சனி, 12 மார்ச், 2011

நடுநிசியில் ஓர்நாள்...!

அன்று இரவும் அப்படி ஒரு இனிய இரவாகவே கரைந்து கொண்டிருந்தது. எனக்கு மிகவும் பிடித்த 'சுரபி' நிகழ்ச்சியை ரசித்து பார்த்து கொண்டிருந்தேன். தொலைக்காட்சியில் ஊடுருவி தொலைந்து விடும் ரகமில்லை. சில.....மிகச் சில நிகழ்சிகளை தொடரும் ரகம் நான். அவற்றில் அனைத்திலும் முதன்மையானது 'சுரபி'. பூகோளத்திலும், பரந்துபட்ட நம் தேசத்தின் பலவேறு தொன்மையான, உன்னதமான கலாச்சாரங்களை பற்றி அறிந்து கொள்ளும் தாகமும், எங்கோ தொலைவில் வாழும் நம் சகோதரனின் வாழ்க்கை முறையை அறிந்து கொள்ளும் முனைப்பும், என்னை அந்நிகழ்ச்சியின் தீவிர ரசிகனாகவே மாற்றின.  இவை மட்டுமின்றி,  வயலின் மேதை 'சுப்ரமணியத்தின்' இசை, தொகுப்பாளர்கள் ரேணுகா, சித்தார்த் இவர்களுடைய நிகழ்ச்சி தொகுக்கும் பாங்கு, நிகழ்ச்சியின் இறுதியில் வரும் கேள்வி-பதில் பகுதி என அனைத்தும் என்னையும் என் குடும்பத்தினரையும் தொலைக்காட்சி முன் கட்டிப் போட்டு விடும். எல்லாவற்றுக்கும் மேலாக, ரேணுகாவின் அந்த மயக்கும் சிரிப்புக்கு நான் அடிமை என்றால் அது மிகைப்படுத்துதல் இல்லை என்பேன் ஆணித்தரமாக...!

நிகழ்ச்சி முடிந்ததும் அனைவரும் ஒவ்வொருவராக தத்தமது அறைக்கு செல்லத் தொடங்கினர்.  தம்ளரில் பாலை கொடுத்துவிட்டு, சீக்கிரம் படுக்கைக்குச் செல்லுமாறு தாய் அதட்டல் தொனியில் அன்பாக சொல்லிவிட்டு சென்றார். 'அனுபம் கெர்' தொகுத்து வழங்கிய 'Mr.கோல்ட்' நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அனைவரின் அறை விளக்குகளும் அணைக்கப்பட்டு, உரையாடல்கள் குறைந்து நிசப்தம் பரவவே, நான் தொலைகாட்சி சத்தத்தை குறைத்து வைத்து நிகழ்ச்சியை ரசித்துக் கொண்டிருந்தேன். மெல்ல, மெல்ல தூக்கம் கண்களை ஆக்கிரமிக்க தொடங்கி பின்னர் முழுவதுமாக என்னை ஆளத் தொடங்கியது.  தம்ளரில் இருந்த ஏலக்காய் வாசம் வீசும் பாலை பருகினேன். தொலைக்காட்சியை அணைத்துவிட்டு எனதறைக்கு வந்து சிறிது தண்ணீர் பருகிவிட்டு படுக்கையில் சரிந்து அப்படியே தூங்கிப் போனேன்...!


என்ன விடு.......!  என்ன விடு.......!  ஆ....ஆ....ஆ......! 
என்ன விடு.....!  ஆ....ஆ....ஆ......! 

