வெள்ளி, 31 டிசம்பர், 2010

வாராய் நீ வாராய்...!












ருசி மறவா நாவினாய்...
துடி துறவா இதயமாய்...

இமை விலகா துயில்களாய்...
அணை விலகா காதலியாய்...

மருந்தில்லா மணித்துளிகளாய்...
வருந்திலா வருடல்களாய்...

கரைகளறுக்கும் வெள்ளமாய்...
கங்குகளுருக்கும் எண்ணமாய்...

துயர் துரத்தும் இன்பமாய்...
தமிழ் குன்றா நினைவுமாய்...

நான் என் கதவு திறக்க காத்திருக்கும் பதுமையே...!
வாராய் நீ வாராய்...!

கறைகள் களைந்து... 
களிக்கச்செய்து போவாய் என் கணங்களை...!
வாராய் நீ வாராய்...!

வருக வருக 2011...!
நன்றி நன்றி 2010...!


அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!
என்றும் அன்புடனும் பாசத்துடனும்...
--விளையாடும் வெண்ணிலா....

வியாழன், 30 டிசம்பர், 2010

கணங்களாய்.....

இது எனது பதிவின் முதல் கவிதை முயற்சி..! 

இந்தப்பதிவு அனைவரையும் போல நான் எனது எண்ணங்களின் உணர்ச்சி கொப்பளிப்புகளை தாங்கும் ஒரு பாத்திரமாகவே கருதி தொடங்கினேன். கவிதை முயற்சி பெரும்பாலானவர்களை போல எனது பள்ளி பருவத்திலிருந்தே தொடங்கியது தான். காலவோட்டத்தில், நானும், எனது முக்கியத்துவங்களும்  சூழ்நிலைகளையும், தேவைகளையும் கருத்தில் கொண்டு நகர தொடங்கிய பின்னர், அது போன இடம் கூட தெரியவில்லை. சில ஆண்டுகள் கழித்து முயற்சித்த போது என்னால் அந்த பழைய பள்ளிக்கால அனுபவத்தை தொட கூட முடிய வில்லை என்றொரு உணர்வு. இன்றும் அப்படித்தான் நினைக்கிறேன். 

கவிதையை ரசிப்பதென்பது ஒரு தனி அனுபவமே...!  ஒரே தளத்தில், ஒரே திசையில், ஒரே வேகத்தில் பயணம் செய்யும் போது மட்டும் தான் சிறிதளவேனும் கவிதைகள் நமக்கு புரிதலை கொடுக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து. புரிதல் என்பதை விட உணர்தல் என்பது சரியாக பொருந்தும் என்றே கருதுகிறேன். அந்த ஒரே எண்ணத்தின் வடிவாய் இப்போது மறுபடியும் ஒரு முயற்சி...!

இந்த முயற்சிக்கு தூண்டுதல் நானே..! ஆனால் இது இவ்வளவு விரைவில் வெளியிட மறைமுக தூண்டுதல் எனக்கிருக்கும் மிக, மிக சிறிய, 'துக்ளியூண்டு' பதிவுலக நண்பர்களுள்  ஒருவரான 'ஆனந்தி'. அவருக்கு நன்றி பகர்தலுடன் உங்களை அழைத்துச் செல்கிறேன் கீழே கவிதை வரிகளின் அருகே...

எழுதிவிட்டேன்.. அவஸ்த்தையா இல்லை அனுபவமா என்பதை உங்கள் மனதின் எதிரொலியாய் வந்து விழும் விரல் வடிக்கும் எழுத்துக்களில் கண்டு கொள்வேன்...


கணங்களாய்....!

எடுக்கின்றன கோடி பிறவிகள்...
என் கணங்கள் எனக்காகவே...!
துளிர்க்கின்ற எண்ணங்களை 
பரிவுடன் தாங்கி...!

எண்ணத்தின் அரிதாரங்கள் தான்...
எத்தனை...எத்தனை...!
புதைந்து அழுகி, பின் முளைவுற்று,
வெடித்து விலகி, பின் கருவுற்று,
மறித்து கருகி, பின் உருவுற்று,
துறந்து நீங்கி, பின் உயிருற்று,
வெறுத்து வதங்கி, பின் மலர்வுற்று,
வலிந்து குழம்பி, பின் தெளிவுற்று,
களைத்து வாடி, பின் செறிவுற்று,
கரைந்து உருகி, பின் மெருகுற்று,
ஓய்ந்து அடங்கி, பின் கிளர்வுற்று,
தனித்து ஒதுங்கி, பின் களமுற்று,
எண்ணத்தின் அவதாரங்கள் தான்...
எத்தனை..எத்தனை...!

துளிர்க்கின்றன எண்ணங்கள்...
கணங்கள் ஊமைகளாகுமோ சொல்லுங்கள்...! 

எங்கே தொலைந்து போனாய்..
எனக் கேட்கும் சமூகமே...!
இதோ கேட்டுச்செல்,
என் சொற்களை..!
எங்கும் தொலைந்து போய் விடவில்லை...!
எதிலும் உறைந்து போய் விடவுமில்லை...!

மறைந்து உதிக்கிறேன்..
நான்...
ஒவ்வொரு துளிர்ப்பிலும்...!
காலத்தின் துடிப்பாகிய...
கணங்களாய்...!



--விளையாடும் வெண்ணிலா....

ஞாயிறு, 26 டிசம்பர், 2010

இன்ட்லி (ஆங்கிலம்) முகப்பில் எனது பதிவு...!!!



எனது Wax Museum in Seoul- "Really Amazing..!" என்ற ஆங்கிலப் பதிவு 'இன்ட்லி பதிவர்களால்' மிகப் பிரபலமானதாக வாக்கிடப்பட்டு, இன்ட்லி முகப்பில் இணைக்கப்பட்டிருக்கிறது. 


அனைத்து 'இன்ட்லி பதிவர்களுக்கும்' மற்றும் 'இன்ட்லிக்கும்'  எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்..!


இன்ட்லி முகப்பு URL
http://indli.com/story/32876


என் ப்ளாக் முகவரி..
http://microscopicalview.blogspot.com/





--விளையாடும் வெண்ணிலா....

வெள்ளி, 24 டிசம்பர், 2010

குழாயடி குங்பு.....!

ஜன்னல்-அமர்ந்த இடத்திலிருந்து நான் உலகை கண்காணிக்க, ரசிக்க உதவும் என் இல்லத்தின் கண்கள்.

தாய், தந்தை, சகோதரர்கள், சகோதரி, உற்றார், உறவினர் இவர்களுக்கு இணையாக என்னுடைய தனிமை, அமைதி, விருப்பம், வெறுப்பு, கோபம், மகிழ்ச்சி, சோகம், ஆறுதல், அழுகை, துரோகம், வேட்கை, சிந்தனை, இன்னும் பல எல்லா இன்ப துன்ப நிகழ்வுகளில் அருகிருந்து உடன் பயணித்தவைகள் எனது ஜன்னல்கள்.

தேவையான போது புத்தனாய் போதனைகளும், தமிழ் தாகமெடுத்து வார்த்தைகளுக்கு அலை மோதும் போதெல்லாம் பாரதியாய் மொழி ஊற்றாயும், பணிச்சுமை அதிகரித்து அல்லாடும் போதெல்லாம் தலைக்கோதி இதமாய் வருடும் தென்றலாயும், சிந்தனை வேட்கைகள் வெளிவர போராடும் போதெல்லாம் எண்ணச் சிறகுகள் படபடக்கச் செய்யும் ஓர் உந்து சக்தியாயும் பல பரிமாணங்களில் 'ஜன்னல்கள்' என் உயிர் அங்கமாய் இன்றும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன.

தாய், தந்தை பணி நிமித்தமாய் நாங்கள் மாறிய, மாற்றிய வீடுகள் பலவாக இருப்பினும், இடையிலேயே தொலைந்து, அழிந்து, காணாமல் போகும் மனித உறவுகள் போல் அல்லாமல் என்னுடைய 'ஜன்னல் பந்தங்கள்' நினைவுகளாய், பாடங்களாய், அனுபவங்களாய் என்றுமே என்னை விட்டு நீங்கி வற்றிப் போகாமல் என்னுடனேயே பயணிக்கின்றன. இங்கே இனி வரும் பதிவுகளில் நான் எனது சிறு பிராயத்திலிருந்து இது வரை எனது ஜன்னல்களின் வழியே கண்டு, கேட்டு, உணர்ந்து, மகிழ்ந்த சில அனுபவங்களை உங்களுடன் அவ்வப்போது பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.


