சனி, 9 ஏப்ரல், 2011

"நான்" - கொல்லப்பட்ட நொடிகள்...!சபாநாயகர் தெருவை அரவணைத்துச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை NH-45. எனக்கு நினைவு தெரிந்து தனியே யார் துணையுமின்றி நான் கடந்து செல்ல பழகிய தார்ச் சாலை. கடந்த காலமாகிப் போன அந்நாட்களின் அற்புதமான காலை பொழுதுகளை, மெய் தழுவி ஜொலித்த இளஞ்சூரிய கதிரும், உயிர் வருடிச் சென்ற மென் குளிர் தென்றல்காற்றுமே இப்போதும் என் நெஞ்சிலும் நினைவிலும் பதியச் செய்திருக்கின்றன. அந்தக் காலைகளில் இச்சாலையை கடந்து சென்ற தருணங்களை இப்போது நினைத்தாலும் மனம் சில்லிடுகிறது. கால் சட்டையணிந்து சின்னஞ்சிறு மழலையாய் கவலையின்றி திரிந்த காலத்திலிருந்து, கனவுகள் கோடி சுமந்து கல்லூரி காளையாய் சீறிப் பாய்ந்த நாட்கள் வரை, அன்றைய தினங்களின் எனது ஒவ்வொவொரு அசைவுகளையும், கவனித்து இன்றும் பத்திரமாய் அடக்கிவைத்திருக்கும் ஒரு நெடு நீண்ட பெட்டி இச்சாலை. பள்ளி கூப்பிடு தூரத்தில் வீட்டிற்கு இடப் புறமென்றால், கல்லூரியோ வலது புறத்தில்.

எந்த வித எண்ணத்தின் தாக்கமும் இல்லாத, அவசரமற்ற, பளிங்கு போன்ற கறையற்ற காலைப் பொழுதிற்கு ஈடு இணை எதுவுமே இல்லை. அதிக அரவமற்ற, பனி படர்ந்த அவ்வேளைகளில் பறவைகளின் ஒலி ரசித்து, இருமருங்கிலும் பச்சை பசேலென்றிருக்கும் மரங்களுக்கு நடுவே நடந்து களித்த மணித்துளிகள் ஒவ்வொன்றும் அளவற்ற இன்பம் கொடுத்த கணங்கள். மல்லிகை, கனகாம்பரம், ரோஜா போன்ற மலர் சூடி தெய்வீகமாய் திலகமிட்டு, பயிற்சி வகுப்புகளுக்கு "லேடி பேர்ட்" மிதி வண்டிகளில் வண்ணத்துப் பூச்சிகளாய் ரீங்காரமிட்டு செல்லும் அந்த தேவதைகளை பார்த்து ரசித்துக் கொண்டே நடந்து சென்ற தருணங்கள் சொர்க்கமாய் இன்னும் என் நெஞ்சில். அவர்கள் கடந்து , மறைந்த பின்பும் மறையாத அவர்களின் சிரிப்பொலிகளையும், மலர்களின் மணத்தையும் இப்போதும் முறையே, கேட்கிறேன், நுகர்கிறேன்..! ஆணை அழகனாக்குவாள் பெண்...! இச்சொற்களை உண்மை என்று உணர்த்திய நாட்கள் அவை. அவர்கள் எனது மண்ணின் ஆர்ப்பரிக்கும் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கும் பெண்டிர். கடக்கும் கன்னியர் யாவரின் கண்களும் நம் மேலே இருக்கக் கூடாதா என்பது போன்ற ஒரு விபரீத எண்ணத்தை தூண்டி, பைத்தியம் பிடிக்க வைக்க கூடிய பேரழகுப் பெண்கள். அவர்கள் அங்கு, அந்த மண்ணில்தான் ஜனிக்கிறார்கள் , வசிக்கிறார்கள்....இப்போதும். ஆடவரின் அனுமதிக்கு காத்திராமல், நொடிப்பொழுதில் உள் நுழைந்து திணிக்கப்படும் இந்த ரசாயன மாற்றத்தை நிகழ்த்துவதில் இவர்களின் வனப்புக்கு ஈடான ஒன்றை வேறெங்கும் கண்டிலேன். 


