு மேல் எழும்போது விரல்களால் முறத்தை தட்டி ஒரு ஓசை எழுப்புவாள். தானியங்கள் மேலெழும்போது அவளுடைய புருவங்களும் ஜோடியாக மேலெழும்பும். தானியங்கள் மீண்டும் முறத்தில் தங்கி பதறும், தோலும் தனியே பிரிந்து கீழே விழும்போது  'உச், என்று ஒரு ஓசை கொடுப்பாள். ஒவொவொரு புடைத்தலிலும் தன் விரல்கள், புருவங்கள், உதடுகள், கைகள் கொண்டு இப்படியொரு தேர்ந்த அபிநய கச்சேரியே நடத்திக் காட்டுவாள். பார்க்கவே அலாதியாய் இருக்கும்.

ஓய்வென்று சிறிது நேரம் கிடைத்துவிட்டால், நாளிதழ்களை படிக்க தொடங்கிவிடுவாள். தேதியோ வருடமோ அவளுக்கு ஒரு பொருட்டே அல்ல. அவளை பொறுத்த வரையில் வாசிக்க வேண்டும். அதற்குமேல் அருகில் சென்றால் நாளிதழ் கண்ணை குத்திவிடும் என்னும் அளவுக்கு கண்களுக்கு அருகில் நாளிதழை வைத்து தன் ஆட்காட்டி விரலால் ஒவ்வொரு எழுத்தாய் கூட்டி கூட்டி ஒரு குழந்தையை போல் படிப்பாள். ஓய்வுபெற்ற அரசு பள்ளியின் ஆசிரியரான தாத்தா தன்  கண்களையும், கண்ணாடியையும் பாதுகாத்து கொள்ளும் சிரத்தையில் கால் பங்கு கூட பாட்டியின் பார்வை குறைவில் காட்ட மாட்டார். அவள் சோர்வடையும் வரை தொடரும் இந்த வாசிப்பு. படித்த செய்தியை அருகில் யார் இருந்தாலும் சொல்லி நியாயம் பேசுவதும் உண்டு. பெரும்பாலும் அக்கம்பக்கத்தில் உள்ள அவள் வயதை ஒத்த நண்பர்களிடம் தான் இந்த பகிர்தல் இருக்கும். அவர்களும் அது எந்த காலத்து செய்தி, எப்போது நடந்தது என்ற விவரங்களை எல்லாம் பற்றி கவலைபடாதார் தாம்.


மாமியார் மருமகள்கள்  சண்டை அற்ற ஒரே குடும்பம் பாட்டியின் குடும்பமாக தானிருக்கும். பாட்டியை யாருக்கும் விரோதமாய் பாவிக்க மனம் வரவே வராது. 'அது ஒரு அப்பிராணி, ஒரு ஈ, எறும்புக்கு கூட கேடு நினைக்காத உசுரு' என்பார்கள் மருமகள்களும். பாட்டிக்கு பேரன் பேத்திகள் மேல் அளவுகடந்த பாசம். அவளுக்கு பேரப்பிள்ளைகளில் எல்லோருமே ஒன்றுதான். மாலை வேளைகளில் அனைவரும் பாட்டியை சூழ்ந்துகொண்டு பாடம் படித்து கொண்டும், கதைகள் கேட்டுக்கொண்டும், அவள் மடியில், தோளில் தொங்கிக்கொண்டும் விளையாடிக் கொண்டிருப்பார்கள். காக்கா கதை, குருவி கதை, சிங்கம் கதை, குதிரை கதை, ராஜா கதை என்று ஏகப்பட்ட கதை கூறுவாள். கதைகள் கேட்டுக்கொண்டே ஒவ்வொன்றாய் தூங்கிவிடும். ஒவ்வொரு கதையிலும், குழந்தைக்கான அம்சமும், நன்னெறிகளும் இருக்கும். சொர்க்கமாய் திகழும் அந்த மாலை வேளைகள்.

பட்டணத்தில் வசிக்கும் மகள் மேல் தாத்தா, பாட்டி என்று அனைவரும் உயிராய் இருப்பார்கள். வாரிசுகள் தங்காமல் போன வேதனையால் வேண்டி, தழைத்த முதல் வாரிசு என்பதால் மிகுந்த பாசத்தோடு வளர்த்தார்கள். மருமகன் மேல் மிகுந்த மதிப்பும் பாசமும் கொண்டிருந்தார்கள். என்னவோ சில காரணங்களால் தாத்தவிற்கும் பட்டணத்து மகள் குடும்பத்திற்கும் சிறு உறவுச்சிக்கல். தவறென்னவோ தாத்தாவின் மேல்தான். ஆதலால் சிறிது காலம் பேச்சுவார்த்தையோ, போக்குவரத்தோ இன்றி இருந்த நேரம் அது. பாட்டிக்கு தன் மகளையோ, பேரப்பிள்ளைகளையோ பார்க்காமல் இருப்பு கொள்ளவில்லை, துடித்துதான் போனாள். ஒருநாள் நெய்முறுக்கு , அதிரசம், சத்துருண்டை, லட்டு என்று தன் கையாலே அனைத்தையும் செய்து, சோளம், கம்பு, கேழ்வரகு என்று நகரத்தில் கிடைக்காத தானியங்களையும் கட்டி எடுத்துக்கொண்டு தாத்தாவையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டுவிட்டாள்.

மகளின் கோபமோ இத்தனை காலங்களில் தீரவேயில்லை, ஆதலால் இவர்களை ஏற்றுக்கொள்ளவே இல்லை. மனைவியின் கோபத்தில் நியாயம் இருப்பதை உணர்ந்து நல்லிதயம் கொண்ட மருமகனும் அவளை தடுக்கவும் இல்லை. மிகவும் அழுது கொண்டே , பேரப்பிள்ளைகளையாவது பார்த்து செல்கிறோமே....என்று கெஞ்சினர். அதெல்லாம் கூடாது அவர்கள் பள்ளி சென்றிருக்கிறார்கள் என்று கூறிவிட்டாள் மகள். பேரப்பிள்ளைகள் பச்சிளம் பாலகர்கள்; பள்ளி சென்றிருந்தனர். இந்த இரண்டு தொண்டு கிழமும், அக்கம்பக்கத்தில் பேரப்பிள்ளைகள் படிக்கும் பள்ளியை விசாரித்து, மூட்டை முடிச்சுகளுடன் நடந்தே அந்த உச்சி வெயிலில் பள்ளியை அடைந்தனர்.வியர்க்க விறுவிறுக்க, இரண்டு முதியவர்களை மூட்டை முடிச்சுகளுடன் கண்டதும் ஆசிரியர்களுக்கும், அலுவலர்களுக்கும் குழப்பமாய் இருந்தது. அப்பள்ளியின் தாளாளர், மகளின் சிறுவயது தோழி. இவர்களின் வியர்வை வடிந்து, சோர்வுற்று, வேதனையால் வாடிப்போயிருக்கும் முகத்தினை கண்டதும், தாங்கமாட்டாமல், உள்ளழைத்து தன் அறையில் உட்காரவைத்து ஆசுவாசப்படுத்தினாள். பேரக்குழந்தைகளை பார்க்க வேண்டும் என்று கேட்டு கண்ணீர் விட்டு துடிக்கும் இரு வயதான தம்பதிகளை பார்த்து அருகில் இருந்த ஆசிரியர்கள் யாவரும் கலங்கி விட்டனர். ஒரு ஆசிரியர் சென்று குழந்தைகளை அழைத்து வந்தார். இத்தனை நாட்கள் கழித்து பேரப்பிள்ளைகளை கண்டதும், பாட்டி வாரி அணைத்துக்கொண்டு முத்தமிட்டு அழுததும், அவள் பாடிய பாட்டும், இப்போதும் அந்த பள்ளியில் எதிரொலித்துக்கொண்டே இருக்கும். தான் ஆசையாசையாய் செய்து கொண்டுவந்த பலகாரங்களை எடுத்து ஒவ்வொவொரு குழந்தைக்கும் அழுதுகொண்டே, பாடிக்கொண்டே, ஊட்டிக்கொண்டே இருந்தாள். குழந்தைகளும் பாட்டி அழுவதை பார்த்து தாங்களும் அழத்தொடங்கிவிட்டனர். கண்ணீர் தரை நனைத்தது. அந்த பாசப்போராட்டத்திலிருந்து மீள முடியாமல் ஊர் திரும்பினர்  இருவரும்.

இதோ காலங்கள் ஓடி விட்டது. ஓய்வன்றி உழைத்த தன்னிகரில்லா பாட்டி சில வருடங்களுக்கு முன்னர் மறைந்து விட்டாள். தாத்தா ஒரு இரும்பு மனிதர், அவர் அழுது மற்றவர் பார்த்தது அன்றுதான் முதலும், கடைசியும். "என் அம்மா என்னை விட்டு போயிடிச்சா",....என்று அவர் வெடித்து அழுத்தது, தன் ஆழ்மனதில் பொதிந்திருந்த இத்தனை ஆண்டுகால தங்களின் வாழ்க்கையின் பிரதிபலிப்பே. "இருக்கும் போது கிழவி அருமை தெரியலை, போனதுக்கப்புறம் அழுது துடித்தென்ன பயன்", என்ற வார்த்தைகளும் கேட்காமலில்லை. தாத்தாவிற்கு, பாட்டி இல்லாமல் நாட்கள் நகர்வது வெறுப்பாய் இருந்தது. இந்த துக்கத்திலேயே அவரும்  அடுத்த சில வருடங்களில் போய் சேர்ந்துவிட்டார்.


குடும்பம் விரிவடைந்துவிட்டது, பேரப்பிள்ளைகளே குழந்தை பெற்றுவிட்டனர். இங்கொன்றும் அங்கொன்றுமாக தொழில், உத்தியோகத்தின் காரணமாக நாலா திசைகளுக்கும் பறந்து போனாலும், முடிந்தவரை தாத்தா, பாட்டியின் நினைவு நாளுக்கு மட்டுமாவது அனைவரும் கிராமத்தில் ஒன்று கூட முயல்வர். இன்று பாட்டியின் பத்தாம் ஆண்டு நினைவு நாள். குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்திருந்தனர். பூஜை முடித்து, குழந்தைகளுக்கு தாத்தா, பாட்டி பற்றிய நினைவுகளை எடுத்து சொல்லி அவர்களை போல நாம் வாழ வேண்டும் என்று போதிப்பது வாடிக்கை. குழந்தைகளும் தங்களின் கொள்ளுத்தாத்தா, பாட்டி பற்றி ஆர்வமாய் கேட்பார்கள்.

சின்னஞ்சிறிய மழலை ஒன்று தன்  அம்மாவிடம் கேட்டது, "சாமின்னா என்னம்மா".
சாமின்னா, எல்லாருக்கும் நல்லது செய்யும், யார் என்ன கேட்டாலும் கொடுக்கும், நல்ல அறிவை கொடுக்கும், எல்லாரையும் பத்திரமா பாத்துக்கும், அது தான்மா சாமி", என்றாள் அந்த வாண்டின் தாய்.

"அப்போ பிள்ளையார் சாமியா?", என்றது அந்த பிஞ்சு.

"ஆமாடா, முருகன், சிவன், பிள்ளையார், எல்லோரும் சாமி தாண்டா", என்றாள் தாய்.

"அப்போ நம்ம பாட்டியும் பிள்ளயார் மாதிரி தானே.....!!".

சில நொடிகள் அடர்ந்த அமைதி நிலவியது அங்கே. பாட்டியின் மகள், பேத்தி, கொள்ளுப்பேத்தி மூன்று பெரும் ஒரே நேர்கோட்டில். பாட்டியின் மகளின் கண்களில் தரதரவென்று கண்ணீர். ஆத்தா, அம்மாவாகி இன்று மம்மி என்று உருமாற்றம் பெற்றிருப்பதில் தொடங்கி, பல்வேறு வாழ்வியல் மாற்றங்களை கண்டுவிட்ட மூன்று தலைமுறையும் ஒத்து நின்றார்கள் "ஆமாம்....பாட்டியும் சாமி தான்...!!!"

(படம் தந்த கூகிள்'க்கு நன்றி)
--விளையாடும் வெண்ணிலா....

சனி, 1 அக்டோபர், 2011

மரணம் மரிப்பதில்லை இம்மண்ணில்...!

சியோலிலிருந்து சிதம்பரம் நோக்கிய மற்றுமொரு விடுமுறைப்பயணம்.  கடந்த விடுமுறைப் பயணத்தில் பாதியிலே விட்ட அதே புத்தகத்தை இந்த பயணத்தில் கவனமாக எடுத்து வைத்தேன், படித்து முடித்துவிடலாம் என்று மிக நம்பிக்கையாக. ஆனால் நம்பிக்கை துரோகம் இழைத்து நீண்ட இப்பயணத்தை தூங்கியும், சில பாலிவுட் மசாலா படங்களைப் பார்த்தும் கடந்தேன். என்னவோ தெரியவில்லை புத்தகம் படிக்க அனேக நேரங்கள் கிடைத்தாலும், குரங்கு மனம் என்னவோ அம்மரத்தை பற்றிப் பிடிப்பதே இல்லை. விமானப் பயணங்களும் வர, வர வெறுப்பை கொடுக்கின்றன. ஆனால் பகிர்வதற்கு விதைகளாய் அற்புதமான அனுபவச் சம்பவங்கள் கிடைப்பது இந்த விமானப் பயணங்களில் தான். இம்முறை குறிப்பாக இரு நிகழ்வுகளும் அவை எனக்கு உணர்த்திச் சென்ற சில குறிப்புகளும் இங்கே.