என்னை கம்பிகளினூடே வெளியே அழைத்து சென்று உலகை எனக்கு பயிற்றுவித்தும், பழக்கப்படுத்தியும், உலகின் அசைவுகளின் சிறு சிறு காட்சித் துண்டங்களை என் இமைக்கருகே கொணர்ந்து என் விழிப்பசியாற்றிய ஜன்னல்களுக்கு இப்பதிவுகளை சமர்ப்பிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

அப்போது எனக்கு ஒரு ஐந்து அல்லது ஆறு வயதிருக்கும். நாங்கள் அந்த அடுக்கு  மாடி குடியிருப்பில் குடியேறிய புதிது. பதினெட்டு குடும்பங்கள். உத்தியோகஸ்த்தர்கள். அனைவரும் அரசு ஊழியர்கள். குடித்தனம் இருப்பவர்களுக்கு அங்கே உள்   வளாகத்திலேயே நல்ல குடிநீருக்கென்று 'அடிபம்ப்' ஒன்றை நிறுவி இருந்தது குடியிருப்பு நிர்வாகம். ஏனெனில், நீரேற்றம் செய்யப்பட்டு வீட்டிற்கே வந்து கொட்டும் தண்ணீர் கடல் நீருக்கு சமமானது. குடிப்பதை விடுங்கள்.., குளித்துவிட்டு வந்து தலையை துவட்டுவது என்னமோ முள் கம்பிகளில் துண்டை வைத்து உரசுவது போல் இருக்கும், அத்தனை மஹா சக்தி கொண்டது. அதில் வர, வர வென்று சத்தம் வேறு கேட்கும் துவட்டும் போது. துவட்டி விட்டு பார்த்தால் கணிசமான தலை முடி துண்டிற்கு இடம் மாறி இருக்கும். அவ்வளவு உப்பு சக்தியையும், தாதுக்களையும், கனிமங்களையும் தாங்கிய புனித நீரது.

குடியிருப்போருக்கு இந்த அடிபம்பில் இருந்து தான் குடிநீர் எடுத்து கொடுக்கப்படும். கமலம்மா, சாந்தி என்று இரண்டு பெண்களும் அவரது பரிவாரங்களும் தான் அனைத்து வீட்டிற்கும் தண்ணீர் பிடித்து கொடுத்து வந்தார்கள். அந்த பம்ப் எங்கள் வீட்டு ஜன்னலுக்கு அருகிலேயே இருந்ததால், எனக்கும் என் சகோதரர்களும் மிகவும் பிடித்தமான எங்கள் தேக்கு நாற்காலியில் அமர்ந்து, ஹார்லிக்ஸ் குடித்துகொண்டே நான் தினமும் பார்க்க நேர்ந்த தினசரி காலை காட்சியின் கதாநாயகர்கள் இவர்களே.


காலை ஐந்து மணிக்கெல்லாம் அவர்களின் பணி தொடங்கி விடும். அதிகாலை சீக்கிரமே தங்களின் தினசரி வாழ்க்கையை தொடங்கும் வீடுகளுக்கு முதல் சென்று காலி குடங்களை எடுத்து வந்து, அதை வரிசைப்படி குழாயின் அடியில் அடுக்கி இடம்பிடிப்பதில் தொடங்கி, தண்ணீரை பிடித்து அதை மறுபடியும் அந்தந்த வீட்டிற்கு கொண்டு போய் வைப்பது வரையிலுமான பதினெட்டு வீட்டிற்குமான அவர்களின் பணி முடிய கிட்டத்தட்ட காலை ஒன்பது மணி ஆகிவிடும். இது மட்டும் அல்லாமல், பல வீட்டிற்கும், துணி துவைப்பது, பாத்திரம் கழுவுவது, குழந்தைகளை பள்ளியில் விட்டு பின் மாலை அழைத்து வருவது என்று அனைத்து வேலைகளையும் செய்வார்கள்.

நான் தயாராகி பள்ளிக்கு புறப்படும் போது தான் அவர்களின் சத்தம் குறைந்து அவ்விடம் மயான அமைதியாயிருக்கும். மழை, வெயில், பனி, தீபாவளி, பொங்கல் என எதுவும் அணைக்கட்டி தடுக்க முடியாத பாவ ஜீவன்கள் அவர்கள். "நாம் கொண்டாடும் அதே தீபாவளி அன்றும் அவர்கள் ஏன் எல்லா வீட்டிற்கும் வேலை செய்கிறார்கள்?",  "இந்த மழையில் நான் உள்ளே அமர்ந்திருக்கும் போது, இவர்கள், ஒரு கோணி துணியை  கவசமாக்கி ஏன் இப்படி சொட்ட சொட்ட நனைகிறார்கள்?" என்று அப்போதெல்லாம் நான் யோசித்ததே இல்லை. ஆனால் இப்போது யோசித்தால், சமூகம், அதன் கோர புத்தியால் பிரசவித்த ஏற்றத்தாழ்வின் தொடக்கமாயும், அதனாலுண்டான விளைவுகளின் மையமாயும் அவர்களை வகைப்படுத்தி வைத்திருந்ததால் தான் என்று புரிகிறது கேள்விகளுக்கு அவசியமில்லாமலேயே.

சில நண்பர்கள் சொல்லி கேட்டதுண்டு, ஜப்பான் அணுச் சிதைவுக்குள்ளாகி பல குழந்தைகள் அனாதைகளாக்கப்பட்ட போது, நாட்டு மக்கள் அவர்கள் அனைவரையும் தத்தெடுத்து, தங்கள் பிள்ளைகளாய் வளர்த்து அந்த நாட்டை சுபிட்ச பூமியாக்கினார்கள் என்று. ஹும்ம்ம்...நாம் நம்மவரை அலட்சியப்படுத்தியே வாழப் பழகிவிட்டோம்.

கமலம்மாவிற்கு உதவிக்காக, அவரின் மூன்று மகள்களும், சாந்திக்கு உதவியாக அவரின் இரு மகன்களும், அவரின் தாயாரும் இருந்தார்கள். இந்த இரு பரிவாரமும் எப்பொழுதும் கீரியும் பாம்பும் போலத் தான்.  அதிலும் சாந்தியின் தாயார் ரவிக்கையின்றி, காதில் பெரிய, பெரிய ஓட்டையுடன் பார்ப்பதற்கு மட்டுமல்லாமல், செய்கை, பேச்சு என எல்லாமே "மண் வாசனை" காந்திமதி மாதிரி தான் இருக்கும். எனக்கெல்லாம் அப்போது அந்த பாட்டியை பார்க்கவே பயமாக இருக்கும். அவர் எனது அருகில் வந்தாலே, நான் "மான் கராத்தே" தான்.

தண்ணீர் பிடிக்கிற இடத்தில் அவர் தான் "தாதா". அவர் வைத்தது தான் சட்டம். யாராவது மீறி நடந்தால் வாயாலே வயலின் வாசித்து காதில் இரத்தம் வர வைத்து விடுவார். சூழ்நிலை கெட்டு, அவர் அப்படி ஒரு உச்ச நிலைக்கு வந்து விட்டால் அனைவரும், காது, மூக்கு, வாய் என்று அனைத்து துவாரங்களையும் அடைத்து அமைதி காத்து விடுவார்கள். "கெழவி மேல உழுந்து புடிங்கிற போறா, வாய மூடிட்டு எட்ட போடி நீ..!", என்று ஒவ்வொரு முறையும் கமலம்மா தான் தன் மகள்களை கட்டுக்குள் கொண்டு வருவார்.

சில சமயங்களில் நிலைமை கை மீறிப் போய், பாட்டியார், 'முதல் மரியாதை' படத்தில் சிவாஜி 'வடிவுக்கரசியை' முக்கியமான கட்டத்தில் ஒரு எத்து எத்துவாரே..., அது மாதிரி எல்லை மீறி எத்து எத்தேன்று எத்தியும் இருக்கிறார். அதிக எத்துக்கள் வாங்கியது கமலம்மாவின் நடு மகள் தான். பின்னாளில், அதே மகளைப் பார்த்து அந்த பாட்டியார், மிரண்டு, விழி பிதுங்கி ஓட்டமெடுத்தது ஒரு தனி கதை. அந்த சம்பவத்திற்கு பிறகு பாட்டியார் வாயால் சுளுக்கெடுப்பதை இவரிடத்தில் முற்றிலும் கைவிட்டே விட்டார்.

கொஞ்ச காலத்திற்கு பிறகு குடியிருப்போர்களே தண்ணீர் பிடித்துக் கொள்ள முடிவெடுக்க, அந்த இரு பரிவாரமும் வேலைக்காக குடியிருப்பிற்கு வருவது முற்றிலும் குறைந்து, பின் நின்றே போனது. அவர்களின் வருகை முற்றிலும் நின்று போன நாட்கள் என் நினைவில் அறவே இல்லை.

(படம் தந்த கூகுள்'க்கு நன்றி)
--விளையாடும் வெண்ணிலா....