அதைப் போன்றதொரு பொன் காலைப் பொழுதில்தான், பள்ளி செல்லும் பாலகனாய் உலவிய காலத்தில், அவரை அம்மரத்தினடியில் அமர்ந்திருக்க கண்டேன். எம் வீட்டின் அருகில் இருந்த "வருவாய் வட்டாட்சி அலுவலர்" அரசு இல்லத்தின் வெளிப்புறத்தில், காம்பவுண்ட் சுவர் அருகில் இருந்த அந்த மரத்து நிழலில் தான் அமர்ந்திருந்தார். பல வருடங்களாக அங்குதான் அமர்ந்திருக்கிறார், என் கண்கள் அவரை கவனித்ததென்னவோ அன்று தான். அழுக்கடைந்து கறுப்பேறியிருந்த  கந்தல் ஆடைகளால் மூடப்பட்ட உடல்.  நரைத்த புருவத்தின் கீழ் எந்தவித எதிர்ப்பார்ப்பும் அற்ற விழிகள். உணர்ச்சியற்றதாய் தோன்றின அவை. முகத்தை தலை மயிரும், தாடி மயிரும் மறைக்க, நீண்டிருந்த நாசி மட்டுமே அது மனித முகம் தான் என்பதை உணர்த்துவதாய் அமைந்து இருந்தது. தலைமயிர் சடை சடையாய் முடிச்சிகளுற்று, விழுதுகளை போல் முன் விழுந்து முகம் முழுக்க பரவிக்கிடந்தது. அடர்ந்து வெளுத்தும், பழுப்படைந்தும் இருந்த தாடி அவரின் நெஞ்சுக்கூட்டை தாண்டியும் நீண்டிருந்தது. உருவத்தில் தெரிந்த முதிர்ச்சி, அவருடைய கருத்த சருமத்தில் தெரியவில்லை. தோல் சுருக்கங்களின்றி இருந்தது.  நாற்பதுகளின் இறுதியில் இருப்பவராகவே பட்டது. மொத்தத்தில் ஒரு பிச்சைகாரருக்குரிய அத்தனை அடையாளங்களையும் கொண்டவராய் இருந்தார் பிச்சைப் பாத்திரமின்றி. மூங்கிலால் ஆன கைத்தடி அவருடைய கைக்கு எட்டும் தொலைவில்.

அவ்வயதில் மிக அச்சுறுத்தலாய் உணர்ந்தேன் அவரை கடக்கும் நொடிகளை. தலையை கீழே தொங்கவிட்டிருந்த நிலையில் அமர்ந்திருந்தவர் நான் கடக்கையில் என்னை நிமிர்ந்து பார்த்தார். சிரித்தார். தோற்றத்தைக் கொண்டு முடிவெடுக்கும் வயதானதால், அவரின் தலை நிமிரளும், காவிப்பல் சிரிப்பும் என் இதயத்துடிப்பை அதிகரித்து பயத்தை உறுதி செய்தன. பைத்தியமோ...என்று எண்ணிக்கொண்டே ஒரு வித படபடப்பில் அவரை அவசரகதியில் கடந்தேன். இரண்டு, மூன்று முறை பின் தொடர்கிறாரா...என்று திரும்பி திரும்பி பார்த்து பீதியாகவே ஓட்டமும் நடையுமாய் அவ்விடத்தை விட்டு நகர்ந்தது இன்னும் என் நினைவில் நீங்காமல் இருக்கிறது. பின் வந்த நாட்களில், அவர் அபாயமற்றவர் என்பதை அவரை ஒவ்வொரு முறை கடந்து செல்லும் போது அவருடைய அமைதியும், அவ்வப்போது தாடி மறைவிலிருந்து வெளிவரும் புன்னகையும் உணர்த்த அவரை கடக்கும் தருணங்கள் மிக சாதரணமாக போய் விட்டன. 


