வியாழன், 17 பிப்ரவரி, 2011

பொண்ணப் பெத்தவன்...!

அவர் பெயர் கணேசன். எனது நெருங்கிய நண்பன் ஒருவனின் பள்ளித் தோழர். உத்தேசமாக, என்னை விட ஐந்தாறு வயது மூத்தவர். மிக ஏழ்மையான பின்னணியில் இருந்து வந்திருந்தாலும், தான் படிக்கவில்லை என்ற ஏக்கமும், தன் சந்ததியை படிப்பறிவு பெற்ற சமூகமாக விதைக்க வேண்டும் என்ற வெறியும் இருந்ததாலும், கூலித் தொழிலாளியான கணேசனின் தந்தை அவரை எனது நண்பன் படித்த அந்த வட்டாரத்திலேயே சிறந்த பள்ளியொன்றில் சேர்த்து பயில வைத்தார். நாளடைவில், அந்த தொழிலாளி குடும்பத்தை வறுமை அரக்கன் தன் அகோரப் பசியால் முடக்க கணேசனின் படிப்பு நூலறுந்த பட்டமாய் பாதியிலயே அறுந்து வீழ்ந்தது. பின்னர் குடும்ப சூழலை உணர்ந்து, வீட்டிலுள்ள உருப்படிகளின்  அத்தியாவசிய தேவைகளை  பூர்த்தி செய்ய குடும்பச் சுமையை தன் தோளில் சுமக்கலானார். தொடக்கத்தில் பல்வேறு கூலி வேலைகளுக்கு போக தொடங்கிய அவர், சில வருடங்களில்  வருமானத்திற்கு  நிரந்தர தீர்வாக கருதி தனக்கென ரிக்க்ஷா ஒன்றை வாங்கி முழு நேர ரிக்க்ஷா தொழிலாளியானார்.  


திருமணம், குழந்தைகள், குடும்பம் என்று வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை தனது சிறிய வயதிலேயே கடக்க துவங்கி விட்டார். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். குடும்பம், பொருளாதார நெருக்கடி என்று எத்தனை பிரச்சினைகள் இருந்தாலும் எங்களை கண்டு விட்டால் அந்த பள்ளிக்கால கணேசனாக மாறி சிரிக்க சிரிக்க பேசி எங்களை மகிழ்விக்கும் பாசமிக்கவர். கல்லூரி கடந்த பிறகு பணிக்காக வட இந்தியாவிலேயே நான் அதிக வருடங்கள் வசிக்க நேரிட்டதால், அவரை பார்த்தே ஏழெட்டு வருடங்கள் கடந்திருந்தது.  சமீபத்தில் டில்லியிலிருந்து விடுமுறைக்கு நான் எனது வீடு சென்றிருந்த நாட்களில் ஒரு நாள் அவரை ஏதேச்சையாக சந்தித்தேன்.  நான் சாலையை கடக்க காத்திருந்த போது, பின்னிருந்து சார்...என்னங்க..., சார்...என்னங்க... என்று குரல் ஒலித்துக் கொண்டேயிருந்தது.  குரல் மெலிதாக ஒலிக்க தூரத்தில் யாரையோ நோக்கி இருக்கும் என்று கருதியதாலும், சிக்னலில் சாலையை கடக்கும் தீவிரத்தில் இருந்ததாலும், நான் பொருட்படுத்தவில்லை. சாலையை கடந்து, ஏதோ நினைவில் பின் திரும்பிப் பார்த்தால்...கணேசன். சார்...சார்..என்று என்னை நோக்கி ஓடோடி வந்து கைகளைப் பற்றினார் மிக்க மகிழ்ச்சியுடன்.  பல வருடங்களுக்கு பிறகு அவரை பார்த்ததில் எனக்கும் மிக்க ஆனந்தம். இருவரும் பரஸ்பர விசாரிப்புகளை பரிமாறிக்கொண்டோம்.  "ரொம்ப நேரமா கூப்டிட்டே இருந்தேன்.. நீங்க திரும்பி பார்க்கவே இல்ல..சுற்றி இருந்த எல்லாரும் என்ன ஒரு மாதிரி பாக்க ஆரம்பிச்சிட்டாங்க சார் ...", என்றார் வருத்தத்துடன்.  "அப்படியா..நான் யாரோ யாரையோ  கூப்பிடறாங்கன்னு நெனச்சிட்டேன் சாரி..நீங்க பேர சொல்லி கூப்பிட வேண்டியது தானே..", என்று அவரின் தோளைப் பற்றினேன். கூச்சத்துடன் நெகிழ்ந்து என் பிடியிலிருந்து நழுவ முயன்றார்.  அருகில் இருந்தவரிடம் "என்னுடைய பிரண்ட், டில்லியில இருக்கார்..", என்று பெருமையுடன் கூறினார் நண்பனின் வளர்ச்சி உயர்வில் ஆனந்தமடையும் அந்த உயிர் நண்பன்.  உலகில் இன்னும் முழுமையாக கெட்டழியா உறவுகளில் முதன்மையான 'தாய்/தந்தை-சேய்'  உறவுக்கு அடுத்த நிலையில் நான் வைத்து வியந்து பார்க்கும் உறவு -'நட்பு'.  நெகிழ்ந்தேன் அவரின் அன்பில்.  மறுதினம் குடும்பத்துடன் என்னுடைய வீட்டில் விருந்தில் கலந்து கொள்ளுமாறு அழைத்தேன் அவரை. கூச்சத்துடன் மறுத்து விட்டார். "மறந்து விடாதீர்கள்" என்ற அவரின் பாச வார்த்தைகளில் இருந்து மீள முடியாமல் கைப்பேசி எண்ணை கொடுத்து விட்டு விடை பெற்றேன் மறு நாளே அவரை அப்படியொரு குமபலுக்கிடையில், ஒரு அசாதாரண சூழ்நிலையில் சந்திப்பேன் என்பதை அறியாமலே....!

