புதன், 5 ஜனவரி, 2011

பார்ட்டி...பார்ட்டி...பார்ட்டி...!
சோஜுவும் வாத்துக்கறியும்...! (பகுதி-1)

லூசு பார்ட்டி, கேனப் பார்ட்டி, கிறுக்கு பார்ட்டி, நக்கல் பார்ட்டி, நமைச்சல்  பார்ட்டி என்று மனிதப் பார்ட்டிகளை பற்றிய பதிவு இல்லைங்க இது.


இந்தப் பதிவு என்னுடைய அலுவலக பார்ட்டி கொண்டாட்டங்களைப் பற்றியது.  நானும் ஒரு கடமை தவறாத, கண்ணியமிக்க, கணினியில் இருந்து கணப்பொழுதும் கண்ணசையா பொறிஞர் (என்னுடைய சர்டிபிகேட்'ல அப்படிதாங்க போட்டிருக்கு) ஆன பிறகு எனது விருப்பம், ஆசை, எண்ணம் இது எதற்கும் இடமளிக்காமல், எனது நண்பர்களும், உயரதிகாரிகளும் (இந்தத் தொழிலதிபருங்க தொல்லை தாங்க முடியலப்பா..!)  கருணா காரூண்யமின்றி  தர, தரவென்று இழுத்துச் சென்று கும்பலோடு கும்பலாக கும்மி அடிக்க வைத்து, சிரிப்பா சிரிச்சிப் போன மிகச் சில பார்ட்டிகளை பற்றியது தாங்க இந்தப் பதிவு.

சியோல் வந்து பணியைத் தொடங்கிய ஆரம்பத்தில், துறைத்தலைவர் அளித்த "New Joiners" வரவேற்பு பார்ட்டி தான் என்னுடைய முதல் பார்ட்டி அனுபவம் கொரியாவில். இங்கே மற்ற நிறுவனங்களை பற்றி எனக்கு தெரியாது, ஆனால் நான் பணி புரியும் நிறுவனத்தில் பெரும்பாலும் சராசரியாக வாரம் இரு பார்ட்டி கொண்டாட்டங்களை சந்தித்தே தீர வேண்டியது இன்றியமையாத, தவிர்க்க இயலாத விஷயமாகும். சரி, இப்போது பார்ட்டிக்கு போவோம்.

மாலை ஆறு மணிக்கு பார்ட்டி துவங்கும் என்று முன்னரே எனக்கு தெரிவித்தாகிவிட்டது. இருந்தாலும் நான் ஒரு வித பயத்தில் அதற்கான முஸ்தீபுகளில் ஆர்வமின்றி கிடா வெட்டுக்கு வந்த மந்திரித்து விடப்பட்ட ஆடு மாதிரி அப்படியே பம்மிக் கொண்டு அமர்ந்திருந்தேன்.  ஏனென்றால் பல வருடங்களாக இந்நாட்டிலேயே பணியாற்றி வரும் சக இந்திய அண்ணன்மார்கள் "ராஜா பாத்து,  இவனுங்க ஆச்டோபசு, மீனு, நண்டு, எறா'ன்னு  எல்லாத்தையுமே உயிரோட சாப்பிடுவானுகப்பா, அது மட்டுமா மாடு, பன்னி, வாத்து, நாய்'ன்னு ஒன்ன விட மாட்டனுங்க"  என்று தங்களின் கொரிய பார்ட்டி அனுபவங்களை அளவுக்கு மீறி என் உட்செலுத்தி விட்டிருந்தார்கள்.

மிஸ்டர் கிருஷ் , மிஸ்டர் கிருஷ்.. என்று இரண்டு முறை சத்தம் வர வேண்டா வெறுப்பாக தலையை திருப்பி சத்தம் வந்த திசையை நோக்கினேன். என்னையும் மீறி என் கண்கள் அகல விரிய; கால்கள் தரையில் உறுதியாக பதிய முயன்றன. இருக்கையை விட்டு எழுந்து நின்றே விட்டேன். ஏனெனில், என் பின்னே என்னுடைய துறைத் தலைவரும், அவர் பின்னே மொத்த டீமும் நின்று கொண்டிருந்தார்கள் என்னை பார்த்து புன்னகைத்தவாறு. சிக்கிச்சிடா சிறுத்த..! இன்னைக்குன்னு பாத்து பலத்த சூறாவளியுடன் பாசமழை கொட்டுதே என்று நினைத்தவாறே புறப்பட்டேன்.