எவ்வளவு கடுமையான வெயிலானாலும், மழையானாலும் அவர் அந்த இடத்தை விட்டகன்று கண்டதில்லை. கொளுத்தும் வெய்யிலிலேயே அவர் அமர்ந்திருப்பதை பல முறை கண்டிருக்கிறேன். அவருக்கு இரவு உறக்கமும் அதே இடத்தில் தான். வாழ்க்கையையே நான்குக்கு இரண்டு  என்ற நீள அகல பரப்பளவிலேயே கழித்து வந்தார். ஒரு நாள் கனமழை பெய்து கொண்டிருந்த போது அவர் ஞாபகம் வர, குடை பிடித்து அவர் அமர்ந்திருக்கும் இடம் விரைந்தேன். மழையும் காற்றும் மிக பலமாக வீசிக்கொண்டிருந்தது. அவர் அங்கு இல்லை. அப்படியே கண்களை சுற்றும், முற்றும் அலைய விட்டேன். அவர் அமர்ந்திருக்கும் எதிர் திசையில், நெடுஞ்சாலையை கடந்து கொஞ்ச தூரத்தில் அமைந்திருந்த சிறு கோவிலின் கூரை கீழ் தலையை குனிந்து அமர்ந்திருந்தார். தலைமுடியிலிருந்து சொட்டு சொட்டாய் நீர் வழிந்து கீழே அவருடைய ஏற்கனவே நனைந்த அழுக்கு ஆடையை மேலும் ஈரமாக்கிக் கொண்டிருந்தன. இயற்கை கடன்களை கழிப்பதற்கும், எப்போதாவது மழையிலிருந்து தன்னை காத்து கொள்வதற்கும் மட்டுமே அவர் அவ்விடத்தை விட்டு நகர்வார் என்று தோன்றியது. 

ஒரு நாள், நல்ல உச்சி வெய்யிலில் வீடு திரும்பி கொண்டிருந்த போது, அவர் அருகில் ஐந்து அடுக்கு டிபன் கேரியர் ஒன்று இருப்பதை காண முடிந்தது. கேரியர் கம்பிகளுக்கு இடையில் வாழை இலை சொருகப்பட்டு இருக்க அவர் அருகே ஒரு நாயும் அமர்ந்து இருந்தது. நாய் சற்று கொழுத்து காணப்பட்டது. அவருக்கு காலை, மாலை, இரவு என மூன்று வேளைகளிலேயும் உணவுக் கூடைகள் வைக்கப்பட்டிருப்பதை பல நாட்கள் கண்டிருக்கிறேன். பின்பு தான் அவருக்கு யார் மூலமாகவோ, மூன்று வேளை உணவும் தினசரி கொடுக்கப் படுவதை அறிந்து கொண்டேன். 

"அவர் யார்...? பிச்சைக்காரரா...? இல்லை....பைத்தியக்காரரா...? பார்ப்பதற்கு அச்சம் தரும் தோற்றத்துடன் இருக்கும் அவரை ஏன் இதுபோன்ற பொதுமக்களும், பள்ளிச் சிறுவர் சிறுமிகளும், வெகுவாக கடந்து செல்லும் சாலையில் அமர அனுமதிக்கிறார்கள்...? யார், ஏன் வாழையிலையில் மூன்று வேலையும் உணவு கொடுக்கிறார்கள்...?", என்பன போன்ற சிறு வயதில் மனதை உறுத்திய, தோன்றிய கேள்விகள், பதிலை தேடாமலேயே தொலைக்கப்பட்டன என்னால்.  பள்ளிப்பருவத்தை கடந்து கல்லூரி செல்ல தொடங்கிய பிறகு, அவரை பற்றிய நினைவுகளே எழவில்லை. அப்போதும் அவர் அங்குதான் அமர்ந்திருந்தார். கல்லூரி சலனங்களை சுமந்து திரிந்து கொண்டிருந்த கண்களுக்கு அவர் அவசியமற்றவராக கருதப்பட்டாரோ என்னவோ...! அவரை மறந்தே போனேன். 