அன்று வெள்ளிக் கிழமை. மாலை ஆறரை மணி வாக்கு. எனது தாயாருடன் கோவிலுக்கு சென்றிருந்தேன். வழக்கம் போல ஏழு மணி பூஜை. திவ்ய தரிசனம்.  சிறிது நேரம் கோவிலில் அமர்ந்துவிட்டு நானும் என் தாயாரும் தெற்கு வாயிலின் வழியாக வெளியே வந்தோம். எப்போது ஆலயத் தொழுகை வந்தாலும் நான் வழக்கமாக எனது காலணியை விடும் அதே கடையில் தான் அன்றும் நானும் எனது தாயாரும் காலணிகளை விட்டிருந்தோம்.  ஆனால் அன்று அந்த நேரத்தில் அந்த கடையை சுற்றிலும் வழக்கத்துக்கு மாறான கும்பலும், கூச்சலுமாக இருந்தது. "நாலு சாத்து சாத்துங்க, திருட்டு கழுத..." "அப்படியே கழுத்த நெரிச்சு கொன்னு போடுங்க திருட்டு நாய...", என்றும் இன்னும் புரியாத 'சில பல நாலு கால் பிராணிகளை ஈற்றில் கொண்ட வார்த்தைகளும்'  எல்லா திசைகளிலிருந்தும் சீறி காற்றில் மிதந்து வந்தன. என் தாயாரை கொஞ்சம் தூரத்திலேயே நிற்கச் சொல்லிவிட்டு நான் உள் நுழைய முயன்றேன்.