எங்கள் குழுவில் இந்தியாவிலருந்து நானும், பிலிப்பின்ஸிலிருந்து (அதாங்க தமிழ்'ல 'பிலிப்பைன்ஸ்') ரயான் என்ற நண்பரும் தான் எக்ஸ்பாட் பொறிஞர்கள்.  நான் நம் பழக்க தோஷத்தில் 'பிலிப்பைன்ஸ் பிலிப்பைன்ஸ்' என்று கூவிக் கொண்டே இருந்ததை பொறுக்க மாட்டாமல் ரயான்,  "சதீஷ், இட்ஸ் பிலிப்பின்ஸ், நாட் பிலிப்பைன்ஸ்" என்று மகுடி வாசித்து திருத்தினார். நானும் என்னை திருத்திக் கொண்டேன்.

ஆனால் தம் பிடிச்சு எத்தனை தடவை கொரிய நண்பர்கள் காதில் நான் 'தவில்' வாசிச்சாலும் அவர்கள் இந்தியாவை 'இந்தோ' என்று விளிப்பதை என்னால் மாற்றவே முடியவில்லை. கொரியர்களின் இந்த பழக்கமும் நம் இமயமலை மகான் உரைத்த மகோன்னத மந்திரச் சொற்களில் (அதாங்க.. "இந்த தும்மலு, விக்கலு, இருமலு இதெல்லாம் எப்போ வரும், எப்படி வரும்னு யாராலையும் சொல்ல முடியாது. வந்தாலும் நிறுத்த முடியாது, வரலன்னாலும் ஏன்னு கேக்க முடியாது") உள்ள தும்மல், விக்கல் இத்யாதிகளும் ஒரே வகையறாக்களை சார்ந்ததாக இருக்குமோ என்பது எனது ஐயப்பாடு.

நண்பர் ரயான் இருக்கிறாரே, அவர் பார்ப்பதற்கு அப்பொழுது தான் அமுக்கி பிடித்த 'அரிசிக் கொழுக்கட்டை' மாதிரியே ப்ரெஷாக இருப்பார். சைஸ்'ல இல்லைங்க, ஷேப்'ல. அவருக்கு நான் வைத்திருக்கும் செல்லப் பெயர் "அரிசிமூட்ட அப்புக்குட்டி".  ஏனென்றால் அவர் முதுகு ஐம்பது கிலோ அரிசி மூட்டை மாதிரியே, பெரிய சமவெளி போன்று இருக்கும்.  இந்த பெயர் காரணத்தை ஒரு தடவை அவரிடம் கூறிய போது, அவர் "நான் ரெகுலரா ஜிம் போறதுனால தான் இப்படி பாடிய மெயின்டைன் பண்ண முடியுது" என்றார் படு சீரியசாக. நானும், அவரிடம் "எங்கள் ஊரிலும் உங்களை மாதிரி உசிலைமணி, குண்டு கல்யாணம், சின்னவனே, பெரியவனே" என்று நிறைய பாடி பில்டர்ஸ் இருக்கிறார்கள் என்று அவரை விட முகத்தை மட்டும் சீரியசாக வைத்துக்கொண்டு சொன்னேன்.  வழி நெடுக நம் 'அப்புக்குட்டி' நன்றாக, முனை தீட்டப்பட்டு, அதிகூரான தனது நாவன்மையால் என்னை வெட்டி வெட்டி சாய்த்துக் கொண்டே வந்து கொண்டிருந்தார். இவர் ஏன் என் கழுத்தின் மேல் இந்த குத்தாட்டம் போடுகிறார் என்று எனக்கு விளங்கவே இல்லை.