பிறிதொரு நாள் , தொலைக்காட்சியில் எனக்கு மிகவும் பிடித்த திரைப்படங்களுள் ஒன்றான "உன்னால் முடியும் தம்பி" திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தேன். "அக்கம் பக்கம் பாரடா என் சின்ன ராசா" என்ற பாடலில் தோன்றும் ஒரு பிச்சைக்காரரின் தோற்றம், மரத்தடியில் அமர்ந்திருப்பவரை ஞாபகப்படுத்தவே , பல வருடங்களுக்கு பிறகு, அவரை பற்றிய நினைவுகள் எழ ஆரம்பித்தன. விறு, விறுவென்று புறப்பட்டு அவரிடத்தை அடைந்தேன். இப்போதும் அதே இடத்தில் தான் இருந்தார். மிகவும் , மெலிந்து, தோள் சுருக்கமுற்று, மரவட்டை போன்று சுருங்கி கிடந்தார். நாயில்லை அவர் அருகில், முனை மழுங்கிய அதே பழைய கைத்தடி இருந்தது. அவரை முதன் முதலில் சந்தித்த நினைவுகள் நிழலாடின கண் முன். என்னை அச்சுறுத்திய அவருடைய அந்தப் புன்னகை மெல்ல ஒரு நொடி மனதை கடந்து சென்றது. மீண்டும் அவரைப் பற்றிய பதில் தேடப்படாத பழைய கேள்விகள் மனதில் உயிர்பெற்று எழுந்தன. கேள்விச்சுமைகளை சுமந்தபடியே வீடடைந்தேன். 

சில நாட்களுக்கு பின், நண்பர் ஒருவரிடத்தில் உரையாடி கொண்டிருக்கையில், இவரைப் பற்றிய பேச்சு தற்செயலாக எழுந்தது. என்னுடைய கேள்விச் சுமைகளை அங்கே அவரிடத்தில் இறக்கி வைக்க, அதற்கு அவரளித்த பதில்கள் என்னை சற்று திடுக்கிடச் செய்து உறையத் தான் வைத்தன. சிதம்பரம் நகர வீதியில், செல்வந்தர் வீட்டுப் பிள்ளையாம் அந்த முதியவர். சில வருடங்கள் முன்பு வரை பணம் பகட்டு என்று, ஒய்யார வாழ்க்கையாம் அவருடையது. நிறைய சொத்துகளுக்கும், நில புலன்களுக்கும் சொந்தக்காரராய் பெரு மகிழ்ச்சியாய் வாழ்ந்தவருக்கு திருமணம் நடந்த பிறகு தான் வாழ்க்கையில் புயல் வீசத் தொடங்கின.

அவருடைய மனைவியும், மனைவி வழி உறவினர்களும், சொத்துக்கு ஆசைப்பட்டு அவரையே ஏமாற்றி கொள்ளையடிப்பதை வழக்கமாக கொண்டிருக்க, இதை அறிந்து பலமுறை கண்டித்திருக்கிறார்.  அவரின் புத்திமதியை மனைவி கண்டு கொள்ளவே இல்லை.  மாறாக, மிகுந்த பேராசையுடன் பணம், சொத்து, நிலம் என்று பொருள் குவிப்பதிலயே குறியாக இருந்திருக்கிறார். மேலும், அவர் செய்து வந்த தான தர்ம காரியங்களுக்கும் தடைகள் ஏற்படுத்தும் வண்ணம் நடந்து கொண்டிருக்கிறார். தினம் போர்க்களமாய் ஒரு வாழ்வு வாழ்வதை மெல்ல மெல்ல வெறுக்க ஆரம்பித்திருக்கிறார் அந்த மனிதர். பணம் என்பது வாழ்க்கை சக்கரத்தை சுழல உதவும் ஒரு கருவியே அன்றி, அதுவே வாழ்க்கையல்ல என்பதை எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவர் மனைவி புரிந்து கொள்ளவே இல்லை. தன் உறவினர்களைக் கொண்டே மனைவி தன்னை தாக்க முயல, வெறுப்பின் உச்சத்தை அடைந்திருக்கிறார், அவமானம் தாளாமல். இறுதியாக, அனைத்தையும் துறந்து அந்த மரத்தினடியில் வந்து அமர்ந்து விட்டதாக கூறினார் நண்பர். நான் நினைத்தது போல் அவர் பிச்சைக்காரரும் இல்லை, பைத்தியக்காரரும் இல்லை. 