சனி, 11 டிசம்பர், 2010

என் முதல் அலுவலகப் பயணம்..! (பகுதி-2)

கிட்டத்தட்ட 24 மணிநேர ரயில் பயணம், எப்படா கீழே இறங்குவோமென்று ஆகிவிட்டது. ரயில், நிலையத்தில் நிலை கொள்ளும் முன்னரே முதல் ஆளாய் பாய்ந்து இறங்க முயல, என் தோளில் தொங்கிக்கொண்டிருந்த 'தோல் பை தோழன்' அருகில் நின்ற உ.பி. மகளிரணியை லேசாக பதம் பார்த்து விட, நான் உரைத்த "சாரி" சமாதானத்தையும் ஏற்காமல் அந்த ஐம்பது வயதையொத்த 'கன்னிபெண்' என்னை ரொம்பவே புகழ்ந்தார். அவர் பேசியது ஹிந்தி என்பதை தவிர வேறு எதுவுமே புரியவில்லை எனக்கு, அதனால் அவர் புகழ்ச்சியை தாங்காமல் விரிய, விரிய சிரித்துக் கொண்டே இருந்தேன். அதற்குள் அங்கே அவரின் இரு ஆண் மெய்க்காப்பாளர்கள் வர நமக்கு கொஞ்சம் உதரலெடுக்க ஆரம்பித்தது. இருக்காதா பின்னே, ஒவ்வொருவரும் வேளைக்கு நோகாமல் இருபது, இருபத்தைந்து ரொட்டியை மல்லுகட்டும் சைசில் இருக்க, "அப்பு! பேச்சு பேச்சாத்தான் இருக்கணும் " என்கிற ரீதியில் மறுபடியும் ஒரு 'சமாதான சாரியை' சோகமான தொனியில் சொன்னேன். இவர்களும் அந்த கன்னியின் வழியிலேயே எனது சமாதானத்தை விரும்பாமல், அவர்கள் பங்குக்கு புகழோ புகழென்று புகழ்ந்து தள்ளி விட்டு சென்றார்கள். சரி விடு! சமுதாயப்பணி என்று வந்துவிட்டால் இதை மாதிரி பல இன்னல்களை, சரிவுகளை சந்தித்து தானே ஆக வேண்டும் என்று என்னையே தேற்றிக்கொண்டு அவர்கள் முதலில் இறங்கி போகட்டுமென்று வழிவிட்டேன். போகும் போது அந்த 'கன்னிப்பெண்' கடைசியாக ஒரு பச்சை மிளகாய் பார்வையை வீச, நாம் "சுப்ரமணியபுரம்" ஜெய் மாதிரி தலையை ஆட்டி கொண்டே "கோல்கெட்" புன்னகையை வீசினோம். 


கம்பெனி கெஸ்ட் ஹவுசிற்கு அழைத்துச்செல்ல எனக்காக ரயில் நிலைய வாசலில் பெயர்ப் பலகையை பிடித்துக் கொண்டு வாகன ஓட்டுனர் காத்திருப்பார் என்று மேனேஜர் கூறியதால் நிலையத்தை விட்டு வெளியே வந்து தேடலானேன். கண்ணுக்கெட்டிய தூரம் வரை பெயர் பலகையும் கையுமாய் ஒருவரையும் காணோம். மீண்டும் ஒரு முறை ரயில் நிலைய வாசல் வரை சென்று நன்றாக தேடி விட்டு வந்தேன். ம்ம்ஹும்ம் கண்ணில் ஒருவரும் தென் படவே இல்லை; பயணிகளையும், அவர்களை பின் தொடரும் ஆட்டோக்காரர்களையும் தவிர. கொஞ்சம் நேரம் காத்திருப்போம் என்று மூட்டை முடிச்சுகளை கீழே இறக்கி வைத்துக்கொண்டு நின்றிகொண்டிருந்தேன்.


நிலையத்தில் கூட்டம் கரையத் தொடங்கியது. என்னை இரு கண்கள் நோட்டமிட்டே இருப்பது போன்றதொரு உணர்வு எனக்கு. முரட்டு மீசை, தாடியுடன், என் வலது பக்கத்தில் ஒரு ஐந்தாறு அடி தூரத்திலிருந்து அதற்கு மேல் அழுக்கே ஆகா முடியாத ஒரு ஜிப்பா போன்ற உடையுடன் என்னை குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருந்தான் அவன். நான் பார்த்தவுடன் தலையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டு ஏதோ இப்போது தான் கண் பார்வை கிடைத்து உலகத்தை பார்ப்போது போன்று ஒரு பாவனை செய்வதும், பார்க்காத போது குறுகுறுவென்று பார்ப்பதுமாகவே இருந்தான். "இதென்னடா வம்பா போச்சுன்னு" நான் அவனிருந்த திசைக்கே ஒரு கும்புடு போட்டுவிட்டு கொஞ்சம் முன்னே நகர்ந்து நின்றேன். ஆனால் இப்போது அவன் என்னை நோக்கி வர ஆரம்பித்தான். வந்தான். என்னை தாண்டி சென்றான். பின் ஓரிடத்தில் நின்று மறுபடியும் அதே 'குறுகுறு'. மீண்டும் அவன் ஒரு முறை என்னை கடந்து சென்று தான் முன் நின்ற பழைய இடத்தை அடைந்து 'குறுகுறு'வை தொடர்ந்தான். "நம் பெட்டி படுக்கைகளுக்கு ஆதரவு கொடுக்கலாம்னு நிக்கிறானா?" என்று யோசித்து, நான், ஏற்கனவே மிக அருகிலிருந்த எனது மூட்டை, முடிச்சுகளை மீண்டும் அருகில் நகர்த்துவதைப் போல் நகர்த்தி எனது எச்சரிக்கையுணர்வைக் காட்டினேன். இல்லை...., ஒரு வேளை இவன் "அவனா நீ பார்ட்டியா?, ஆனா நான் அவன் இல்லடா, போய் வேற எடம் பாரு" என்று நினைத்துக்கொண்டே என்னுடைய கைப்பேசியை பேன்ட் பாக்கெட்டிலிருந்து எடுக்க முயல, பின்னால் யாரோ என்னை அழுத்தமாக உரசி விட்டு செல்வது போன்று இருந்தது. திரும்பிப் பார்த்தால் நம் 'குறுகுறு' பார்ட்டி தான் என்னை இடித்துவிட்டு ஓடி கொண்டிருந்தான். தடுமாறிய சிறு பதற்றத்தில் என்னை அறியாமல் என் கை பின்சென்று என் பர்ஸ் பத்திரமாக இருக்கிறதா என்று உறுதி செய்ய முயல, மின்சாரம் தாக்கியதைப் போல் ஓரதிர்ச்சி எனக்கு. பர்ஸ் இல்லை, நான் களவாடப்பட்டுவிட்டேன். 


என்னையும் மீறி அனிச்சையாய் திருடன்..., திருடன்... பிடிங்க..., பிடிங்க...! என்று நான் தமிழில் கீதமிசைக்க கேட்பாரில்லை அங்கே. எத்தனை முறை சோர்.. சோர்.. பக்கடோ...பக்கடோ...என்று 'பதினைந்து ரூபாய்' புத்தகத்தில் படித்து பதிவு செய்த ஒரு வாக்கியம் எனக்கு 'அல்வாவும், பக்கோடாவும்' கொடுத்துவிட்டு எங்கே போய் தொலைந்ததென்றே தெரியவில்லை. எனக்கு நன்கு தெரிந்த "ஏக் காவ்ன் மெய்ன் ஏக் கிஸ்ஸான் ரகு தாத்தா" என்ற 'பாக்யராஜ்'ன் இலக்கிய ஹிந்தி கூட மறந்து போக, என்ன செய்வதென்றே தெரியாமல், என்னுடைய மூட்டை முடிச்சுகளை தூக்கி கொண்டு அவனை விரட்ட எத்தனித்த போது தான் அந்த அதிசயத்தை எனது இடது பக்கத்தில் பார்த்தேன். ஒரு வினாடியில் போன உயிர், மறு வினாடியில் உடலுடன் ஐக்கியமான அதிசயம். குப்பையில் கிடைத்த கோமேதகமாய் எனது பர்ஸ் கீழே.  "கடவுள்னு ஒருத்தன் இருக்கான்யா" என்று ஆனந்தப்பட்டுக்கொண்டே அதை கையிலெடுத்து, எல்லாம் இருக்கிறதா என்று சரி பார்த்தேன். முருகன், பெற்றெடுத்த மவராசியும், மவராசனும், நான்கு விசிடிங் கார்ட்கள், இரு நூறு ரூபாய்ப் பணம், மற்றும் சில குப்பை கூளங்கள் என்று அனைத்துமே இருந்தன. ச்ச் ச்ச்ச்சு ஏமாந்திட்டியே செல்லம்..., என்று ''குறுகுறு' பிக்பாகெட் பார்ட்டியை நினைத்துக் சிரித்துக் கொண்டேன். இதை நண்பர் ஒருவரிடம் பின்னாளில் பகிர்ந்து கொண்ட போது அவர் சொன்னது "அவன் உங்க பர்ஸை அடிச்சிட்டு ஓடிருந்தாலும் ஏமாந்துதான் போயிருப்பான்". ஹும்ம்ம்... வயிற்றெரிச்சல் கேசுகள்.  