முதலானது, ப்ளாட்டிலிருந்து விமான நிலையம் வரையிலான டாக்சிப் பயணத்தில் கிடைத்த கொரிய ஓட்டுனரின் நட்பும், அவருடனான அரை மணி நேர உரையாடல்களும். அவர் பெயர் லீ. நாற்பதுகளின் மத்தியில் வயது. ஒரு கால் சற்றே ஊனம், தாங்கி தாங்கித்தான் நடக்கிறார். இரு பள்ளி செல் ஆண் குழந்தைகள். மனைவி வீட்டு வேலைகளை பார்த்து கொள்கிறார். மிகவும் சந்தோஷமான ஆச்சரியம்-அந்த அதிகாலை ஆளரவமற்ற வேளையில், ஆங்கிலத்தை புரிந்து கொண்டு சற்று தெளிவான பதிலையும் கொடுக்கக் கூடியவராய் அவர் இருந்தது தான். அகல சிரித்து எனது ஆச்சரியத்தை அவரிடம் பகிர்ந்து கொள்ள, அவரும் அதிரச் சிரித்தார்.

லீ சியோல் பல்கலைக் கழகத்தில் ஆங்கில இலக்கியம் பயின்று, சில காலம் தனியார் நிறுவனத்தில் முழு நேர ஊழியராக பணியாற்றியும் இருக்கிறார். பின்னர், கிடைக்கும் வருமானம் மிக சொற்பமாய் தோன்றவே அந்தப் பணியை உதறி விட்டு டாக்சி ஓட்டுனர் அவதாரம் எடுத்திருக்கிறார். பேச்சு அவருடைய தற்போதைய மாத வருமானம் பற்றி திரும்பியது. "கிடைக்கும் வருமானம் எனது மகன்களின் படிப்புச் செலவுக்கே சரியாக இருக்கிறது, என் நாட்டின் அரசியல்வாதிகள் போடும் திட்டங்களும், அதன் பயன்களும் லட்சாதிபதிகளை கோடீஸ்வரர்களாகவும், ஏழைகளை பரம ஏழைகளாகவும் தான் ஆக்குகின்றன. அரசியல்வாதிகள் மிகப் பெரிய ஊழல்வாதிகளாய் இருக்கின்றார்கள்", என்று விரக்தியுடன் கூறினார் ஒரு சராசரி இந்திய டாக்சி ஓட்டுனர் தலைநகரான டில்லியில் ஈட்டும் மாத வருமானத்தைக் காட்டிலும் 15-20 மடங்கு அதிகம் ஈட்டும் இந்த கொரிய ஏழை டாக்சி ஓட்டுனர் :-)

தென் கொரியா-Samsung, Hyundai, LG, Lotte, Fila, GS என்று இன்று தனது நிறுவனங்களால் உலகை ஸ்திரமாக முற்றுகை இட்டிருக்கும் ஆசியப் புலிகளுள் ஒன்று. உலகத்தின் மிகச் சக்தி வாய்ந்த பொருளாதார மையமாய் கடின உழைப்பால் பலரையும் பின்னுக்கு தள்ளி வீறு நடை போட்டுக் கொண்டிருக்கும் தேசம். ஒரு முனையிலிருந்து வெறும் நான்கே மணி நேரத்தில் தென் கொரிய நாட்டின் இன்னொரு முனைக்கு சாலை வழிச் சென்று விடலாம்; விமானப் பயணம் என்றால் வெறும் 55 நிமிடங்கள்தான். அவ்வளவு மிகச் சிறிய நாடு. இந்நாட்டின் முப்பதாண்டு கால எழுச்சியை "The Miracle of Han River" என்றே குறிப்பிடுகிறது வையம். அப்படிப்பட்ட தேசத்திலும் ஒரு பாட்டாளியின் வேதனையான வார்த்தைகள் "அரசியல்வாதிகள் எங்கும் அரசியல்வாதிகள் தான்" என்றே நினைக்கத் தோன்றியது. 

பின் சுதாரித்தவராய், "அனைவரும் ஊழல்வாதிகள் இல்லை, மிகச் சொற்பமானவர்களே, உங்களுக்கே தெரியும் இன்றைய கொரியாவின் ஏற்றமிகு பொருளாதார வளர்ச்சி..." என்று கூறி ஒரு டிபிகல் தேசபக்தி கொரியராய் மறுவிளக்கம் கொடுத்தார் லீ. ஏறக்குறைய உண்மையும் அதுதான். ஊழல் என்பது கண்ணுக்கே தெரியாத அளவு தான் அங்கே, தெரிந்து விட்டால் "பதவியைத் துற..." என்று யாரும் வாய்த் திறவும் முன்னரே உயிர் துறவும் விவரமற்ற (இந்திய பாஷையில்) ஆட்கள் தான் கொரிய அரசியல்வாதிகள். லீ கனிவான மற்றும் மிகப் பணிவான விடை கொடுத்தார்.


இரண்டாவது நிகழ்வு. வாயில் எண் ஒன்பது வழியாக "இஞ்சியான்" விமான நிலையத்திற்குள் நுழைந்தேன். போர்டிங் பாஸ் பெற கவுன்ட்டர் K'ஐ நெருங்க, எனது வலப் புறத்தில் யாரோ என்னைப் பார்த்து சிரிப்பது போன்றும், வரவேற்று தலையை அசைப்பது போன்றும் தெரிய, நிதானித்து அவர் நோக்கி பார்வையை திருப்பினேன். அவர் நன்கு சிரித்தார் இப்பொழுது, நானும் சிரிப்பை பகிர்ந்தேன். எழிலாய் உடையணிந்திருந்த, கருத்த மெல்லிய தேகம் கொண்டவராய் இருந்தார். பங்களாதேஷிலிருந்து வந்தவர்கள் கணிசமான எண்ணிக்கையில் கொரியாவில் பணி செய்வதால், அவர் ஒரு பங்களாதேஷியாக இருப்பாரோ என்று எண்ணிக் கொண்டே அவர் இடம்  அடைந்தேன். 

அவர் என்னிடம் ஏதோ கேட்க, எனக்கு புரியாமல் மறுபடியும் விளிக்குமாறு கூறினேன். அவர் மறுபடியும் கூற, இப்போதும் எனக்கு விளங்கவில்லை. அது ஏதோ வேறு மொழியாய்த் தோன்றியது எனக்கு. ஆங்கிலமும் இல்லை ஹிந்தியும் இல்லை. ஓரளவு வங்காள மொழியும் எனக்கு தெரியும் ஆதலால், அவர் பேசியது வங்காளமும் இல்லை என்று உணர்ந்து கொண்டேன். ஆக, அவர் இந்தியரும் இல்லை, பங்களாதேஷியும் இல்லை. இங்கே கொரியாவில் பாகிஸ்தானியர்கள் குறிப்பிடத்தக்க அளவில் வாணிபம் செய்பவர்களாய் இருக்கிறார்கள். அவர்களும் ஒரு சராசரி வட இந்தியர் பேசும் ஹிந்தியை விட அற்புதமான, தூய்மையான ஹிந்தி பேசுபவர்களாக இருப்பார்கள். ஆக இவர் பாகிஸ்தானியும் இல்லை.

இலங்கையை சேர்ந்தவராக இருப்பாரோ..?! ஏனெனில், இங்கே இலங்கையிலிருந்தும் கடின பணிகளுக்கு ஆட்கள் அழைத்து வரப்படுகிறார்கள். பின்னர் அபூர்வமாய் அவருடைய சம்பாஷணையில் இங்கும் அங்கும் வந்து விழுந்த ஆங்கில வார்த்தைகளைக் கொண்டு அவர் பெயர்  சரத் ஏதோ ஒரு 'கா' , (ஆனால் 'பொன்சேகா' அல்ல) என்பதும், சிங்களவர் என்பதும், பேசியது சிங்கள மொழி என்பதையும் தெரிந்து கொண்டேன். நான் சிங்களம் அறியேன் என்று அவரிடம் தெரிவித்தும், அவர் சிங்கள மொழியிலேயே வாசித்துக் கொண்டிருக்க, எனக்கு கிர்ரென்று இருந்தது. ஆங்கிலம், ஹிந்தி, பெங்காலி அல்லது கொஞ்சம் கொஞ்சம் கொரிய மொழி என்று இவற்றில் ஏதாவது சம்பாஷிக்க வருமா என்று கேட்டதற்கு உதட்டை பிதுக்கினார். பின்னர் நடந்த சைகைச் சுற்றுகளில், அவர் நான்கு வருடங்களாக கொரியாவில் பணி செய்வதையும், இப்போது இலங்கைக்கே சென்று தனது குடும்பத் தொழிலை கவனிக்க போவதாகவும் தெரிந்தது. 

சிங்களம் தவிர வேறு மொழி அறியாமல் அவர் கொரியாவில் பணி செய்தது மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்தது எனக்கு. அந்த மிகக் குறைந்த ஆங்கில அறிவை வைத்தே பிழைத்திருக்கிறார் மனுஷன். வெறும் "ரூபவாஹினியை" வைத்து கொண்டு எப்படி நான்கு வருடங்கள் இங்கே காலம் தள்ளினீர்கள்...என்று ஆங்கிலத்தில் நான் விசாரித்தால் ஏதோ 'கைமாத்தா ஐம்பது லட்சம் கொடுங்கள்' என்று கேட்டதைப் போல அவர் ஒரு அதிர்ச்சிப் பார்வை பார்க்க, எனக்கு எப்படா இந்த அறுவைகிட்டே இருந்து தப்பிப்போம் என்று ஆகிவிட்டது. எகிறி 'Internet Zone' சென்று அமர்ந்தேன். அவர் நிலை கொஞ்சம் பரிதாபமாகவும் இருந்தது. இருந்தாலும், நான் செல்லும் அதே விமானத்தில்தான் அவரும் பயணிக்கிறார் என்ற செய்தி வேறு என்னை உச்சத்திற்கு அச்சுறுத்தவே, அவரை மனதில் ஒரு மூலையில் வெறுத்து ஒதுக்கி இன்டர்நெட்டில் மூழ்கினேன். 

போர்டிங் செய்ய இன்னும் பத்து நிமிடங்களே உள்ளன. Internet Zone'ஐ  விட்டு வெளியேறி போர்டிங் கேட்டை அடைந்தேன். கூட்டமின்றி காணப்பட்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. தூரத்தில் ஒருவர் என்னை பார்த்து கையசைத்தபடியே என்னை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தார். "Oh My God...அதே சரத்' தான்...! கவனியாதது போல் முகத்தை திருப்பிக் கொண்டேன். வேகமாக வந்து, Gate....Change, Gate....Change....என்று பதட்டத்துடன் கூறினார். நான் பதறாமல், கேட் இதுதான் என்று கூற, Gate....Change, Gate....Change....என்று மறுபடியும் கூறி என் கைப் பற்றி இழுக்க நான் சற்று எரிச்சலடைந்தேன். பின்னர் தான் தெரிந்தது, நான் செல்ல வேண்டிய விமானத்தின் போர்டிங் கேட் எண் மாற்றப்பட்டு விட்டது என்று. கபடமில்லாமல் என் கைப்பற்றி இழுக்கும் அந்த கறுப்புத் தோழனின் சிரிப்பு என்னை சவுக்கால் அடிப்பதை போன்று இருந்தது. அவரை தவிர்த்த என் செய்கை என்னை வெட்கித் தலை குனியச் செய்தது. இன்று அவரின் நினைவாக என்னிடம் இருப்பது அவரின் அந்த சிரித்த முகமும், அவருடைய பெயரும் தான்.

இவ்விரண்டு சம்பவமுமே ஒரு வெளிநாட்டவர், ஒரு இந்தியனிடம் நடந்து கொண்ட விதத்தை உரைப்பனவாய் இருக்கின்றன. உள்ளே...., நமது தேசத்தின் உள்ளே என்ன நடக்கிறது. நிலம், நீர், மொழி, மதம், சாதி என்று பிரிந்து பகைமை பாராட்டி ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டும், வெட்டிக் கொண்டும், சுட்டுக் கொண்டும் சாகிறோம். இதன் விளைவுகளால் நாம் இழப்பது எத்தனை விலை கொடுத்தாலும் திரும்பக் கிடைக்காத உயிர்கள் என்பதை நாம் உணர்வதே இல்லை.

"போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஏழு பேர் பலி" என்ற செய்தி ஆறாத ஒரு ரணத்தை மறுபடியும் கூராயுதம் கொண்டு கீறி சென்றிருக்கிறது. கோபம், ஆற்றாமை, சலிப்பு, வேதனை, விரக்தி, குழப்பம் என்று ஒரு வித தவிப்பு கலந்த அதிர்வுகளால் மற்றொருமுறை இதயம் தனது துடிப்பை நிறுத்தி சென்றிருக்கிறது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகரில் கடந்த வாரத்தில் தொலைக்காட்சியில் தொடர்ச்சியாக ஒளிபரபப்பாகிய அந்த காட்சி "Tamils have been referred to as the last surviving Classical Civilisation on Earth" (Citation: Wikipedia) என்ற அந்த வாக்கியத்தின் உண்மைத்தன்மையை எள்ளி நகையாடிச் சென்றிருக்கிறது.