பணத்தை துச்சமாய் கருதி மனைவிக்கு வாழ்க்கைப் பாடத்தை புகட்ட  அரண்மனை போலிருந்த வீட்டையும், செழிப்பான வாழ்க்கையையும் துறந்து ஒரு பிச்சைக்காரரை போல் வெயிலிலும், மழையிலும், கடுங்குளிரிலும் தெரு நாயைப் போல் அமர்ந்திருந்த அந்த மனிதனின் கதை என்னை மிகவும் பாதித்தது. மனிதர்களுக்குள் உறங்கும் "நான்" மிருகங்கள் பலவகை. அதில் ஒன்று பணச் செருக்கு "நான்". அன்று என்னுள் அந்த ஒரு "நான்" எதிர்காலத்தில் பிரசவிக்கப்பட்டு உயிர் பெறும் முன்பே அவர் மூலம் கொல்லப்பட்டதாய் உணர்ந்தேன். அந்த "நான்" கொல்லப்பட்ட நொடிகளில் தான் என்னை நான் அறியத் தொடங்கினேன் . அன்று இரவு, அவரை தூரத்திலிருந்து பார்ப்பதற்காக அவர் எப்போதும் அமர்ந்திருக்கும் அந்த இடத்திற்கு சென்றேன். அங்கு அவரில்லை. சுற்றிலும் தேடினேன் எங்காவது இருக்கிறாரா என்று, கோவிலில், தூரத்தில், மரத்தின் பின் என்று எல்லா இடத்தையும் நோக்கினேன். எங்கும் இல்லை அவர். வீடு திரும்பினேன். அதன் பிறகு அவரை நான் பார்க்கவே இல்லை. விசாரித்ததில், அவர் இறந்து விட்டதாக சொன்னார்கள். 

ஆனால் அந்த மனிதர் என்னுள் கொன்று சென்ற அந்த "நான்"  இப்போதும் சில முறை உயிர்த்தெழ எத்தனிக்கும் போதெல்லாம், அவனை மறிக்கச் செய்யும் மந்திரம், மனதில் தோன்றும் அவரின் முதல் பார்வையும், தன் தாடியினுள் புதைந்திருந்த உதடுகள் விரித்து சிந்திய அந்த புன்னகையும் தான். அவை எப்போதும் எனக்குள் தோன்றி என்னை எச்சரித்து மமதை அடையாமல் மனிதனாய் வாழ உணர்த்திக்கொண்டே இருக்கின்றன. "ஆனால் இப்போதும் சில நேரங்களில் அந்த "நான் " உயிர்த்தெழுகிறான் எனில் அவன் முற்றிலும் மறிக்கப்படவில்லையோ...?", என்னை நானே பல முறை கேட்டிருக்கிறேன் இந்த வினாவை. முயற்சிக்கறேன் அவனை- அந்த "நான்'ஐ"முற்றிலும் களைவதற்கு. மனிதப் பிழைகள் குற்றங்களாவது, பிழைகளை நாம் உணர்ந்த பின்பும் தவிர்க்காமல் இருக்கையில் தானே...!

(படம் தந்த கூகுள்க்கு நன்றி...!!)
--விளையாடும் வெண்ணிலா....

17 கருத்துகள்:

ஆனந்தி.. சொன்னது…

ம்ம்...சதீஷ்...நீண்ட நாள் கழிச்சு பதிவு போட்டு இருக்கீங்க..வாழ்த்துக்கள்...

ஆனந்தி.. சொன்னது…

well ...பதிவு படிச்சேன்...முதலில் வழக்கம்போலே பாராட்டு..என்னவோ உங்கள் பதிவுகள் எவ்வளவு பெருசா இருந்தாலும் எனக்கு பெருசுன்னு பீல் ஆகலை..பட் ரெண்டே ரெண்டு கரெக்ஷன் மட்டுமே என் suggestion ..

1 . இன்னும் சின்ன சின்ன பத்திகளாய் பிரிச்சு போடலாம் ஒரு பெரிய பத்தியை....

2 . இந்த டெம்ப்ளேட்டை எங்காவது தூக்கி கடாசுங்க சதீஷ்...ப்ரைட் ஆ ஒன்னை எடுத்து போடுங்க ...அதுவும் ரைட் சைடு font கலர்ஸ் ஐயும் கடாசுங்க...label படிக்க நாலு டார்ச் லைட் தேவை படுது...ஹீ...ஹீ....