பின்னர் கான்பூர் பேக்டரி 'HR' மேனேஜருக்கு போனை போட்டு காறி, காறி துப்பி விட்டு ஒரு ஆட்டோவை பிடித்துச் சென்றேன். ஆட்டோவில் மீட்டரும் இல்லை ஒரு மண்ணும் இல்லை. ஒரு கண்டத்தில் இருந்து இப்போது தான் தப்பி வந்ததினாலும்,களைப்பினாலும், எதை பற்றியும் கேட்காமல் ஏறி அமர்ந்தேன் அது ஒரு வில்லங்கத்தில் விடியுமென்று யோசிக்காமலேயே. நான் அடைய வேண்டிய 'கிளாசிக் அபார்ட்மன்ட்சை' வெறும் ஏழெட்டு நிமிடத்தில் அடைந்தது ஆட்டோ. இந்த மிக நீண்ட!!! ஆட்டோ பயணத்திற்கு அந்த ஆட்டோக்கார புண்ணியவான் கேட்ட இருநூறு ருபாய் கூலியை எதிர்த்து நான் ரோட்டிலயே என்னுடைய ஹிந்தி புலமையால் வாதிட, அவனுக்கு நன்றாகவே புரிந்துவிட்டது நான் ஒரு ஹிந்தி தெரியாத மாக்கானென்று. அப்புறம் அந்த வழயில் தொப்பையை குறைக்க ஜாக்கிங் போய்கொண்டிருந்த ஒரு ஜென்டில்மேனை பஞ்சாயத்துக்கு வந்து தலைமையேற்று பைசல் பண்ணித்தருமாறு சர்வதேச மொழியின் துணையால் அழைப்புவிடுத்தேன். அவரும் அழைப்பையேற்று அந்த 'ஆட்டோ சங்கரை' ஒரு பிடி பிடியென்று பிடித்து, செருப்பாலடிக்காத குறையாய், எண்பது ரூபாய்க்கு அவனை படியச் செய்தார். "உங்களை மாதிரி ஆளுங்களாலதான்யா எல்லா ஆட்டோகாரங்களுக்கும் கெட்ட பேர்" என்று ஒரு பஞ்ச் கொடுத்து அடி வயித்திலிருந்து காறி, காறி துப்பிவிட்டு சென்றார். அந்த ஆட்டோக்கார அண்ணாச்சி 'இஞ்சி தின்ன மங்கி' மாதிரி விழித்ததை பார்ப்பதற்கு ரொம்பவே குஷியாயிருந்தது. கான்பூர் கண்ணியவானுக்கு ஒரு ராயல் சல்யுட் அடித்தேன். அந்த அபார்ட்மன்டிலேயே கிட்டத்தட்ட மூன்று மாதத்திற்கும் மேலான ஜாகை எனது, இருந்தும் அவரை மறுபடியும் ஒரு முறை கூட சந்திக்க இயலாமல் போனது வருத்தமே....!


ஆக, பத்து கிலோமீட்டர் நம் செந்தமிழ் நாட்டின் எல்லையை கடந்து விட்டாலே என் தாய் தமிழும் ஆபத்துக்கு உதவிக்குகந்ததில்லை, அரைகுறையாக படித்த பதினைந்து ரூபாய் புத்தகமும் உதவிக்கு வரவில்லை. ஆகையால் முதலில் நாம் வளர்வோம் (மற்ற தேவையான மொழிகளையும் அரவணைத்து), நம் மொழி வளர்க்க. 
(அப்பாடா...! மெசேஜுன்னு ஒரு பிட்ட போட்டாச்சு, இனி நிம்மதியா தூங்குவேன்....!)


--விளையாடும் வெண்ணிலா....

புதன், 8 டிசம்பர், 2010

என் முதல் அலுவலகப் பயணம்..! (பகுதி-1)

அது மும்பையில் புதிய பணியில் சேர்ந்த மிக தொடக்க காலம். முதல் இரு வாரங்கள் 'ஓரியென்டேஷன்' என்ற பெயரில் அனைத்து துறைகளுக்கும் சென்று நேரத்தை கொல்ல முடியாமல் கொன்று, மென்று, தின்று விழுங்கி அப்போதுதான் எனக்கு முதல் நாளில் ஒதுக்கப்பட்ட அதே இருக்கைக்கு திரும்பி இருந்தேன். புது இடம், புதிய மனிதர்கள், புது அணுகுமுறைகள், அந்நியமாய் தோன்றும் எம் பாரத நாட்டின் அலுவல் மொழி (வாழ்க திராவிட கழகங்கள்), அதிசயமாய் தெரிந்த கார்ப்பரேட் வாழ்க்கை, செக்கச்செவேலென்றிருந்த பெண்கள், சிக்கென்றிருந்த அவர்களின் உடை மற்றும் உடல் வாகு, அவர்களை குறிவைத்தே அசையும் இந்தியாவின் பரந்துபட்ட எல்லைகளிலிருந்தும் பறந்து வந்திருந்த ஆண்கள், மணிக்கொரு முறை கும்பல் கும்பலாக உரியடிக்கச்க் செல்வது போல்அவரவர் கைகளில் ஒரு அரை லிட்டர் கோப்பையுடன் காப்பி, டீ, சூப் என்று வித விதமாய் போட்டுத்தாக்கச் செல்வது என எல்லாமே ஒரு வித இனம்புரியாத உணர்வுகளை, அதிர்வுகளை என்னுள் செருகிகொண்டே இருந்தன. இதில் மிகப்பெரிய கூத்து என்னவென்றால், அங்கே போன புதிதில், என்னடா நாம "30 நாளில் ஹிந்தி கற்க" என்ற பதினைந்து ரூபாய் புத்தகத்தை வாங்கி படித்த ஹிந்தியும் இவங்க பேசுற ஹிந்தியும் இவ்வவளவு வித்தியாசமா இருக்கே, ஒன்னுமே புரிய மாட்டேங்குதேன்னு கொஞ்ச நாளாகவே குழப்பமாக இருந்தது. அப்புறம் தான் தெரிந்தது அவர்கள் பேசுவது ஹிந்தி அல்ல மராத்தி மொழியென்று. என்ன செய்வது, நமக்கு அப்போதிருந்த உலகறிவு அம்புட்டுதேன் சாமீ...!

பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு 'வடாபாவ்' கேட்ட விசாரிப்புகளுக்கு இரண்டு வாரங்களாக மற்ற துறையினருக்கு அளித்த அதே பழைய ரெகார்டையே தேய்த்து முடித்தேன். 'ஓரியென்டேஷன்' முடிந்துவிட்டதை என் மூலம் தெரிந்து கொண்ட அவன் நான் இப்போது சும்மாதான் உட்கார்ந்திருக்கிறேன் என்பதை என் வாயாலேயே வரவழைத்தான். அதில் ஒரு பேரானந்தம் அவனுக்கு. ஆனால் அவன் ரொம்ப நேரமாக  பிசியாகவே இருந்தான்; அவனுடைய பிஸ்கட் பாக்கெட்டுடன். அப்புறம் அறிவுரை வேறு "போய் மேனேஜரை பார்த்து ஏதாவதொரு ப்ராஜெக்ட்ல சேர்க்கசொல்லி கேளு, இங்கே கேக்காம ஒன்னுமே நடக்காது" என்று. என்னடா பாசக்கார பார்ட்டியா இருக்கேன்னு நமக்கும் கொஞ்சம் சந்தோஷம் தான். என்ன.., இந்தா! ஒரு பிஸ்கட் எடுத்துக்கோன்னு ஒரு வார்த்தை கூட சொல்லல பயபுள்ள, அதுதான் மனசுக்கு கொஞ்சம் சங்கடமாய்  இருந்தது. இருந்தாலும் அவன் சொல் கேட்டு, அங்கேதான் 'ஆப்புக்கு' அஸ்திவாரமடிக்கப்படுகிறது என்று தெரியாமலே ஆவென்று பிளந்த வாயுடன்  பாஸ்'ஐ அணுகினேன்.

அப்படியா! அவ்வளவு ஆர்வமா மவராசா...! என்று கேட்காத குறையாக "நமக்கொரு அடிமை சிக்கிட்டாண்டா" என்கிற தோரணையில் ஒரு நமட்டுச் சிரிப்புடன், இதோ ஒரு பத்து நிமிடம் கழித்து வாருங்கள் என்று சொல்லி அனுப்பிவிட்டார்.  மறுபடியும் இடத்திற்கே வந்து அமர்ந்தேன். சுர்ர்ர்ர்ர்ர்ர்.... ஒன்றுமில்லை, நம்ம கடின உழைப்பாளி 'வடாபாவ்' தான் சும்மாவே உட்கார்ந்திருந்த களைப்பு நீங்க இப்போது சூப்'ஐ அரை லிட்டர் கோப்பையில் தளும்ப, தளும்ப நிரப்பி அதில் நீந்திக் கொண்டிருந்தான். பத்து நிமிடங்களுக்கு பிறகு புறப்பட தயாரான போது, "எதாவது ப்ரொஜெக்ட்ல போட சொல்லி போர்ஸ் பண்ணி கேளு", மறுபடியும் உழைப்பாளியின் அறிவுரை.

