வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

இவுங்க எப்பவுமே இப்படித்தான் பாஸ்...!!

"அனுபவம்" - இந்த வார்த்தை இடத்துக்கு இடம், நபருக்கு நபர், விஷயத்துக்கு விஷயம் என்று நிறம் மாற்றத்திற்கு உட்பட்டதேயானாலும், முடிவாய் அது ஒருவருக்கு கொடுப்பதென்னவோ படிப்பினைகளே...!  சியோலிலிருந்து  சிங்கப்பூர் வழியாக சென்னை பயணம்.  சிங்கப்பூரில் வசிக்கும் சகோதரரை சந்திப்பதாகவும் திட்டம்.  இந்த நெடிய பயணத்திலும், எமது மண்ணில் எமது மக்களுடன் கழித்த சில நாட்களிலும்,  எம்மை உற்று நோக்கி சிந்திக்க வைத்த சில நிகழ்வுகளே இந்தப் பதிவு.  இனி பயணத்திலிருந்து துவங்குவோம்....

சில அனுபவங்களுடன் இந்தியா செல்கிறேன். இங்கே நான் சுமந்து செல்வது படிப்பினைகளா என்பதில் எனக்கும் ஐயப்பாடே.!  ஏனெனில் நான் தவறிழைத்து எதையும் கற்றுக் கொள்ளவில்லை.  எனக்கு அறிமுகமானவைகள் எல்லாமே மன்னிக்கவும்....நான் அறிந்து கொண்டவைகள் எல்லாமே எனக்கு புதியவைகளே..!  கற்றுக் கொண்டவைகளே...!  அவற்றை இங்கே எழுத்தாக்கிடவும்  விருப்பமில்லை. அவைகள் தானாகவே இங்கும் அங்குமாய், உண்மைகளும் உதாரணங்களுமாய்,  வெறுப்பும் ஆற்றாமையுமாய்,  ஏக்கங்களும் துக்கங்களுமாய்,  பிதற்றல்களும் பினாத்தல்களுமாய்,  இதுவும் அதுவுமாய், இன்னும் ஏதேதுமாய் என்னையும் மீறி பிறப் பதிவுகளில் வந்தே தீரும். பொறுத்துக் கொள்வீர்களாக..!  அதிகாலையிலேயே ஆயத்தம்.  விமானப் பயணங்கள் எப்போதுமே எனக்கு எரிச்சல்களை தருபவைகளே...இரு விஷயங்களைத் தவிர்த்து..!  ஒன்று, நெடு நாட்களாக படித்து முடிக்கப்படாமல் இருக்கும் நாவலை எந்த தொந்தரவும் இன்றி படித்து முடிக்க நேரம் கிடைப்பது, மற்றொன்று...., நான் விரும்பும் உலகத் திரைப்படங்களை காணும் வாய்ப்பு கிடைப்பது.