நான் ஒரு 'டீடோடலர்' (நெசமாத்தான் நம்புங்க) என்பதையும், இந்திய கோழிகளையும், மீன்களையும் என் தாய் கைச் சமையலில் ரசித்து ருசித்ததை தவிர வேறு புலால் உணவுகளை இம்மியளவும் தீண்டாத 'தாவிரப் பிராணி' என்பதையும் என்னிடமிருந்து அறிந்து கொண்டார்.  தானும் அப்படிதான் என்று அழுத்தம் திருத்தமாக எனக்கு ஒரு செய்தியும் கொடுத்தார், அப்புக்குட்டி. மேலும், தான் கொரிய உணவுகளில் முற்றிலும் விருப்பமில்லாதவன் என்றும், மது பழக்கத்தையும் கைவிட்டு விட்டதாகவும் என்னிடம் நான் கேட்காமலே ஒரு தன்னிலை விளக்கத்தையும் தரத் தவறவில்லை பல வருடங்களாக இந்நாட்டில் பணிபுரியும் அவர்.

 "இந்தியா பிரிட்டனுடைய காலனி நாடாக இருந்தது இல்லையா, ஆனால், பிலிப்பின்ஸ் அமெரிக்காவின் காலனி நாடாக இருந்தது, அதனால் தான் எங்கள் பெயர்கள், வாழ்க்கைமுறை எல்லாம் வெஸ்டர்ன் ஸ்டைல்ல இருக்கிறது", அவர் கொத்திய கொடூர கொத்துகளில் இதுவும் ஒன்று. அவருக்கு தன் நாடு அடிமை படுத்தப்பட்டது தற்போதுள்ள ஒரு கனவு தேசத்தினால் என்பதில் அவ்வளவு பெருமை. நீங்களே சொல்லுங்கள் நண்பர்களே, செருப்படியில் என்ன நல்ல செருப்படி, பிஞ்ச செருப்படி.ரெஸ்டாரண்டை அடைந்தாகி விட்டது. ரெஸ்ட் ஹட் போன்றதொரு வசீகர தோற்றப் பொலிவுடனான அலங்காரம் என்னை பெரிதும் கவர்ந்தது. என்ன 'மெனு' என்று நம் அப்புக்குட்டியிடம் கேட்டேன். 'சோஜு', 'ஓடிகோகி' என்றார் கொரிய மொழியில், நான் என்னவோ அம்மொழியில் முனைவர் பட்டம் பெற்றவன் என்ற நினைவில். பின் சுதாரித்தவராய், 'கொரியன் ட்ரடிஷனல் பீர் அண்ட் டக் மீட்" என்று மொழி பெயர்த்தார். கொரிய மொழியில் 'கோகி' என்றால் இறைச்சி/கறி என்று பொருள் படும். இந்த 'கோகி' முன் நாம் எந்த பிராணியை சேர்க்கிறோமா அந்த பிராணியின் இறைச்சி என்று பொருள்படும்.  நம் ஊரில் ஆட்டுக்கறி, கோழிக்கறி என்று கூறுவதைப் போல தான்.   ஓடி (வாத்து),  புல் (பன்றி),  சோ (மாடு),  தாக் (கோழி), கே (நாய்)  என்ற வார்த்தைகளுக்கு பின் கோகி சேர்ந்து வரும் அவ்வளவு தான்.

சரி, பார்ட்டிக்கு வருவோம். நம் அரிசி மூட்டையின் மொழிப்பெயர்ப்பை கேட்ட மாத்திரத்திலேயே எனக்கு தூக்கி வாரிப் போட்டது.  "என்னது வாத்துக்கறியும், பீருமா..? அட கருமாந்திரம் புடிச்சவனுகளா...! இந்த சைவ ஐட்டமான சிக்கன்'லாம் கிடையாதா..என்று கேட்டதற்கு,  "இந்த ரெஸ்டாரன்ட்'ல டக், பிரான் தான் ரொம்ப ஸ்பெஷல்" என்று கூறி மேலும் என் பிராணனை வாங்கியது அரிசிமூட்டை.  இந்த சோஜு இருக்கிறதே, இது கொரியர்களின் பாரம்பரிய மது பானம், 20-45% ஆல்கஹல் செறிந்த பானம்.