எதிரில் இருந்த இருக்கையில் அமரச் சொல்லிவிட்டு, அமர்ந்தவுடன், சில பல அக்கறை செறிந்த வார்த்தைகளுடன் தொடங்கிய மேனேஜர், பின்னர், "உங்களுக்கு ஒரு பெரிய 'ஓரியென்டேஷன்' ப்ரோக்ராமே தயாராக வைத்திருக்கிறேன்" என்று காதில் உறுமி அடித்தார். போச்சுடா! மறுபடியுமா...! இப்பத்தானே சந்து சந்தா ராப்பிச்சைக்காரன் மாதிரி சுத்தி வந்தோம்..! சும்மா இருந்தவன இப்படி சொறி சொறின்னு சொறிஞ்சிவுட்டானே அந்த "வடாபாவ்". நான் ஓரியென்டஷன்'ஐ கம்ப்ளீட் பண்ணிட்டேன்னு சொல்லியதற்கு, "அது இன்-ஹவுஸ் ஓரியென்டேஷன், ஜஸ்ட் எ பார்மாலிட்டி, இது 'பேக்டரி ஓரியென்டேஷன்' உங்கள் டெக்னிகல் கேபப்ளிட்டி'ஐ என்ரிச் பண்ணுவதற்கு" நீட்டி முழக்கினார் தலைவர். பின்னர் "இதுல உங்களுக்கு தேவையான எல்லா விபரங்களும் இருக்கு" என்று ஒரு பைல்'ஐ நீட்டி, "நாளை மறு நாள் "புஷ்பக் எக்ஸ்பிரஸ்"ல டிக்கெட் புக் பண்ண சொல்லிட்டேன், உங்க டிக்கட்டை ஈவ்னிங் அட்மின்'ல வாங்கிக்கங்க" என்று முடித்தார். நான் புரியாமல் திருதிருவென்று விழிப்பதை பார்த்து பின் நீண்டதொரு விளக்கமும் கொடுத்தார். எல்லாம் புரிந்துவிட்டது. முதல் அலுவலகப் பயணம் கான்பூரை நோக்கி என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அடப்பாவிகளா..! தமிழ்நாட்டிலிருந்து வந்து முழுசா ரெண்டு வாரம் கூட ஆகலையே! அதுக்குள்ளயே, எங்கேயோ தண்ணி இல்லாத காட்டுக்கு மூட்டை முடிச்ச கட்ட சொல்றீங்களே, இது எங்கேயாவது அடுக்குமா? என்று எனக்குள்ளயே மிக தைரியமாக, சத்தம் போட்டு கேட்டு விட்டு எழுந்து வந்துவிட்டேன்.

மிக சோகத்துடன் எனது இருக்கைக்கு திரும்பினேன். இப்போது நம்ம "வடாபாவ்" கொஞ்சம் மாறியிருந்தான்; சூப்'பிலிருந்து சிப்ஸ் பாக்கெட்டிற்கு. அகன்ற, விரிந்த சிரிப்புடனான அவனுடைய வரவேற்பும், கிண்டல் பார்வையும் இவனுக்கு ஒரு வேளை நமக்கு நேர்ந்த அந்த மகா கொடுமை தெரிந்திருக்குமோ என்ற ஐயப்பாட்டை எனக்கு ஏற்படுத்தியது. உள்ளே என்ன, என்ன நடந்தது என்று நேரில், அருகில் அமர்ந்து பார்த்ததை போல அப்படியே புட்டு, புட்டு வைத்து "எனக்குத்தான் முன்னாடியே தெரியுமே" என்று கூறி என் ஐயப்பாட்டை நிஜமென்று உறுதியும் செய்தான். "அட நாசமா போறவனே..! உனக்கு நான் என்னடா பாவம் பண்ணேன், என்னை ஏன்டா இப்படி மாட்டிவிட்ட?" என்று மிக அதட்டலாய் கேட்க தோன்றியது, ஆனால் கேட்காமல் ஒரு நெற்றிக்கண் பார்வை மட்டும் பார்த்தேன். அதை ஒரு பொருட்டாகவே கருதாமல் தன் கருமமே கண்ணாய் சிப்ஸ் பாக்கெட்டுக்குள் கையை விட்டு துழாவி மகிழ்ந்து கொண்டிருந்தான்.  "இவன் என்ன பெரிய இம்சையா இருப்பான் போல இருக்கே, இவனுக்கு ஏதாவது நல்லதா, நம்மள ரொம்ப நாள் நெனச்சிட்ருக்க மாதிரி ஏதாவது பண்ணனுமே" என்று ஓர் தீர்மானத்துக்கு வந்தேன். ஆனால் அந்த தீர்மானம் "மகளிர் மசோதா" மாதிரி நிறைவேராமலேயே போய்விட்டது.

கடைசி வரை இந்தப் பயணம் தள்ளிப் போகாதா என்ற என் நப்பாசை நிராசையாகவே, பொல, பொலவென்று புலர்ந்த ஒரு மந்தகாச காலையில் கான்பூரை அடைந்தேன். எல்லா இந்திய நகரங்களின் ரயில் நிலையத்தின் அதே மிகச்சிறந்த தோற்றப் பொலிவுடனேயும், நறுமணத்துடனேயும் எனது கண்களை சுருங்கச்செய்தும், முழுமையாக மூக்கை அடைக்கச் செய்தும் வரவேற்றது கான்பூர். வெறும் பத்து நாளில் பதினைந்து ரூபாய் கொடுத்து வாங்கிய புத்தகத்திலிருந்து பெருக்கிய ஹிந்தி அறிவு ஒன்றுக்குமே உதவாது என்பதை முதலில் உணர்த்திய சம்பவம் அங்கேதான் நடந்தது.
அதை அடுத்த பகுதியில் பதிகிறேன்.

--விளையாடும் வெண்ணிலா....

ஞாயிறு, 5 டிசம்பர், 2010

தலைகுனிவு...!

இதமானதொரு காலை பொழுது. 'Itaewon' செல்வதற்காக காத்திருந்தேன் 'Dongdaemun' சப்வே ரயில் நிலையத்தில். இங்கும் அங்குமாய், குறுக்கும் நெடுக்குமாய், இடதும் வலதுமாய், அணைப்பும் விலகலுமாய், தோழமையும் அந்நியமுமாய், நிசப்தமும் சப்தமுமாய், இளமையும் முதுமையுமாய் என மக்கள் கூட்டம் மொய்த்து கொண்டிருந்த பரபரப்பானதொரு ஞாயிறு. ஆம், இங்கே வாழ்க்கை முறை சற்று வித்தியாசமானது தான். வார இறுதி நாட்கள் நம்மை போல சியோல்(Seoul) வாழ் கொரியர்களுக்கும் பேரின்பமானதே, ஆனால் நம்மைபோல் வீட்டில் ஓய்வாக செலவிட அல்ல, குடும்பத்துடன் வெளியே சென்று பொழுதை இனிமையாய் கழிக்க. 


பக்கத்தில் எனதருகே நின்றிருந்த கொரிய இளஞ்ஜோடி தன்னை மறந்து காதல் இன்பத்தில் லயித்திருந்தது அவர்களின் அதீத அணைப்பிலும், பரஸ்பர முத்தங்களிலும் பளிச்சென்று தெரிந்தது. காதல் அவர்களை தம்நிலை மட்டும் மறக்க செய்யவில்லை, அவர்களின் அருகிலயே மூத்த குடிமக்களும், சிறு குழந்தைகளும் நிற்கிறார்கள், அவர்கள் முன் இப்படி நடந்து கொள்வது முறையல்ல என்ற எண்ணத்தையும் தான் மறக்கச் செய்திருந்தது. மேற்கத்திய அமெரிக்க கலாசாரத்தை முழுமையாக பருக நினைக்கும் கொரிய இளம் சமுதாயமும், பொருளாதார வளர்ச்சியை மேற்கின் தாக்கத்தினாலேயே வெளிப்படுத்தத் முடியும் என்னும் ஆள்வோர் எண்ணத்தினாலும் கொரியர்கள் தங்களின் மேலான கலாச்சார அடையாளங்களை வெகு விரைவில் இழந்து வருகிறார்கள் என்ற கூற்று பல தருணங்களில் உண்மை என்றே தோன்றுகிறது. கொரியர்கள் அசுர பொருளாதார வளர்ச்சிக்கு கொடுத்த விலை தங்கள் கலாச்சாரம் என்பதை நினைக்கும்போது, இந்தியாவின் தற்போதைய வளர்ச்சியும், நிலையும் கூட கலாச்சார தடம்புரள்வை தவிர்க்க இயலாது என்றே நமக்கு தோன்றுகிறது. ஒரே ஆறுதல், அது அத்தனை விரைவாகவும், ஆழமாகவும், முழு வீச்சுடனும் இருக்காது என்று நாம் கொண்டிருக்கும் விருப்பமும், நம்பிக்கையும் தான்.    



இத்தனை பரபரப்பான மனிதர்களுக்கு நடுவே, எனது பார்வையும், கவனமும் அங்கே எனது வலது புறத்தில் இருக்கும் படிக்கட்டுகளில், தலையை குனிந்த படியே அமர்ந்திருந்த ஒரு மனிதரின் மேல் நங்கூரமிட்டது. நேர்த்தியான உடை, முடியை மூடி மறைத்த தொப்பி, காலணி என்று அனைத்திலும் ஒரு கொரியரின் அடையாளங்களாய் அம்மனிதர். வயது ஏறக்குரைய 50 களின் இறுதியில் இருக்கலாம்; ஒரு அனுமானமே, ஏனெனில் கொரியர்களை நேரில் பார்த்து வயதை சரியாக கூற முயல்வதே கடினமான ஒன்று, அதுவும் ஒருவரின் முகத்தை பார்க்காமல், வெறும் அமர்ந்திருக்கும் நிலையை வைத்து மட்டும் கணித்து கூறுவது முற்றிலும் சிரமமே. வாழ்க்கை முறையும், உணவு பழக்கவழக்கமும் அவர்களை எப்போதும் இளமையாகவே வைத்திருக்கும் காரணிகளாகும். அதிக ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழும் (Life Expectancy) மக்களின் பட்டியலில் கொரியர்கள் உலகில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்கள் என்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. 