இந்நூற்றாண்டிலும் மனிதர்கள் சாதி, மதம் என்று பிரிவினை பேசி வாழ்ந்து வருவதும், அதன் பெயரால் செத்து மடிவதும், இத்தேசத்தில் மனித உயிர்கள் தாம் மிக மலிந்த பொருட்கள் என்பதை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது நம் தமிழ் பூமி. "செய்யும் தொழிலால் நீங்கள் சாதியை பிரித்தீர்களானால், ஒரு சராசரி இந்தியப் பொறியாளன் இங்கே வாழும் வாழ்க்கைமுறையையும், ஈட்டும் பொருளையும் விட மேம்பட்ட  வாழ்வு வாழும் எனது கொரிய செருப்பு தைக்கும் தொழிலாளியையும், சாக்கடை சுத்தம் செய்யும் தொழிலாளியையும் எந்த வகையில் அடக்குவீர் நீங்கள்...?"- எனது கொரிய சக பணியாளரின் இக்கேள்விக்கணை எனது இந்திய தேசத்தின் பொய்ப்பெருமையையும், எனது தமிழ் நாகரீகத்தின் சில போலித்தன்மையையும், டாம்பீகத்தையும் செருப்பால் அடித்து செல்கிறது.  

சாதியை மனதில் இருந்து அகற்றி, மதத்தை பூஜை அறைக்குள் நிறுத்தி, மனிதனாய் தெருவீதிகளில் நடக்க பழகிடாத  இத்தேசம் தான் எனது வேர் என்பதை நினைத்தால் விஷமருந்த எத்தனிக்கிறது நெஞ்சம்.(படம் தந்த கூகிள்'க்கு நன்றி)
 --விளையாடும் வெண்ணிலா....

சனி, 4 ஜூன், 2011

அப்புக்குட்டியும் ஆமைமுட்டையும்...!!!


சியோல் வந்து பணியில் சேர்ந்த புதிது. அலுவலகத்தில் எனது முதல் "Team Building" ஈவென்ட்.  அருகே 'பல்சான்' நகரில் உள்ள ஒரு ஸ்போர்ட்ஸ் காம்ப்ளேக்ஸில் பவுலிங் கேம் (அதாங்க, இந்த "பிரியமானவளே" படத்துல விவேக் சொல்லுவாரே "ஆமை முட்டைன்னு" அந்த கேம் தான்), அதைத் தொடர்ந்து லஞ்ச் பார்ட்டி.    இந்த விஷயத்தை கேள்விப்பட்டதில் இருந்தே அப்புக்குட்டியார் மிதமிஞ்சிய மகிழ்ச்சியில் திளைத்தார். ("அரிசிமூட்டை" அப்புக்குட்டியார் யார் என்பதை அறியாதவர், இதை க்ளிக்கி தெரிந்துகொள்ளவும்). இரண்டு வாரமாக இதை பற்றிய ரெக்கார்டையே தேய் தேயென்று தேய்த்துக் கொண்டிருந்தார். "சதீஷ்!  PORK & BEEF...ம்ம்ம்.....பாத்திகட்டி வெளு வெளுவென்று வெளுத்திடலாம்", என்று நாக்கை சப்புக் கொட்டிக் கொண்டே இருந்தார். 

அந்த நாளும் வந்தது. புறப்படுவதற்காக கீழே அப்பார்ட்மென்ட் ரிசெப்ஷனில் அப்புக்குட்டிக்காக காத்திருந்தேன். எங்களுடன் சேர்ந்தே செல்ல மற்றுமொரு மூத்த சக இந்திய ஊழியர் ஒருவரும் வந்து அமர்ந்திருந்தார். சிறிது நொடிகளில் பார்த்த மாத்திரத்திலேயே வெடிச்சிரிப்பை வரவழைக்கும் உடையில் வந்து சேர்ந்தார் அப்புக்குட்டி. ஆட்டுக் கல்லிற்கு அண்ட்ராயர் போட்ட மாதிரி.  "ஆளப் பாருயா...இட்லி அண்டாவிற்கு ஜட்டி பனியன் போட்டு விட்ட மாதிரி",  என்று நம் சக ஊழியர் வேறு கிண்டிக் கிழங்கெடுக்க கொல்லென்று சிரித்தே விட்டேன். நல்ல வேளை, அப்புக்குட்டி கவனிக்க வில்லை. 

"என்ன போகலாமா?", என்று நான் கேட்டதற்கு, "இருங்க ஜோவும் வராங்க", என்று கூறினார் அப்புக்குட்டி. "ஜோ" பிலிப்பின்சை சேர்ந்த இளம் கன்னி. எங்கள் அலுவலகத்தில் தான் பணி புரிகிறாராம், அறிமுகப்படுத்தி வைத்தார் அப்புக்குட்டி. "ஜோ" மங்கோலியச் சாயலற்ற இந்தியச் சாயல் அதிகம் குடியேறிய முகத்தைக் கொண்ட வசீகரமான மினி ஸ்கர்ட் தேவதை.  நல்ல அம்சமான வடிவமான பெண். அருகே நின்று கொண்டிருந்த சக மூத்தாரின் அளவுக்கதிகமாய் திறந்திருந்த வாயை மூடுமாறு சற்றே சைகை செய்தேன். அவர், "இல்லபா...என் வாயே அப்படித்தான்", என்றார் சமாளிப்பாக. "எது...மாரியம்மன் கோவில் உண்டியல் மாதிரி என்ன திறந்தேவா இருக்கும்...மூடுங்க சார் அதை...!", என்று நான் கூறியதற்கு வெட்கப் புன்னகையை தெளித்தார் நாற்பதுகளின் இறுதிகளில் இருக்கும் அவர்.  புறப்பட்டோம். 

"சார்!, நீங்க அந்தப் பொண்ணுக்கு கொள்ளுத் தாத்தா மாதிரி, நீங்க போய் ஜொள்ளு விட்டுகிட்டு...." என்ற என்னை ஒரு நெருப்புப் பார்வை பார்த்தார். "சாரி...தப்பா சொல்லிட்டேன், கொந்தளிக்காதீங்க...அந்தப் பொண்ணு தான் உங்களுக்கு கொள்ளுப் பேத்தி மாதிரி இருக்குது", என்று அவரை ஒரு வழியாக சமாதானப் படுத்தினேன். இந்த எங்களின் அக்கப்போருக்கிடையில், நம் அரிசிமூட்டை அங்கே "ஜோ"வுடன் அளவு கடந்து வறுத்துக் கொண்டிருந்தது. அதிகமாய்த் தீயவே, நான் இடை மறித்து, "அரிசிமூட்டை! உன் நாலாவது பையனுக்கு ஐந்தாவது குழந்தை பிறந்திருக்காமே....?", என்று என் வயிற்றெரிச்சலை வார்த்தைகளாய் தொடுக்க, "நீ நல்லாவே இருக்கமாட்டே....",என்கிற அர்த்தத்தில் கண்களில் கனல் கக்கி நகர்ந்தது அரிசிமூட்டை.  ஹீ....ஹீ...எத்தனை பாத்திருப்போம். பின் தொடர்ந்த பயணத்தில் ஸ்போர்ட்ஸ் காம்ப்ளெக்ஸ் வரை சூடு-சுரணை, மானம்-ரோஷம், வெட்கம்-சிரமம் பாராமல் செய்த கடலை சாகுபடியால் இன்று வரை என் நெருங்கிய தோழிகளுள் ஒருவர் "ஜோ". சும்மாவா சொல்லி இருக்காங்க பெரியவங்க, பட்ட கஷ்டம் வீண் போகாதுன்னு...! ஹீ...ஹீ...!

பவுலிங் லேன்(Bowling Lane)அடைந்த பிறகும் தொடர்ந்தது எமது கடலைப் பணி. அங்கே மூலையில் ஒரு 'கொத்தவரங்காய்' கொரியப் பெண்ணிடம் வழிந்து கொண்டிருந்தது அரிசிமூட்டை. எங்கள் இருவரையும் கடக்கும் சமயமெல்லாம் அவர் பார்வையில் அனல் பறந்தது. 

முந்தைய நாள் அலுவலகத்திலேயே ஒவ்வொருவருடைய ஆட்டத்திறனை அவரவர் மூலமாகவே கேட்டறிந்து, அதற்கேற்ப குழு அமைத்துவிட்டார்கள். நான் ஒப்புக்கு சப்பாணி என்று எழுதி கொடுத்து இருந்தேன். அப்புக்குட்டியோ ஆட்டத்தில் கை தேர்ந்த புலி என்று தெரிவித்திருந்தார். மேலும், "See, this game is just a matter of Focusing and Concentration, for people like you it'll be quite difficult to learn. In fact, I was trained by a Special Coach, you see", என்றெல்லாம் கூறி அவர் எனக்குள் பீதியை வேறு கிளப்பி விட்டிருந்தார்.  "அய்யய்யோ! பொண்ணுங்களுக்கு முன்னாடி நம்ம பல்பு பியுஸ் போயுடுமோ....", என்று எனக்கு ஒரே கவலை. ஒருவாறு சமாளித்துக் கொண்டு, "எங்க ஊர்ல, தெருவுக்கு தெரு இந்த விளையாட்டு தான்யா பேமஸ், பச்சபுள்ளக் கூட சும்மா கில்லியா பிச்சி உதறும் தெரியுமா...?", என்று நான் கோலி குண்டை மனதில் வைத்து சொன்ன வார்த்தையால் கொஞ்சம் அடங்கினார் அப்புக்குட்டி. 

நாங்கள் நால்வருமே தனித்தனி குழுக்களில். அப்புக்குட்டியார் கடலை போட்ட கொத்தவரங்காய் கொரியப் பெண் எனது குழுவில், ஹீ...ஹீ....ஏமாந்திட்டியே செல்லம்....என்று அப்புக்குட்டியாரை பார்த்து சைகை செய்தேன். "ஜோ" எனது லேனிற்கு அடுத்த லேனில். போட்டி தொடங்கியது. பெரும்பாலான கொரிய ஆண்கள் அனாயசமாக, நேர்த்தியாக விளையாடினார்கள். என் விளையாட்டை கவனித்த சக ஊழியர்கள், "ஏற்கனவே விளையாடி இருக்கீங்களா...ரொம்ப பெர்பெக்டா இருக்கிறது உங்க Ball Release & Delivery", என்று பாராட்டி தள்ளினார்கள். ஏழெட்டு முறை "Strike" வேறு ஸ்கோர் செய்திருந்தது எனக்கே ஆச்சரியத்தை கொடுத்ததென்றால் பாருங்களேன்...! ஒவ்வொரு ஸ்ட்ரைக்கிற்கும் அணைத்து அணைத்து பாராட்டி பரவசப் படுத்தியது நமது "கொத்தவரங்காய்". ஆர்வக் கோளாறில் "பப்பரக்கா" என்று கீழே விழ இருந்த நேரத்தில் அருகிலிருந்த "ஜோ" கைகொடுத்த் தூக்கி, அடி ஏதும் பட்டுதா.." என்று கேட்க "நீங்கள் வந்து தூக்கி விடுவதாக இருந்தால் நான் விழுந்து கொண்டே இருப்பேன் என்று நான் ஜொள்ள, "You....Naughty..." என்று செல்லமாக கூறிவிட்டு பறந்தது பிலிப்பின்ஸ் குயில். அங்கே அப்புக்குட்டி காதிலே புகை மண்டலம். எங்களுடைய குழு விரைவாக தங்களின் ஆட்டத்தை முடித்ததால், நான் மற்ற லேன்களுக்கு சென்று வேடிக்கை பார்க்க தொடங்கினேன். 

பெரிதாக அளந்த அப்புக்குட்டியார், பந்தை எறிகிறேன் பேர்வழி என்று கீழே சிந்தெடிக் ப்ளோரில் விழுந்து புரண்டு கொண்டிருந்தார். கண்டம் விட்டு கண்டம் பாய்வதைப் போல் சீறிப் பாய்ந்து கொண்டிருந்தன அவர் எறிந்த பந்துகள். "இது தான் ஸ்பெஷல் கோச் கிட்ட கத்துகிட்ட லட்சணமா...",  என்று கூறி...நன்கு அடிவயிற்றில் இருந்து காரி, காரி துப்பிவிட்டு வந்தேன். வெட்கமில்லாமல், முப்பத்திரண்டு பற்களையும் காட்டி இளித்தது அரிசிமூட்டை. 

மற்றொரு லேனில் நமது மூத்தவர், பந்தை கள்ளுப்பானையை ஏந்துவது போல் இரு கைகளிலும் ஏந்தி இங்கும் அங்கும் எறிந்து கொண்டிருந்தார். அவர் எறியும் பந்துகள் ஏவுகணைகளைப் போல் பாய்ந்து சென்று பக்கத்து லேனில் உள்ள பின்களை சாய்த்துக் கொண்டிருந்ததை கண்டு கூடி நின்று கும்மியடித்து மகிழ்ந்தனர் கொரியப் பெண்கள். அவரோ இவ்வளவு கேவலமாக விளையாடிய பின்பும் ஒரு ரன்னில் உலகக் கோப்பையை இழந்தவர் போல், "டச் விட்டு போச்சு, எங்க ஊர்ல நான்தான் புளியங்கா அடிக்கிறதுல கிங்காக்கும், அவ்வளவு ஷார்ப்பா இருக்கும் குறி, தெரியுமா..." என்று தனது புளியங்கா புராணம் பாடினார் என்னிடம். நானும், "நீங்க சூப்பராதான் விளையாடினீங்க....அந்த பந்துல தான் சார் ஏதோ...." என்று ஒத்தடம் கொடுத்தேன்...!