ஒரு கை பிரம்புடன் தரையில் கிடந்த ஒரு உருவத்தை விளாசு விளாசென்று விளாசிக் கொண்டிருந்தது. "இனி இப்படி பண்ணுவியா...கொழுப்பெடுத்து அலையற...உன்ன இப்போ என்ன பண்றேன் பாரு..." என்று உறுமியவாறு கீழே கிடந்த அந்த உருவத்தை தோலுரித்துக் கொண்டிருந்ததது அந்தக் கை.  இன்னும் சிறிது தூரம் உள்ளே சென்றால் மட்டுமே என்னால் அங்கு என்ன நடக்கிறதென்று புரிந்து கொள்ள முடியும். ஆனால்,  இது ஏதோ இரு குடிகாரர்கள் இருவருக்கும் இடையேயான பிரச்சினையாகவோ, திருடி மாட்டிகொண்ட ஒருவனை பிடித்து விட்ட திருட்டு கொடுக்க இருந்த ஒருவனுடைய பிரச்சினையாகவோ இருக்கலாம் என்று தோன்றவே,  நான் எங்களுடைய காலணிகளை திரும்பப் பெற வழிவகை தேடி கண்களை அலை பாயவிட்டேன். இவ்வளவு குழப்பத்துகிடையிலும் அங்கே ஒரு மூலையில் கடை உரிமையாளப் பெண்மணி ஒரு ருபாய் விகிதம் ஒரு ஜோடி காலணிக்கு பெற்றுக் கொண்டு செருப்பை உரியவர்களிடம் கொடுத்துக் கொண்டிருந்ததை கிடைத்த ஜனத்திரளின் இடுக்குகள் வழியே கண்டேன்.   அந்தத் திசையை நோக்கி நடக்க அந்த கூட்டத்திலிருந்து வெளியேற  எத்தனித்து பின் திரும்பிய போது தான் வந்து விழுந்தன அந்த வார்த்தைகள் குழப்ப கும்பலின் நடுவிலிருந்து,  "கணேசா..டேய் கணேசா..விட்ரா..செத்து கித்து தொலைய போறா...".   யூகித்துக் கொண்டேன்,  "உதைத்து நொறுக்கப்படுவது பெண்ணினமோ...?".   நீங்க சும்மா இருங்கண்ணே...உங்களுக்கு தெரியாது..", பதிலுரைத்தது ஒரு கோபக் குரல், மூர்க்கமாக.  அக்குரல் எனக்கு பரிச்சயப்பட்ட குரலாகப் தோன்றவே  சற்று நிதானித்தேன். தொலைவில் என் தாயார் என் மீது வைத்த கண்களை எடுக்காமல் என்னையே பின் தொடர்ந்து கொண்டிருந்ததை பார்த்து அவருக்கு சிறிது நிமிடங்கள் காத்திருக்குமாறு சமிக்ஞை கொடுத்துவிட்டு, குரல் ஒலித்த திசையில் வலுகொண்டு முன்னேறினேன்.


கோபக்கார அந்தக் குரலுக்கு உடையவராக குழப்ப கும்பலின் நடுவிலிருந்து ஒரு குரலால் குறிப்பிடப்பட்ட அந்த கணேசன், எனது "ரிக்ஷா நண்பன்" கணேசன் தான்.  பிரம்பை பிடித்திருந்த அந்தக் கைக்கு சொந்தக்காரரும் அவர்தான் என்பதை அவர் கை பற்றியிருந்த பிரம்பும் உணர்த்த சற்றே அதிர்ச்சி எனக்கு. அவர் கண்களில் நெருப்பாய் தெரிவதென்ன..? அவர் உணர்ச்சிக் கொந்தளிப்புகளின் அர்த்தமென்ன...? அவர் கோபத்தின் நியாயமென்ன...?  கீழே கந்தலாய், தலை மயிர்கள் மண்ணில் புரள, அணிந்திருந்த பாவாடை கிழிசல்கள் வான் நோக்க, முகத்தை பூமித்தாயினுள் புதைத்து தேம்பிக்கிடந்தது அவ்வுருவம்.  இவ்வளவு ஆண் கூட்டத்துக்கு நடுவில் ஒரு பெண்ணில்லை. என் கோபத்தீ என்னை திமிறிக்கொண்டு உள் நுழையச் செய்தது. கணேசனை நேருக்கு நேர் பார்த்து "கணேசன், என்ன இது..?" என்று கேட்டுக் கொண்டே கீழே கிடந்த அந்த பெண்ணை நோக்கினேன்.  நிலவிய சூழ்நிலை அவர் என்னை எப்போது சந்தித்தாலும் உதிர்க்கும் சிநேக சிரிப்பை அவரிடம் கட்டுப் படுத்தியிருந்தது. ஆனால் அவர் கண்களில் இருந்த கோப வெறி அடங்கி தலையை கீழே தொங்கவிட்டிருந்தார்.  அந்தக்  கந்தல் பெண்ணின் பாவாடை கிழிசல்களில் தெரிந்தது அவளின் வறுமை மாத்திரமல்ல, சுற்றி மௌனித்து நின்ற அந்தக் கோர மனிதர்களின் கொடூர மனங்களும், ஈவு, இரக்கமற்ற அவர்களின் காமப்பார்வையும் தான்.  என்னையுமறியாமல், ஓங்கி ஒரு அறை விட்டேன் கணேசனை.  கொஞ்சம் பலமாகத்தான். அவர் சிறிதும் எதிர்பார்க்க வில்லை, சுற்றி நின்ற கூட்டமும் தான். ஒரு பெண்ணை அத்தனை பேர் வேடிக்கை பார்க்க விலங்கை அடிப்பதை போல் அடித்தது அநியாயம் என்று தோன்றியதால் மட்டுமே நான் கணேசனை அடித்து விடவில்லை. அந்த அநியாயத்தை நிகழ்த்தியவர் எனக்கு நன்கு அறிமுகமான ஒருவரே என்ற அந்த நினைவு கொடுத்த தைரியமே என்னை எனது கைநீளச் செய்திருக்கும் என்று நினைக்கிறேன். அங்கு வேறு யாராவது  ஒருவர் அந்த சூழ்நிலைக்கு காரணமாயிருந்தால் என்னுடைய எதிர்வினை இவ்வளவு வீரியமாய் இருந்திருக்குமா என்பதில் எனக்கும் சந்தேகமே. ஏனெனில், இந்த இழி சமூகம் நம் பலரது எதிர்ப்புக் குரல்களை ஊமையாக்கும் காரணிகளாக குடும்ப அமைதியை குலைத்தல், பொறுக்கிகளுடன் போராட வேண்டி வரும் கோர நிலை என்பது போன்ற கேடுகெட்ட 'ப்ராக்டிகல் உண்மைகள்' அனைத்தையும் தன்னகத்தே கொண்டு இருப்பதால், அவைகள் என்னையும்  மௌனித்தே இருக்க செய்திருக்கும். 