அங்கே நின்றிருந்த யாரும் அவரை கவனித்த மாதிரி தெரியவில்லை, அவரும் யாரையும் நிமிர்ந்து பார்க்கவுமில்லை. காலையிலேயே குடித்துவிட்டு வந்து அமர்ந்திருப்பாரோ?, இல்லை, முதுமையின் வலி தாளாமல் அமர்ந்த நிலையிலேயே தூங்கி விட்டாரோ? அல்லது ஒரு வேளை மயக்கமடைந்து விழுந்து விட்டாரோ? என் மனதில் கேள்வி மேல் கேள்வி எழுந்து கொண்டே இருந்தது. மிக மெல்லிய உடலசைவுகளே அவர் உயிரோடுதான் இருக்கிறார் என்பதை உறுதிபடுத்தி கொண்டிருந்தது. பின் எனது கவனம் ரயிலை நோக்கித் திரும்பியது. 

சில நிமிடங்களுக்கு பிறகு அவரின் ஞாபகம் வந்து அவரை நோக்கினேன். அட, அவர் தூக்கத்திலோ, மயக்கத்திலோ இல்லை. அருகில் இருந்த தனது கைப்பையை இழுத்து எதையோ எடுத்துவிட்டு மீண்டும் அதை தமதருகிலே வைத்துக்கொண்டார்; ஆனாலும், தலை குனிந்தே இருந்தது. இதற்கிடையே நான் காத்திருந்த ரயில் வரவே நான் ஏறத் தயாரானேன். கடைசியாக, எதுவோ என்னை அவரை மீண்டும் ஒரு முறை பார்க்கத் தூண்டியது. பார்த்தேன், கூட்டம் ரயிலை நோக்கி சூழ்ந்திருந்ததால் அவர் இப்போது மிகத்தெளிவாய் தெரிந்தார் (தலை குனிந்தே). ஒரு ரயில் பயணி அவர் முன் நின்று தன் பையிலிருந்து எதையோ எடுத்தார். நீலநிற கொரிய பணம் '1000 Won'. (கொரியாவின் பணமதிப்பு நிறங்களில் வேறுபட்டது). அந்தப்பயணி அப்பெரியவரை நோக்கி குனிந்த போதுதான் முன்னே ஒரு தட்டு இருப்பதை நான் பார்த்தேன், அதிர்ந்தேன். அவர் ஒரு 'பிச்சைக்காரர்'. கொரியாவில், சியோலில் நான் பார்த்த முதல்'பிச்சைக்காரர்'. அந்தப்பயணி பணத்தை அவரின் பிச்சை பாத்திரத்தில் போட்ட போதும், பின்பு நகர்ந்த போதும் கூட அவரின் தலை குனிந்தே இருந்தது. 

உடன் வந்த நண்பரும் இதை கவனித்தே வந்தார். பின் நாங்கள் தொடர்ந்த பயணத்தில், அந்தபெரியவரின் குனிந்த தலையும், அவருடைய அமர்ந்த நிலையும் என்னை அமைதியாக இருக்க விடவேயில்லை. பிச்சையெடுப்பதை எந்த அளவுக்கு கேவலமாக, அவமானமாக கருதியிருந்தால் வெட்கி தலை குனிந்தே அமர்ந்திருப்பார் அவர்.  "தன்னிலை வருந்தத்தக்கதே, அதன் வருத்தத்தையும் மீறியது தன் மனம் தன்னை கேட்கும் கேள்விகளும், செய்யும் கேலிகளும் தான்" என்று அவர் சொல்வதாகவே இருந்தது எனக்கு அவரின் தலைகுனிவு. என் இந்தியாவில் 'பிச்சை' என்பது ஒரு பெருங்கூட்டத்தின் தினசரி தொழிலாக இருப்பது என் மனக்கண்ணில் நிழலாய்......

(படம் தந்த கூகுள்'க்கு நன்றி)
--விளையாடும் வெண்ணிலா....

சனி, 27 நவம்பர், 2010

எங்கே போகிறது எனது தேசம்......!!! (பகுதி-2)



வேண்டும்! மீண்டும் ஒரு புரட்சி....!

உலகின் வேறெந்த மூலையிலும் நடக்காத அக்கிரமங்கள் ஜனநாயகம் என்னும் பெயரில் இங்கே அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஆனால் நமது தேசம் இன்னும் ஜாதி, மதம், மொழி, மாநிலம், நதிநீர் என்று பல்வேறு பிரிவினையை தூண்டும் காரணிகளுக்கு
முக்கியத்துவம் கொடுக்கும் அரசியல்வாதிகளின் அலங்காரப்பேச்சிற்கும், அற்ப இலவசங்களுக்கும் அடிமைகளாய் வாழ்வதையே சிரமேற்கொண்டு செய்து வருகிறது. போர்க்குணம் இல்லாத ஏற்றுக்கொண்டு வாழப்பழகிவிட்ட ஒரு மோசமான தன்மையும், ஊர் பற்றி எறியும்போது, 'நல்லவேளை என் வீட்டிற்கெந்த கேடுமில்லை' என்று நினைக்கும் சுயநலத்தன்மைக்கும், கடும் தண்டனை நம்மைப்போல பொது ஜனத்திற்கும் கொடுக்கப்பட வேண்டும். இல்லையெனில், நம் பாக்கெட்டிலிருந்து 100 ருபாய் திருடிய ஜேப்படி திருடனை கண்டிக்கும் போக்கில் கூட இந்த விஷயங்களை கருதாத இந்தியாவின் தற்போதைய அசட்டுத்தனத்தை என்னவென்றுறைப்பது. 

இந்நாட்டில் எல்லா வளங்களும், நலன்களுமிருந்தும் படித்த எம்மிளைஞர்கள் (தொழிலாளர்களாய்) நாட்டை விட்டும், குடும்பத்தை, சொந்தபந்தங்களை எல்லாம் விட்டும் பணம் சம்பாதிப்பதற்காக இன்றும் வெளிநாட்டிற்கு சென்று (என்னதான் உயரிய வாழ்க்கைமுறையை அனுபவித்தாலும்) இரண்டாந்தர குடிமக்களாக, நவீன உலகின் அனாதைகளாக அலைந்து கொண்டிருப்பதெல்லாம் இவர்களைப்போல ஆக்கச்சிந்தனையில்லாத  அரசியல்வாதிகளின் கைகளினால் எம்நாடு சீரழிக்கப்படுவதினால்தான். இவர்கள் தாங்கள் மனிதர்களாக கருதப்படுவதற்கான எஞ்சியிருந்த கடைசி காரணத்தையும் இழந்துவிட்டார்கள். பிரதமர் 'மன்மோகன் சிங்' ஒருமுறை கூறுகிறார், "யார் மந்திரி ஆகலாம் யார் ஆகா கூடாது என்று தீர்மானிக்க ஒரு சட்டம் வர வேண்டும்". இதுதான் இந்தியாவின் மோசமான தலையெழுத்தும், விதியும் ஆகும். யார் செய்ய வேண்டுமோ அவர்கள் பல காலங்களாக சொல்வதைத்தவிர வேறு எதையுமே செய்வதில்லை. 