'இஞ்சியான்' சர்வதேச விமான நிலையம், சியோல்.  இந்த நிலையத்தின் பிரம்மாண்டம் எப்போதுமே கண்களை விரியச் செய்யும்.  போர்டிங் சமயத்தில் தான் அந்த தம்பதியரை கண்டேன்.  நாற்பதுகளின் இறுதியில், வட இந்தியர்கள். படித்த மேட்டுக் குடி மக்கள்.  வசதியின் வனப்பு அவர்களின் சரீரத்தில் தங்க ஆபரணங்களாய் பளபளத்துக் கொண்டிருந்தன. ஆண் சினகேப் புன்னகையொன்றை உதிர்த்தார். எனக்கு பின்னிருக்கைகளில் தான் இருவரும் அமர்ந்திருந்தனர்.  ஆரம்பத்திலிருந்தே பெண்மணி தொலைப்பேசியில் உரையாடிக் கொண்டே இருந்தார். பயணியர் பாதுகாப்பு அறிவிப்பில் கைப்பேசிகளை அணைக்குமாறு வேண்டுகோள் விடுத்த பிறகும் தொடர்ந்தன உலகின் அதி முக்கியம் வாய்ந்த அவருடைய "ஹேவ் யு டன் யுவர் ப்ரேக் பாஸ்ட்..?"  உரையாடல்கள்.  விமானம் ஓடு பாதையை நோக்கி நகர ஆரம்பிக்க இருந்ததால், பணிபெண் தேவதை ஒருவர் அவரை அணுகி கைப்பேசியை அணைக்குமாறு தன் அதி சிவந்த உதடுகளின் வழியே ஆங்கிலத்தை உதிர்த்து விட்டுச் சென்றார்.  பெண்மணியின் உரையாடல்கள் நின்ற பாடில்லை. விமானம் ஊர்ந்து மெல்ல நகரத் தொடங்கியது. கைப்பேசியை கைவிடாத நம் கதாநாயகியை கண்ட அப்பணிப்பெண் மறுபடியும் அருகே வந்து வேண்டுகோள் விடுத்துச் சென்றார். நமக்கே எரிச்சலாக இருந்தது.  "டோன்ட் யு ஹேவ் சென்ஸ்? சுவிட்ச் ஆப் யுவர் ப்ளடி மொபைல்..!  யு மே நாட் கேர் பார் யுவர் சேப்டி, பட் வி கேர் அவர்ஸ்...!", வார்த்தைகள் சீறிப் பாய்ந்து அந்தப் பெண்மணியை துளைத்தன அவருக்கு நேர் இடது திசையில் அமர்ந்திருந்த வெள்ளைக்கார இளைஞனிடமிருந்து.  பிரிட்டிஷ்  அஸ்ஸன்ட்...!  கைப்பேசி உரையாடல் அதி விரைவாக துண்டிக்கப்பட்டது.  தம்பதியரால் பதில் பேச முடியவில்லை.  ஆண் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன.  எனக்கு உள்ளூர பெரு மகிழ்ச்சி.  பின்னர் தொடர்ந்த பயணத்தில் தன் கோபத்தை பலவிதமாய் அப்பணிப்பெண்ணை அலைக்கழிப்பதிலும், அதட்டலாய் ஏவல் இடுவதிலும் வெளிப்படுத்தினார் அந்தக் கனவான்.  தன் கோபத்தை எங்கேயாவது, யார் மீதாவது  இறக்கி வைத்து விட வேண்டும் நம்மவர்களுக்கு...!  இவர் இட்ட கூச்சல் தாளாமல், கேபின் சீப் வந்து சமாதான படுத்த முயன்றார் இவரை.   தம் தவறுகளை திருத்திக் கொள்ள முயல்வதே இல்லை நம்மில் சிலர்.  இவர்களை போன்றவர்களால் தான் சில சமயங்களில் ஒட்டு மொத்த இந்தியர்களும் ஒழுங்கீனர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். அறிவின் முதிர்ச்சி நடத்தையின் வெளிப்பாடே...!

சிங்கப்பூர் சங்கி விமான நிலையம். டெர்மினல் மூன்று மிகவும் வசீகரம். ஏதோ தோட்டத்தில் நடந்து செல்வது போன்றதோர் உணர்வு. இந்த டெர்மினல் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்த சில நாட்களில் இதைப் பற்றி ஒரு டாகுமெண்டரி நிகழ்ச்சியை டிஸ்கவரி சேனலில் கண்டு மலைத்தேன். அதை விட நேரில் பேரழகுடன் இருக்கிறது. ஏற்கனவே சில முறை சென்றிருந்தாலும், இம்முறை தான் சில மிக அழகான தமிழ் பெண்களை தகவல் மைய அதிகாரிகளாக கண்டேன்.  மகிழ்ச்சியில் துள்ளியது மனம். கடலை சாகுபடி செய்ய எத்தனித்து நான் ஒருவரை அணுக, கேட்ட கேள்விகளுக்கு தெளிவாக, கை பிடித்து அழைத்து செல்லாத குறையாக அவர் அளித்த விளக்கங்கள் மூலமாகவும்,  தன் அழகிய மந்திரப் புன்னகையாலும் என் ஜொள்ளருவியை   அணை கட்டி தேக்கி நிற்க வைத்தார்.  அவ்விடத்தை விட்டு நகரும் முன் அவர் கண்கள் சிமிட்டி பை சொன்னது, வாயை தொடச்சிக்கோ...என்று சொல்வது போலவே இருந்தது.  ஹீ...ஹீ...கானக்குயில்கள் கூவினாலே அழகு தான் போங்கள்....!  சிங்கப்பூர் மட்டுமல்ல, சிங்கைத் தமிழ் பெண்களும் சிங்காரமே...!  தமயனை சந்தித்துவிட்டு சென்னை செல்லும் ப்ளைட்டில் அமர்ந்தேன்.  என்ன ஆச்சரியம்...! அதே முதிய ஜோடி என்னை கடந்து சென்றது...!