"ஜோ" மிக அருமையாக விளையாடினார். பல Double'கள் ஸ்கோர் செய்திருந்தார். போட்டிகள் முடிந்து பரிசளிப்பு விழா நடந்தது. எங்கள் நால்வரில் மூவருக்கு பரிசுகள் கிடைத்தன. பெண்கள் பிரிவில் மிகச் சிறப்பாக விளையாடியதற்காக "ஜோ"விற்கும், ஆண்கள் பிரிவில் மிகக் கேவலமாக விளையாடியதற்காக அப்புக்குட்டிக்கும் பரிசுகள் கிடைத்தன. கூடுதலாக, அப்புக்குட்டிக்கு இணையாக கேவலமாக விளையாடியதற்கு நமது "கிங் ஆப் புளியங்கா"விற்கு ஆறுதல் பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. பின்னர் லஞ்ச் பார்ட்டியை முடித்துவிட்டு அவரவர் தம் வீடு திரும்பினர். நமக்கென்று ஆர்டர் செய்யப்பட்டு வரவழைக்கப் பட்டிருந்த, "PIZZA, BURGER, SANDWICH'களை போட்டு தாக்கிவிட்டு நாமும் நடையைக் கட்டினோம். எங்கள் வழி  நெடுகிலும் அப்புகுட்டியை மூவரும் சேர்ந்து நக்கலடித்து நாறடிக்க, அவரோ வழக்கம் போல் கடைவாய் பல் தெரியும் அளவுக்கு சிரித்தே மழுப்பினார். 

--விளையாடும் வெண்ணிலா....

வெள்ளி, 13 மே, 2011

தமிழன் கையிலெடுத்த சாட்டை...!


"தமிழ்நாடு"-இந்தியாவின் வேறு எந்தப் பகுதியிலும் இம்மண்ணில் வெடித்து கிளம்பியது போன்று மொழி எழுச்சியும், திராவிடச் சிந்தனையும், பகுத்தறிவு வாதங்களும், கடவுள் மறுப்பு இயக்கங்களும் துளிர்த்து வேர் விட்டிருக்கிறதா என்றால், அதற்கு பதிலுரைப்பது கடினமே. தேசமே மத, சாதிச் சண்டைகளில் மிருகத் தனமாய் உலா வந்த தேதிகளில் இங்கே "கடவுளா...எங்கே என் கண் முன் வரச் சொல்..." என்று பொங்கியும், அரிசன ஆலயப் பிரவேசங்கள் நிகழ்த்தியும் மற்றோருக்கு புத்தியுரைத்தது இந்த பகுத்தறிவு புரட்சி பூமி. ஆயிரமாண்டுகளுக்கு முன்னரே அணை கண்டு நீர் தேக்கி முப்போகம் விளைத்த சோழ மாமன்னனிலிருந்து , உலகை வியப்பிலாழ்த்திய விஞ்ஞானிகள் சர் சி.வி. ராமன், சந்திரசேகர், வெங்கட்ராமன், அப்துல் கலாம் மற்றும் வீரர்கள், கலைஞர்களான விஸ்வநாதன் ஆனந்த், ஏ. ஆர். ரஹ்மான் வரை என்று இந்த அறிவார்ந்த சமூகம் இந்த தேசத்திற்கு மட்டுமின்றி பாருக்கே கொடுத்த, கொடுத்துக் கொண்டிருக்கிற கொடைக்கு நிறுத்தற்குறிகளே இல்லை எனலாம். 
ஆனால் இப்படிப்பட்ட ஒரு அறிவாற்றல் செறிந்த சமூகத்தை ஆள  ஐயா காமராசரைத் தவிர்த்து நாம் தேர்ந்தெடுத்த தலைவர்கள் எந்த விதத்தில் நம்மையும் நம் வல்லமையையும் அடையாள படுத்தும் வண்ணம் இருந்திருக்கிறார்கள் என்றால், எவரும் இல்லை என்றே எண்ண தோன்றுகிறது. அறிஞர் அண்ணாவின் கால்கள் கோட்டையில் பதிந்த தினத்திலிருந்து இன்று வரை தேசியக் கட்சிகளை வேரறுத்து திராவிடக் கட்சிகளை அரியணை ஏற்றியே அழகு பார்த்து வருகிறது எமது தாய்த் தமிழ் பூமி. மிக குறுகிய காலத்திலேயே காலன் கவர்ந்து கொண்டான் அண்ணாவை.  "அறுபதுகளின் இறுதிகளில், ஒரு இளைஞனின் செய்கைகள் மாநிலத்தையே உற்று நோக்க வைத்தன, அந்த இளைஞன் ஒரு சக்திமிக்க, மாநிலத்தின் எதிர்கால அரசியல் சின்னமாக கருதப்பட்டான். இளைஞர் பட்டாளங்களை தன் பக்கம் காந்தமாக இழுத்து கட்டி வைத்திருந்தான். அந்த இளைஞன் வேறு யாருமல்ல, இன்று தன் அனைத்து திறமைகளையும் நூதனமாய் கொள்ளைகள் அடிப்பதிலும், அண்ணா தோற்றுவித்த கட்சியை குடும்பம் கூறு போட இடம் கொடுத்ததிலும் செலவிட்டு அவைகளை தொலைத்தே விட்ட கருணாநிதி தான் அந்த இளைஞன்" என்று என் நண்பன் ஒருவனின் தந்தை கூறியது ஞாபகத்திற்கு வருகிறது இப்போது. இவருக்கு பின் வந்த எம்.ஜி.ஆரோ நோவுற்றே மறித்துப் போனார். ஜெயலலிதா அம்மையாரோ இம்மண்ணின் நாடித்துடிப்பான ஏழை விவசாயிகளை நெருங்கவே முயலவில்லை இத்தனை வருடங்களில். 

கிட்டத்தட்ட நாற்பது வருடங்களாக இரட்டை ஆட்சி முறையே நடை பெற்றுக்கொண்டிருக்கிறது தமிழகத்தில். எவரும் இங்கே தம் நற்செயலுக்காக வென்று வருவதில்லை. மாறாக, முந்தைய ஆட்சியாளரின் செயலற்ற தன்மை, ஒழுக்கம், நேர்மை சிறிதுமற்ற, களவுகள் நிறைந்த ஆட்சியால் விளைந்த தோல்வியே மற்றவரை வெற்றி பெற வைக்கிறது. நாற்பது ஆண்டுகளுக்கு முன் தேசியக் கட்சியை மண்ணை கவ்வ வைத்த தலைவர்களைப் போன்று இன்று இந்த இரு திராவிட கழகங்களை தூக்கி எறிய வல்ல ஆற்றல் கொண்ட எவரும் மக்களால் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. மக்களும் தம் வாழ்க்கை குறைகளை நிவர்த்தி செய்யும் வல்லமை வெள்ளித் திரைக்கே இருப்பதாக அதைச் சுற்றியே தம் அரசியலறிவை வளர்க்கிறார்கள். மிக அருகில் இருக்கும் மாநிலமான கேரளத்திலும், யூனியன் பிரேதசமான புதுச்சேரியிலும் இத்தேர்தலில் வழக்கமான முடிவுகளை தவிர்த்து மாற்றங்களை நிகழ்த்திக்காட்டிய மக்களின் எண்ணவோட்டமும், மனவோட்டமும் என்று நமக்கு வரப் போகிறது என்று தெரியவில்லை. 

ஆனாலும், ஒரு பெரு மகிழ்ச்சி தமிழக தேர்தல் முடிவுகளிலிருந்து. மக்கள் பணம் பெற்றுக் கொண்டு வாக்களிக்கிறார்கள்; இலவசங்களுக்கு விலை போகிறார்கள் என்பன போன்ற ஊடக செய்திகள் எந்த ஒரு கட்சி சார்பற்ற, வளர்ச்சி நோக்குற்ற தமிழரின் நெஞ்சை பிளந்தே இருக்கும். ஆனால் பணத்தை பெற்றுக்கொண்டு அறிவை விற்று விலை போனவர்களாகவும், தூக்கி எறியப்பட்ட இலவசங்களை பொறுக்கிச் செல்லும் பிச்சைக்காரர்களாகவும் தம்மை கருதியிருந்த அரசியல்வாதிகளை, பெருமளவில் வெளியே வந்து வாக்களித்து, தங்களின் விரல் நுனி தீர்ப்பால் அவர்களின் எண்ணத்தை தம் பாதகைகள் கொண்டு அடித்திருக்கிறார்கள். எழுபத்து எட்டு சதவிகித வாக்குப்பதிவும், அதை ஒட்டிய தீர்ப்பும் இதையே கட்டியம் கூறுகின்றன.


இதோ மறுபடியும் ஒரே மாதிரியாக சுழலும் தீர்ப்பு. இம்முறை கலைஞரின் தவறுகள் ஜெயலலிதாவை அரியணை ஏற்றி இருக்கின்றன. விலைவாசி என்பது எந்தக் காலத்திலும் இறக்கத்தை சந்திக்கப் போவதில்லை, அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை "உலகமயமாக்கல்" உதவியுடன் மெல்ல, மெல்ல மக்களும் அடைந்து கொண்டே வருகிறார்கள்.  ஆதலால், வெற்று துவேஷ  கோஷங்களையும், இலவச வாக்குறுதிகளையும் மட்டும் நிறைவேற்றி, வாக்களித்த மக்களை மறுபடியும் மூடர்கள் ஆக்காமல், நல்ல பயனுள்ள திட்டங்கள் வகுத்து மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல முனைப்போடு செயல்பட வேண்டும். மக்களின் நம்பிக்கையை பொய்யாக்காமல், அவர்களின் மேலான தீர்ப்பு தவறல்ல என்று நிரூபிக்க வேண்டும். 

இலவசங்கள் தேவைதான். ஆனால் அவை நம் அரசியலர்கள் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் சொந்த பணத்தில் வாரி இறைப்பதைப் போல் பீற்றிக் கொள்ளும் தொலைக்காட்சியையும் , மடிக்கணிணியையும் இன்னும் பல மனமகிழ் பொருள்களையும் குறிப்பதல்ல. இவற்றை எல்லாம் கொடுத்து நொடி நேர தனிமனித சந்தோஷத்தை ஏற்படுத்தி அதன் மூலம் அரசியல் லாபம் அடைவது மட்டுமே அவர்கள் நோக்கம்.  மாறாக, நமக்குத் உண்மையிலேயே தேவையான இலவசங்கள் இவைகளே...
  • மக்கள் நோய்களற்ற ஆரோக்கிய வாழ்க்கை வாழ வழி வகை செய்ய வேண்டும். பணம் நோய் தீர்க்கும் மருந்தாய் இருப்பதை மாற்ற வேண்டும். அரசு மருத்துவமனைகள் புனித சேவைத் தளங்களாய் உருப் பெறல் வேண்டும். 
  • இளம் தொழிலதிபர்களையும், ஆராய்ச்சி மாணவர்களையும் ஊக்கப்படுத்துதல் வேண்டும். இலவச பயிற்சியும் தேவையான பொருளுதவிகளும், ஆலோசனைகளும் நல்ல பயன்கள் தரும் வகையில் வடிவம் பெற வேண்டும். இதற்கான துறைகள் ஏற்கனவே இருந்தாலும், பயனாளிகளின் எண்ணிக்கையை பார்த்தாலே நமக்கு புரிந்து விடும் இவற்றின் செயல்பாடுகள். 
  • உலகின் அசுர வளர்ச்சிக்கேற்ப உலகத்தரம் வாய்ந்த தரமான கல்வி கடைக்கோடி தமிழனுக்கும் இலவசமாய் கொடுக்கப்பட வேண்டும்.
  • சுகாதாரமான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். 
மேலும், 
  • மக்களை உயர்ந்த பண்புகளுடைய மனிதர்களாய் மாற்றம் பெற செய்ய வேண்டும். மாசு மருவற்ற சமூகம் செய்ய வேண்டும். 
  • சுதந்திரம் பெற்று அறுபது ஆண்டுகள் கழிந்தும் எந்த அடிப்படை வசதிகளிலும் (குடிநீர், உணவு, உறைவிடம், மின்சாரம்) தன்னிறைவை அடையாத நிலை களையப்பட வேண்டும். 
  • ஒழுக்கம், தூய்மை இவற்றை பேணி உழைக்கத் தயங்காத மக்களை உருவாக்க முனைதல் வேண்டும். 
  • விவசாயம் முடங்கியே போய் விட்டது. நூறு ஆண்டு கால அண்டை மாநிலகளுடனான நதிநீர்ப் பங்கீட்டு பிரச்சினைகளால் தரிசாகிப் போன அவர்களின் வாழ்க்கையை உயிர் பெறச் செய்ய வேண்டும். அந்த பகுதிகளில் தொழில் தொடங்க உலக/இந்திய நிறுவனங்களை ஊக்கப்படுத்த வேண்டும். அவர்களுக்கு முன்னுரிமைகளையும் சலுகைகளையும் கொடுத்து அந்நகரங்களை தொழில் நகரங்களாகவும், கல்வி நகரங்களாகவும் மாற்ற வேண்டும். 
  • சென்னை நகர் மட்டுமின்றி மாநிலத்தின் பிற பகுதிகளும் தொழில் மயமாதல் வேண்டும். 
இவைகள் யாவும் ஒரு ஆட்சியாளர் முன் உள்ள சவால்கள் அல்ல. இவைகள் ஒரு ஆட்சியாளரின் பணிகளில் சில. 