கணேசனின் கண்கள் பனிக்கத் தொடங்கி இருந்தன. "எல்லோரும் போங்க, எது நடந்தாலும் எல்லாத்தையும் விட்டுட்டு அப்படியே வேடிக்கை பார்க்க வந்துடுவீங்களே...., அடுத்தவன் வீட்டு விவகாரம்னா  நமக்கு வெண்பொங்கல் சாப்பிடற மாதிரி தானே..., எடத்த காலி பண்ணுங்க..!  கணேசன்...!,  எல்லாரையும் போகச் சொல்லுங்க.." என்று கத்தி விட்டு கீழே நிலை குலைந்து போயிருந்த அந்த பெண்ணை..இல்லையில்லை...சிறுமியை எழுப்பி மூலையில் உட்கார வைத்தேன்.  கூட்டம் "யார்ராவன்..?, இவர் பெரிய இவரு..., ஹேய் வந்துட்டருயா....போன்ற வார்த்தைகளை உதிர்த்துவிட்டு கலையத் தொடங்கியது.  கரைந்த கூட்டத்தினால் எனது தாயார் என்னை இப்போது தெளிவாக பதற்றத்துடன் பார்த்து கொண்டிருந்தார். அவரை கையமர்த்தி அமைதியாக இருக்கச் சொன்னேன்.  அவர் அமைதியானதாக தெரியாமல் போகவே,  என்னை நோக்கி வர எத்தனித்தவரை எனது செயற்கை புன்னகை தொற்றிய முகத்தின் மூலம் அமைதி காக்க வைத்தேன்.  "அந்தப் பொண்ண  கூட்டிச் சென்று வேறு உடை மாற்றுங்கள் ", என்று அந்த உரிமையாளப் பெண்மணியிடம் கூறினேன். அந்தச் சிறுமி அழைத்துச் செல்லப்பட்டாள்.

