சனி, 12 மார்ச், 2011

நடுநிசியில் ஓர்நாள்...!

அன்று இரவும் அப்படி ஒரு இனிய இரவாகவே கரைந்து கொண்டிருந்தது. எனக்கு மிகவும் பிடித்த 'சுரபி' நிகழ்ச்சியை ரசித்து பார்த்து கொண்டிருந்தேன். தொலைக்காட்சியில் ஊடுருவி தொலைந்து விடும் ரகமில்லை. சில.....மிகச் சில நிகழ்சிகளை தொடரும் ரகம் நான். அவற்றில் அனைத்திலும் முதன்மையானது 'சுரபி'. பூகோளத்திலும், பரந்துபட்ட நம் தேசத்தின் பலவேறு தொன்மையான, உன்னதமான கலாச்சாரங்களை பற்றி அறிந்து கொள்ளும் தாகமும், எங்கோ தொலைவில் வாழும் நம் சகோதரனின் வாழ்க்கை முறையை அறிந்து கொள்ளும் முனைப்பும், என்னை அந்நிகழ்ச்சியின் தீவிர ரசிகனாகவே மாற்றின.  இவை மட்டுமின்றி,  வயலின் மேதை 'சுப்ரமணியத்தின்' இசை, தொகுப்பாளர்கள் ரேணுகா, சித்தார்த் இவர்களுடைய நிகழ்ச்சி தொகுக்கும் பாங்கு, நிகழ்ச்சியின் இறுதியில் வரும் கேள்வி-பதில் பகுதி என அனைத்தும் என்னையும் என் குடும்பத்தினரையும் தொலைக்காட்சி முன் கட்டிப் போட்டு விடும். எல்லாவற்றுக்கும் மேலாக, ரேணுகாவின் அந்த மயக்கும் சிரிப்புக்கு நான் அடிமை என்றால் அது மிகைப்படுத்துதல் இல்லை என்பேன் ஆணித்தரமாக...!

நிகழ்ச்சி முடிந்ததும் அனைவரும் ஒவ்வொருவராக தத்தமது அறைக்கு செல்லத் தொடங்கினர்.  தம்ளரில் பாலை கொடுத்துவிட்டு, சீக்கிரம் படுக்கைக்குச் செல்லுமாறு தாய் அதட்டல் தொனியில் அன்பாக சொல்லிவிட்டு சென்றார். 'அனுபம் கெர்' தொகுத்து வழங்கிய 'Mr.கோல்ட்' நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அனைவரின் அறை விளக்குகளும் அணைக்கப்பட்டு, உரையாடல்கள் குறைந்து நிசப்தம் பரவவே, நான் தொலைகாட்சி சத்தத்தை குறைத்து வைத்து நிகழ்ச்சியை ரசித்துக் கொண்டிருந்தேன். மெல்ல, மெல்ல தூக்கம் கண்களை ஆக்கிரமிக்க தொடங்கி பின்னர் முழுவதுமாக என்னை ஆளத் தொடங்கியது.  தம்ளரில் இருந்த ஏலக்காய் வாசம் வீசும் பாலை பருகினேன். தொலைக்காட்சியை அணைத்துவிட்டு எனதறைக்கு வந்து சிறிது தண்ணீர் பருகிவிட்டு படுக்கையில் சரிந்து அப்படியே தூங்கிப் போனேன்...!


என்ன விடு.......!  என்ன விடு.......!  ஆ....ஆ....ஆ......! 
என்ன விடு.....!  ஆ....ஆ....ஆ......! 

