வெள்ளி, 28 ஜனவரி, 2011

அப்பாவுக்கு வயசாச்சில்லப்பா...!

ஐந்து வருடங்களுக்கு முன் பணி நிமித்தமாக ஹரியானாவில் உள்ள 'பாவல்' என்ற தொழில் நகருக்கு சென்றிருந்தேன்.  'பாவல்' NCR என்று சொல்லப்படும் தேசிய தலைநகர் மண்டலத்துக்குட்பட்டது.  'டெல்லி-ஜெய்பூர்' தேசிய நெடுஞ்சாலை NH-8'ல் டெல்லியிலிருந்து நூறாவது கிலோமீட்டரில் அமைந்திருக்கும் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் சிறப்பு பொருளாதார மண்டலப் பகுதி.  தேசிய நெடுஞ்சாலையின் இரு மருங்கிலும் பொட்டலாய் தரிசு நிலங்களே.  பாக்டரி, அலுவலகம், இரண்டுமே பாவல்'லில் தான்.  நான் தங்கியிருந்த கெஸ்ட் ஹவுஸ் ராஜஸ்தானில் உள்ள 'பிவாடி' என்ற இடத்தில் இருந்தது. 'ஆஷியானா கார்டென்ஸ்' என்ற ரம்மியமான அப்பார்ட்மென்ட்சில் தான் என்னுடைய நான்கு  மாத ஜாகை.  அந்த சமயத்தில் பணி மாத்திரமே ஜனித்திருந்த, தனிமை அதிகம் நிறைந்த என்னுடைய நொடி, நிமிட, மணித்துளிகளை மாற்றியவர்கள் இருவர்.

ஒருவர் நண்பர் 'மனீஷ் நிநாவே', குவாலியர் தான் பூர்வீகம்.   நான் இருந்த பிளாட்டிற்கு எதிரே இருந்த பிளாட்டில் தங்கி இருந்தவர்.  எங்களுடைய நட்பு முதல் சந்திப்பில் "ஹே ட்யுட்...! வாஸ்ஸப்..??"  என்று பீட்டரின் இலக்கிய நடையில் அவர் எடுத்து விட்ட இரண்டு பிட்டிலேயே தொடங்கியது.  இருவரில் மற்றொருவர் என்று நான் குறிப்பட்டது ஒரே ஒருவரை அல்ல, ஒரு குடும்பத்தை.  அந்த குடும்பத்துடனான முதல் சந்திப்பு மிகவும் சுவையானதொரு சம்பவம்.  பணியும் ப்ளாட்டுமாக ஆமையாய் நகர்ந்த ஆரம்ப நாட்களில் ஒரு நாள், மாடிப்படி வழியாக மேலே சென்று கொண்டிருந்த போது, நன்கு பரிச்சயமான தென்னிந்திய திரைப்பட பாடல் ஒன்று எங்கிருந்தோ மிகவும் மெலிதாக ஒலித்து கொண்டிருந்தது.  பாடல் வந்த திசையை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். 'பார்த்த முதல் நாளே..... பாடல் இப்போது தெளிவாக காதுகளில் விழுந்தது.  பாடல் ஒலித்துக் கொண்டிருந்த தரைதள  முதல் பிளாட்டின் முன் நின்றேன்.  கதவு திறந்தே இருந்தது. இரண்டு முறை அழைப்பு மணியை  அழுத்தியும் யாரும் வரவே இல்லை.  மீண்டும் ஒரு முறை அழுந்த அழுத்திவிட்டு உள் நுழைந்தேன். "கோன் ஹை? கியா சாஹியே?", என்று சற்றே பீதியுடன் எதிர் வந்து நின்றார் முப்பதுகளின் தொடக்கத்தில் இருக்கும் ஒரு பெண். நான் தமிழ் பாடல் என்னை அழைத்து வந்த கதையை சொன்னவுடன் தான் தாமதம், "தமிழா நீங்கள்...!, வாங்க..!, வாங்க...!", என்று குதூகலமாய் வரவேற்று, சில பல விசாரிப்புகளுக்கு பிறகு  தடபுடலாய் உபசரித்தார்.   அவர் கணவர் 'பாவல்' நகரில் ஓர் நிறுவனத்தில் மேலாலளராக பணியாற்றுவதாகவும், ஐந்து வயதில் ஒரு ஆண் குழ்ந்தை இருப்பதாகவும் கூறினார்.