காமராஜ் சர்வதேச விமான நிலையம், சென்னை. வந்தாச்சு...சென்னை..!  விமான நிலையம் 'சர்வதேச' என்ற வார்த்தையை தாங்கிப் பிடிக்க பல விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டி இருப்பது அப்பட்டமாக தெரிந்தது.  சிங்கப்பூரில் தங்கள் உடைமைகளை தாங்களே காத்திருந்து எடுத்து வந்த ஜோடி, சென்னை விமான நிலையம் வந்து இறங்கியதும், தங்கள் லக்கேஜ்களை எடுக்க ஒருவரை அமர்த்தி எடுக்கச் செய்து, அவருக்கு ஐம்பது ரூபாய் பணத்தையும் திணித்தது.  டாலர்களாய் சம்பாதித்து  ரூபாய்களாய் செலவழிப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லைதான்...ஆனால், இந்திய மண்ணை மிதித்த அடுத்த நிமிடமே இவர்களை ஆண்டான்-அடிமை எண்ணம் பற்றிக்கொள்கிறதே அதன் ரகசியம் தான் நமக்கு புரிவதே இல்லை.

சென்னை நகர் முழுக்க அழுத்தமாய் பதிந்திருக்கும் குப்பை கூளங்களும், சாலையோர  சாக்கடைகளும்,  துர்நாற்றங்களும்  பல வருடங்களாய் வாய் நோக நாம் சொல்லிக் கொண்டிருக்கும் சிங்காரம்  எங்கே என்று ஏங்கி தேட வைத்தது.  அஷோக் பில்லர் அருகில் ட்ராபிக்கில் சிக்கி எமது வாகானம் நின்றது.  இடது பக்கத்தில் சீருடையில் ஒரு ஆட்டோக்காரர். கைகளில் வைத்து எதையோ சாப்பிட்டுக் கொண்டிருந்தார். சாப்பிட்டு முடித்ததும், அந்தக் காகிதத்தை அப்படியே கீழே போட்டு விட்டு  கைகளை தன் நீண்ட நாவினால் நக்கி, நக்கி தூய்மை படுத்தினார்.  எலி வலையில் இருந்து மலைப் பாம்பு சீறியது போல் இருந்தது அக்காட்சி. பின்னர், கைகளை தூரமாக நீட்டி வைத்து, நன்றாக உதறிவிட்டு, பின் தன் காக்கி சீருடையில் துடைத்துக் கொண்டார். என்ன ஒரு தூய்மை உணர்வு, பாருங்கள்...!  கரங்களை தூய்மையாய் வைத்திருப்பதில் தான் எத்தனை அக்கறை.  வியந்து தலை சுற்றிப் போனேன். மஞ்சளரைத்த மாவு மில் போல்  இருந்த தன் வாயை விரியத் திறந்து  இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த என்னை பார்த்து ஒரு மந்தகாசப் புன்னகை வேறு. அட ராமா...! அவர் உண்டது மசாலா தோசையாக இருக்குமா...இல்லை வாழைக்காய் பஜ்ஜியாக இருக்குமா...?  விட்டுத் தள்ளுங்கள்....!  அவர் வாயிலும், வாய்க்குள் இருக்கும் வஸ்திலும் நமக்கென்ன ஆராய்ச்சி...!