இந்திய அரசியலமிப்பின் சில மிக இளகிய கோட்பாடுகளையும், அர்த்தமற்ற சில மரபுகளையும் செவிட்டிலரைந்தார்போல் மிக வன்மையாக உணர்த்திச்சென்ற படிப்பினைகளை பிட்டத்திர்கடியில் போட்டமர்ந்து, அதன் அவசியத்தை மறந்து ஒரு வித மயக்க நிலையிலேயே நாம் லயித்திருப்பதன் விளைவுகளே இந்த ஊழல் சங்கிலிதொடருக்கான மூலமாகும். தாய், தந்தை, மொழி, நிறம் என்று இன்னும் பலவற்றையும் நாம் நமது விருப்பத்திற்கேற்ப தேர்ந்தெடுக்கும் உரிமை நமக்கில்லை. ஆனால் நம்மையும் நம் நாட்டையும் வழி நடத்த போகும் நம்முடைய பிரதிநிதியாக ஒருவரை தேர்ந்தெடுக்கும் பெரிய கடமையும் பெருமையும் உரிமையாக நம் கைகளில் உள்ளது. அதை முறையாக பயன்படுத்தி இந்த மாதிரி கொள்ளை கும்பல்களிடமிருந்து நாட்டிற்கு மறு விடுதலை வாங்கித்தர வேண்டியது நம் ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும். ஆனால், இன்று பல படித்த இந்திய 'மேதைகள்' வாக்களிக்கும்உரிமையை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. அவர்கள் எண்ணமெல்லாம் தாங்கள் பிரதிநிதயாக தேர்ந்தெடுக்க கொடுக்கப்படும் வாய்ப்பே கொலைகாரனுக்கும் கொள்ளைக்காரனுக்கும் இடையேதானே, அதற்கு வாக்களிக்காமலேயே இருந்துவிடுவது எவ்வளவோ மேல் என்று. படிக்காத பாமரனோ ஐந்துக்கும் பத்துக்கும் ஆசைப்பட்டு தனது தார்மீக உரிமைக்கு  அந்த ஐந்து,பத்து ரூபாய்க்கு மேல் முக்கியத்துவம் கொடுப்பதுவுமில்லை. இவர்களின் ஆழ்மனதில் படிந்திருக்கும் எண்ணங்கள் களையப்பட  வேண்டுமெனில் அவை தேர்தல் விதிமுறைகள், அரசியல் மற்றும் சட்ட ஒழுங்கு முறைகளில் நாம் பழமையை உறுதியாக பற்றிகொண்டிருப்பதை விடுத்து, தற்கால நடைமுறைக்கு ஏற்ற வகையில் சீர்த்திருத்தங்களை கொண்டுவந்து திருத்துவதன் மூலமே சாத்தியமாகும். இந்திய அரசியலமைப்பு சட்டங்களின் பல புனிதத்தன்மையான கொள்கைகளை யாரும் இங்கே குறை சொல்ல வரவில்லை. அந்த கொள்கைகளும் கோட்பாடுகளும் ஓரளவிற்காகவாவது  எதற்காகவும், யாருக்காகவும் உருவாக்கப்பட்டதோ அவர்களை சென்றடைய வேண்டுமென்பதே எமது ஏக்கமாகும். மேலும், யார் அதை பொறுப்புடன் கடைப்பிடித்து அதனுடைய உண்மைதன்மையையும் உறுதித்தன்மையையும் நிலைநாட்ட வேண்டுமோ அவர்களை மக்களுக்கு அடையாளம்  காட்டுவதிலேயும் அவர்களை தேர்ந்தெடுக்க இருக்கின்ற முறைகளிலேயும் சீர்திருத்தங்கள் மிக ஆழமாகவும் பலமிக்கதாகவும் உருவாக்கப்படவேண்டும் என்பதே இங்கு வாதம். அந்த சீர்திருத்தங்கள் மக்களின் மனதில் அரசியலின் மீதும் அரசாங்கத்தின் மீதும் நம்பகத்தன்மையை அதிகரிக்கச்செய்யும் விதத்தில் பொது வாழ்க்கையில் தூய்மையை உறுதிப்படுத்த வேண்டும்.அவைப்போன்ற சீர்த்திருத்தங்கள் மாத்திரமே சுரண்டப்பட்டு சுரண்டப்பட்டு, ஏமாற்றங்களே எஞ்சி நிற்க்கும், ஓய்ந்து சோர்ந்துபோன இந்தியாவையும், இந்திய மக்களையும் இந்த கண்ணியமற்ற  அரசியல் தலைவர்களிடமிருந்தும், அதிகரிகளிடமிருந்தும் காப்பாற்றும். அந்த நல்ல சீர்திருத்தங்கள் மலர வேண்டுமானால் அது ஒரு வீரியமிக்க படையின் தன்னலமற்ற, தளர்ச்சியற்ற தாகத்தினாலுண்டான ஒரு புரட்சியாலேயே ஏற்படுமென்பது திண்ணியம். வீதிக்கு வந்துதான் அதற்கு வித்திட வேண்டுமென்பதுமில்லை. கட்சி, மதம், மொழி, இனம் என்று எந்த பாகுபாடின்றி யார் இந்த மாற்றங்களை, சீர்திருத்தங்களை நமக்கு உறுதி செய்கிறார்களோ, அவர்களுக்குத்தான் நமது ஆதரவும், வாக்கும் என்று நாம் ஒரு கொள்கையுடன் நமது அரசியல்வாதிகளை எதிர்கொள்ள வேண்டும். இந்த தருணம் நாம் அவர்களுக்கு கற்றுகொடுக்க வேண்டிய தருணமாகும். 

காலம் காலமாக வஞ்சிக்கப்பட்டு கொண்ட இருக்கும் நாம் ஒரு முறை ஒருங்கிணைந்து வீறு கொண்டு எழுந்ததினாலேயே 1947 ல் ஒரு மாபெரும் புரட்சியின் முடிவாய் விடுதலையடைந்தோம். அதன் பின் எமது தேசம் இதுவரை ஒரு தேசத்தின் ஓட்டு மொத்த எழுச்சியை பல தருணங்களில் பதிய தவறியதாலேயே இன்று நமக்குள்ளேயே ஒரு கூட்டம் நம்மை அடிமைகளாக்கி ஆண்டு வருகிறது. இதோ எனது இணைய நண்பர் ஒருவரின் ஒப்பற்ற வரிகளை உற்று கவனிப்போம்.  ஆம்.. அதற்க்கான தருணம் வந்துவிட்டது. 

புறப்படு...! புரட்சியை கையிலெடு...!
உன்னாலே ஒரு மாற்றம் உண்டாகட்டும்...!
இனி வரும் உன் இந்தியச்சந்ததிக்காக ...!


நண்பர்களே....! 
இதோ இந்த எனது கன்னிப்பதிவை கருவாக்கி வெளியிடும் வெறும் இரண்டு நாள் இடைவெளிக்குள்ளாகவே இந்தியாவில் இன்னும் ஒரு அதிர்ச்சி தரும் ஊழல் குற்றச்சாட்டு; அதுவும், தேசத்தின் ஏழை, எளிய, மத்தியதர மக்களின் மிகப்பெரிய நன்மதிப்பை பெற்றுள்ளதும், நாடிதுடிப்பென்று கருதப்படுவதுமான  "Life Insurance Corporation of India" விலிருந்து.  

எம்முண்டாசு கவி பாடிச்சென்ற வரிகள் ஈட்டியாய் நம் மனதில் 
நெஞ்சு பொறுக்குதில்லையே..!
இந்த நிலை கெட்ட மாந்தரை நினைத்து விட்டால்...!




(படம் தந்த கூகுள்'க்கு நன்றி) 
--விளையாடும் வெண்ணிலா....

வியாழன், 25 நவம்பர், 2010

எங்கே போகிறது எனது தேசம்......!!! (பகுதி-1)


உலகம் சிரிக்கும் ஜனநாயக கூத்துகள் 


சங்கிலித்தொடராய்  ஊழல் குற்றச்சாட்டுகள். வெகு குறுகிய காலத்தில் இந்தியாவின் அவலங்களையும் அசிங்கங்களையும் உலகுக்கு போட்டி போட்டுக்கொண்டு அரங்கேற்றி காட்டுகிறார்கள் நமது அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் வெட்கமின்றி. 2G அலைக்கற்றை ஒதுக்கிய முறையில், காமன்வெல்த்  போட்டிக்கான ஏற்பாடுகளில், 'ஆதர்ஷ் குடியிருப்பு' நிலத்தில் தொடங்கி ஒதுக்கீடுகள் வரை, கர்நாடக முதல்மந்திரியின் மீது அரசின் நிலத்தை மோசடி செய்ததாக, நாட்டின் உயரிய பொதுத்துறை நிறுவனமான 'டாட்டா குழுமத் தலைவர்' வெளியிட்ட முன்னாள் மத்திய காபினெட் அமைச்சரின் மீதான லஞ்ச குற்றச்சாட்டு, தலைநகர் MCDயின் அலட்சியத்தினால் அறுபத்து மூன்று அப்பாவி உயிர்கள் பலி என்று வரிசையாக நெஞ்சடைக்கும் கொடூரங்கள். அதனை தொடர்ந்து அரங்கேறும் பதவி பறிப்புகள், ராஜினாமாக்கள், பாராளுமன்றம் ஸ்தம்பிப்பு, பிரதமரின் மௌனம் மற்றும் செயலின்மை, அதனை கண்டிக்கும் தோரணையில் உச்ச நீதிமன்றம் என்று வெட்கி தலைகுனிய வேண்டிய நிகழ்வுகள் ஒரு பக்கம், இது எதுவுமே தமக்கு சம்பந்தம் இல்லாத வேற்றுகிரகத்து விஷயங்கள் என்ற தோரணையில், பாவப்பட்ட தன் இந்த நிலைக்கு தான்தான் முழுமுதற் காரணம் என்று என்றோ அறிந்திருந்தும் தன்னிலையை மாற்றியமைக்கும் முயற்சிகளில் கிஞ்சித்தும் ஆர்வம் காட்டாத ஜாதி, மதம், மொழி என்ற வட்டங்களுக்குள் சிக்கி அதன் எதிரொலியாகவே வாழ பழகி கொண்ட பொதுஜனம் மறு பக்கம். நாட்டையே வழி நடத்தும் ஒரு பிரதமமந்திரியின் அசாதாரணமான அமைதியும்,  அநீதிகளை ஏற்று விழுங்கி வாழ பழகிவிட்ட மக்களின் அதீத ஜீரணா சக்தியும், அலட்சியப்போக்கும், பொறுப்பின்மையும் இந்த நாட்டை எங்கே இழுத்து சென்று கொண்டிருக்கின்றன என்ற அபாய கேள்வியை நமக்குள் விதைக்கின்றன. 
'இந்திய ஒலிம்பிக் கமிட்டி' யின் நிரந்தர தலைவர் போன்று பல காலம் அதனுடைய பதவி சுகத்தினை, அதிகாரத்தை முழுவதுமாக அனுபவித்துகொண்டிருக்கும் "சுரேஷ் கல்மாடி", உலகத்தின் பார்வை தேசத்தின் மீது ஆழ்ந்து பதிதிருந்த இந்த காலத்தை மிக நல்ல முறையில் பயன்படுத்தி இந்த மாதிரி சர்வதேச போட்டிகளையும், நிகழ்வுகளையும் வெற்றியுடன் தலைமையேற்று நடத்தி காட்டுவதற்குண்டான வல்லமை பெற்ற நாடென்று நிரூபித்து வெற்றி நடை போட வேண்டிய தருணத்தை இழந்தது மாத்திரமல்லாமல் நாட்டிற்கு தனது கையாலாகத தனத்தாலும், பொறுப்பின்மையாலும்     உலகின் மத்தியில் பெரிய களங்கத்தையும், அவமானத்தையும் ஏற்படுத்தி தந்திருக்கிறார். இதில் சொல்லொணா மனக்குமுறல் யாதெனில், 40௦ சதவிகிதத்திற்கும் மேலான வறுமை கோட்டுக்கு கீழே உழலும் மக்களை கொண்ட ௦ஏழை நாடென்று உலகால் அடைக்குறியிலிடபடுகிற இந்தியா, சுமார் 30000 கோடி ருபாய் (ஊடகங்களின் செய்தி) செலவு செய்து இந்த களங்கத்தையும் அவப்பேரையும் பெற்றுள்ளது தான். 