சரி, வென்றவரின் கடமைகளை பார்த்தாகி விட்டது. தோற்ற கலைஞர்....? எந்த காலத்தில் தமிழகம் சிறப்பான எதிர்க்கட்சியை கண்டிருக்கிறது. அப்படி என்றால்....!!?? அவருக்குத்தான் அவருடைய முழு நேர தொழிலான திரைப்படம் பார்த்தல், கதை வசனம் எழுதுதல், பாராட்டு விழாக்களில் பாராட்டு மழைகளில் நனைதல் என்று பல தலை போகிற அலுவல்கள் இருக்கின்றதே. மக்களே...., ஜாக்கிரதை,  மிகுந்த எச்சரிக்கையாய் இருங்கள். இனி பல பொன்னர் சங்கர்களும், பெண் சிங்கங்களும், இளைஞன்களும் சீறி வெளிவரக் கூடும். 

(படம் தந்த கூகிள்'க்கு நன்றி)
--விளையாடும் வெண்ணிலா....

சனி, 23 ஏப்ரல், 2011

சோக்கா சொன்னடா நைனா...!

என் பாட சாலை பருவத்தின் நினைவுகளாய் இன்றும் பசுமையாய், என்றும் இனிமையாய் நெஞ்சில் படிந்திருக்கும் ஒரு நல்ல மனிதருடன் பழகிய சில நாட்களின் சம்பவங்களே இந்தப் பதிவு. அவர் ஒரு தமிழாசான்.  எப்போதும் பளீர் வெள்ளை வேட்டி சட்டையில் "Johnsons வேட்டி-சட்டை" விளம்பர  மாடல் தோரணையில் ஒய்யாரமாய் உலா வருவார். வெறும் தமிழ் பற்று அல்ல....தமிழ் பித்து பிடித்தவர். "அண்டை வீட்டு குழந்தாய்!, கணையாழியில் கவனம் வையடி கண்ணே?" என்று ஒரு சிறுமியிடம் இவர் சொல்ல, அவள் தன் தாயிடம் "மம்மி!, ஒயிட் தோத்தி அங்கிள் என் கண்ணுமுழி எல்லாம் நோண்டிடுவேன்னு திட்றாரு மம்மி", என்று அழுதே விட்டாள்.  "தம்பி!, தெருமுனை பலசரக்கங்காடி சென்று உசாலா (UJALA) சொட்டு நீலம் வாங்கி வருகிறாயா, உசாலா, உசாலா..?", என்று சிறுவன் ஒருவனிடம் இவர் கேட்க, களுக்கென்று விழுந்து விழுந்து சிரித்த அவன், அது நாள் முதல் இவரை எங்கு, எப்போது பார்த்தாலும், "சார்! உசாலா சொட்டு நீலம் வாங்கி வரட்டுமா...உசாலா..உசாலா?" என்று குஷாலாக சொட்டு நீலத்தோடு அவர் பிராணனையும் சேர்த்து வாங்க ஆரம்பித்தான். 

ஒருவன் "சார்!, டாம் அண்ட் ஜெர்ரி'யை தமிழ்ல எப்படி சார் சொல்றது"ன்னு கேட்டான், என்னே தமிழ்ப்பற்று என்று வியந்து தான் போனார். ஆனால் "பூனையும் எலியும் என்று விளிக்க வேண்டும் தம்பி!" என்ற இவரின் சிரத்தையான பதிலால் அவன் திருப்தி அடையவில்லை போலும். "நான் கேட்டது அது இல்ல சார், பனியன்-ஜட்டி'யை எப்படி தமிழ்ல சொல்றதுன்னு கேட்டேன்", என்றவனைப் பார்த்து விக்கித்து விழி பிதுங்கி தான் நின்றார் ஆசான். பாருங்களேன்..பனியன்-ஜட்டிக்கு என்ன கோட் வார்டு வச்சிருக்கு பயபுள்ள. இவர் சிறிது யோசித்து "மேலுள்ளங்கி-கீழுள்ளங்கி என்று விளிக்கவேண்டும் தம்பி", என்று கூறிவிட்டு பதறி துடித்து ஓடினார். திருதிருவென்று விழித்த அவன், "என்னாது...முள்ளங்கியா...நான் பனியன்-ஜட்டி'ன்னே சொல்லிக்கிறேன்", என்று நகர்ந்தான். இது போன்ற பல எதிர் நிகழ்வுகளால் அவர் தன் இலக்கியத் தமிழ் உரையாடலில் இருந்து நடைமுறைத் தமிழ் உரையாடலுக்கு இடம் பெயர வைக்கப்பட்டார். பின்னாளில் "சோக்கா சொன்னடா நைனா..." ரேஞ்சிற்கு போய்விட்டது அவர் தமிழ்...! ஹீ..ஹீ...அடியேனுக்கும் இப்பெருமையில் கணிசமான பங்குண்டு என்பதை மிகத் தாழ்மையுடன் தெரிவுத்துக் கொள்கிறேன் யுவர் ஆனர்....! 

'இதெல்லாம் தேவையில்லாத வேலை' என்ற பல குடித்தனர்களின் எதிர்ப்பையும் மீறி குடியிருப்பு அஸ்சோசியேஷன் ஒன்றை நிறுவி, அதற்கு தானே தலைவர் என்றும், தலைவருக்கு வானளாவிய அதிகாரம் உண்டு என்றும்  பிரகடனப் படுத்தினார். முதல் கூட்டத்திற்கு ஒரு ஈ, காக்கையும் வரவில்லை. பின், அவரே ஒவ்வொவொரு வீட்டிற்கும் சென்று, "தயவுசெய்து வாங்க, நிறைய பஜ்ஜி, சொஜ்ஜிலாம் பண்ணியாச்சு, எல்லாம் வீணாப் போயிடும்", என்று தலைவருக்கே உரிய வானளாவிய அதிகாரத்தை பயன் படுத்தி மூர்க்கமாக உத்தரவிட்டும் பார்த்தார். ம்ம்ஹூம்...ஒரு பயனும் இல்லை. அனைவரும் "அஸ் ஐயம் சப்பரிங் ப்ரம் பீவர்" என்று விடுப்பு விண்ணப்பம் நீட்டி, பழையது ஒன்னும் இல்ல, நீ வேற வீடு பாரப்பா என்கிற ரீதியில் இடத்தை காலி செய்ய சொன்னார்கள்.  வீட்டில் தாரமோ, "அதச்செய், இதச்செய்'ன்னு உசுர வாங்கினில்ல, உக்காந்து ஒன்னு விடாம நீயே தின்னு", என்று பாசமழை பொழிய, இவர் பயந்து போய், "இந்த அப்பார்ட்மெண்டும், குடித்தனக்காரர்களும் நாசமாய் போகட்டும்", என்று பி.எஸ். வீரப்பா வசனத்தை உச்சரித்தவாரே எல்லோர் வீட்டிற்கும் பதார்த்த விநியோகம் செய்தார். 

இவருக்கும், அப்பார்ட்மெண்டில் ஐந்து சிறார்களுக்கும் (உள்ளேன் ஐயா..!) ஏழாம் பொருத்தம். அந்த ஐவரணி நாட்டாமை (சுதாகர்), Tomato (செந்தில்), கபீஷ் (ஆனந்த்), பென்சில் (நடராஜ்) அப்புறம் புஜ்ஜிக்குட்டி (நான்..ஹீ..ஹீ). அப்போது வளாகத்திற்கு உள்ளேயே ஸ்டம்ப் நட்டு கிரிக்கெட் விளையாடுவோம். பேரழகு அக்காக்களும், எம் வயதொத்த பள்ளிசெல் நங்கைகளும் பெருமளவில் குவிந்து எங்களை உற்சாகப் படுத்துவார்கள். அனைவரும் பால்கனியில் அமர்ந்து கைதட்டி ரசிப்பார்கள், இவர் ஒருவரைத் தவிர. ஏனெனில் எங்கள் பந்து அதிகமுறை பதம் பார்த்தது இவரையும், இவர் வீட்டு ஜன்னலையும் தான். எல்லாம் தெய்வச் செயல், இவரிடம் ஏதோ ஒரு மந்திரச் சக்தி இருந்து, எமது பந்துகளை எல்லாம் அவரை நோக்கி காந்தமாய் இழுத்து விடுகிறது.
இவர் தங்கபாலு அல்ல..! ஆசான் தங்கபாலு அளவுக்கு காமெடி பீஸ் கிடையாது...!
அன்றும் அப்படித்தான், கன்னிமாரை கவர பல்லை வலுகொண்டு கடித்து நம் நாட்டாமை அடித்த பந்து, அமைதியாக சென்று கொண்டிருந்த ஆசானின் பளிங்குத் தலையில் பட்டு 'படீர்' என்ற ஒலியுடன் தெறித்து விழுந்தது. அதே  தெய்வச் செயல்..! சுற்றம் அதிர அதிர சிரிக்கவும், நம் பென்சில் "நியுட்டனின் மூன்றாம் விதி நிரூபணம்", என்று திருவாய் மலரவும், கொதிப்பின் உச்சியை அடைந்தார் ஆசான். மீண்டும் தன் வானளாவிய அதிகாரத்தை பயன்படுத்தி "வளாகத்தில் யாரும் கிரிக்கெட் விளையாடக்கூடாது", என்று உத்தரவு பிறப்பித்தார். அதிகம் பாதிக்கப்பட்டவர் குரல் ஆதலால் பிற குடித்தனர் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. 

அன்றிலிருந்து, எங்களின் முதல் எதிரியானார் ஆசான். ஐவர் குழு கூட்ட முடிவு செய்யப்பட்டது. வளாகத்திற்கு உள்ளேயே கேட்பாரற்று கிடந்த ஒரு லாரி டயர் தான் ஐவர் கூடும் கூடம். அதன் மேல் அமர்ந்து கால்களை உள்ளே போட்டவாறு வட்டமேஜை கூட்டம் தொடங்கியது. ஆசானை ஒரு கைப் பார்த்து விட வேண்டும் என்றும், சரியான பாடம் புகட்ட வேண்டும் என்றும் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதன்முதலாக, அதிகாரப்பூர்வமாக, அவருக்கு "எளனி" (வழக்கழிந்து போன தமிழில் இதை இளநீர் என்பார்கள், அட...பூ'வை பூ'ன்னும் சொல்லலாம், புய்ப்பம்னும்  சொல்லலாம்னு சங்க இலக்கியத்துல படிச்சிருப்பீங்களே..அதே மாதிரி தாங்க.) என்று அவருடைய வழுக்கைத் தலையை குறிக்கும் வகையில் நாமகரணம் சூட்டப்பட்டது. ஆம்..அவர் தலை பார்ப்பதற்கு கவிழ்த்துப் போடப்பட்ட கடம் மாதிரியே இருக்கும். மிக உறுதியான கட்டமைப்பு. பல வருடங்களாய் மகசூல் பாரா தரிசு பூமி அது. பொட்டல் காடு. ஒவ்வொரு முறையும் அவர் கடக்கையில் உரத்த குரலுடன் கோரஸாக "சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹால்"  பாடல் அவருக்கு டெடிகேட் செய்யப்பட்டு ஒலிபரப்பப்பட்டது. தலைவாசல், தரிசுநிலம், மொட்டைமாடி, மேனேஜர் சீனா, மிஸ்டர் முடியரசன் என்று பலவாறாக பட்டங்கள் அளிக்கப்பட்டு அவர் கௌரவிக்கப் பட்டார். தினசரி காற்றிறக்கி விடப்பட்ட T.V.S.50ஐ தள்ளச்செய்து உடலுறுதிக்கு உடற்பயிற்சி கொடுக்கப்பட்டார். 

"டேய் பார்த்துடா, வழுக்கப் போவுது", என்று நண்பன் மேல் அக்கறையாய் அவர் காது பட பேசுவதிலும், "பேன் தொல்லையிலிருந்து விடுபட மெடிக்கர் யூஸ் பண்ணுங்க; மேலும் விபரங்களுக்கு அணுகவும் பயனாளியான ஆசானை", என்று  சுவற்றில் எழுதி வைப்பதிலும், "டேய் சார் தலையில் களிமண்ணு தான்டா இருக்கும்; ஏன்னா.., களிமண்ணுலதான் ஒன்னுமே முளைக்காதுன்னு எங்க சயின்ஸ் மிஸ் சொல்லிருக்காங்க", என்று அறிவியல் பேசுவதிலும், இப்படிப் பலவாறாக தங்கள் எதிர்ப்பை ஒவ்வொவொரு நொடியும் அவருக்கு உணர்த்திய வண்ணம் இருந்தது எங்கள் ஐவர் குழு. தொடர் அதிரடி அடாவடிகளால் மிகத் துயரமுற்றுப் போனார், ஆசான்.