பின் ஒரு நாள் நண்பர் ஒருவரை பார்க்க வடபழனி சென்று விட்டு, வீடு திரும்ப ஏழைகளின்  ஏர்ப்போர்ட்டாம் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு சென்றிருந்தேன்.  வழி நெடுக பழரசாமாய் பருகியதால், இயற்கை அழைக்க அருகிலிருந்த ஆண் கழிவறைக்கு  நடையை கட்டினேன். கடவுளே...! அருகில் செல்லவே முடியவில்லை. அந்தளவு துர்நாற்றம் குடலை புரட்டியது. நான் விழி பிதுங்கி, நெஞ்சடைத்து தலை தெறிக்க ஓடி வருவதை கண்ட ஒரு நடுத்தர வயது மகளிரணி 'கெக்களிக்கே' என்று நக்கல் நகைப்பு நகைத்தார். எனக்கு மானமே போய்விட்டது போல் இருந்தது இந்த ஆம்பளப் பயபுள்ளைகளால...! அந்த வசந்த மாளிகை அருகிலேயே  ஒருவர் சுடச்சுட சப்பாத்தி குருமாவை ஓப்பன் அட்மாஸ்பியரில்  வைத்துக்கொண்டு  உறுமி அடித்துக் கொண்டிருந்தார். வாழ்க... சுத்தம்(!) சோறு என்ன...சப்பாத்தி குருமாவே போட்டு விட்டது...!  மறைந்த தலைவர்களுக்கு சிலை திறப்பதிலும், மணிமண்டபம் அமைப்பதிலும் காட்டும் அக்கறையில் சிறிதளவாவது, பல மாநில மக்கள் வந்து செல்லும் ஒரு மாநகரத்தில் கழிப்பிட வசதிக் குறைவுகளை நீக்கி சுகாதாரத்தை பேணிக் காக்கும் நடவடிக்கைகளில் காட்டினால் வளமான, நோயற்ற வருங்கால தமிழகத்தை நாம் அடையலாம்.   இந்த விஷயத்தில், பெண்களின் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியது...! 


இன்றைய இளைஞர் சமுதாயத்தை ஜனநாயகத் தூண்களில் ஒன்றான பத்திரிகைகள் வழி நடத்தும் விதத்தையும் பார்ப்போமே...!  இப்போது,   "நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா..!  அஜீத்தும், விஜய்யும் ஒன்றாக அரசியல் கட்சித் தொடங்குவார்களா...!", போன்ற அதி முக்கிய,  அத்தியாவசிய வாதத்தை சுற்றித்தான் பத்திரிகைகள் தங்கள் தர்மத்தை நிலை நாட்டி கொண்டிருக்கின்றன.  ஒரு கல்லூரி மாணவனை அழைத்து துனிசியாவில், எகிப்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது தெரியுமா என்று கேட்டேன்,  நீங்கள் சியோலில்-அரபு தேசத்தில் வசிப்பதால் உங்களுக்கு தெரியும், எங்களுக்கு எப்படி தெரியும் என்று ஒரு பொது அறிவு கொக்கி போட்டதில் விழுந்தவன் தான்....., எழுந்திருக்க இரண்டு நாள் ஆனது..!   சரி அத விடு, வெளிநாட்டு பிரச்சினை,  "S-Band  விவகாரம் என்னவென்று தெரியுமா?", என்று கேட்டால், நான் ஏதோ நம் முதல்வர் மனம் கவர் நடிகை நமீதா தழைய, தழைய சேலை கட்டி வருகிறார் பார்த்தாயா..என்று கேட்டதைப் போல் ஒரு பேரதிர்ச்சி பார்வை ஒன்றை விடுத்தார்.  "சரி போ ராஜா...!  உன் தலைவன் கட்-அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்ய டைம் ஆயிட்ச்சு...", என்று அவர் தன் கடமையாற்ற வழி விட்டு விலகி நின்றேன். 