வீல்....வீலென்று ஒரு பெண் அலறும் சத்தம் கேட்கவே துடித்து எழுந்தேன்...! அஜந்தா சுவர் கடிகாரத்தில் மணி முள்ளும் நிமிட முள்ளும் முறையே பனிரெண்டிலும், நான்கிலும் வெளிர் நீல நிற ஜீரோ வாட்ஸ் பல்பின் ஒளியில் பளபளப்பாய் மிண்ணி பின்னிரவின் தீவிரத்தை உணர்த்திக் கொண்டிருந்தன...! கனத்த அமைதி.  வீட்டில் அனைவரும் ஆழ்ந்த நித்திரையில்...!  ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது போலிருந்ததே.....கனவாயிருக்குமோ...?! தூக்க கலக்கத்தில் இருந்தாலும் தொண்டை காய்ந்திருப்பதை உணர முடிந்தது. கட்டிலுக்கு அருகில் மேசை மேலிருந்த கூஜாவில் இருந்து தண்ணீரை பருகினேன். தண்ணீர் தொண்டை வழி நுழைந்து, உணவுக் குழாய் நனைத்து வயிற்றை குளுமைப்படுத்தியது. குழப்பத்துடன் உத்திரத்தை நோக்கியபடியே சிந்தனையில் இருந்தேன். ஏதோ சத்தம் கேட்டதே...! மேலே சுழன்று கொண்டிருந்த மின் விசிறியின் சத்தம் என்னை அதன் மேல் பார்வையை படரச் செய்தது...! 

சர்ர்ராக்க்...சர்ர்ராக்க்க்..

என் படுக்கைக்கு வலது பக்கத்தில் இருந்து வினோத சத்தம் வருவது போல் இருந்தது. என்ன சத்தம் அது...! யாரோ நடந்து செல்வது போல் இருக்கிறதே...

'தொப்..!'   'தொப்.....!'    'தொப்...!'
சர்ர்ராக்க்...சர்ர்ராக்க்க்..

என்ன யாரோ குதித்து ஓடுவது போல் சத்தம் வருகிறதே...?!!

சர்ர்க்...சர்ர்க்...சர்ர்க்...சர்ர்க்...
இப்போது சத்தம் வலுவாகவும், ஒன்றுக்கும் மற்றொன்றுக்குமான இடைவெளி குறைந்தும் ஒலித்தன. கொஞ்சம் நடுக்கமாய் உணர்ந்தேன். திருடனாக இருக்குமோ...மணி பனிரெண்டரை ஆகுதே..இந்தப் பகுதி கூர்க்கா இப்போது தானே ரவுண்ட்ஸ் முடித்து விட்டு போயிருப்பார்...! அந்த வயதில் திருட்டைத் தடுக்க கூர்க்காவே போதும் என்ற கருத்துடன் இருந்தவன் நான். தூக்கம் முற்றிலும் தொலைந்து விட்டது.

சர்க்... சர்க்...சர்க்...சர்க்...சர்க்...சர்க்...சர்க்.......

மிக வேகமாக நெருங்குவது போல் கேட்கிறதே...! அப்பாவையும், அண்ணன்களையும் எழுபபுவோமா...?!  வேண்டாம்...முதலில் என்ன, யார் என்று நாமே பார்த்துவிடுவோம் என்று சிறிது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு என் படுக்கையின் வலது பக்கத்து ஜன்னலை நோக்கி மெல்ல, மெல்ல நகர்ந்தேன்...!  ஜன்னலை நெருங்க நெருங்க சத்தத்தின் கனம் அதிகரித்துக் கொண்டே சென்றது...! மூடி இருந்த ஜன்னலை அச்சத்துடன், எந்த சலனமுமின்றி திறக்க முயன்றேன்...! தோல்வியே...! க்ரீச்....என்ற ஒலியுடன் திறந்தது ஜன்னல். மிகவும் கவனத்துடன், கிடைத்த சிறிய இடைவெளியில் வெளியே யார் தான் உலவுகிறார்கள் என்று தேடலானேன்.