ஆனந்தி.. சொன்னது…

அப்புறம் பதிவின் presentation ...as usual ..ஆரம்பத்தில் இளம்பராயத்தின் அழகான வர்ணனை...அதுவும் பெண்களை பற்றி கொடுத்த வர்ணனை செமயா ஜொள்ளி இருக்கீங்க...சை..சொல்லி இருக்கீங்க...:-))))))) //அவர்கள் அங்கு, அந்த மண்ணில்தான் ஜனிக்கிறார்கள் , வசிக்கிறார்கள்....இப்போதும். ஆடவரின் அனுமதிக்கு காத்திராமல், நொடிப்பொழுதில் உள் நுழைந்து திணிக்கப்படும் இந்த ரசாயன மாற்றத்தை நிகழ்த்துவதில் இவர்களின் வனப்புக்கு ஈடான ஒன்றை வேறெங்கும் கண்டிலேன். // ஆமாம்...சதீஷ்..நீங்க ஏன் அந்த ஒரு தமிழ் கவிதைக்கு அப்புறம் எழுதலை...சூப்பர் ஆ எழுதலாம் போலவே...இந்த வரிகளை படிச்ச பிறகு தான் நீங்க முதலில் எழுதிய கவிதை நினைவுக்கு வந்தது...:-)))

ஆனந்தி.. சொன்னது…

ம்ம்...ஓகே...கான்செப்ட்...படிக்க உருக்கமாய் இருந்தது சதீஷ்...பட்...ம்ம்...என்னவோ எனக்கு அந்த பெரியவர் மேலே பரிதாபம் வரவே இல்லை ...எனக்கு முத்து படத்தில் ரொம்பவே பிடிச்ச வசனம்..."ஏமாத்துறவனை விட ஏமாறுபவன் தான் பெரிய குற்றவாளி" இவர் மனைவி ஏமாத்துராங்கனு தெரிஞ்சும் தடுக்க முடியாமல் விட்டு வந்தவர் மனநிலை என்னவோ ஏதோ ஒரு கையாலாகாத தனமாய் தான் தோணுது சதீஷ்...நீங்க பள்ளி பருவத்தில் இருந்து கல்லூரி பருவம் வரை பார்த்து இருக்கீங்க அவரை...அவர் மனைவி தவறை உணர்ந்து இருந்தால் ஒரு நொடி கூட இப்படி விட்டு இருக்க மாட்டாங்களே...அவர் யாருக்காக இப்படி ஒரு முடிவில் இருந்தார்...இதனால் என்ன பயன்...ம்ம்...பேசாமல் அவர் சொத்தை ஒரு டிரஸ்ட் வச்சு ஏதாவது சமூக உதவி செய்ய முயற்சி செஞ்சு இருந்தால் அந்த நான் என்ற ஒரு விஷயம் சிதைஞ்சு போயிருக்கலாம்...ம்ம்...

ஆனந்தி.. சொன்னது…

ம்ம்...இது என் தனிப்பட்ட கருத்து மட்டுமே சதீஷ்...எனக்கு என்னவோ த்யாகம்...பக்தி அப்டிங்கிற பெயரில் வருத்தி கொள்ளும் எந்த நபரையும் நான் விரும்புவதே இல்லை...even ...என் உறவினர் ஒரு பெண் அடிக்கடி பக்தியில் விரதம் இருப்பாங்க ..அப்போ கூட கோவம் பயங்கரமா வரும்...அல்செர் வந்தது தான் மிச்சம்...கடவுள் நாம சந்தோஷமாய் தான் இருக்கணும் நினைப்பாருனு தான் சொல்வேன் ...ஒரு அம்மாக்கு தன் குழந்தை வருத்திப்பது பிடிக்குமா னு லாஜிக் எல்லாம் அவுத்து விடுவேன்..வழக்கம்போலே வீட்டில் திட்டு கிடைக்கும்..ஹீ ஹீ...ஸோ..என்னை பொறுத்தவரை அந்த பெரியவர் இவ்வளவு அப்பாவியாய்...கடைசி வரை உலகம் புரியாமல் ...இருந்து..செத்துட்டாரோ னு தான் நான் உணர்கிறேன் சதீஷ்...