விஜய்க்கு வெண்கல சிலை வைக்கலாமா, அஜீத்திற்கு அலுமினிய சிலை வைக்கலாமா என்று ஒரு கூட்டம் சி.எம். கனவுகளில் மிதக்கும் சில நடிகர்கள் பின் அணிவகுக்க, சொந்தமாக நாலு வார்த்தை கோர்வையாக பேசத் தெரியாத,  இந்தியாவின் கடந்த இரண்டு ஆண்டு நிகழ்வுகள் பற்றிக் கூட அறிவற்ற அந்நடிகர்களை அரசியலுக்கு அடையாளம் காட்டுவதிலேயே குறியாய் இருக்கின்றன நம் பத்திரிக்கைகள்.  ரசிகர்கள் என்ற பெயரில் லஞ்சத்தாலும், ஊழல்களாலும் எலும்பு கூடாகி அழிந்து கொண்டிருக்கும் தேசத்தை பற்றிய எந்த சுரணையுமின்றி படிப்பிலும் கவனமின்றி பெருங்கூட்டம் ஒன்று தறிகெட்டு அலைந்து அழிந்து கொண்டிருக்கிறது.  இவர்களே, இந்தக் கூட்டமே  இன்று மிகச் சுலபமாக பலரால் வீழ்த்தப்படுகிற கூட்டம்.  முதலில் ரஜினியை மக்கள் அரசியலுக்கு அழைக்கிறார்கள் என்று கூவிக் கூவியே காசு பார்த்த பத்திரிக்கைகள்,  பின்னர் விஜயகாந்த்தை முற்றுகையிட்டன.  இப்போது விஜய், அஜீத் என்று தமிழனை ஆள்வதற்கு தகுதி என்னவோ நடிகர்களிடம் மட்டும் தான் கொட்டிக் கிடைப்பதைப் போல் எப்போ வருவீங்க..எப்படி வருவீங்க...எந்த சந்து வழியா வருவீங்க...எந்த பஸ்ஸ  பிடிச்சி வருவீங்க... என்று தூண்டிவிட்டு  தங்கள் பணியை செவ்வனே செய்து கொண்டே இருக்கின்றன.  மக்களை இப்படி சூன்யம் வைக்கப்பட்டவர்கள் போல் வைத்திருப்பதில் இப்பத்திரிக்கைகள் பெரும் முனைப்புடன் இருக்கின்றன.  இதுவரை எதெதற்கோ முன்னுரைகளையும், விளக்கவுரைகளையும் முழம் நீளத்திற்கு வெளியிட்டு கொண்டிருந்த பத்திரிக்கைகள்,  மக்களுக்கு ஒரு நல்ல மனிதரை அடையாளம் காட்டி இருக்கின்றனவா என்றால், ஏமாற்றமே...! ஒவ்வொரு பத்து வருடமும் ஒரு தலைமுறை என்று கணக்கில் கொண்டால், எத்தனை புதிய தலைமுறைத் தலைவர்களை நாம் உருவாக்கி இருக்கிறோம் என்பதில் நமக்கு தெரிய வரும் கடந்தாண்டுகளில் பத்திரிக்கைகள் புரிந்த பெருந்தொண்டு..!  இவைகள் நல்ல தலைவர்களை, மாநிலங்களை, தேசத்தை உருவாக்க வல்ல செய்திகளை எங்கோ ஒரு மூலையில்,  பூதக் கண்ணாடி துணை கொண்டு தேடும் இடங்களில் அச்சிட்டு, இது போன்ற தேசத்துக்கு தேவையான நமீதா ரக செய்திகளை, சேவை மனப்பான்மையுடன் முதல் பக்கத்திலும், நடுப்பக்கத்திலும் இட்டு சமுதாயத்தின் அறிவுப் பசியைத் தீர்க்கின்றன. அடுத்த முறை இந்தியா திரும்புகையில்,  

இன்று....
புலிவேட்டையில்....,  
2016 இல்....,
தங்கத் தளபதி 'சஞ்சய் ஜோசப் விஜய்' கோட்டையில்...!"

என்ற செய்தி நம்மை வரவேற்றாலும் வரவேற்கலாம்.  எவ்வளவோ தாங்கிவிட்டோம்,  இத்த தாங்கமாட்டோமா...!  இரும்பு இதயம் வேண்டும் சகோதரா...!  திடமாய் இரு...! வாழ்க... பாரத சமுதாயம்...!