ஒரு நாள் சிவனே என்று அவசரமாக நடந்து போய்க் கொண்டிருந்த ஆசானை நாட்டாமை பின்தொடர்ந்து சென்று நிறுத்தி, "சார் உங்க ஹேர்ஸ்டையில் சூப்பர்" என்று இரண்டு மூன்று முறை அவர் தோசைக்கல் தலையிலேயே ஆப்பாயில் போட, முறைத்து கொண்டே "வானரம்..புள்ளையா இது, புள்ளைய பெறுங்கடான்னா குரங்கப் பெத்து வச்சிருக்கானுங்க..என்று முணுமுணுத்துக் கொண்டே சென்றார். மெயின்கேட்டில் நின்று கொண்டிருந்த Tomato'வும் தன் பங்கிற்கு "ஹேர்ஸ்டையில் சூப்பர்" என்று பாராட்டு தெரிவித்து உளம் பூரித்துப் போனான். அன்று மாலை லாரி டயர் கூட்டம், அவசர, அவசரமாக கூட்டப்பட்டது. நாட்டாமையும், Tomato'வும் படு பயங்கர துக்கத்தில். பென்சில் மட்டும் சிரிப்பை வாய்க்குள்ளேயே அடக்க பகீரதப் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தான். எல்லாம் ஆசானின் புண்ணியத்தால் விளைந்த தகப்பன்மார்களின் தர்மடி.

"சரியான பரேடா(Parade)?", நான்.
நாட்டாமை, "ம்ம்ம்....வெளுத்து வாங்கிட்டாரு எங்கப்பா...! அந்த ஒரு சென்சிடிவ் ஸ்பாட்ட மட்டும் தான் விட்டு வச்சாரு". 
"எங்கப்பா அதக்கூட விட்டு வக்கலடா, புஜ்ஜு....", இது Tomato. 
"அதான், நீ வந்ததிலேர்ந்து நின்னுகிட்டே இருக்கியா...?!", கலாய்த்தான் கபீஷ். 
"நீ வாங்கி பாரு, உனக்கு அப்பத்தான் தெரியும்", அழாத குறையாக நாட்டாமை. 

அந்த நிகழ்வுக்குப் பிறகு, ஆசானை அதிகம் தீண்டியதில்லை ஐவர் அணி. பின் வந்த நாட்களில் போர் மேகங்கள் விலகி இருவரும் சமாதானமாகி அவர் எங்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடும் அளவிற்கு ராசியான நண்பர்களாகிப் போனோம். எங்கள் அனைவரையும் சுற்றி அமரச் செய்து நல்ல, நல்ல நாட்டு நடப்பு செய்திகளை, சினிமா, விளையாட்டு செய்திகளை பல்சுவை குன்றாமல் பகிர்வார். அப்படி மகிழ்ந்த தருணங்களில் அவர் நாட்டாமையை பார்த்து எடுத்தியம்பிய பொன் மொழிகளுள் ஒன்று தான் இந்த, 

"சோக்கா சொன்னடா நைனா...!" 

வாழ்க தமிழ் ஆசான்....! நீங்க இப்போது எங்கே சார் இருக்கிறீங்க..?, மீண்டும் உங்களை சந்திக்கும் ஆவலில்...நான்...!

(படம் தந்த கூகுள்'க்கு நன்றி...!!)
--விளையாடும் வெண்ணிலா....

சனி, 9 ஏப்ரல், 2011

"நான்" - கொல்லப்பட்ட நொடிகள்...!சபாநாயகர் தெருவை அரவணைத்துச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை NH-45. எனக்கு நினைவு தெரிந்து தனியே யார் துணையுமின்றி நான் கடந்து செல்ல பழகிய தார்ச் சாலை. கடந்த காலமாகிப் போன அந்நாட்களின் அற்புதமான காலை பொழுதுகளை, மெய் தழுவி ஜொலித்த இளஞ்சூரிய கதிரும், உயிர் வருடிச் சென்ற மென் குளிர் தென்றல்காற்றுமே இப்போதும் என் நெஞ்சிலும் நினைவிலும் பதியச் செய்திருக்கின்றன. அந்தக் காலைகளில் இச்சாலையை கடந்து சென்ற தருணங்களை இப்போது நினைத்தாலும் மனம் சில்லிடுகிறது. கால் சட்டையணிந்து சின்னஞ்சிறு மழலையாய் கவலையின்றி திரிந்த காலத்திலிருந்து, கனவுகள் கோடி சுமந்து கல்லூரி காளையாய் சீறிப் பாய்ந்த நாட்கள் வரை, அன்றைய தினங்களின் எனது ஒவ்வொவொரு அசைவுகளையும், கவனித்து இன்றும் பத்திரமாய் அடக்கிவைத்திருக்கும் ஒரு நெடு நீண்ட பெட்டி இச்சாலை. பள்ளி கூப்பிடு தூரத்தில் வீட்டிற்கு இடப் புறமென்றால், கல்லூரியோ வலது புறத்தில்.

எந்த வித எண்ணத்தின் தாக்கமும் இல்லாத, அவசரமற்ற, பளிங்கு போன்ற கறையற்ற காலைப் பொழுதிற்கு ஈடு இணை எதுவுமே இல்லை. அதிக அரவமற்ற, பனி படர்ந்த அவ்வேளைகளில் பறவைகளின் ஒலி ரசித்து, இருமருங்கிலும் பச்சை பசேலென்றிருக்கும் மரங்களுக்கு நடுவே நடந்து களித்த மணித்துளிகள் ஒவ்வொன்றும் அளவற்ற இன்பம் கொடுத்த கணங்கள். மல்லிகை, கனகாம்பரம், ரோஜா போன்ற மலர் சூடி தெய்வீகமாய் திலகமிட்டு, பயிற்சி வகுப்புகளுக்கு "லேடி பேர்ட்" மிதி வண்டிகளில் வண்ணத்துப் பூச்சிகளாய் ரீங்காரமிட்டு செல்லும் அந்த தேவதைகளை பார்த்து ரசித்துக் கொண்டே நடந்து சென்ற தருணங்கள் சொர்க்கமாய் இன்னும் என் நெஞ்சில். அவர்கள் கடந்து , மறைந்த பின்பும் மறையாத அவர்களின் சிரிப்பொலிகளையும், மலர்களின் மணத்தையும் இப்போதும் முறையே, கேட்கிறேன், நுகர்கிறேன்..! ஆணை அழகனாக்குவாள் பெண்...! இச்சொற்களை உண்மை என்று உணர்த்திய நாட்கள் அவை. அவர்கள் எனது மண்ணின் ஆர்ப்பரிக்கும் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கும் பெண்டிர். கடக்கும் கன்னியர் யாவரின் கண்களும் நம் மேலே இருக்கக் கூடாதா என்பது போன்ற ஒரு விபரீத எண்ணத்தை தூண்டி, பைத்தியம் பிடிக்க வைக்க கூடிய பேரழகுப் பெண்கள். அவர்கள் அங்கு, அந்த மண்ணில்தான் ஜனிக்கிறார்கள் , வசிக்கிறார்கள்....இப்போதும். ஆடவரின் அனுமதிக்கு காத்திராமல், நொடிப்பொழுதில் உள் நுழைந்து திணிக்கப்படும் இந்த ரசாயன மாற்றத்தை நிகழ்த்துவதில் இவர்களின் வனப்புக்கு ஈடான ஒன்றை வேறெங்கும் கண்டிலேன். 


அதைப் போன்றதொரு பொன் காலைப் பொழுதில்தான், பள்ளி செல்லும் பாலகனாய் உலவிய காலத்தில், அவரை அம்மரத்தினடியில் அமர்ந்திருக்க கண்டேன். எம் வீட்டின் அருகில் இருந்த "வருவாய் வட்டாட்சி அலுவலர்" அரசு இல்லத்தின் வெளிப்புறத்தில், காம்பவுண்ட் சுவர் அருகில் இருந்த அந்த மரத்து நிழலில் தான் அமர்ந்திருந்தார். பல வருடங்களாக அங்குதான் அமர்ந்திருக்கிறார், என் கண்கள் அவரை கவனித்ததென்னவோ அன்று தான். அழுக்கடைந்து கறுப்பேறியிருந்த  கந்தல் ஆடைகளால் மூடப்பட்ட உடல்.  நரைத்த புருவத்தின் கீழ் எந்தவித எதிர்ப்பார்ப்பும் அற்ற விழிகள். உணர்ச்சியற்றதாய் தோன்றின அவை. முகத்தை தலை மயிரும், தாடி மயிரும் மறைக்க, நீண்டிருந்த நாசி மட்டுமே அது மனித முகம் தான் என்பதை உணர்த்துவதாய் அமைந்து இருந்தது. தலைமயிர் சடை சடையாய் முடிச்சிகளுற்று, விழுதுகளை போல் முன் விழுந்து முகம் முழுக்க பரவிக்கிடந்தது. அடர்ந்து வெளுத்தும், பழுப்படைந்தும் இருந்த தாடி அவரின் நெஞ்சுக்கூட்டை தாண்டியும் நீண்டிருந்தது. உருவத்தில் தெரிந்த முதிர்ச்சி, அவருடைய கருத்த சருமத்தில் தெரியவில்லை. தோல் சுருக்கங்களின்றி இருந்தது.  நாற்பதுகளின் இறுதியில் இருப்பவராகவே பட்டது. மொத்தத்தில் ஒரு பிச்சைகாரருக்குரிய அத்தனை அடையாளங்களையும் கொண்டவராய் இருந்தார் பிச்சைப் பாத்திரமின்றி. மூங்கிலால் ஆன கைத்தடி அவருடைய கைக்கு எட்டும் தொலைவில்.

அவ்வயதில் மிக அச்சுறுத்தலாய் உணர்ந்தேன் அவரை கடக்கும் நொடிகளை. தலையை கீழே தொங்கவிட்டிருந்த நிலையில் அமர்ந்திருந்தவர் நான் கடக்கையில் என்னை நிமிர்ந்து பார்த்தார். சிரித்தார். தோற்றத்தைக் கொண்டு முடிவெடுக்கும் வயதானதால், அவரின் தலை நிமிரளும், காவிப்பல் சிரிப்பும் என் இதயத்துடிப்பை அதிகரித்து பயத்தை உறுதி செய்தன. பைத்தியமோ...என்று எண்ணிக்கொண்டே ஒரு வித படபடப்பில் அவரை அவசரகதியில் கடந்தேன். இரண்டு, மூன்று முறை பின் தொடர்கிறாரா...என்று திரும்பி திரும்பி பார்த்து பீதியாகவே ஓட்டமும் நடையுமாய் அவ்விடத்தை விட்டு நகர்ந்தது இன்னும் என் நினைவில் நீங்காமல் இருக்கிறது. பின் வந்த நாட்களில், அவர் அபாயமற்றவர் என்பதை அவரை ஒவ்வொரு முறை கடந்து செல்லும் போது அவருடைய அமைதியும், அவ்வப்போது தாடி மறைவிலிருந்து வெளிவரும் புன்னகையும் உணர்த்த அவரை கடக்கும் தருணங்கள் மிக சாதரணமாக போய் விட்டன. 


எவ்வளவு கடுமையான வெயிலானாலும், மழையானாலும் அவர் அந்த இடத்தை விட்டகன்று கண்டதில்லை. கொளுத்தும் வெய்யிலிலேயே அவர் அமர்ந்திருப்பதை பல முறை கண்டிருக்கிறேன். அவருக்கு இரவு உறக்கமும் அதே இடத்தில் தான். வாழ்க்கையையே நான்குக்கு இரண்டு  என்ற நீள அகல பரப்பளவிலேயே கழித்து வந்தார். ஒரு நாள் கனமழை பெய்து கொண்டிருந்த போது அவர் ஞாபகம் வர, குடை பிடித்து அவர் அமர்ந்திருக்கும் இடம் விரைந்தேன். மழையும் காற்றும் மிக பலமாக வீசிக்கொண்டிருந்தது. அவர் அங்கு இல்லை. அப்படியே கண்களை சுற்றும், முற்றும் அலைய விட்டேன். அவர் அமர்ந்திருக்கும் எதிர் திசையில், நெடுஞ்சாலையை கடந்து கொஞ்ச தூரத்தில் அமைந்திருந்த சிறு கோவிலின் கூரை கீழ் தலையை குனிந்து அமர்ந்திருந்தார். தலைமுடியிலிருந்து சொட்டு சொட்டாய் நீர் வழிந்து கீழே அவருடைய ஏற்கனவே நனைந்த அழுக்கு ஆடையை மேலும் ஈரமாக்கிக் கொண்டிருந்தன. இயற்கை கடன்களை கழிப்பதற்கும், எப்போதாவது மழையிலிருந்து தன்னை காத்து கொள்வதற்கும் மட்டுமே அவர் அவ்விடத்தை விட்டு நகர்வார் என்று தோன்றியது. 

ஒரு நாள், நல்ல உச்சி வெய்யிலில் வீடு திரும்பி கொண்டிருந்த போது, அவர் அருகில் ஐந்து அடுக்கு டிபன் கேரியர் ஒன்று இருப்பதை காண முடிந்தது. கேரியர் கம்பிகளுக்கு இடையில் வாழை இலை சொருகப்பட்டு இருக்க அவர் அருகே ஒரு நாயும் அமர்ந்து இருந்தது. நாய் சற்று கொழுத்து காணப்பட்டது. அவருக்கு காலை, மாலை, இரவு என மூன்று வேளைகளிலேயும் உணவுக் கூடைகள் வைக்கப்பட்டிருப்பதை பல நாட்கள் கண்டிருக்கிறேன். பின்பு தான் அவருக்கு யார் மூலமாகவோ, மூன்று வேளை உணவும் தினசரி கொடுக்கப் படுவதை அறிந்து கொண்டேன். 