குனிந்த தலை நிமிராமல் கணேசன் என் முன்.  "சார், என்ன நடந்ததுன்னு தெரியாம என்னை அடிச்சிட்டீங்களே....!", என்றார்.   "என்ன நடந்திருந்தாலும் ஒரு பொண்ண இப்படியா நடு ரோட்ல போட்டு அடிப்பாங்க...?", நான். "சார்...பதினாலு வயசு சார், தோ...செருப்ப பாத்துகிட்டு காலத்த தள்ளிகிட்டு இருக்குதே இது தான் அந்தப் பொண்ணோட அம்மா...!  மூணு வருஷத்துக்கு முன்னாடி, இதே கோவில்ல யாசகம் எடுத்து சாப்டிட்டு இருந்ததுங்க. இங்க ஏற்கனவே யாசகம் எடுத்துகிட்டு இருந்தவங்க அடிச்சு தொல்லைப் படுத்தியதால, தற்கொல பண்ணிக்கலாம்னு போனதுகள தடுத்து நிறுத்தி, எனக்கு தெரிஞ்ச சில கோவில் பிரமுகர்கள புடிச்சி நான்தான் இந்த தொழில ஏற்பாடு பண்ணேன்.  இப்போ ஒரு வேளையாவது கௌரவமா சாப்பிடுதுங்க...! நேத்து ராத்திரி இந்த புள்ளைய நாலு குடிகார நாய்ங்க பஸ் ஸ்டாண்டு பக்கத்துல வச்சி...சொல்லவே நாக்கு கூசுது சார்...! நல்ல வேளையா அந்தப் பக்கம் சவாரி போன என் தோஸ்து ஒருத்தன் சரியான நேரத்துல போய்  சில நண்பர்கள்  துணையோட அந்த பிச்சைக்கார நாய்ங்கள, தேxxx பயலுங்கள  வெரட்டி இந்தப் பொண்ண வீட்ல கொண்டு போய்  விட்டுட்டு வந்திருக்கானுங்க...! எனக்கு சேதி இப்போதான் தெரிஞ்சி ஓடி வந்து, கடையில தானே உன்ன உக்காரச் சொல்லி வுட்டுட்டு போனா ஒன் ஆத்தா, நீ அந்த நேரத்துல எங்கடீ போனேன்னு கேட்டா, அந்த அண்ணனுங்க தான் சினிமாவுக்கு வரியான்னு கூப்டு போனாங்கன்னு சொல்றா...! வந்துச்சி கோவம், அதான் சார் யாரு எதுக்கு கூப்ட்டாலும் போயிருவியான்னு விளாசு விளாசுன்னு விளாசிட்டேன்", என்றார் ஒரே மூச்சில். "அங்க பாருங்க சார் அந்த பொண்ணோட ஆத்தாவ..., என்று இந்த குழப்பத்துகிடையில் தன் கடமையை ஆற்றிக் கொண்டிருந்த உரிமையாளப் பெண்மணியை நோக்கி என் கவனத்தை திருப்பினார். அந்தத் தாயார் கண்களில் தாரை தாரையாக கண்ணீருடனும், கும்பிட்ட கைகளுடனும் நேராக என்னை நோக்கி நடந்து வந்தார். எனது கண்கள் கலங்க எத்தனிக்க அடக்க முயன்று தோற்றேன். "அத ஒன்னும் சொல்லாதீங்க சாமி..., அது என் குல சாமிங்க", என்று என்னுடைய காலில் விழ வந்தவரை, ஐயோ...என்று தடுத்தேன். "என்னை மன்னிச்சுடுங்க கணேசன்", வேறு வார்த்தைகளில்லை என்னிடம் . ஊமையானேன். என் மனதில் உச்சத்தில் கணேசன்.

"நானும் ரெண்டு பொண்ணப் பெத்தவன்  சார்..எனக்கும் இதோட வலி என்னன்னு தெரியும் சார்..! அந்தப் பொண்ணு நல்லா இருக்கணும்னு தான் இப்படி நடந்து கிட்டேன்.  மானத்துக்காக சாவப் போனவ சார்  இவ ஆத்தா...! காசு பணம் இல்லாதவங்க மானத்தோட உயிர் வாழக் கூடாதான்னு  இவ ஆத்தா அப்ப கேட்டது இன்னும் என் காதுல கேட்டுகிட்டே இருக்கு....!  இன்னும், நான் தப்பு பண்ணியிருந்ததா  நீங்க நெனச்சா என்ன உங்க செருப்பாலயே அடிங்க சார்..", என்று காலணி அணியாத என் கால்களை பார்த்தவாரே கூறினார்.  அவரை சமாதனப்படுத்தினேன். அவர் என் நண்பர் என்பதில் மிக்க பெருமிதம் அடைவதாக சிலாகித்தேன். அவர் கொஞ்சம் சகஜ நிலைக்கு திரும்பினார்.  அவர் கண்களில் நெருப்பாய் தெரிவதென்ன..? அவர் உணர்ச்சிக் கொந்தளிப்புகளின் அர்த்தமென்ன...? அவர் கோபத்தின் நியாயமென்ன...? என்னுடைய இந்தக்  கேள்விகளுக்கு விடைகள் கிடைத்துவிட்டன அந்த கவரிமான் சாதியிடமிருந்து.