சில நல்ல விஷயங்கள் கண்களை, செவிகளை மற்றும் இதயத்தை குளிரச்செய்தன.  SBI  இன்சுரன்ஸ் விளம்பரத்தில் தெரியும் "அந்தக் குட்டி குட்டி சந்தோஷத்தில் சொர்க்கம்",  பொது கழிவறைகளை சுத்தபடுத்த "Domex" சமூக அக்கறையுடன் எடுத்த இனிஷியேடிவ், பாவை பள்ளியின் 'வீ கிரியேட் லீடர்ஸ்' விளம்பரம், ஹேரிஸ் ஜெயராஜ் இசையில்-கேட்ட முதல் தடவையே மனதை சில்லிடச் செய்த நெஞ்சில் நெஞ்சில் பாடல் 'எங்கேயும் காதல்' திரைப்படத்திலிருந்து என்று அனைத்துமே அருமை...!  பல முறை பார்த்து, கேட்டு மகிழ்ந்தேன்.  நீங்களும் பார்த்திருப்பீர்கள்..., கேட்டிருப்பீர்கள்.  மகிழ்ந்த அவைகள் அனைத்தையும் விட முக்கியமானாதாக நான் கருதும் ஒரு சந்திப்பை, உரையாடலை மட்டுமே தங்களிடம் பகிர விரும்புகிறேன்...!  இதோ அந்த நிகழ்வு...!

ஒரு முறை, பிரதி எடுக்க அருகிலிருந்த கடைக்கு சென்றேன். கடை உரிமையாளர் ஐம்பதுகளை கடந்த பெண்மணி. பல வருடங்கள் கழித்து சந்தித்ததால், சில மணி நேரங்கள் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டோம். தூய்மையின்மை, லஞ்சம், அக்கறையின்மை, என்று நம் மக்களின் குணங்களை பற்றி திரும்பியது பேச்சு...!  மக்கள் தொகைப் பெருக்கமே இவை எல்லாவற்றிற்கும் மூலம் என்றார் அப்பெண்மணி.  "நானும் நம்முடைய மக்கள் தொகையைத் தான் காரணமாக எண்ணியிருந்தேன். ஆனால் மக்கள் தொகை பெருக்கம் என்பது ஒழுக்கத்தின் அளவீடாக ஆக முடியாது என்ற உண்மையை உணர்ந்து பின்னர் நானே என் எண்ணத்தை மாற்றி கொண்டேன். மக்கள் தொகை பெருக்கம் என்பது மாற்றத்திற்கான ஒரு இடைஞ்சல் என்று வேண்டுமானால் கூறலாம். அதுவே முழு காரணமாக முடியாது.  இந்தியாவை உள்ளிருந்து,  ஒரு அமைப்பின் அங்கமாய் பார்த்தலை விட, அதை வெளியிலிருந்து பார்த்தால் தான் நாம் எவ்வளவு பின்தங்கி ஒரு காட்டுமிராண்டி வாழ்க்கை வாழ்கிறோம் என்பது தெரியும். வல்லரசு ஆவதெல்லாம் அடுத்த விஷயம், முதலில் நாகரீகமாக வாழ கற்றுகொள்வோம் நாம்.  இந்த தேசிய குற்றங்களின் தொடக்கம் தனி மனித ஒழுக்கமின்மையே ஆகும்.....! ", என்று கூறி அவ்வாதத்தில் என்னிலையை நான் விளக்கினேன். 

அதை பெரிதாக ஆமோதித்த அவர்,  உங்களைப் போன்று வெளிநாட்டில் முன்னேறிய வாழ்வை அனுபவிப்பவர்கள், NRI'கள் இங்கே பின் தங்கி இருக்கும் மக்களின் வாழ்வை வளமாக்க என்ன பெரிதாக செய்கின்றீர்கள்...?  இங்கேயே படித்து பட்டம் பெற்று வெளிநாட்டில் டாலர், டாலர்களாக சம்பாதித்து, அவர்களின் இயலாமையை சுட்டி, சுட்டி குற்றம் சுமத்தும் நீங்கள் அவர்கள் வாழ்வில் மேன்மையுற இவை போன்ற வார்த்தைகளை தவிர ஆக்கப்பூர்வமாய் என்ன கொடுத்திருக்கிறீர்கள்....? பல ஏற்ற இறக்கங்களை கண்டு விட்ட பழுத்த  அனுபவசாலியின் கேள்விக்கணை.