வீல்....வீலென்று ஒரு பெண் அலறும் சத்தம் கேட்கவே துடித்து எழுந்தேன்...! அஜந்தா சுவர் கடிகாரத்தில் மணி முள்ளும் நிமிட முள்ளும் முறையே பனிரெண்டிலும், நான்கிலும் வெளிர் நீல நிற ஜீரோ வாட்ஸ் பல்பின் ஒளியில் பளபளப்பாய் மிண்ணி பின்னிரவின் தீவிரத்தை உணர்த்திக் கொண்டிருந்தன...! கனத்த அமைதி.  வீட்டில் அனைவரும் ஆழ்ந்த நித்திரையில்...!  ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது போலிருந்ததே.....கனவாயிருக்குமோ...?! தூக்க கலக்கத்தில் இருந்தாலும் தொண்டை காய்ந்திருப்பதை உணர முடிந்தது. கட்டிலுக்கு அருகில் மேசை மேலிருந்த கூஜாவில் இருந்து தண்ணீரை பருகினேன். தண்ணீர் தொண்டை வழி நுழைந்து, உணவுக் குழாய் நனைத்து வயிற்றை குளுமைப்படுத்தியது. குழப்பத்துடன் உத்திரத்தை நோக்கியபடியே சிந்தனையில் இருந்தேன். ஏதோ சத்தம் கேட்டதே...! மேலே சுழன்று கொண்டிருந்த மின் விசிறியின் சத்தம் என்னை அதன் மேல் பார்வையை படரச் செய்தது...! 

சர்ர்ராக்க்...சர்ர்ராக்க்க்..

என் படுக்கைக்கு வலது பக்கத்தில் இருந்து வினோத சத்தம் வருவது போல் இருந்தது. என்ன சத்தம் அது...! யாரோ நடந்து செல்வது போல் இருக்கிறதே...

'தொப்..!'   'தொப்.....!'    'தொப்...!'
சர்ர்ராக்க்...சர்ர்ராக்க்க்..

என்ன யாரோ குதித்து ஓடுவது போல் சத்தம் வருகிறதே...?!!

சர்ர்க்...சர்ர்க்...சர்ர்க்...சர்ர்க்...
இப்போது சத்தம் வலுவாகவும், ஒன்றுக்கும் மற்றொன்றுக்குமான இடைவெளி குறைந்தும் ஒலித்தன. கொஞ்சம் நடுக்கமாய் உணர்ந்தேன். திருடனாக இருக்குமோ...மணி பனிரெண்டரை ஆகுதே..இந்தப் பகுதி கூர்க்கா இப்போது தானே ரவுண்ட்ஸ் முடித்து விட்டு போயிருப்பார்...! அந்த வயதில் திருட்டைத் தடுக்க கூர்க்காவே போதும் என்ற கருத்துடன் இருந்தவன் நான். தூக்கம் முற்றிலும் தொலைந்து விட்டது.

சர்க்... சர்க்...சர்க்...சர்க்...சர்க்...சர்க்...சர்க்.......

மிக வேகமாக நெருங்குவது போல் கேட்கிறதே...! அப்பாவையும், அண்ணன்களையும் எழுபபுவோமா...?!  வேண்டாம்...முதலில் என்ன, யார் என்று நாமே பார்த்துவிடுவோம் என்று சிறிது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு என் படுக்கையின் வலது பக்கத்து ஜன்னலை நோக்கி மெல்ல, மெல்ல நகர்ந்தேன்...!  ஜன்னலை நெருங்க நெருங்க சத்தத்தின் கனம் அதிகரித்துக் கொண்டே சென்றது...! மூடி இருந்த ஜன்னலை அச்சத்துடன், எந்த சலனமுமின்றி திறக்க முயன்றேன்...! தோல்வியே...! க்ரீச்....என்ற ஒலியுடன் திறந்தது ஜன்னல். மிகவும் கவனத்துடன், கிடைத்த சிறிய இடைவெளியில் வெளியே யார் தான் உலவுகிறார்கள் என்று தேடலானேன்.

சத்தம் இப்போது மிகத் தெளிவாக...! காய்ந்த தேக்கன் இலை சருகுகள் மேல் யாரோ ஓடி வருகிறார்கள். இந்த நேரத்தில் திருடனை தவிர வேறு யாருக்கு நம் தோட்டத்தில் அப்படியொரு அத்தியாவசிய அலுவல் இருக்கப் போகிறது?? தந்தையையும், தமையன்களையும் எழுப்பி ஒரு கை பார்த்து விட வேண்டியது தான் என்று எண்ணிக்கொண்டே, ஜன்னலை மூட எத்தனிக்க, மூன்று பருத்த கீரிப்பிள்ளைகள் வலமிருந்து இடமாய் பெரு வேகமெடுத்து கருவேல மரங்களடர்ந்த பகுதிக்குள் ஓடி மறைந்தன.  அடச்சீ... கீரிப்பிள்ளைகள்..! கொஞ்ச நேரத்தில் கொலை பீதியை ஏற்படுத்திவிட்டனவே...! ஜன்னலை அடைத்துவிட்டு படுக்கைக்கு திரும்பினேன்.  