நானும் என் தாயாரும் காலணிகளை பெற்றுக்கொண்டு புறப்பட்டோம். யாரது என்று கேட்ட தாயாரிடம் நண்பர் ரிக்ஷாக்காரர் என்று சொன்னதும், உனக்கு இவங்கல்லாம் கூட பிரெண்டா என்று ஒரு ஆச்சரியப் பார்வை பார்த்தார்  என்னுடைய வீட்டு முகம் மட்டுமே கண்ட என் அன்புத் தாய். ஆனால், ஒரு விஷயம் மட்டும் நெஞ்சை அறுத்துக் கொண்டே இருந்தது.
அந்த சிறுமி என்ன தவறு செய்தாள்?  குற்றவாளிகள், வெகு ஜனத்தை மற்ற விஷயங்களில் இருந்து திசை திருப்பும் சினிமா மோகத்தை அந்த பிஞ்சிடம் விதைத்த இந்த சமூகமும், அதை தங்களின்  சதை வெறிக்கு சாதகமாக பயன்படுத்த  முயன்ற அந்த நான்கு குடிகார வேசிமகன்களும் அல்லவா? தண்டனை ஏன் அந்த பிஞ்சு குழந்தைக்கு. இன்னும் இந்த கேடுகெட்ட சமூகம் பெண்ணுக்கான பாதுகாப்பில் பெண்ணையே குற்றவாளியாக பார்ப்பது ஏன்?  ஒரு பெண்ணின் கற்பை உயிரினும் மேலானதாக குறிக்கும் இச்சமுதயாமே அதனை பாதுகாக்கும் பொறுப்பையும், உரிமையையும் தட்டிக் கழிக்கும் நோக்கில், "வீக்கர் செக்ஸ்" என்று சொல்லப்படும் அவர்களே காத்துக் கொள்ள வேண்டும் என்று நிர்பந்தித்து, அதை பறிப்பதற்கான எல்லா வழிகளையும் திறந்து வைத்துவிட்டு பெண்களையே குற்றவாளிகளாக, பலி ஆடுகளாக ஆக்குவது எந்த விதத்தில் நியாயம்.

அதே  சமூகத்தின் ஒரு அங்கம் என்று நினைக்கும் போது என் மேலேயே எனக்கு அருவெருப்பாய் இருக்கிறது.


(படம் தந்த கூகுள்' க்கு நன்றி)
--விளையாடும் வெண்ணிலா....

24 கருத்துகள்:

சக்தி கல்வி மையம் சொன்னது…

உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு...
தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தியதற்கு நன்றி...

ஆனந்தி.. சொன்னது…

ஓ...சதீஷ்...அழ வச்சிட்டிங்க...ம்ம்...

ஆனந்தி.. சொன்னது…

கணேசனின் பொறுப்புள்ள பாங்கு...உங்களின் அக்கறையான அன்பு கலந்த நட்பு...சமுதாயத்தின் மேலே இருக்கும் சில திருத்தவே முடியாத கோவங்கள்...எரிச்சல்கள் எல்லாமே என்னாலே நேரில் பார்த்த மாதிரி இருக்கு சதீஷ்...

என்ன தான் படிச்சு வாழ்வில் உயரிய நிலைக்கு வந்தாலும்...பெண் என்பவள் வீக்கர் செக்ஸ் என்று தான் தரம் பிரிக்க படுகிறாள்...அந்த குடிகாரனுங்க எல்லாம் வேசி மகான்களாக ..சீ..மகன் களாக தான் இருக்க கூடும்...அதான் அவனுங்க தாய் மாதிரியே மத்த பொண்ணுங்களையும் பார்க்க தோணிருக்கு..எனக்கும் கூட ஆத்திரமா வருது...சதீஷ் நானும் இந்த மாதிரி பார்த்து இருக்கேன்..என் பாட்டி வீட்டு அருகில் மனநிலை சரியில்லாத ஒரு ரெண்டுகெட்டான் வயசு பொண்ணை இப்படி தான் எவனோ &%$$$$$ நாய் பண்ணிட்டு போயி..அது கர்ப்பமாகி...சே...அதுவே குழந்தை மாதிரி இருந்தது.....எந்த மகாராசன் இந்த வேலைய பண்ணிட்டு போனானோ...ம்ம்...சில பிரச்சனைகள் என்னைக்கும் பெண்களை விட்டு விலகவே விலகாது சதீஷ்....

ரொம்பவே நெகிழ்ச்சியான பதிவு சதீஷ்...