சத்தம் இப்போது மிகத் தெளிவாக...! காய்ந்த தேக்கன் இலை சருகுகள் மேல் யாரோ ஓடி வருகிறார்கள். இந்த நேரத்தில் திருடனை தவிர வேறு யாருக்கு நம் தோட்டத்தில் அப்படியொரு அத்தியாவசிய அலுவல் இருக்கப் போகிறது?? தந்தையையும், தமையன்களையும் எழுப்பி ஒரு கை பார்த்து விட வேண்டியது தான் என்று எண்ணிக்கொண்டே, ஜன்னலை மூட எத்தனிக்க, மூன்று பருத்த கீரிப்பிள்ளைகள் வலமிருந்து இடமாய் பெரு வேகமெடுத்து கருவேல மரங்களடர்ந்த பகுதிக்குள் ஓடி மறைந்தன.  அடச்சீ... கீரிப்பிள்ளைகள்..! கொஞ்ச நேரத்தில் கொலை பீதியை ஏற்படுத்திவிட்டனவே...! ஜன்னலை அடைத்துவிட்டு படுக்கைக்கு திரும்பினேன்.  

சர்ர்க்...சர்ர்க்...சர்ர்க்...சர்ர்க்...
சர்ர்ராக்க்...சர்ர்ராக்க்க்....

ஓடி மறைந்தது அவைகள் மாத்திரமல்ல அவைகளுடன் அவைகள் எழுப்பிய சத்தமும்தான். சிறிது தண்ணீர் பருகிவிட்டு படுக்கையில் சாய்ந்தேன். தூக்கம் வரவே இல்லை. அந்தப் பெண்ணின் அலறல் சத்தமும் இது போல் தான் ஏதாவது கனவாக இருக்குமோ...? வெட்டியா கண்டதையும் நெனச்சு தூக்கம் கெட்டது தான் மிச்சம்....! மீண்டும் உறக்கம் தழுவ....இமைகள் இறங்கத் தொடங்கின...!

ஆ....ஆ....ஆ......! 

அதே அலறல். அப்போ....முன்னர் கேட்ட சத்தம் கனவில் அல்ல...! முன்னிலும் வேகமாக துடித்து எழுந்தேன்...! 

ஆஆஆ........!!!!

என்ன நடக்கிறது...? அதே வலது புற ஜன்னலை துரித கதியில் திறந்து சத்தம் எங்கிருந்து வருகிறதென்று தேடலானேன்....! அதோ அந்த கருவேல மரங்களுக்கு அந்தப் பக்கத்தில் இருந்து தான் கேட்கிறது அந்த சத்தம். காவலர் குடியிருப்பு தான் அந்தப் பக்கத்தில் இருக்கிறது.  பெண் குரல் கேட்கும் இடம் அந்த குடியிருப்பு வரிசையின் கடைசி வீடு...!  கும்மிருட்டு...! 

"பிடிங்க அவள...!, ஏன்டி இப்படி எல்லாம் பண்ற...", என்றது வேறு ஒரு குரல். அதுவும் பெண் குரலாகவே பட்டது.

"அடிக்காத...அடிக்காத...ஐயோ....வலிக்குது...வலிக்குது....கொலை பண்றாளே..!", முதல் குரல். 

"கொலையா..?", பயத்தில் எனது இதயம் இன்னும் சில நொடிகளில் வெடிக்கப் போவதைப் போல் துடித்துக் கொண்டிருந்தது...!

"அய்யய்யோ....யாரும் கிட்ட வராதீங்க....! யாராவது ஓடிப் போயி போர்வை எதுனா எடுத்துகிட்டு வாங்க....! கடவுளே இது என்ன கொடுமை....! சீக்கிரம் யாராவது எடுத்து வாங்களேன்....!".  இது அந்த மற்றொரு குரல். நடுக்கத்துடன் வேதனையில் உடைந்து ஒருவர் அழுதால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அக்குரல். 