"அவர் யார்...? பிச்சைக்காரரா...? இல்லை....பைத்தியக்காரரா...? பார்ப்பதற்கு அச்சம் தரும் தோற்றத்துடன் இருக்கும் அவரை ஏன் இதுபோன்ற பொதுமக்களும், பள்ளிச் சிறுவர் சிறுமிகளும், வெகுவாக கடந்து செல்லும் சாலையில் அமர அனுமதிக்கிறார்கள்...? யார், ஏன் வாழையிலையில் மூன்று வேலையும் உணவு கொடுக்கிறார்கள்...?", என்பன போன்ற சிறு வயதில் மனதை உறுத்திய, தோன்றிய கேள்விகள், பதிலை தேடாமலேயே தொலைக்கப்பட்டன என்னால்.  பள்ளிப்பருவத்தை கடந்து கல்லூரி செல்ல தொடங்கிய பிறகு, அவரை பற்றிய நினைவுகளே எழவில்லை. அப்போதும் அவர் அங்குதான் அமர்ந்திருந்தார். கல்லூரி சலனங்களை சுமந்து திரிந்து கொண்டிருந்த கண்களுக்கு அவர் அவசியமற்றவராக கருதப்பட்டாரோ என்னவோ...! அவரை மறந்தே போனேன். 

பிறிதொரு நாள் , தொலைக்காட்சியில் எனக்கு மிகவும் பிடித்த திரைப்படங்களுள் ஒன்றான "உன்னால் முடியும் தம்பி" திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தேன். "அக்கம் பக்கம் பாரடா என் சின்ன ராசா" என்ற பாடலில் தோன்றும் ஒரு பிச்சைக்காரரின் தோற்றம், மரத்தடியில் அமர்ந்திருப்பவரை ஞாபகப்படுத்தவே , பல வருடங்களுக்கு பிறகு, அவரை பற்றிய நினைவுகள் எழ ஆரம்பித்தன. விறு, விறுவென்று புறப்பட்டு அவரிடத்தை அடைந்தேன். இப்போதும் அதே இடத்தில் தான் இருந்தார். மிகவும் , மெலிந்து, தோள் சுருக்கமுற்று, மரவட்டை போன்று சுருங்கி கிடந்தார். நாயில்லை அவர் அருகில், முனை மழுங்கிய அதே பழைய கைத்தடி இருந்தது. அவரை முதன் முதலில் சந்தித்த நினைவுகள் நிழலாடின கண் முன். என்னை அச்சுறுத்திய அவருடைய அந்தப் புன்னகை மெல்ல ஒரு நொடி மனதை கடந்து சென்றது. மீண்டும் அவரைப் பற்றிய பதில் தேடப்படாத பழைய கேள்விகள் மனதில் உயிர்பெற்று எழுந்தன. கேள்விச்சுமைகளை சுமந்தபடியே வீடடைந்தேன். 

சில நாட்களுக்கு பின், நண்பர் ஒருவரிடத்தில் உரையாடி கொண்டிருக்கையில், இவரைப் பற்றிய பேச்சு தற்செயலாக எழுந்தது. என்னுடைய கேள்விச் சுமைகளை அங்கே அவரிடத்தில் இறக்கி வைக்க, அதற்கு அவரளித்த பதில்கள் என்னை சற்று திடுக்கிடச் செய்து உறையத் தான் வைத்தன. சிதம்பரம் நகர வீதியில், செல்வந்தர் வீட்டுப் பிள்ளையாம் அந்த முதியவர். சில வருடங்கள் முன்பு வரை பணம் பகட்டு என்று, ஒய்யார வாழ்க்கையாம் அவருடையது. நிறைய சொத்துகளுக்கும், நில புலன்களுக்கும் சொந்தக்காரராய் பெரு மகிழ்ச்சியாய் வாழ்ந்தவருக்கு திருமணம் நடந்த பிறகு தான் வாழ்க்கையில் புயல் வீசத் தொடங்கின.

அவருடைய மனைவியும், மனைவி வழி உறவினர்களும், சொத்துக்கு ஆசைப்பட்டு அவரையே ஏமாற்றி கொள்ளையடிப்பதை வழக்கமாக கொண்டிருக்க, இதை அறிந்து பலமுறை கண்டித்திருக்கிறார்.  அவரின் புத்திமதியை மனைவி கண்டு கொள்ளவே இல்லை.  மாறாக, மிகுந்த பேராசையுடன் பணம், சொத்து, நிலம் என்று பொருள் குவிப்பதிலயே குறியாக இருந்திருக்கிறார். மேலும், அவர் செய்து வந்த தான தர்ம காரியங்களுக்கும் தடைகள் ஏற்படுத்தும் வண்ணம் நடந்து கொண்டிருக்கிறார். தினம் போர்க்களமாய் ஒரு வாழ்வு வாழ்வதை மெல்ல மெல்ல வெறுக்க ஆரம்பித்திருக்கிறார் அந்த மனிதர். பணம் என்பது வாழ்க்கை சக்கரத்தை சுழல உதவும் ஒரு கருவியே அன்றி, அதுவே வாழ்க்கையல்ல என்பதை எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவர் மனைவி புரிந்து கொள்ளவே இல்லை. தன் உறவினர்களைக் கொண்டே மனைவி தன்னை தாக்க முயல, வெறுப்பின் உச்சத்தை அடைந்திருக்கிறார், அவமானம் தாளாமல். இறுதியாக, அனைத்தையும் துறந்து அந்த மரத்தினடியில் வந்து அமர்ந்து விட்டதாக கூறினார் நண்பர். நான் நினைத்தது போல் அவர் பிச்சைக்காரரும் இல்லை, பைத்தியக்காரரும் இல்லை. 

பணத்தை துச்சமாய் கருதி மனைவிக்கு வாழ்க்கைப் பாடத்தை புகட்ட  அரண்மனை போலிருந்த வீட்டையும், செழிப்பான வாழ்க்கையையும் துறந்து ஒரு பிச்சைக்காரரை போல் வெயிலிலும், மழையிலும், கடுங்குளிரிலும் தெரு நாயைப் போல் அமர்ந்திருந்த அந்த மனிதனின் கதை என்னை மிகவும் பாதித்தது. மனிதர்களுக்குள் உறங்கும் "நான்" மிருகங்கள் பலவகை. அதில் ஒன்று பணச் செருக்கு "நான்". அன்று என்னுள் அந்த ஒரு "நான்" எதிர்காலத்தில் பிரசவிக்கப்பட்டு உயிர் பெறும் முன்பே அவர் மூலம் கொல்லப்பட்டதாய் உணர்ந்தேன். அந்த "நான்" கொல்லப்பட்ட நொடிகளில் தான் என்னை நான் அறியத் தொடங்கினேன் . அன்று இரவு, அவரை தூரத்திலிருந்து பார்ப்பதற்காக அவர் எப்போதும் அமர்ந்திருக்கும் அந்த இடத்திற்கு சென்றேன். அங்கு அவரில்லை. சுற்றிலும் தேடினேன் எங்காவது இருக்கிறாரா என்று, கோவிலில், தூரத்தில், மரத்தின் பின் என்று எல்லா இடத்தையும் நோக்கினேன். எங்கும் இல்லை அவர். வீடு திரும்பினேன். அதன் பிறகு அவரை நான் பார்க்கவே இல்லை. விசாரித்ததில், அவர் இறந்து விட்டதாக சொன்னார்கள். 

ஆனால் அந்த மனிதர் என்னுள் கொன்று சென்ற அந்த "நான்"  இப்போதும் சில முறை உயிர்த்தெழ எத்தனிக்கும் போதெல்லாம், அவனை மறிக்கச் செய்யும் மந்திரம், மனதில் தோன்றும் அவரின் முதல் பார்வையும், தன் தாடியினுள் புதைந்திருந்த உதடுகள் விரித்து சிந்திய அந்த புன்னகையும் தான். அவை எப்போதும் எனக்குள் தோன்றி என்னை எச்சரித்து மமதை அடையாமல் மனிதனாய் வாழ உணர்த்திக்கொண்டே இருக்கின்றன. "ஆனால் இப்போதும் சில நேரங்களில் அந்த "நான் " உயிர்த்தெழுகிறான் எனில் அவன் முற்றிலும் மறிக்கப்படவில்லையோ...?", என்னை நானே பல முறை கேட்டிருக்கிறேன் இந்த வினாவை. முயற்சிக்கறேன் அவனை- அந்த "நான்'ஐ"முற்றிலும் களைவதற்கு. மனிதப் பிழைகள் குற்றங்களாவது, பிழைகளை நாம் உணர்ந்த பின்பும் தவிர்க்காமல் இருக்கையில் தானே...!

(படம் தந்த கூகுள்க்கு நன்றி...!!)
--விளையாடும் வெண்ணிலா....

சனி, 12 மார்ச், 2011

நடுநிசியில் ஓர்நாள்...!

அன்று இரவும் அப்படி ஒரு இனிய இரவாகவே கரைந்து கொண்டிருந்தது. எனக்கு மிகவும் பிடித்த 'சுரபி' நிகழ்ச்சியை ரசித்து பார்த்து கொண்டிருந்தேன். தொலைக்காட்சியில் ஊடுருவி தொலைந்து விடும் ரகமில்லை. சில.....மிகச் சில நிகழ்சிகளை தொடரும் ரகம் நான். அவற்றில் அனைத்திலும் முதன்மையானது 'சுரபி'. பூகோளத்திலும், பரந்துபட்ட நம் தேசத்தின் பலவேறு தொன்மையான, உன்னதமான கலாச்சாரங்களை பற்றி அறிந்து கொள்ளும் தாகமும், எங்கோ தொலைவில் வாழும் நம் சகோதரனின் வாழ்க்கை முறையை அறிந்து கொள்ளும் முனைப்பும், என்னை அந்நிகழ்ச்சியின் தீவிர ரசிகனாகவே மாற்றின.  இவை மட்டுமின்றி,  வயலின் மேதை 'சுப்ரமணியத்தின்' இசை, தொகுப்பாளர்கள் ரேணுகா, சித்தார்த் இவர்களுடைய நிகழ்ச்சி தொகுக்கும் பாங்கு, நிகழ்ச்சியின் இறுதியில் வரும் கேள்வி-பதில் பகுதி என அனைத்தும் என்னையும் என் குடும்பத்தினரையும் தொலைக்காட்சி முன் கட்டிப் போட்டு விடும். எல்லாவற்றுக்கும் மேலாக, ரேணுகாவின் அந்த மயக்கும் சிரிப்புக்கு நான் அடிமை என்றால் அது மிகைப்படுத்துதல் இல்லை என்பேன் ஆணித்தரமாக...!

நிகழ்ச்சி முடிந்ததும் அனைவரும் ஒவ்வொருவராக தத்தமது அறைக்கு செல்லத் தொடங்கினர்.  தம்ளரில் பாலை கொடுத்துவிட்டு, சீக்கிரம் படுக்கைக்குச் செல்லுமாறு தாய் அதட்டல் தொனியில் அன்பாக சொல்லிவிட்டு சென்றார். 'அனுபம் கெர்' தொகுத்து வழங்கிய 'Mr.கோல்ட்' நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அனைவரின் அறை விளக்குகளும் அணைக்கப்பட்டு, உரையாடல்கள் குறைந்து நிசப்தம் பரவவே, நான் தொலைகாட்சி சத்தத்தை குறைத்து வைத்து நிகழ்ச்சியை ரசித்துக் கொண்டிருந்தேன். மெல்ல, மெல்ல தூக்கம் கண்களை ஆக்கிரமிக்க தொடங்கி பின்னர் முழுவதுமாக என்னை ஆளத் தொடங்கியது.  தம்ளரில் இருந்த ஏலக்காய் வாசம் வீசும் பாலை பருகினேன். தொலைக்காட்சியை அணைத்துவிட்டு எனதறைக்கு வந்து சிறிது தண்ணீர் பருகிவிட்டு படுக்கையில் சரிந்து அப்படியே தூங்கிப் போனேன்...!


என்ன விடு.......!  என்ன விடு.......!  ஆ....ஆ....ஆ......! 
என்ன விடு.....!  ஆ....ஆ....ஆ......! 

வீல்....வீலென்று ஒரு பெண் அலறும் சத்தம் கேட்கவே துடித்து எழுந்தேன்...! அஜந்தா சுவர் கடிகாரத்தில் மணி முள்ளும் நிமிட முள்ளும் முறையே பனிரெண்டிலும், நான்கிலும் வெளிர் நீல நிற ஜீரோ வாட்ஸ் பல்பின் ஒளியில் பளபளப்பாய் மிண்ணி பின்னிரவின் தீவிரத்தை உணர்த்திக் கொண்டிருந்தன...! கனத்த அமைதி.  வீட்டில் அனைவரும் ஆழ்ந்த நித்திரையில்...!  ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது போலிருந்ததே.....கனவாயிருக்குமோ...?! தூக்க கலக்கத்தில் இருந்தாலும் தொண்டை காய்ந்திருப்பதை உணர முடிந்தது. கட்டிலுக்கு அருகில் மேசை மேலிருந்த கூஜாவில் இருந்து தண்ணீரை பருகினேன். தண்ணீர் தொண்டை வழி நுழைந்து, உணவுக் குழாய் நனைத்து வயிற்றை குளுமைப்படுத்தியது. குழப்பத்துடன் உத்திரத்தை நோக்கியபடியே சிந்தனையில் இருந்தேன். ஏதோ சத்தம் கேட்டதே...! மேலே சுழன்று கொண்டிருந்த மின் விசிறியின் சத்தம் என்னை அதன் மேல் பார்வையை படரச் செய்தது...! 