வார நாட்களின் மாலை பொழுதுகளை மனீஷுடன் சிறு நடைகளிலும், உரையாடல்களிலும், வார இறுதி நாட்களை பாசமிக்க தமிழ் குடும்பத்துடனும் கழித்து வந்தேன்.



மனீஷ் 'ஆஷியானா கார்டென்ஸ்'யின் பின் திசையில் சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் ஒரு கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று நீண்ட நாட்களாக கூறிக் கொண்டே இருந்தார். அந்த சனிக்கிழமை போகலாம் என்று முடிவெடுத்து என்னுடைய 'கேர்டேகர்' காந்திலாலிடம் விஷயத்தை தெரிவித்தோம்.  திரும்ப சிறிது தாமதம் ஆனாலும் ஆகலாம்,  இரவு உணவை தயாரித்து வைத்துவிட்டு காத்திருக்கும் படியும் கூறினோம். அவர் சற்றே பீதி கலந்த பதட்டத்துடன், "கருக்கலில் செல்வதற்கு கோவில் செல்லும் பாதை உகந்தது அல்ல, தாங்கள் இருவரும் நாளை காலை செல்லலாமே",...என்றார் தயக்கத்துடன்.  புலி, நரி என்று உயிருக்கு ஆபத்தான காட்டு விலங்குகள் திரியும் காட்டு பகுதி வழியாகவே அந்த கோவிலுக்கு செல்ல முடியும் என்று கூறி என்னை மிரள வைத்தார். ஆனால், மனீஷ் போயே தீர வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கவே அங்கயே பழம் தின்று கொட்டை போட்டு ஆல விருட்சமாய் விரிந்திருக்கும் காந்திலாலின் பேச்சை புறந்தள்ளி புறப்பட்டோம். மணி அப்போது மாலை 6.30ஐ தொட்டிருந்தது.  அப்பார்ட்மென்ட்சின் வெளிப்புற இடது பக்கத்து காம்பவுண்ட் சுவரை ஒட்டியிருந்த ஒற்றையடிப் பாதையில் நடக்கலானோம்.

இருள் மெல்ல படர தொடங்கி இருந்தது. ஒற்றையடிப்பாதை தாண்டி இப்போது தரிசு நிலத்தில் எங்கள் பயணம்.  வெளிச்சமின்மையும், ஆள் நடமாட்டமின்மையும் எனக்குள்  சிறு பயத்தை விதைக்க, அதை போக்க மனீஷுடன் பேச்சுக் கொடுத்துக் கொண்டே வந்தேன்.  அவரும் ஆர்வத்துடனும், பலத்த சிரிப்புகளுடனேயும் மிகுந்த உற்சாகத்துடன் உரையாடி கொண்டே வந்தார்.  எதிர் திசையில், தூரத்தில் இரு உருவங்கள் எங்களை நோக்கி வந்து கொண்டிருப்பதை போன்று நிழலாடியது. ஆணும், பெண்ணுமாய் இருவர் -இப்போது அவர்களுக்கும் எங்களுக்குமான இடைவெளி குறைந்து இருந்தது.  உற்று நோக்கிய பார்வையுடன், கனத்த அமைதியுடன் கடந்து சென்றார்கள் எங்களை.  இருள் இப்போது அடர்த்தியாய் பரவி இருந்தது.  எங்கோ விலங்குகள் ஊளையிடும் சத்தம் எங்கள் பாதங்கள் முன்னேற, முன்னேற வலுத்துக் கொண்டே சென்றன.  பாதை இப்போது இரு புறத்திலும் மரங்களடர்ந்த வழியினூடே பயணித்தது.  காந்திலால் சொன்ன காட்டுப்பகுதி இதுவாக இருக்குமோ என்று யூகித்துக் கொண்டேன்.  "என்ன ரொம்ப தூரம் வந்து விட்டோம் இன்னும் கோவில் இருக்கும் திசையே கண்ணுக்கு தெரியவில்லையே..?",  என்றேன் மனீஷிடம்.  "முதலில் ஒரு கிராமம் வரும், அதை தாண்டி தான் அந்த கோவிலுக்கு செல்ல முடியும் என்று காந்திலால் சொன்னார்" என்றார் மனீஷ்.  "என்னது சொன்னாரா... அப்போ உங்களுக்கு தெரியாதா...வெளங்கிடும்...", என்று கேட்டு கொண்டே தொடர்ந்தேன்.