ஆனந்தி.. சொன்னது…

//இன்னும் இந்த கேடுகெட்ட சமூகம் பெண்ணுக்கான பாதுகாப்பில் பெண்ணையே குற்றவாளியாக பார்ப்பது ஏன்? //

நம் சமூகத்தில் பெண் தான் எந்த விஷயத்திலும் சுட்டி காட்ட படுகிறாள் அதிகமாய்...விளம்பரத்தில் இருந்து விபச்சாரம் வரை...ம்ம்....obviously...குற்றவாளியாகவும் அவளே முன்னிலை படுத்த படுகிறாள்..இதில் என்ன ஒரு சூட்சுமம் தெரியுமா சதீஷ்...பெண்ணை ஒரு ஆண் குற்றவாளின்னு சொல்றதுக்கு முன்னாடி சக பெண்ணே அதை முன்னிலை படுத்தி குறை சொல்ற பெரும்பான்மை புகழ் (?!)படைத்த அற்புதமான சமூகம் இது...வேற என்ன சொல்ல...

துளசி கோபால் சொன்னது…

பாதுகாப்பே இல்லாத நிலையில் ஒரு சமூகத்தின் ஒரு பகுதி எப்படி ரெடியா இருக்கு பாருங்க பொண்ணை சீரழிக்க:(

Sathish Kumar சொன்னது…

//sakthistudycentre-கருன் சொன்னது…
தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தியதற்கு நன்றி...//

நன்றி கருன்

Sathish Kumar சொன்னது…

//ஆனந்தி.. சொன்னது…
ம்ம்...சில பிரச்சனைகள் என்னைக்கும் பெண்களை விட்டு விலகவே விலகாது சதீஷ்....//

இதற்காக வெட்கித் தலை குனிய வேண்டும் நாம்...!

Sathish Kumar சொன்னது…

//ஆனந்தி.. சொன்னது…
நம் சமூகத்தில் பெண் தான் எந்த விஷயத்திலும் சுட்டி காட்ட படுகிறாள் அதிகமாய்...விளம்பரத்தில் இருந்து விபச்சாரம் வரை...ம்ம்....obviously...குற்றவாளியாகவும் அவளே முன்னிலை படுத்த படுகிறாள்..//

ஒரு வித போகப் பொருளாய், பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் ஒரு ஈனப் பிறவியாய் இன்னும் பெண்களை பார்ப்பது உலகின் பல்வேறு இடங்களில் இருந்தாலும், பெண்ணை தெய்வம் என்றும், உயர்வானவள் என்றும், உத்தமர் உத்தமியர் வேடம் அணித்து கொண்டு பெண் விடுதலை பற்றி பீற்று பீற்றென்று வாய் வலித்து கோனிக்கொள்ளும் அளவுக்கு கூவிக்கொண்டே, அவர்களை காலில் போட்டு மிதிக்கும் கபடதாரி மகாத்மாக்களுடைய கூத்துகள் இந்த நூற்றாண்டிலும் இந்நாட்டில் நடப்பதை எண்ணித்தான் நமக்கு ஆற்றமாட்டா கோபமும் துயரும்.

ஐயோ....இந்த விபச்சார விவகாரம் இருக்கிறதே..மிகக் கொடுமை ஆனந்தி...!

Sathish Kumar சொன்னது…

//துளசி கோபால் சொன்னது…
பாதுகாப்பே இல்லாத நிலையில் ஒரு சமூகத்தின் ஒரு பகுதி எப்படி ரெடியா இருக்கு பாருங்க பொண்ணை சீரழிக்க:(//

இந்த கேடு கேட்டவர்களின் மன நிலை மாற்றம் என்பது சாத்தியமே இல்லையோ என்றே சில நேரம் நம்மை யோசிக்க வைக்கிறது, துளசி...!

mani சொன்னது…

yei yaruppa antha friend yennakku theyriyama....

Sathish Kumar சொன்னது…

ஆம் நண்பா..! நீ அறிய வாய்ப்பில்லை. நீயும் நானும் வெவேறு திசையில் பயணிக்க தொடங்கி பதினோரு வருடங்களுக்கும் மேலாகிவிட்டன அல்லவா...!

govindasamy சொன்னது…

அழ வச்சிட்டிங்க சார் !

unmaivrumbi.
Mumbai.

Sathish Kumar சொன்னது…

//unmaivrumbi சொன்னது…
அழ வச்சிட்டிங்க சார் !//

உங்களை போல இளகிய மனம் படைத்தவரை அழ வைத்ததற்கு மன்னிக்க வேண்டுகிறேன்..!!