ஆனந்தி.. சொன்னது…

"நான்" எப்பவும் கொல்லப்படக்கூடாது சதீஷ்...சில "நான்" வேணும்...அப்போ தான் சுயதன்மையும்..சுய யோசிப்பும் இருக்கும்...சில சுய தேடல்கள் கூட "நான்" பரிமாணத்தில் தான்னு நான் நம்புறேன்...இதெல்லாம் "சுயநலம் " பிடிச்ச ஆனந்தி சொல்வதாய் நினைச்சு படிக்கவும்...:-)))

ஆனந்தி.. சொன்னது…

அப்புறம் நீங்க டார்க் கருப்பு கலரில் ஒவ்வொரு பத்தியின் கடைசியில் குறிப்பிடும் வரிகள் எல்லாம் செமையா இருந்தது...இதெல்லாம் எனக்கு படிக்க மட்டுமே தெரியும்...:-))

ஆனந்தி.. சொன்னது…

//மனிதர்களுக்குள் உறங்கும் "நான்" மிருகங்கள் பலவகை. அதில் ஒன்று பணச் செருக்கு "நான்". அன்று என்னுள் அந்த ஒரு "நான்" எதிர்காலத்தில் பிரசவிக்கப்பட்டு உயிர் பெரும் முன்பே அவர் மூலம் கொல்லப்பட்டதாய் உணர்ந்தேன். அந்த "நான்" கொல்லப்பட்ட நொடிகளில் தான் என்னை நான் அறியத் தொடங்கினேன்//

நீங்க ரொம்ப நல்லவரு போலே...:-)))

Lakshmi சொன்னது…

ஆனந்தியே எல்லா கருத்துக்களையும் சொல்லி
மத்தவங்களுக்கு வேலையே இல்லாம பண்ணிட்டாங்களே.

Sathish Kumar சொன்னது…

//ஆனந்தி.. சொன்னது…
ரெண்டே ரெண்டு கரெக்ஷன் மட்டுமே என் suggestion..! நீங்க ஏன் அந்த ஒரு தமிழ் கவிதைக்கு அப்புறம் எழுதலை...சூப்பர் ஆ எழுதலாம் போலவே...//


தாமதமா ஆஜரானதுக்கு மாப்பு கேட்டுக்கிரங்க அம்மணி...! அப்படீங்கிறீங்க...! சரி.. இந்த வார கடைசியில ரெண்டையும் சரி பண்ணிடறேன்...!

ஜொள்ளு கொஞ்சம் ஓவரா....ஆயிடுச்சோ...?? கவிதை...கட்டாயம் போட்டுடறேன்...! நன்றி ஆனந்தி...!

Sathish Kumar சொன்னது…

//ஆனந்தி.. சொன்னது…
அவர் யாருக்காக இப்படி ஒரு முடிவில் இருந்தார்...இதனால் என்ன பயன்...ம்ம்...பேசாமல் அவர் சொத்தை ஒரு டிரஸ்ட் வச்சு ஏதாவது சமூக உதவி செய்ய முயற்சி செஞ்சு இருந்தால் அந்த நான் என்ற ஒரு விஷயம் சிதைஞ்சு போயிருக்கலாம்...ம்ம்...//

நீங்க சொல்றது நூற்றுக்கு நூறு உண்மை...! கையாலாகாத தனமா கூட இருக்கலாம். சுக போகங்களை துறக்கும் அளவுக்கு திடமான இதயம் கொண்டவராய் இருந்தவருக்கு, ஒரு பெண்ணை எதிர்க்க திராணி இன்றி போய் அவர் அந்த முடிவுக்கு வந்திருக்க மாட்டாரோன்னு தோணுது எனக்கு. பாடம் புகட்ட எடுக்கப் பட்ட துறவு முடிவு, அதன் மேல் ஒரு பிடிப்பு ஏற்பட்டு, பின் விரும்பி அப்படியே வாழ் நாள் முழுக்க இருந்து விட்டதாகவும் கருத முடியும் இல்லையா...? இந்த மனிதர் , கொடுத்த தண்டனை தன் மனைவிக்குத்தான் என்றாலும், பாடம் படித்தது என்னைப் போன்ற சம்பந்தமே இல்லாதர்களும் கூடத் தானே...! ஒரு வேளை, மனைவி திருந்தி இருந்தால், இப்போதும் அவர் ஞாபகம், என்னையும் என் நண்பர்களையும், இந்தப் பதிவின் மூலம் இன்னும் சிலரையும் வழி நடத்துவதை போல் வழி நடத்திட முடிந்திருக்குமா...? கடவுளை மறுத்தே வாழ்ந்த பெரியார், அஹிம்சை போற்றிய அண்ணல், இன்னும் சொல்லலாம்...! எடுத்துக்காட்டு மனிதர்கள் இருந்தால் மட்டுமே சமூகம் ஏற்றுக்கொள்ளும்...! நீங்கள் நான் உள்பட...! கருத்தில் மாறுபட்டிருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்....!