அர்த்த ராத்திரியில் இது என்ன மர்மம். விவரம் என்னவென்று பிடி படவே இல்லை. வியர்த்தே விட்டது. சிறிது நேரத்துக்கெல்லாம் மாறி மாறி ஒலித்துக் கொண்டே இருந்த அலறல்கள் அடங்கி நிசப்தம் நிலவியது அங்கே. திடீரென்று அந்த வீட்டு தோட்டத்தின் விளக்கு போடப்பட்டது. மூன்று ஆண்கள் வீட்டின் அருகிலேயே பனியன் லுங்கி அணிந்து கொண்டு நின்று கொண்டிருந்தார்கள். இரு பெண் குரல் கேட்டதே.....கண்களை அலைய விட்டேன். அந்த ஆடவர் மூவரும் பதைக்க பதைக்க சத்தம் வந்த முட்புதரை நோக்கி ஓடி மறைந்தனர். அந்தப் பெண்ணை கொலை செய்து விட்டார்களா...பாவிகள்?  தெரு நாய்கள் குறைக்கத் தொடங்கி விட்டன. நான் யோசித்துக் கொண்டிருக்கும் போதே போர்வை போற்றப்பட்ட ஒரு உடலை இருவர் தூக்கிக் கொண்டு முட்புதரிலிருந்து வெளியேறி  தங்களின் வீட்டுக்குள் நுழைந்தனர் புயல் வேகத்தில். அடக் கொலைகாரப் பாவிகளா...கொன்னுட்டீங்களா அந்தப் பொண்ண...என்று விக்கித்து நான் நின்று கொண்டிருக்கும் போதே முட்புதரிலிருந்து ஒரு ஆணும், பெண்ணும் வேக வேக நடையில் தங்கள் வீட்டுக்குள் சென்று தோட்டத்து கதவை அடைத்து கொண்டனர். விளக்கும் அணைக்கப்பட்டது.  நடுக்கத்துடனேயே கழிந்தது அந்த இரவு உறக்கமின்றி. பின்னர் எப்போது கண்ணயர்ந்தேன் என்று தெரியவில்லை, விழித்தெழும்போது  மணி காலை ஒன்பதரை.  

விறுவிறு என்று எழுந்து ஜன்னல் வழியே அந்த திகில் தோட்டத்தை நோக்கினேன். ஆள் அரவமில்லை. தோட்டக் கதவு அடைக்கப்பட்டே இருந்தது.  சடாரென்று நண்பன் அஷோக்கின் நினைவு பொறியில் தட்டவே, அவனை சந்திக்க ஆயத்தமானேன்.  அவன் வீடும் அதே காவலர் குடியிருப்பில் தான் இருந்தது . சரசரவென்று குளித்து, உடைமாற்றி அவன் வீடு அடைந்து அவனை வெளியே அழைத்துச் வந்தேன். 

நேற்று இரவு நான் கண்டதை, நடந்ததை அவனுக்கு மிகுந்த பதட்டத்துடன் கூற, அவன் முகத்திலோ எந்த வித சலனமும் இல்லை. எதிரே வந்த பெண்மணி ஒருவர் அவனை பார்த்து சிரித்துக் கொண்டே "அம்மா நல்லா இருக்காங்களா?" என்று கேட்டார்.  "நல்லா இருக்காங்க, அக்காவுக்கு இப்போ எப்படி இருக்கு...?", இவனும் கேட்டான்.  இரண்டு நிமிடம் நீண்டிருக்கும் அவர்களின் சம்பாஷனை. என் நினைவு முழுக்க நேற்று நடந்த அந்த மர்மமான விஷயத்தை சுற்றியே சுழன்று கொண்டிருந்ததால் அஷோக்கின் சலனமற்ற எதிர்வினையும், இடையில் அந்தப் பெண்மணியுடனான அவனது உரையாடல்களும் எனக்கு மிகுந்த எரிச்சலையே  ஏற்படுத்தின.  நான் உஷ்ணமாவதை கண்டுவிட்ட அஷோக், "நீ பார்த்ததெல்லாம் உண்மைதான்", என்றான் மிகச் சாதரணமாக. "அப்படீன்னா...", என்ற என்னை,  "நீ பார்த்ததெல்லாம் உண்மை தான் ஆனா நீ புரிஞ்சிகிட்டது  மட்டும் தான் தப்பு", என்று புதிர் விடுத்தான். பின்னர் அவனே தொடர்ந்தான்.