முகத்தின் குறுக்கே சாட்டையடி...!  பதிலில்லை...என்னிடம்...! தேடலில் நான் இப்போது...! 


(படம் தந்த கூகுள்' க்கு நன்றி)
--விளையாடும் வெண்ணிலா....


12 கருத்துகள்:

சக்தி கல்வி மையம் சொன்னது…

Nice.,

http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_25.html

test சொன்னது…

அருமையான பதிவு பாஸ்! ஆனால் நீளமாக இருந்தது போன்ற உணர்வு!

ஆனந்தி.. சொன்னது…

சதீஷ்....ம்ம்...உங்கள் அனுபவங்கள்,உங்கள் எண்ணங்கள்,உங்கள் ஆதங்கங்கள்...எல்லாத்தையும் இந்த பதிவின் மூலாமாய் என்னாலே ஓரளவு உணர முடியுது...
1 .விமானத்தில் நடந்துகிட்ட அந்த பெண்மணி மற்றும் அவர் கணவர்...: ம்ம்...சில விவஸ்தை கெட்ட மனிதர்களும் இருக்கிறாங்க இந்த மாதிரி...இது கொழுப்பு சதீஷ்...நீங்க சொன்னது போலே இந்த மாதிரி மனிதர்களாலே கூட நாட்டின் மற்ற மனிதர்களை பற்றி கெட்ட இமேஜ் வந்திருது..

2 . சிங்கை பெண்கள்..சிங்கை விமான நிலையம்...அது நல்லா இருந்தது...ஜொள்ளு அதிகமா அங்கே நீங்க விட்டு இருந்தால் கூட அதையும் குப்பை லிஸ்ட் இல் சேர்த்து நீங்க பைன் அழுதுட்டு வந்துருக்கணும்..நல்லவேளை அதுக்கு அணை போட்டிங்க..உங்கள் பர்ஸ் பிழைச்சது...:)))

3 . சென்னை atmosphere ...ம்ம்...சென்னை எனக்கு எப்பவாது தான் பரிச்சயம்...ஆனால் சென்னை மட்டும் தான் அப்படி இல்லை...தமிழ்நாட்டில் எல்லா ஊரும் அப்படி தான்..நான் பார்த்தவரை பெங்களூர் பரவாயில்லை...பரவாயில்லை மட்டும் தான் சதீஷ்...ஆனால் அங்கேயும் தமிழர்கள் இருக்கும் ஏரியா சத்தியமா dirty தான்..:)) நம்ம ஸ்டைல் ஆ அங்கேயும் காமிக்கணும் தானே...:))

4 .நீங்க ஆதங்கப்பட்ட மாதிரி நானும் கூட என் பதிவில் ஆதங்க பட்டு இருக்கேன்...அந்த பொது அறிவு ரொம்ப lack ஆ நம்ம ஆளுங்க இருக்கிறதை பத்தி...

http://ananthi5.blogspot.com/2011/02/blog-post_18.html

5. அப்புறம் அந்த கடைசி வரிகள்...ம்ம்...அந்த அம்மா சொன்னது கூட ஒரு வகையில் உண்மை தானே சதீஷ்...குறை சொல்லிட்டு போகும் NRI இன் வருத்தங்கள் தற்காலிகம் தானே...மீண்டும் வெளிநாடு போய்விட்டால் இந்த ஊரு..இந்த nuisance ..இந்த குப்பை..இந்த அரசியல்..இந்த மக்கள் பத்தி என்ன கவலை....ம்ம்....

பதிவு நீளம் என்றாலும் கொஞ்சம் எடிட் பண்ணி இருந்தால் கூட இந்த உணர்வை வரவழைச்சிருக்க முடியுமான்னு தெரியலை சதீஷ்...அருமையான பதிவு....

Sathish Kumar சொன்னது…

//வேடந்தாங்கல் - கருன் சொன்னது…
Nice.,//

வழக்கம் போலவே வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, கருண்...!