கனத்த அமைதியில் காட்டுப் பூச்சிகளின் பேரிரைச்சல் பயத்தை அதிகப்படுத்தியது.  "ஒரு ஐடியா ட்யுட்...!" என்று உரத்த குரலில் அலறினார் மனீஷ். அருகில் இருந்த ஒரு கோதுமை வைககோல்போரை காட்டி இதன் அருகில் நான் நிற்பது போல் ஒரு போட்டோ எடுங்கள் என்றார். உங்களுக்கு எப்படி இப்படி நடுக்காட்டில் இது மாதிரி எல்லாம் தோன்றுகிறது, இந்த இருட்டில் ஒன்றுமே தெரியாது வாங்க போகலாம் என்று நான் கூறியதை ஏற்காமல், அவருடைய 'சோனி' மொபைல் கேமராவில் என்னை படமெடுக்க வைத்தார். "அல்டிமேட்...!" என்று எடுத்த புகைப்படத்தை பார்த்து மீண்டும் ஒரு அலறல் அவரிடமிருந்து. என்ன அல்டிமேட்டோ...நிஜத்தை விட பேரிருளாய் தெரிந்தது புகைப்படம்.

அந்த காட்டு பாதையை கடந்து விட்டதை போன்ற உணர்வு எனக்கு வந்தது.  எங்கோ தூரத்திலிருந்து மனித சத்தங்கள் காதில் விழத்தொடங்கின.  இன்னும் சிறுது நேர நடைக்குப் பிறகு, இங்கும் அங்குமாய் மனிதத் தலைகள் தெரிய ஆரம்பித்தன. "கிராமம் அடைந்து விட்டோம் என்று நினைக்கிறேன்", என்றேன் நான். வீடுகள் நிறைந்த பகுதிக்குள் பாதை நீண்டது. கிராமமே இருளில் மூழ்கி இருந்தது. ஒவ்வொரு வீடும் சராசரியாக இரண்டு அல்லது மூன்று மாடிகளை கொண்டிருந்தன. விசாலாமான, பெரிய வீடுகள். அகலமான பரந்த முன் வாசல்கள், மரங்கள் என்று நாம் ஒரு காட்டுப்பகுதியின் வாயிலாக தான் இந்த கிராமத்தை அடைந்தோம் என்று நம்பவே முடியாத அமைப்பிலான வீடுகள்.  பெரும்பாலான வீடுகளின் முன்பு குறைந்தது ஒரு நான்கு சக்கர வாகனத்தைக் காண முடிந்தது. பல வீடுகளின் முன் இரண்டு மூன்று வாகனங்களும், ஒரு ட்ராக்டரும் என்று வசதியின் வனப்பு வாசலை தாண்டி பிதுங்கி வழிந்து கொண்டிருந்ததன.   "மின்வெட்டு போல் இருக்கிறது, இட்ஸ் எ பேட் ஈவ்னிங் டுடே" என்ற என்னை மனீஷின் "திஸ் வில்லேஜ் இஸ் எட் டு பி எலெக்ட்ரிபைட்" என்னும் வார்த்தைகள் அதிரத்தான் வைத்தன. "அரசாங்கம் இந்த பகுதியை சிறப்பு பொருளாதார பகுதியாக அறிவித்து தொழில் தொடங்க அனுமதி அளித்தது. வேண்டிய நிலங்களை நேரடியாக விவசாயிகளிடமேயே தொழில் தொடங்க விழைவோர் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று ஆணையும் பிறப்பித்தது. தொழிலதிபர்கள் அலை கடலென திரண்டு இவர்களின் விலை மதிப்பில்லா நிலங்களை பல கோடி ரூபாய் கொடுத்து வாங்கியதால் தான் இப்படி ஒரு விசித்திரமானதொரு விஷயத்தை நாம் காண்கிறோம்", என்றார் மனீஷ்.