அதுவும் உலகமஹா ஊழல் என்ற அடைமொழியை தாங்கிகொண்டிருக்கும் இந்த '2G அலைக்கற்றை" ஊழல் இந்தியாவின் ஜனநாயக அரசியலின் வெட்கக்கேடான தற்கால உண்மை நிலையை கூறு போட்டு காட்டிவிட்டது. வறுமைக்கோட்டுக்கு கீழே உழன்று கொண்டிருக்கும் ஒரு சாமானிய இந்தியன், அரசுக்கு இழப்பு ஏற்ப்பட்டிருப்பதாக "CAG" சமர்பித்த அறிக்கையின் அர்த்தங்களும், அது குறிப்பிட்டிருக்கும் தொகையான "ஒரு லட்சத்து எழுபத்து ஆறாயிரம் கோடி ரூபாயின்" மதிப்பையும், அதன் இழப்பின் வீரியத்தையும் அறிய இன்னும் பல வருடங்கள் பிடிக்கலாம்; ஏன், அவனறிவுக்கு எப்பவுமே எட்டாமல் கூட போகலாம். அன்றாடம் தனது பசி நெருப்பை அணைக்க வயிற்றில் ஈரத்துணி கட்டிக்கொண்டிருக்கும் அவனுக்கு இதன் மூகாந்திரமும், முடிவுரை எழுதப்படாமலேயே காணாமல் போகப்போகும் ஒரு வரலாற்று கொடூரமும் அவனுடைய சில நூறு ரூபாய்க்கான போராட்ட வாழ்க்கைக்கு முன் ஒன்றுக்கும் உதவாத விஷயங்களே. 
ஊழலுக்கு மூல காரணமாக குற்றம்சாட்டப்படுகிற அ. ராசா கூறுகிறார், "எனக்கு முந்தைய ஆட்சியில் என்ன முறை கடைபிடிக்கப்பட்டு அலைகற்றை ஒதுக்கீடுகள் கடந்த காலங்களில் வழங்கப்பட்டதோ அதே முறையைத்தான் நானும் பின்பற்றினேன்" என்று. இவரின் பாட்டனும், முப்பாட்டனும் கோவணத்தை தவிர வேறு ஒன்றையும் அணிந்திருப்பரில்லையே. இவரும் அதே பழைய உடைகளில் வலம் வர வேண்டியது தானே..! இதைசொல்ல ஒரு மந்திரி (இப்போது முன்னாள்). யாரை ஏமாற்ற இப்படிப்பட்ட வார்த்தைகளை உதிர்க்கிறார் இந்த கபடதாரி. இவரின் கட்சித்தலைவர் எல்லாவற்றுக்கும் ஒரு படி மேலே போய் "தலைமை கணக்காயர்" கட்டுக்கட்டாக பாராளுமன்றத்தில் சமர்பித்த அறிக்கைகளை தனக்கே உரிய பாணியில் கிண்டலுடன் "இந்தத்துறை இதுவரை எல்லா பிரதமர்களுக்கும், முதல்வர்களுக்கும் எதிராகவே அறிக்கைகள் வழங்கியிருக்கிறது" என்கிறார். அதில் என்ன ஆச்சரியம் முதல்வரே..! இதுவரை வந்தவர்கள், ஆண்டவர்கள், ஆளுகிறவர்கள் மிகச்சிலரை தவிர யாவருமே சுரண்டுவதில் கில்லாடிகள் என்றுதான் மக்களுக்கே தெரியுமே..! இவ்வளவு நடந்த பிறகும், நாட்டின் பணம் இவ்வளவு நஷ்டமடைந்த பிறகும், இவர் கொஞ்சம் கூட நாட்டின் மீது அக்கறையின்றி பேசுவதை கண்டு எம் நெஞ்சு துடிக்கிறது. ஒரு அன்பர் தமது வலையில் இப்படி பதிகிறார்,   

"அவரிடமிருந்து நேர்மையும், கண்ணியத்தையும், நாட்டுப்பற்றையும் இந்த வயதில் கூட எதிர்பார்க்க முடியவில்லை என்றால் இவை என்றுமே அவரிடம் இருந்ததில்லை என்பது மேலும் உறுதியாகிறது. இனிமேலும் இவற்றை நாம் இவரிடம் எதிர்பார்க்க முடியாது"

'விஸ்வாமித்திரர்' என்கிற பெயரில் அவர் "2G ஸ்பெக்டரும் " பற்றி இட்டுள்ள இடுகைப்பதிவுகளில் மிகவும் அதிர்ச்சியளிக்ககூடிய, பல நம்ப முடியாத விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். ஊடக உலகத்தின் மிகப்பிரபலமான "பர்க்ஹா தத்", "வீர் சிங்க்வி" போன்றவர்களையும் இந்த விவகாரத்தில் சம்பந்தப்படுத்தி அவர் கூறும் கூற்றுக்கள் நம்மை பீதியில் உறைய வைக்கின்றன. ஒருவேளை அவை நம்பகத்திற்கு அப்பாற்பட்ட செய்திகளாக இருக்கும்பட்சத்திலும், என்னதான் நாம் நமது அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் அடிக்கும் கூத்துக்களிலிருந்தும், வெட்கக்கேடான செயல்களிலிருந்தும் எந்த அசிங்கமான எல்லைக்கு வேண்டுமானாலும் போக எத்தனித்தவர்கள் என்று தெரிந்திருந்தாலும், திரு.விஸ்வாமித்திரரின் பதிவுகளை, இவர்கள் நமது கற்பனா சக்திக்கும் அப்பாற்பட்ட ஒரு எல்லைக்கோட்டையும் தொடக்கூடுமென்ற ஒரு முன்னுரையை நமக்கு கோடிட்டு காட்டும் எச்சரிக்கை மணியோசையாகவும் எடுத்துக்கொள்ளலாம்.  இதோ அந்த பதிவுகளை நோக்க இந்த இணைப்பை சுட்டவும்..

இதன் ஆசிரியர், "CWG மற்றும் ஆதர்ஷ்" ஊழல்களைப்பற்றி ஒன்றுமே எழுதாததும் மற்றும் "உதய சூரியன்" குடும்பத்தை அக்கு வேறு ஆணி வேரோக பிரித்து மேயந்திருப்பதும், நமக்கு முறையே ஆச்சரியத்தையும், சில நேரடி சிந்தனைத் தயக்கங்களையும்   ஏற்படுத்துவதென்னவோ உண்மை. 
இந்த இரண்டு ஊழல்களும், உலகத்தின் கேலிப்பார்வையை இந்தியாவின் மீது மீண்டும் ஒரு முறை அழுத்தமாய் கசிய விட்டு வேடிக்கை பார்த்திருந்தாலும் இந்த 'ஆதர்ஷ் நிலம் மற்றும் அதன் அடுக்குமாடி குடியிருப்பின் ஒதுக்கீட்டில்' அந்த மாநிலத்தின் ஆளும் முதல்வரும், இரண்டு முன்னாள் முதல்வர்களும், முன்னாள் இராணுவ ஜெனரலும் குற்றம் சாட்டப்பட்டிருப்பது  நமது இதயத்தில் இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் நம்மிடமிருந்து பறித்துச்செல்கிறது. இவை அடங்கும் முன்பே கர்நாடக முதல்வர் ஒரு நில மோசடியில் சிக்கி நம்மை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறார்.


'ஹாங்காங்'ஐ சேர்ந்த "Political & Economic Risk" எனும் கன்சல்டன்சி 2007ல் ஒரு அறிக்கையில் "இந்தியாவின் நிர்வாக கட்டுப்பாடுகள் ஆசியாவிலேயே மிகவும் குறைவான ஆற்றல் கொண்டது, நாட்டின் அரசு அலுவலர்களுடன் பணி புரிவது மிக மிக கடினம்" என்று வெளியிட்டிருக்கிறது. இதுவே இவர்கள் நாட்டிற்கு உலகளவில் எந்த மாதிரி  பெயரை பெற்றுத்தருகிறார்கள் என்பதற்கு பல கோடி உதாரணங்களில் ஒன்றாகும். இவர்களை போல நாட்டின் மீதும் நாட்டு மக்களின் மீதும் துளியும் அக்கறை இல்லாத அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் கழுவிலேற்றி பொது மக்களின் முன்னிலையில் நிறுத்தி அணு அணுவாக சித்திரவதை செய்து கொல்ல வேண்டும். 



(படம் தந்த கூகுள்'க்கு நன்றி)
--விளையாடும் வெண்ணிலா....