அந்த வீட்டில் ஒரு அக்கா இருக்காங்க, தேவதை மாதிரி அழகு, ஒரு ஆக்சிடன்டுல தலைல அடிபட்டு அவங்களுக்கு சித்த சுவாதீனமில்லாம போச்சு. எங்கெங்கயோ காட்டியும் குணமாகல அந்த அக்காவுக்கு. சாமியா நெனச்சு பாத்து பாத்து வளத்த பொண்ண எங்கேயோ கொண்டு போய் மன நல காப்பகத்துல விட யாருக்கு தான் மனசு வரும். அதனால் வீட்டிலயே வச்சு வைத்தியம் பார்த்துகிட்டு வராங்க. ரொம்ப முரண்டு பண்ணினா சங்கிலியால கட்டி வச்சுடுவாங்க.  சமயத்துல அந்த அக்கா, நடு ராத்திரில தோட்டத்துக்கு பின்னாடி இருக்கிற அந்த கருவேல மரங்கள் நெறஞ்ச முட்புதருல போய் தனியா உக்காந்திருப்பாங்க. சில சமயம் ஒட்டுத் துணி கூட உடம்புல இல்லாம....!  அந்த குடும்பமே ராத்திரியெல்லாம் உக்காந்து அழுதுகிட்டே இருக்கும்.  ரொம்ப பாவம். ரெண்டு பசங்க, ஒரேயொரு பொண்ணு.  சந்தோஷமா கலகலப்பா இருந்த அந்த குடும்பம் இப்போ ரொம்ப நொடிஞ்சி போச்சு. எல்லாரும் ஓர் நடைபிணமா தான் வாழ்ந்துகிட்டு இருக்காங்க. 

இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, எங்கிட்ட ஒருத்தங்க பேசிவிட்டு போனாங்களே..., அவுங்க தான் அந்த அக்காவோட அம்மா...!

அஷோக் சொல்ல, சொல்ல துக்கம் என் தொண்டையை அடைத்து, கண்ணீராய் வெளி வந்து பூமியில் விழுந்தது. 

(படம் தந்த கூகுள்க்கு நன்றி...!!)
--விளையாடும் வெண்ணிலா....

9 கருத்துகள்:

குறையொன்றுமில்லை. சொன்னது…

மனதை உலுக்கும் கதை.

Sathish Kumar சொன்னது…

ஆமாம்மா...! நெஞ்சை உருக்கும் சம்பவம் அது. உங்கள் கருத்தை பகிர்ந்ததற்கு நன்றிம்மா...!

ஆனந்தி.. சொன்னது…

ஹாய்...:-) இப்ப தான் படிக்க போறேன்...

ஆனந்தி.. சொன்னது…

ஐயோ...என்ன சதீஷ்...ரொம்ப கஷ்டமா இருந்தது இந்த நிகழ்ச்சி..

ஆனந்தி.. சொன்னது…

பட் என்ன சதீஷ்..இந்த காலத்தில் கூடவா இப்படி மன சிதைவு நோயாளிகளை வீட்டிலேயே பார்த்துப்பாங்க..அவங்க மருத்துவரிடம் முறைப்படி சிகிச்சை எடுக்கிராங்களா இல்லையா...??? இப்போ எவ்வளவோ வாய்ப்புகள் இருக்கே சதீஷ் மருத்துவத்தில்..பெரிய நகரங்களில் வந்து கன்சல்ட் பண்ணலாமே...