ஆனந்தி.. சொன்னது…

சதீஷ்..உங்கள் அற்புதமான எழுத்துக்கு இன்னும் கொஞ்சம் recognition கிடைச்சிருக்குன்னு நினைக்கிறேன்...இன்டிலி இல் இந்த இடுகை ஹிட் ஆனதை இப்ப பார்த்துட்டு உடனே வாழ்த்துக்கள் சொல்ல வந்தேன்...இன்னும் நிறைய இது மாதிரி எழுதுங்க சதீஷ்..அருமையா எழுதுறிங்க..ரொம்ப பிரேக் எடுத்துக்காதிங்க..வாழ்த்துக்கள் சதீஷ்...

Sathish Kumar சொன்னது…

//ஆனந்தி.. சொன்னது…
ரொம்ப பிரேக் எடுத்துக்காதிங்க..வாழ்த்துக்கள் சதீஷ்...//

எனக்கும் மகிழ்ச்சி. எத்தனை பேருக்கு இப்படி ஒரு முகமறியா நட்பு கிடைக்கும்...! உங்களின் தூண்டுதல்களுக்கு, அக்கறைகளுக்கு முதல் நன்றி, சகோதரி..! எனக்கு நீங்கள் ஒரு ஆச்சரியக்குறியே...!

சமூகத்தின் அவலங்களை எதிர்த்து, வெடிக்க காத்திருக்கும் மனிதர்கள் அதிகம் என்பதைத்தான் இது காட்டுகிறது. சமூகத்தின் நிலையை நான் எனது விழிகளால் பார்க்கும் பார்வை சரியானதே என்று நம்பிக்கை ஊட்டியதற்கு அவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனந்தி.. சொன்னது…

அட...திறமையானவங்களை தட்டி கொடுப்பதில் என்ன சகோதரா ஆச்சர்யம்??..cool :))

Philosophy Prabhakaran சொன்னது…

இன்றைய வலைச்சரத்தில் உங்கள் இடுகைகள் சிலவற்றிற்கு இணைப்பு கொடுத்திருக்கிறேன்...

http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_8099.html

Sathish Kumar சொன்னது…

//Philosophy Prabhakaran சொன்னது…
இன்றைய வலைச்சரத்தில் உங்கள் இடுகைகள் சிலவற்றிற்கு இணைப்பு கொடுத்திருக்கிறேன்...//

மிக்க மகிழ்ச்சி...! தங்களின் அன்புக்கு மிக்க நன்றி பிரபா...!

விவேக் from callezee சொன்னது…

உங்கள் எழுத்துக்கு நான் தலை வணங்குகிறேன்
நன்றி நண்பா
விவேக்

Sathish Kumar சொன்னது…

//விவேக் from callezee சொன்னது…
உங்கள் எழுத்துக்கு நான் தலை வணங்குகிறேன்//

நன்றி நண்பா...! தங்களின் மனம் திறந்த வார்த்தைகளுக்கு நானும் தலை வணங்குகிறேன், விவேக்...!

மகேந்திரன் சொன்னது…

""""ஒரு பெண்ணின் கற்பை உயிரினும் மேலானதாக குறிக்கும் இச்சமுதயாமே அதனை பாதுகாக்கும் பொறுப்பையும், உரிமையையும் தட்டிக் கழிக்கும் நோக்கில், "வீக்கர் செக்ஸ்" என்று சொல்லப்படும் அவர்களே காத்துக் கொள்ள வேண்டும் என்று நிர்பந்தித்து, அதை பறிப்பதற்கான எல்லா வழிகளையும் திறந்து வைத்துவிட்டு பெண்களையே குற்றவாளிகளாக, பலி ஆடுகளாக ஆக்குவது எந்த விதத்தில் நியாயம்.""""




பெண்ணை பேதையென எண்ணும் இச்சமுதாயத்துக்கு
நல்ல சாட்டையடி.

இளைமையில் வறுமை, மனிதனின் நேர்மை, இரக்க குணம்
ஆகியவற்றை அருமையாக காட்டியிருக்கிறது உங்கள் படைப்பு


அன்பன்
மகேந்திரன்

Sathish Kumar சொன்னது…

நன்றி மகேந்திரன்....!

Unknown சொன்னது…

Thanks for sharing with us that awesome article you have amazing blog.....
Data Scientist online

Sathish Kumar சொன்னது…

Thanks for dropping by brother Srinu... :-)

கருத்துரையிடுக