மெலிதான தென்றல் மனித சத்தங்களின் வழியே எங்களை வருடி சென்றது. கிராமத்து வாசம் கமழ்ந்திருந்த சுகந்தமான காற்று. வானத்தில் தவழ்ந்து கொண்டிருந்த அந்த நிலாவினை ரசித்த படியே மனம் மகிழ்ச்சியில் திளைக்க நடந்து கொண்டிருந்தேன். ஒவ்வொரு வீட்டிலும், குடும்பத்து உறுப்பினர்கள் அனைவரும் அகன்று விரிந்த, வெளிப்புற முற்றத்தில் அமர்ந்து அளவாலாவிக் கொண்டிருந்தனர். குழந்தைகள் இங்கும் அங்கும் விளையாடி கொண்டிருந்தனர். அருகிலேயே, அடுப்பை மூட்டி, பெண்கள் தங்கள் கைகளாலேயே ரொட்டியை சுட்டு சுடச்சுட அனைவருக்கும் பரிமாறி
கொண்டிருந்தார்கள். பாட்டியின் கதை கேட்கும் பேரன், தாத்தாவின் கழுத்தை சுற்றி படர்ந்திருக்கும் பேத்தி, தந்தையின் தலை வருடும் மகள், தாயின் இடுப்பை அணைத்த மகன், தாயின் தோளில் உறங்கும் குழந்தை, "எப்படியொரு சொர்க்க வாழ்க்கை வாழ்கிறேன் பார்..." என்கிற பெருமித முகத்துடன் குடும்பத் தலைவன் என்று ஒவ்வொரு வீட்டிலும் நிறைந்திருந்த அந்த அற்புதமான, வார்த்தையிலடங்கா வாழ்க்கையை எப்படி உரைப்பது.  இந்த அருமையான காட்சியில் எங்களை இழந்து நாங்கள் ஒவ்வொரு வீடாக நகரும் போது, பல வீடுகளில் எங்களையும் பாசத்துடன் அவர்களின் இரவு உணவில் கலந்து கொள்ள அழைத்தனர்.  அவர்களின் அன்பான அழைப்புகளை நன்றியுடன் மறுத்து முன்னேறினோம்.  எதிரெதிர் வீடுகளில் பல மாதங்கள் வசித்தாலும், முகம் பாரா நவ நாகரீக நகரத்து கலாச்சாரத்தை நினைக்க, நினைக்க வேதனையாய் இருந்தது.  இவர்களின் இயற்கையோடு இணைந்த அர்த்தமிக்க பரிவான வாழ்க்கையை, முகமறியா மனிதர்களுக்கும் பந்தியிட்டு உணவு பகிரும் உன்னத குணத்தை எண்ணி எண்ணி சிலாகித்துக் கொண்டிருந்தேன்.  


"அவசர வாழ்க்கைக்காக பல அவசிய குணங்களை அவிழ்த்து எறிந்து விட்டு ஓடிக் கொண்டிருக்கும் நம்மை போன்ற நகர வாசிகள் இன்னும் என்னென்னவெல்லாம் இழக்க காத்து கொண்டிருக்கிறோமோ தெரியவில்லை".

வழியில் சிலரை விசாரித்து கோவிலை அடைந்தோம். சிறியதாகவும், மிக சுத்தமாகவும் இருந்தது வளாகம். அப்போதும் சில பெண் பக்தர்கள் விளக்குகள் ஏற்றி கொண்டும், விக்ரஹங்களை சுற்றி வந்து கொண்டும் இருந்தார்கள். பெரியவர்கள் கோவில் மரத்தடியில் அமர்ந்து பேசிகொண்டிருந்தார்கள். கோவிலை சுற்றி வந்து விட்டு, சிறிது நேரம் அமர்ந்துவிட்டு பின் புறப்படத் தயாரானோம். திரும்புகையில் பெரும்பாலான வீடுகளில் இரவு உணவு நிறைவுற்று இருந்தது. வெளியே போடப்பட்டிருந்த கட்டில்களில் அவரவர் அகன்ற வானத்தை பார்த்து மகிழ்ச்சியாக உரையாடிக் கொண்டிருந்தார்கள். இப்போது இவர்களின் ரம்மியமான வாழ்க்கை சூழல் என் மனதில் எல்லையற்று வியாபித்திருந்ததால் வழி நெடுகிலும், காட்டுப்பாதையின் திகிலும்,கும்மிருட்டும், மனீஷின் உரையாடல்களும் முறையே என் சிந்தையிலும் செவியிலும் விழவே இல்லை.