ஓகே....அந்த சம்பவங்கள் மனசில் வருத்தம் இருந்தாலும்...இந்த பதிவில் உங்கள் presentation பத்தி கட்டாயம் குறிப்பிட விரும்புறேன்...செம lovely ...அந்த சுரபியில் casual ஆ ஆரம்பித்த சம்பாஷனைகள் (குறிப்பு...நானும் ரேணுகாவின் குழி சிரிப்புக்கு விசிறி...ஹம் ஆப்கோ ஹாய் ஹோண் இல் மாதுரியை விட ரேணுவின் சிரிப்பு ரொம்பவே பிடித்தது...:)) ஸோ தாழ்மையுடன் நாங்களும் விசிறின்னு சொல்லிக்கிறோம்..:-) )அப்படியே படிபடியா...ஒரு thriller கதை படிச்ச மாதிரி விவரிப்புகள்...(அந்த சத்தம்...அந்த பின்னணி விவரித்தல்..எல்லாம் செம க்ளாஸ் சதீஷ்...) கடைசியில் செண்டி யா முடிச்சாதுன்னு ஒரு உண்மை சம்பவத்தை சுவாரஸ்யமா ப்ரெசென்ட் பண்ணி இருந்ததுக்கு பாராட்டுக்கள்...(சம்பவம் வருத்தம் அண்ட் நெகிழ்ச்சியா இருந்தாலும்...) நல்லா எழுதிரிங்க சகோ...

Sathish Kumar சொன்னது…

//ஆனந்தி.. சொன்னது…
பட் என்ன சதீஷ்..இந்த காலத்தில் கூடவா இப்படி மன சிதைவு நோயாளிகளை வீட்டிலேயே பார்த்துப்பாங்க..அவங்க மருத்துவரிடம் முறைப்படி சிகிச்சை எடுக்கிராங்களா இல்லையா...???//

இந்த சம்பவம் நடந்தது என்னுடைய பள்ளி நாட்களில் ஆனந்தி...!! அதன் பிறகு பல இடங்கள் மாறிவிட்டோம், தந்தை, தாய் பணி நிமித்தமாக. நான் கல்லூரி செல்ல ஆரம்பித்த பிறகு ஒரு தடவை இதை பத்தி அஷோக்கிடம் பேசியதும், அந்த அக்காவுக்கு குணம் ஆகவில்லை என்று அவன் பதிலுரைத்தாக சின்ன ஞாபகம். சென்னையிலும், கேரளத்திலும் இன்னும் தமிழகத்தின் உட்புற மாவட்டங்கள் சிலவற்றிலும் உள்ள மருத்துவமனைகளில் அந்த அக்கா மருத்துவ சிகச்சை பெற்றதாக அவன் கூறி இருந்தான். நண்பனும் இப்போது அருகில் இல்லை. உங்கள் அக்கறை பொதிந்த வார்த்தைகளுக்கு நன்றிகள்...!

Sathish Kumar சொன்னது…

//ஆனந்தி.. சொன்னது…
(குறிப்பு...நானும் ரேணுகாவின் குழி சிரிப்புக்கு விசிறி...ஹம் ஆப்கோ ஹாய் ஹோண் இல் மாதுரியை விட ரேணுவின் சிரிப்பு ரொம்பவே பிடித்தது...:)) ஸோ தாழ்மையுடன் நாங்களும் விசிறின்னு சொல்லிக்கிறோம்..:-) )அப்படியே படிபடியா...ஒரு thriller கதை படிச்ச மாதிரி விவரிப்புகள்...நல்லா எழுதிரிங்க சகோ...//

நீங்களும் ரேணுகா விசிறியா...! பாராட்டுதல்களுக்கு மிக்க நன்றிகள்...! அப்போது இருட்டுன்னாலே பயம்தான் எனக்கு...!

மாணவன் சொன்னது…

ரொம்ப நெகிழ்வா இருந்தது நண்பரே, தொடர்ந்து சிறப்பாக எழுத வாழ்த்துக்கள் :))

Sathish Kumar சொன்னது…

மாணவன் சார்...! உங்கப் பக்கம் அடிக்கடி நான் வந்து போயி இருக்கிறேன்...! நீங்க வந்து வாழ்த்துனதுல ரொம்ப சந்தோஷம்...!

கருத்துரையிடுக