சர்ர்க்...சர்ர்க்...சர்ர்க்...சர்ர்க்...
சர்ர்ராக்க்...சர்ர்ராக்க்க்....

ஓடி மறைந்தது அவைகள் மாத்திரமல்ல அவைகளுடன் அவைகள் எழுப்பிய சத்தமும்தான். சிறிது தண்ணீர் பருகிவிட்டு படுக்கையில் சாய்ந்தேன். தூக்கம் வரவே இல்லை. அந்தப் பெண்ணின் அலறல் சத்தமும் இது போல் தான் ஏதாவது கனவாக இருக்குமோ...? வெட்டியா கண்டதையும் நெனச்சு தூக்கம் கெட்டது தான் மிச்சம்....! மீண்டும் உறக்கம் தழுவ....இமைகள் இறங்கத் தொடங்கின...!

ஆ....ஆ....ஆ......! 

அதே அலறல். அப்போ....முன்னர் கேட்ட சத்தம் கனவில் அல்ல...! முன்னிலும் வேகமாக துடித்து எழுந்தேன்...! 

ஆஆஆ........!!!!

என்ன நடக்கிறது...? அதே வலது புற ஜன்னலை துரித கதியில் திறந்து சத்தம் எங்கிருந்து வருகிறதென்று தேடலானேன்....! அதோ அந்த கருவேல மரங்களுக்கு அந்தப் பக்கத்தில் இருந்து தான் கேட்கிறது அந்த சத்தம். காவலர் குடியிருப்பு தான் அந்தப் பக்கத்தில் இருக்கிறது.  பெண் குரல் கேட்கும் இடம் அந்த குடியிருப்பு வரிசையின் கடைசி வீடு...!  கும்மிருட்டு...! 

"பிடிங்க அவள...!, ஏன்டி இப்படி எல்லாம் பண்ற...", என்றது வேறு ஒரு குரல். அதுவும் பெண் குரலாகவே பட்டது.

"அடிக்காத...அடிக்காத...ஐயோ....வலிக்குது...வலிக்குது....கொலை பண்றாளே..!", முதல் குரல். 

"கொலையா..?", பயத்தில் எனது இதயம் இன்னும் சில நொடிகளில் வெடிக்கப் போவதைப் போல் துடித்துக் கொண்டிருந்தது...!

"அய்யய்யோ....யாரும் கிட்ட வராதீங்க....! யாராவது ஓடிப் போயி போர்வை எதுனா எடுத்துகிட்டு வாங்க....! கடவுளே இது என்ன கொடுமை....! சீக்கிரம் யாராவது எடுத்து வாங்களேன்....!".  இது அந்த மற்றொரு குரல். நடுக்கத்துடன் வேதனையில் உடைந்து ஒருவர் அழுதால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அக்குரல். 

அர்த்த ராத்திரியில் இது என்ன மர்மம். விவரம் என்னவென்று பிடி படவே இல்லை. வியர்த்தே விட்டது. சிறிது நேரத்துக்கெல்லாம் மாறி மாறி ஒலித்துக் கொண்டே இருந்த அலறல்கள் அடங்கி நிசப்தம் நிலவியது அங்கே. திடீரென்று அந்த வீட்டு தோட்டத்தின் விளக்கு போடப்பட்டது. மூன்று ஆண்கள் வீட்டின் அருகிலேயே பனியன் லுங்கி அணிந்து கொண்டு நின்று கொண்டிருந்தார்கள். இரு பெண் குரல் கேட்டதே.....கண்களை அலைய விட்டேன். அந்த ஆடவர் மூவரும் பதைக்க பதைக்க சத்தம் வந்த முட்புதரை நோக்கி ஓடி மறைந்தனர். அந்தப் பெண்ணை கொலை செய்து விட்டார்களா...பாவிகள்?  தெரு நாய்கள் குறைக்கத் தொடங்கி விட்டன. நான் யோசித்துக் கொண்டிருக்கும் போதே போர்வை போற்றப்பட்ட ஒரு உடலை இருவர் தூக்கிக் கொண்டு முட்புதரிலிருந்து வெளியேறி  தங்களின் வீட்டுக்குள் நுழைந்தனர் புயல் வேகத்தில். அடக் கொலைகாரப் பாவிகளா...கொன்னுட்டீங்களா அந்தப் பொண்ண...என்று விக்கித்து நான் நின்று கொண்டிருக்கும் போதே முட்புதரிலிருந்து ஒரு ஆணும், பெண்ணும் வேக வேக நடையில் தங்கள் வீட்டுக்குள் சென்று தோட்டத்து கதவை அடைத்து கொண்டனர். விளக்கும் அணைக்கப்பட்டது.  நடுக்கத்துடனேயே கழிந்தது அந்த இரவு உறக்கமின்றி. பின்னர் எப்போது கண்ணயர்ந்தேன் என்று தெரியவில்லை, விழித்தெழும்போது  மணி காலை ஒன்பதரை.  