Sathish Kumar சொன்னது…

//ஜீ... சொன்னது…
அருமையான பதிவு பாஸ்! ஆனால் நீளமாக இருந்தது போன்ற உணர்வு!//

நன்றி ஜி...!, டைப் செய்துவிட்டு பார்த்தால், கொஞ்சம் நீளமாத்தான் தோனுச்சு..! சுருக்கமா எழுத முயற்சிக்கிறேன் நண்பா...!

Sathish Kumar சொன்னது…

//ஆனந்தி.. சொன்னது…
1) பதிவு நீளம் என்றாலும் கொஞ்சம் எடிட் பண்ணி இருந்தால் கூட இந்த உணர்வை வரவழைச்சிருக்க முடியுமான்னு தெரியலை சதீஷ்...அருமையான பதிவு...
2)அந்த அம்மா சொன்னது கூட ஒரு வகையில் உண்மை தானே சதீஷ்...குறை சொல்லிட்டு போகும் NRI இன் வருத்தங்கள் தற்காலிகம் தானே...மீண்டும் வெளிநாடு போய்விட்டால் இந்த ஊரு..இந்த nuisance ..இந்த குப்பை..இந்த அரசியல்..இந்த மக்கள் பத்தி என்ன கவலை....ம்ம்...//

வாங்க ஆனந்தி...!,
1)எனது எண்ணம் உங்கள் எழுத்துக்களில், நன்றி...!
2)தற்போதைய உண்மை நிலவரத்தை தான் அந்தப் பெண்மணியும் கேட்டார், நீங்களும் குறிப்பிட்டிருக்கிறீர்கள்..! தேடுகின்ற, விரும்புகின்ற மாற்றம் நம்மில் இருந்துதான் தொடங்க வேண்டும் இல்லையா...! ஒரு சிறு புல்லாய், துரும்பாய் சிறிய மாற்றத்தையாவது என்னால் கொடுக்கமுடியும் என்ற நம்பிக்கையில் நான்...!

குறையொன்றுமில்லை. சொன்னது…

பதிவு நீளமாக இருந்ததால் தான் சொல்லவந்த்தை விளக்கமாகச்சொல்லமுடிந்தது.

Sathish Kumar சொன்னது…

//Lakshmi சொன்னது…
பதிவு நீளமாக இருந்ததால் தான் சொல்லவந்த்தை விளக்கமாகச்சொல்லமுடிந்தது.//

கருத்தையொத்த கருத்துரைக்கு மிக்க நன்றிம்மா...!

சௌந்தர் சொன்னது…

ஆனந்தி அக்கா சொல்லி தான் இந்த ப்ளாக் வந்தேன் முதலில் என்ன பெரிய பதிவு என்று பார்த்தேன் படிக்க ஆரம்பித்தேன் ...இதுவரை 5 பதிவுகளுக்கு மேல் படித்து கொண்டு இருக்கிறேன்...உங்கள் எழுத்திலே தெரிகிறது...சமூகஅக்கறை நிறைய இருக்கிறது.....இன்னும் உங்களிடம் நிறைய எதிர்பார்கிறேன் நண்பா..!!!

Sathish Kumar சொன்னது…

வாங்க சௌந்தர்...! உங்க கருத்துக்கு மிக்க நன்றி...! ஆனந்தி எப்போதுமே நல்ல விஷயங்களையே பகிர்ந்துப்பாங்க...! இப்போ உங்க அறிமுகம் எனக்கு கிடச்ச மாதிரி....!

ஆனந்தி.. சொன்னது…

http://blogintamil.blogspot.com/2011/04/blog-post_06.html
சதீஷ்...வலை சரத்தில் இன்று தம்பி சௌந்தர் உங்களை அறிமுகபடுத்தியது கண்டு மிக்க மகிழ்ச்சி..நிறைய எழுதுங்க....

Sathish Kumar சொன்னது…

அப்படியா சௌந்தருக்கு எனது நன்றிகள்...!

உங்கள் அன்புக்கும் அக்கறைக்கும் வழக்கம் போல தான், நன்றிகள். கட்டாயம் சீக்கிரம் எழுதறேன்...!

கருத்துரையிடுக