Sathish Kumar சொன்னது…

//ஆனந்தி.. சொன்னது...
"நான்" எப்பவும் கொல்லப்படக்கூடாது சதீஷ்...சில "நான்" வேணும்...//
இந்த ஆனந்தியோட போல்ட்னேஸ் என்னோட தங்கையிடமும் பார்த்திருக்கிறேன்...! வாழ்க்கையின் வெற்றிக்கு சில நான் அவசியம் தான்...! வல்லவனாயிருப்பதற்கு இந்த சில நான்'கள் மிக தேவை...! நல்லவனுக்கு இது தேவைப் படுவதில்லை என்பது எனது கருத்து எடுத்துக்காட்டு காந்திஜி....! அவருடை நற்குணங்களே அவரை வல்லவனாக்கி விட்டது. இது எல்லா நல்லவர்களுக்கும் பொருந்தும். ஆனால், வல்லவர்கள் எல்லோரும் நல்லவர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை...! எடுத்துக் காட்டு 'இராவணன்'...!

Sathish Kumar சொன்னது…

//ஆனந்தி.. சொன்னது…
அப்புறம் நீங்க டார்க் கருப்பு கலரில் ஒவ்வொரு பத்தியின் கடைசியில் குறிப்பிடும் வரிகள் எல்லாம் செமையா இருந்தது...இதெல்லாம் எனக்கு படிக்க மட்டுமே தெரியும்...:-))//

நன்றி....அவைகள்...என் எழுத்துக்களை நான் திரும்ப படிக்கையில், சில சமயம் கொஞ்சம் திருப்தியை தருவதாகத் தோன்றும் எனக்கு...!

Sathish Kumar சொன்னது…

//ஆனந்தி.. சொன்னது…
நீங்க ரொம்ப நல்லவரு போலே...:-)))//

சே...சே...அப்படியெல்லாம் பழம்னு ஒதுக்கிடாதீங்க...!

பாருங்களேன்...நல்லவன்னு சொல்லும்போதே சிரிப்பு வருது உங்களுக்கு...! நல்லது இப்பல்லாம் நகைப்புக் உரியதா போய்டிச்சு...! இவ்ளோ நல்லவனா இருந்து என்னடா பண்ணப் போறன்னு சொல்றது ரொம்ப சாதாரணமா ஆயிடிச்சு...! இப்போ கூட பாருங்களேன்...மேல என்னோட பதில....!

Sathish Kumar சொன்னது…

//Lakshmi சொன்னது…
ஆனந்தியே எல்லா கருத்துக்களையும் சொல்லி
மத்தவங்களுக்கு வேலையே இல்லாம பண்ணிட்டாங்களே.//

கேள்விகள்/ கருத்துகள் ஒண்ணா இருந்தா, அவங்களுக்கு சொன்ன அதே பதில் தானே உங்களுக்கும் அப்ளிகபல் ஆகும். வருகைக்கு நன்றிகள் கோடி...லஷமிம்மா...!

ஆனந்தி.. சொன்னது…

ப்லாக் இல் கொத்தனார் வேலை பார்த்துட்டு இருக்கிற மாதிரி இருக்கு..:))) அப்பாலே வரேன்..:))

Sathish Kumar சொன்னது…

அச்சச்சோ...! தெரிஞ்சி போச்சா...! இரகசியமாத் தானே வச்சிருந்தேன்...! "நான் துபாயில ஒட்டகம் மேய்க்கிற வேலைதான் செஞ்சேன்னு எப்படி ராசா கண்டுபுடிச்சீங்க...!" :-))

கருத்துரையிடுக