விறுவிறு என்று எழுந்து ஜன்னல் வழியே அந்த திகில் தோட்டத்தை நோக்கினேன். ஆள் அரவமில்லை. தோட்டக் கதவு அடைக்கப்பட்டே இருந்தது.  சடாரென்று நண்பன் அஷோக்கின் நினைவு பொறியில் தட்டவே, அவனை சந்திக்க ஆயத்தமானேன்.  அவன் வீடும் அதே காவலர் குடியிருப்பில் தான் இருந்தது . சரசரவென்று குளித்து, உடைமாற்றி அவன் வீடு அடைந்து அவனை வெளியே அழைத்துச் வந்தேன். 

நேற்று இரவு நான் கண்டதை, நடந்ததை அவனுக்கு மிகுந்த பதட்டத்துடன் கூற, அவன் முகத்திலோ எந்த வித சலனமும் இல்லை. எதிரே வந்த பெண்மணி ஒருவர் அவனை பார்த்து சிரித்துக் கொண்டே "அம்மா நல்லா இருக்காங்களா?" என்று கேட்டார்.  "நல்லா இருக்காங்க, அக்காவுக்கு இப்போ எப்படி இருக்கு...?", இவனும் கேட்டான்.  இரண்டு நிமிடம் நீண்டிருக்கும் அவர்களின் சம்பாஷனை. என் நினைவு முழுக்க நேற்று நடந்த அந்த மர்மமான விஷயத்தை சுற்றியே சுழன்று கொண்டிருந்ததால் அஷோக்கின் சலனமற்ற எதிர்வினையும், இடையில் அந்தப் பெண்மணியுடனான அவனது உரையாடல்களும் எனக்கு மிகுந்த எரிச்சலையே  ஏற்படுத்தின.  நான் உஷ்ணமாவதை கண்டுவிட்ட அஷோக், "நீ பார்த்ததெல்லாம் உண்மைதான்", என்றான் மிகச் சாதரணமாக. "அப்படீன்னா...", என்ற என்னை,  "நீ பார்த்ததெல்லாம் உண்மை தான் ஆனா நீ புரிஞ்சிகிட்டது  மட்டும் தான் தப்பு", என்று புதிர் விடுத்தான். பின்னர் அவனே தொடர்ந்தான்.

அந்த வீட்டில் ஒரு அக்கா இருக்காங்க, தேவதை மாதிரி அழகு, ஒரு ஆக்சிடன்டுல தலைல அடிபட்டு அவங்களுக்கு சித்த சுவாதீனமில்லாம போச்சு. எங்கெங்கயோ காட்டியும் குணமாகல அந்த அக்காவுக்கு. சாமியா நெனச்சு பாத்து பாத்து வளத்த பொண்ண எங்கேயோ கொண்டு போய் மன நல காப்பகத்துல விட யாருக்கு தான் மனசு வரும். அதனால் வீட்டிலயே வச்சு வைத்தியம் பார்த்துகிட்டு வராங்க. ரொம்ப முரண்டு பண்ணினா சங்கிலியால கட்டி வச்சுடுவாங்க.  சமயத்துல அந்த அக்கா, நடு ராத்திரில தோட்டத்துக்கு பின்னாடி இருக்கிற அந்த கருவேல மரங்கள் நெறஞ்ச முட்புதருல போய் தனியா உக்காந்திருப்பாங்க. சில சமயம் ஒட்டுத் துணி கூட உடம்புல இல்லாம....!  அந்த குடும்பமே ராத்திரியெல்லாம் உக்காந்து அழுதுகிட்டே இருக்கும்.  ரொம்ப பாவம். ரெண்டு பசங்க, ஒரேயொரு பொண்ணு.  சந்தோஷமா கலகலப்பா இருந்த அந்த குடும்பம் இப்போ ரொம்ப நொடிஞ்சி போச்சு. எல்லாரும் ஓர் நடைபிணமா தான் வாழ்ந்துகிட்டு இருக்காங்க. 

இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, எங்கிட்ட ஒருத்தங்க பேசிவிட்டு போனாங்களே..., அவுங்க தான் அந்த அக்காவோட அம்மா...!

அஷோக் சொல்ல, சொல்ல துக்கம் என் தொண்டையை அடைத்து, கண்ணீராய் வெளி வந்து பூமியில் விழுந்தது. 

(படம் தந்த கூகுள்க்கு நன்றி...!!)
--விளையாடும் வெண்ணிலா....

சனி, 5 மார்ச், 2011

குடுத்து வச்சது அவ்ளோதான்..!!


இல்லம் (எனது படுக்கையறை): வழக்கத்துக்கும் மேல தேஜஸ் மின்னுவது போல இருக்கே...! நம்ம கண்ணே பட்டுடும் போல...! இன்னும் ஒரு பஹுடர் கோட்டிங் குடுத்துருவோமா...ம்ம்ம்ம்.....? வேணாம்...போதும், அப்புறம் அந்த கஸ்மாலத்துக்கு நம்மள அடையாளம் தெரியாம போனாலும் போய்டும்...! ஏற்கனவே, எக்கச்சக்க காம்பெடிஷன்ல ஓடிட்ருக்கு....!  

இதுவே போதும், புதுக் கண்ணாடியா இருந்தா இன்னும் கொஞ்ச கலரா தெரிவோம்...! இந்த பெர்சனாலிட்டிய புடிக்கிலன்னு எவளாவது சொல்ல முடியுமா என்ன...?  இன்னைக்கு எப்படியும் அமுக்கி போட்டுடனும் அவள...! சரி கெளம்புவோம், டைம் ஆயிட்ச்சு.....!

முக்குச் சந்து போகும் வழியில்:  ம்ம்ம்ம்...! இவள சந்திச்சி இதோட ஐஞ்சு வருஷம் ஓடிப் போச்சு...! எதிர்காலத்த நெனச்சா என்னாவுமோ, ஏதாவுமோன்னு ரொம்ப பயமா இருக்குது.  இந்தப் புள்ளைய முதல் முதல்ல பாத்ததுமே புடிச்சிபோச்சு....!  ஆப்பீஸ்ல ஒரு பார்ட்டி சமயத்துல,  "ஐயா" படத்துல வர்ற 'ஒரு வார்த்த சொல்ல ஒரு வருஷம் காத்திருந்தேன்'ன்ற பாட்டுக்கு இவ ஆடுனதப் பாத்து அன்னைக்கு 'ஆப்' ஆனவன்தான்...! இன்னும் 'ஆன்' ஆகவே இல்ல...!

லூசுப் பெண்ணே....லூசுப் பெண்ணே....லூசுப் பெண்ணே.....!

வந்துட்டானா...? நமக்கு முன்னாலயே வந்து பட்டரைய போட்ருவானே..! நாயா அலையுறான் நாயி...நாக்க தொங்கப்போட்டுகிட்டு...! அதான் போடா பேப்பயலே'ன்னு காறித் துப்பிட்டாளே...! இன்னும் ஏன் மான, ரோஷம் இல்லாம பின்னாலயே சுத்துது இந்த மூதேவி...!  இவன்லாம் நம்ம லவ்வுக்கு ஒரு காம்ப்பெடிடர்...கருமம்..கருமம்...!  

பெரிய மம்முத 'மா'னான்னு நெனப்பு...! ரிங் டோனப் பாரு, லூசுப் பெண்ணே..வாம். அவதான் உன்ன கரடிப் பெத்த கொரங்கு,  லூசுன்னுட்டு போயிட்டாளே...அப்புறம் என்ன இன்னும் 
"லூசுப் பெண்ணே.....லூசுப் பெண்ணே.....லூசுப் பெண்ணே.....!"