நான் திரு திருன்னு முழிச்சிகிட்டு இருக்கும் போதே எங்கள் இருக்கையின் முன் இருக்கும் மேசையில் அகல, கரிய தோசைக்கல் போன்ற ஒன்றில், கொரிய பணிப்பெண் ஒருவர் பெரிய பாத்திரத்தில் தான் கொண்டு வந்த அந்த பச்சை வாத்து மாமிசத்தை அப்படியே குவியலாக கொட்டி விட்டு சென்றார். என்னுடைய இரு விழிகளும் வெளியே தெறித்து வந்து விழுந்து விட்டதை போன்றதொரு உணர்வு எனக்கு. அப்புறம் சில இலை  தழை குவியல்களை கொண்டு வந்து அதன் மேலேயே கொட்டிவிட்டு, என் தொடைக்கு அருகில் தனது கையை கொண்டு வர நான் சடாரென்று என்னையுமறியாமல் அவரது கையை வெடுக்கென தட்டி விட்டேன். கொஞ்சம் பலமாகத்தான். அதற்கப்புறம் தான் மிகப்பெரிய கூத்தெல்லாம் நடந்தது...! ஏற்கனவே பதிவின் நீளம் அதிகமாகிவிட்டதால், அந்த மஹா கூத்தையெல்லாம் அடுத்த பதிவில் பகிர்கிறேன்.


(படம் தந்த கூகுள்'க்கு நன்றி...!! )
--விளையாடும் வெண்ணிலா....

6 கருத்துகள்:

ஜீ... சொன்னது…

Super! :-)

Sathish Kumar சொன்னது…

//ஜீ... சொன்னது…
Super! :-) //

வருகைக்கும் வாழ்த்துக்கும் பல கோடி நன்றிகள் நண்பா...!

ஆனந்தி.. சொன்னது…

ஹ ஹ...ரொம்ப என்ஜாய் பண்ணி படிச்சேன் சதீஷ்...ஆமாம் அதென்ன க்ரிஷ்...சதீஷ் ஐ கூட அப்டி தான் கூப்டுவான்களா கொரியன்ஸ்..?:))

அப்புறம் என்ன தான் சாப்டிங்க? சஸ்பென்ஸ் தாங்கல...:)) ரொம்ப அப்பு குட்டிய கிண்டல் பண்றீங்க...இது நல்லா இல்ல ஆமா...ஹ ஹ..ஆமாம் சதீஷ்...நான் இப்ப அப்புகுட்டியின் தீவிர ரசிகையாக்கும்...ஹ ஹ...அதுவும் அவர் தங்கள் வெஸ்டேர்ன் லைப் பத்தி பீத்தின செகண்ட் இல் இருந்து நான் விசிறியானேன்...convey my enquiries to him...ha ha...really enjoying to read tz article...thanks to sharing us :))))(அப்புறம் ஓடி கோகி,சோஜு நிலைமையும்,உங்க நிலைமையும் என்ன தான் ஆச்சு...? ஆவலுடன்...அடுத்த பதிவை நோக்கி....
ஆனந்தி...:)))))))

Sathish Kumar சொன்னது…

வாங்க வாங்க...!

என்னடா கடைய திறந்து ரொம்ப நேரம் ஆகியும் முக்கியஸ்தர் இன்னும் வரலையேன்னு பாத்தேன்.

அது வேற ஒன்னும் இல்லீங்க, பாஸ்போர்ட்'ல என்னோட முழு பெயர் சதீஷ்குமார் ராதாகிருஷ்ணன்'ன்னு (நான் குடியிருந்த கோவிலில், என்னை குடியமர்த்திய சாமி'ங்க) இருக்கும், அதுல வர்ற கிருஷ்ணன் என்னோட பெயர்'ன்னு நினைச்சி ஷார்ட்டா கிருஷ்'ன்னு ஆரம்பத்துல கூப்பிட்டு கொண்டிருந்தாங்க பல பேர், இப்போ சில பேர்.

அப்புக்குட்டி என்னோட செல்லக்குட்டி'ங்க, இப்போ அவர் அபிசியல் ட்ரிப்'ல இருக்காரு, கட்டாயமா உங்க விசாரிப்புகள தெரிவிக்கிறேன்.

என்னோட மொக்க அனுபவங்களை எல்லாம் ரசிக்க எனக்கு ஒரு நண்பரை கொடுத்த பதிவுலகிற்கு நன்றி...! வருகைக்கும் கருத்துக்கும் எப்போதும் போலத்தான்...நன்றிகள்...!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அருமையா இருக்கு....

இன்ட்லில இணச்சி விடுங்க...

Sathish Kumar சொன்னது…

நன்றி மனோ சார்...! உங்கள பெரும்பாலான blogs/posts'ல முதல் கருத்துரையாளரா பார்த்து இருக்கிறேன்...!

கருத்துரையிடுக