சர்ர்ராக்க்...சர்ர்ராக்க்க்..

என் படுக்கைக்கு வலது பக்கத்தில் இருந்து வினோத சத்தம் வருவது போல் இருந்தது. என்ன சத்தம் அது...! யாரோ நடந்து செல்வது போல் இருக்கிறதே...

'தொப்..!'   'தொப்.....!'    'தொப்...!'
சர்ர்ராக்க்...சர்ர்ராக்க்க்..

என்ன யாரோ குதித்து ஓடுவது போல் சத்தம் வருகிறதே...?!!

சர்ர்க்...சர்ர்க்...சர்ர்க்...சர்ர்க்...
இப்போது சத்தம் வலுவாகவும், ஒன்றுக்கும் மற்றொன்றுக்குமான இடைவெளி குறைந்தும் ஒலித்தன. கொஞ்சம் நடுக்கமாய் உணர்ந்தேன். திருடனாக இருக்குமோ...மணி பனிரெண்டரை ஆகுதே..இந்தப் பகுதி கூர்க்கா இப்போது தானே ரவுண்ட்ஸ் முடித்து விட்டு போயிருப்பார்...! அந்த வயதில் திருட்டைத் தடுக்க கூர்க்காவே போதும் என்ற கருத்துடன் இருந்தவன் நான். தூக்கம் முற்றிலும் தொலைந்து விட்டது.

சர்க்... சர்க்...சர்க்...சர்க்...சர்க்...சர்க்...சர்க்.......

மிக வேகமாக நெருங்குவது போல் கேட்கிறதே...! அப்பாவையும், அண்ணன்களையும் எழுபபுவோமா...?!  வேண்டாம்...முதலில் என்ன, யார் என்று நாமே பார்த்துவிடுவோம் என்று சிறிது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு என் படுக்கையின் வலது பக்கத்து ஜன்னலை நோக்கி மெல்ல, மெல்ல நகர்ந்தேன்...!  ஜன்னலை நெருங்க நெருங்க சத்தத்தின் கனம் அதிகரித்துக் கொண்டே சென்றது...! மூடி இருந்த ஜன்னலை அச்சத்துடன், எந்த சலனமுமின்றி திறக்க முயன்றேன்...! தோல்வியே...! க்ரீச்....என்ற ஒலியுடன் திறந்தது ஜன்னல். மிகவும் கவனத்துடன், கிடைத்த சிறிய இடைவெளியில் வெளியே யார் தான் உலவுகிறார்கள் என்று தேடலானேன்.

சத்தம் இப்போது மிகத் தெளிவாக...! காய்ந்த தேக்கன் இலை சருகுகள் மேல் யாரோ ஓடி வருகிறார்கள். இந்த நேரத்தில் திருடனை தவிர வேறு யாருக்கு நம் தோட்டத்தில் அப்படியொரு அத்தியாவசிய அலுவல் இருக்கப் போகிறது?? தந்தையையும், தமையன்களையும் எழுப்பி ஒரு கை பார்த்து விட வேண்டியது தான் என்று எண்ணிக்கொண்டே, ஜன்னலை மூட எத்தனிக்க, மூன்று பருத்த கீரிப்பிள்ளைகள் வலமிருந்து இடமாய் பெரு வேகமெடுத்து கருவேல மரங்களடர்ந்த பகுதிக்குள் ஓடி மறைந்தன.  அடச்சீ... கீரிப்பிள்ளைகள்..! கொஞ்ச நேரத்தில் கொலை பீதியை ஏற்படுத்திவிட்டனவே...! ஜன்னலை அடைத்துவிட்டு படுக்கைக்கு திரும்பினேன்.  

சர்ர்க்...சர்ர்க்...சர்ர்க்...சர்ர்க்...
சர்ர்ராக்க்...சர்ர்ராக்க்க்....

ஓடி மறைந்தது அவைகள் மாத்திரமல்ல அவைகளுடன் அவைகள் எழுப்பிய சத்தமும்தான். சிறிது தண்ணீர் பருகிவிட்டு படுக்கையில் சாய்ந்தேன். தூக்கம் வரவே இல்லை. அந்தப் பெண்ணின் அலறல் சத்தமும் இது போல் தான் ஏதாவது கனவாக இருக்குமோ...? வெட்டியா கண்டதையும் நெனச்சு தூக்கம் கெட்டது தான் மிச்சம்....! மீண்டும் உறக்கம் தழுவ....இமைகள் இறங்கத் தொடங்கின...!

ஆ....ஆ....ஆ......! 

அதே அலறல். அப்போ....முன்னர் கேட்ட சத்தம் கனவில் அல்ல...! முன்னிலும் வேகமாக துடித்து எழுந்தேன்...! 

ஆஆஆ........!!!!

என்ன நடக்கிறது...? அதே வலது புற ஜன்னலை துரித கதியில் திறந்து சத்தம் எங்கிருந்து வருகிறதென்று தேடலானேன்....! அதோ அந்த கருவேல மரங்களுக்கு அந்தப் பக்கத்தில் இருந்து தான் கேட்கிறது அந்த சத்தம். காவலர் குடியிருப்பு தான் அந்தப் பக்கத்தில் இருக்கிறது.  பெண் குரல் கேட்கும் இடம் அந்த குடியிருப்பு வரிசையின் கடைசி வீடு...!  கும்மிருட்டு...! 

"பிடிங்க அவள...!, ஏன்டி இப்படி எல்லாம் பண்ற...", என்றது வேறு ஒரு குரல். அதுவும் பெண் குரலாகவே பட்டது.

"அடிக்காத...அடிக்காத...ஐயோ....வலிக்குது...வலிக்குது....கொலை பண்றாளே..!", முதல் குரல். 

"கொலையா..?", பயத்தில் எனது இதயம் இன்னும் சில நொடிகளில் வெடிக்கப் போவதைப் போல் துடித்துக் கொண்டிருந்தது...!

"அய்யய்யோ....யாரும் கிட்ட வராதீங்க....! யாராவது ஓடிப் போயி போர்வை எதுனா எடுத்துகிட்டு வாங்க....! கடவுளே இது என்ன கொடுமை....! சீக்கிரம் யாராவது எடுத்து வாங்களேன்....!".  இது அந்த மற்றொரு குரல். நடுக்கத்துடன் வேதனையில் உடைந்து ஒருவர் அழுதால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அக்குரல். 

அர்த்த ராத்திரியில் இது என்ன மர்மம். விவரம் என்னவென்று பிடி படவே இல்லை. வியர்த்தே விட்டது. சிறிது நேரத்துக்கெல்லாம் மாறி மாறி ஒலித்துக் கொண்டே இருந்த அலறல்கள் அடங்கி நிசப்தம் நிலவியது அங்கே. திடீரென்று அந்த வீட்டு தோட்டத்தின் விளக்கு போடப்பட்டது. மூன்று ஆண்கள் வீட்டின் அருகிலேயே பனியன் லுங்கி அணிந்து கொண்டு நின்று கொண்டிருந்தார்கள். இரு பெண் குரல் கேட்டதே.....கண்களை அலைய விட்டேன். அந்த ஆடவர் மூவரும் பதைக்க பதைக்க சத்தம் வந்த முட்புதரை நோக்கி ஓடி மறைந்தனர். அந்தப் பெண்ணை கொலை செய்து விட்டார்களா...பாவிகள்?  தெரு நாய்கள் குறைக்கத் தொடங்கி விட்டன. நான் யோசித்துக் கொண்டிருக்கும் போதே போர்வை போற்றப்பட்ட ஒரு உடலை இருவர் தூக்கிக் கொண்டு முட்புதரிலிருந்து வெளியேறி  தங்களின் வீட்டுக்குள் நுழைந்தனர் புயல் வேகத்தில். அடக் கொலைகாரப் பாவிகளா...கொன்னுட்டீங்களா அந்தப் பொண்ண...என்று விக்கித்து நான் நின்று கொண்டிருக்கும் போதே முட்புதரிலிருந்து ஒரு ஆணும், பெண்ணும் வேக வேக நடையில் தங்கள் வீட்டுக்குள் சென்று தோட்டத்து கதவை அடைத்து கொண்டனர். விளக்கும் அணைக்கப்பட்டது.  நடுக்கத்துடனேயே கழிந்தது அந்த இரவு உறக்கமின்றி. பின்னர் எப்போது கண்ணயர்ந்தேன் என்று தெரியவில்லை, விழித்தெழும்போது  மணி காலை ஒன்பதரை.  

விறுவிறு என்று எழுந்து ஜன்னல் வழியே அந்த திகில் தோட்டத்தை நோக்கினேன். ஆள் அரவமில்லை. தோட்டக் கதவு அடைக்கப்பட்டே இருந்தது.  சடாரென்று நண்பன் அஷோக்கின் நினைவு பொறியில் தட்டவே, அவனை சந்திக்க ஆயத்தமானேன்.  அவன் வீடும் அதே காவலர் குடியிருப்பில் தான் இருந்தது . சரசரவென்று குளித்து, உடைமாற்றி அவன் வீடு அடைந்து அவனை வெளியே அழைத்துச் வந்தேன். 

நேற்று இரவு நான் கண்டதை, நடந்ததை அவனுக்கு மிகுந்த பதட்டத்துடன் கூற, அவன் முகத்திலோ எந்த வித சலனமும் இல்லை. எதிரே வந்த பெண்மணி ஒருவர் அவனை பார்த்து சிரித்துக் கொண்டே "அம்மா நல்லா இருக்காங்களா?" என்று கேட்டார்.  "நல்லா இருக்காங்க, அக்காவுக்கு இப்போ எப்படி இருக்கு...?", இவனும் கேட்டான்.  இரண்டு நிமிடம் நீண்டிருக்கும் அவர்களின் சம்பாஷனை. என் நினைவு முழுக்க நேற்று நடந்த அந்த மர்மமான விஷயத்தை சுற்றியே சுழன்று கொண்டிருந்ததால் அஷோக்கின் சலனமற்ற எதிர்வினையும், இடையில் அந்தப் பெண்மணியுடனான அவனது உரையாடல்களும் எனக்கு மிகுந்த எரிச்சலையே  ஏற்படுத்தின.  நான் உஷ்ணமாவதை கண்டுவிட்ட அஷோக், "நீ பார்த்ததெல்லாம் உண்மைதான்", என்றான் மிகச் சாதரணமாக. "அப்படீன்னா...", என்ற என்னை,  "நீ பார்த்ததெல்லாம் உண்மை தான் ஆனா நீ புரிஞ்சிகிட்டது  மட்டும் தான் தப்பு", என்று புதிர் விடுத்தான். பின்னர் அவனே தொடர்ந்தான்.

அந்த வீட்டில் ஒரு அக்கா இருக்காங்க, தேவதை மாதிரி அழகு, ஒரு ஆக்சிடன்டுல தலைல அடிபட்டு அவங்களுக்கு சித்த சுவாதீனமில்லாம போச்சு. எங்கெங்கயோ காட்டியும் குணமாகல அந்த அக்காவுக்கு. சாமியா நெனச்சு பாத்து பாத்து வளத்த பொண்ண எங்கேயோ கொண்டு போய் மன நல காப்பகத்துல விட யாருக்கு தான் மனசு வரும். அதனால் வீட்டிலயே வச்சு வைத்தியம் பார்த்துகிட்டு வராங்க. ரொம்ப முரண்டு பண்ணினா சங்கிலியால கட்டி வச்சுடுவாங்க.  சமயத்துல அந்த அக்கா, நடு ராத்திரில தோட்டத்துக்கு பின்னாடி இருக்கிற அந்த கருவேல மரங்கள் நெறஞ்ச முட்புதருல போய் தனியா உக்காந்திருப்பாங்க. சில சமயம் ஒட்டுத் துணி கூட உடம்புல இல்லாம....!  அந்த குடும்பமே ராத்திரியெல்லாம் உக்காந்து அழுதுகிட்டே இருக்கும்.  ரொம்ப பாவம். ரெண்டு பசங்க, ஒரேயொரு பொண்ணு.  சந்தோஷமா கலகலப்பா இருந்த அந்த குடும்பம் இப்போ ரொம்ப நொடிஞ்சி போச்சு. எல்லாரும் ஓர் நடைபிணமா தான் வாழ்ந்துகிட்டு இருக்காங்க. 

இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, எங்கிட்ட ஒருத்தங்க பேசிவிட்டு போனாங்களே..., அவுங்க தான் அந்த அக்காவோட அம்மா...!

அஷோக் சொல்ல, சொல்ல துக்கம் என் தொண்டையை அடைத்து, கண்ணீராய் வெளி வந்து பூமியில் விழுந்தது. 

(படம் தந்த கூகுள்க்கு நன்றி...!!)
--விளையாடும் வெண்ணிலா....