டேய்...மண்ட வீங்கி!, அப்படியே சுவத்துல மூச்சா போற மாரி அந்தப் பக்கமா திரும்பி நின்னுக்கோ...இல்ல மூஞ்சில காறி துப்பிட்டு போய்டுவா என் வெள்ளைக்குட்டி...!  

முக்குச் சந்து:  அதே முக்கு சந்து...! கால் கடுக்க என்னோட தேவதைக்காக நான் நெதம் நிக்கிற அதே முக்கு சந்து. என்ன இன்னும் இந்தப் புள்ளைய காணோம்....?!!  எவ்வளவு நாள் தான் இப்படியே காலம் தள்ளுறதுன்னு தெரியில...! ஏற்கனவே இந்தப் புள்ள அந்தப் மண்ட வீங்கிப் பயலோட சுத்திகிட்ருந்தா'ன்னு ஊரே சிரிப்பா சிரிச்சுது...!  "சீ..சீ..., இது பழமா இருந்தாத்தானே புளிக்கிறதுக்கு, பச்ச காய்..", அப்படீன்னு தூர போட்டுடலாம்னு நெனெச்சேன். இப்போ என்னடான்னா, அவளுக்கும் அந்த மம்முத 'மா'னாவுக்கும் இடையில் பெரிய டமால்'னும், உறவு பனால்'னு அந்து நஞ்சிடிச்சின்னும் சொல்றாங்க...!   அத கேள்விப் பட்டுதான் சரி, போனாப் போவுது,  கழுதைய மன்னிச்சி வாழ்க்கை பிச்சை போடலாம்னு நிக்கிறேன்..!  இன்னும் காணல இந்த குடுத்து வச்ச சிறுக்கிய...ம்ம்ம்...!

வந்துட்டா...! வந்துட்டா...! 
வரா..வரா...கிட்ட வரா...!

லூசுப் பெண்ணே.....லூசுப் பெண்ணே.....லூசுப் பெண்ணே....!

அவனைத் தாண்டும் போது கரெக்டா சிச்சுவேஷன் சாங் போடறான் பாரு பன்னாட...!   டேய் மண்ட வீங்கி....!, என் லவ் கன்பார்ம் ஆவட்டும், உனக்கு அப்புறம் இருக்குடா கச்சேரி...! 

இவன் யார்ரா.. நடுவுல...?

தாடிக்காரன்... அதுவும் சைக்கிள்ல...! 

இந்தப் புள்ள என்ன பல்ல காட்றா அந்த தாடிக்காரனுக்கு, ஒரு வேளை அண்ணனா இருப்பானோ...? சீ...சீ..அதுக்குன்னு இவ்வளவு அசிங்கமாவா ஒரு அண்ணன் இருப்பான் அவளுக்கு...! அண்ணன் இல்லன்னா...ஒரு வேளை...

ஐயையோ...கருமம் என்ன இந்த புள்ள அவன கட்டிப் புடிக்குது...!  கொரங்கு கையிலர்ந்து பூமால கரடி கைக்கு போயிடிச்சா...? 

அடக்கடவுளே..!  இந்த கஸ்மாலம் என்ன அவன் சைக்கிள்ள உக்கார்றா?   கரடிபபயலுக்குத் தானா இந்த பழம் கெடைக்கணும்...அவன் ஏற்கனவே ரெண்டு குட்டி போட்டவன் மாரி இருக்கானே..?   ம்ம்ம்ம்.. வயிறு எரியுது...!  எங்க இருந்தாலும் நல்லா இருங்கடா...! சின்ன கேப்பு கெடைக்க கூடாதுடா உங்களுக்கு...!  இது தான் சைக்கிள் கேப்புல ஆட்டயப் போட்ருதோ...? கண்ணிமைக்கிற நேரத்துல கடலை மிட்டாய கவ்விட்டு கெளம்பிடிச்சே இந்த காட்டுப்பூன.......!

லூசுப் பெண்ணே.....லூசுப் பெண்ணே.....லூசுப் பெண்ணே....! மண்ட வீங்கியோட ரிங் டோன் சத்தம். 

இன்னுமாடா...! இவன......இருடா வரேன்...!

என்ன பாஸ்...! சோகமா...?!  அழுகாச்சி சீனெல்லாம் நமக்கு சரியா வராது, விடுங்க பாஸ்...!  பழம் நழுவி பால்டாயில்ல விழுந்துச்சுன்னு நெனச்சிக்க வேண்டியது தான்...! நமக்கென்ன போச்சு, குடுத்து வச்சது அவ்வளவுதான்...!

யாரு குடுத்து வச்சது...? 

ஒன்னுமே தெரியாத மாரித் தான் கேப்பீங்க, சிம்பு....!


அவதான்.... அட அவ தாங்க...., நயன் தாரா...!!   அவ குடுத்து வச்சது அவ்ளோதான்...!

என்னைய விடுங்க...! உங்க நெலமதான் ரொம்ப பரிதாபம்...! தாடி வச்சவனுங்க தான் உங்களுக்கு பெரிய இம்சையா இருப்பானுவ போலிருக்கு...!

எப்படி சொல்றீங்க..?

மறுபடியும் ஒன்னுமே தெரியாத மாதிரி கேக்குறீங்களே...! சரி, போவுது, கொஞ்சம் கீழப் பாருங்க...


நான் சொன்னது சரி தானே...!!

மறுபடியும் இல்லம் (எனது படுக்கையறை):
"குன்XXX'ல வெய்யில் அடிக்கிற வரைக்கும் தூங்கினா...!"

"குன்XXX'ல வெய்யில் அடிக்கிற வரைக்கும் தூங்கினா...!"

"குன்XXX'ல வெய்யில் அடிக்கிற வரைக்கும் தூங்கினா...!" 

 அட எழுந்துட்டேன், அந்த டி.வி.'ய  நிறுத்தித் தொலடா டேய் ...! உன்னோட தெனம் இது ஒரு எழவாப் போச்சு...!!

"அண்ணே...! படம்'ண்ணே "7/G. ரெயின்போ காலனி" அதுல ஹீரோ'வ அவுங்க அப்பா திட்ற சீன் அண்ணே...!  தூக்கம் கலைஞ்சிப் போச்சா..? நீ தூங்கு, மணி இப்போதான் பகல் பன்னிரண்டு...!

அத விடுங்க, இன்னைக்கு யாருண்ணே கனவுல...?" ரோஷினியா, ஜோதிகாவா...?  

டேய் போடா..போய் தம்பியா..லட்சணமா.. அண்ணனுக்கு ஹார்லிக்ஸ் கொண்டு வாடா....! காலங் காத்தால, தொன தொனன்னு பழைய கெழவிங்கள பத்தி கேட்டுகிட்டு இருக்க...!

கெழவிங்களா.....? அப்ப தமன்னாவா...இல்ல நயன் தாராவா...??!!

போயிர்ரா...! நானே லவ் பெய்லியர் துக்கத்துல இருக்கேன்...!


என்னாது...கனவுல கூட லவ் பெய்லியரா...??

கரர்ர்ர்ர்....தூ........! கரர்ர்ர்ர்....தூ........!

டேய்,  ஒரு பெயிலியருக்கு ஏன்டா ரெண்டு தடவ துப்புற...! இன்டீசன்ட் பெல்லோ...!

                                            ---கனவு கலைந்தது--- 



நண்பர்களே...!, 
கனவுகளும் நிஜத்தை போல்தான் என்றாலும், சில கனவுகள், நிஜத்தையும் தாண்டியவைகளா இருக்கும். அதுல ஒரு வசதி "ஒபாமவக்" கூட நான் ஓங்கி ஒரு அறை விடலாம். "ஒசாமாவக்" கூட அர்ரெஸ்ட் பண்ணலாம். சரி..., அந்த கனவுகளை எல்லாம் தொகுப்போமே..அப்படீன்னு தோனுச்சு...! அது தான் இந்தப் பதிவு...! நான் இனிமேலும் கனவு காணலாமா..., இல்ல உங்க தர்மடியிலிருந்து தப்பிச்சு ஓடிவிடலாமா என்பது கிடைக்கும் வரவேற்பையும், காறி துப்புகளையும் பொறுத்ததே....,!!

(படம் தந்த கூகுள்க்கு நன்றி...!!)
--விளையாடும் வெண்ணிலா....