அந்த சுகமான நினைவுகளோடே என் ப்ளாட்டை அடைந்தேன், சூரியனை ஒத்த வெளிச்சத்தினை மின் விளக்குகள் பாய்ச்ச, இமயமலை சாரலாய் குளிர் சாதனப் பெட்டியிலிருந்து காற்று வீச, அந்த கிராமத்து இருளும், மென் தென்றலும் ஏற்படுத்திய தாக்கத்தை இம்மியளவும் அசைக்க கூட முடியவில்லை இவைகளால். மேசையின் மேல் மையமிட்டிருந்த 'மடிச்சனியன்' என்னை உள் விழுங்க தருணம் பார்த்துக் கொண்டிருந்தான்.

எனக்கும் அந்த சொர்க்க வாழ்கை வாழ வழி இருந்தது, இன்னும் இருக்கிறது. நான் தான் அதற்கான பாதையை தவிர்த்து இந்த பாதையை தேர்ந்தெடுதேன் என் சுற்றுப்புறங்களுடைய விருப்பங்களின் தாக்கத்தினால். என்னை சுற்றி இருந்தவர்கள் யாவரும் நிம்மதி என்பது பொறியியல் துறையிலும், மருத்துவ  துறையிலும், மாட மாளிகைகளிலும், நகரத்து, பெருநகரத்து வாழ்க்கையிலும் தான் இருப்பதாக வலியுறுத்தி வழி காட்டினார்கள்.


"நிகழ் கால கஷ்ட நஷ்டங்களை, சுக துக்கங்களை கடந்தகாலமான பிறகு அசைபோட்டு ரசிப்பதையே மனித மனம் விரும்பும் என்ற வாழ்க்கையின் சாராம்சம் புரிந்திருந்தாலும், "இக்கரைக்கு அக்கரைப் பச்சை" என்று நோக்குவதே மனிதர்களின் இயல்பு என்று தெரிந்திருந்தாலும், சில தவிப்புகளை, இழப்புகளை பொறுத்துக் கொள்ள முடிவதே இல்லை".

எதை எதையோ தேடி மூச்சிரைக்க ஓடிய கால்கள், வலியெடுத்து  நிற்க திரும்பிப் பார்த்தால் எங்கோ வெகு தூரத்தில் தனியாக நான் மட்டும் ஒற்றையாய் நின்று கொண்டிருக்கிறேன். என் இளரத்தச் சூடு என்னை உந்தித் தள்ளிய தூரத்தின் வீரியம் அம்முறை நான் என் விடுமுறைக்கு வீடு சென்ற போது தான் தெரிந்தது.

தைரியத்தின், ஆளுமையின், ஆண்மையின், அன்பின், அறிவின், உழைப்பின், மொத்த உருவமாய், என் முதல் கதாநாயகனாய் மிடுக்கான தோற்றத்துடன் இருந்த என் தந்தையின் முதுமையில் தான் தெரிந்தது எனது தொலை தூர அர்த்தமற்ற பயணத்தின் விளைவு. செயலில் வேகமாய், புயலாய் நான் பெருமையுடன் கைகளையும், தோள்களையும் பற்றி நடந்த அந்த உத்தமரின் "அப்பாவுக்கு வயசாச்சில்லப்பா" என்னும் சொற்கள் என்னை மிகவும் திடுக்கிடச் செய்து பெரு வேதனைக்குள்ளாக்கியது.  இந்த எனது அவசர ஓட்டம் என் தந்தை முதுமை அடைந்து கொண்டிருக்கிறார் என்பதையே என்னை மறக்கச் செய்து விட்டது.  என் மனம் அவர் சொற்களை நம்ப மறுத்து மறுபடியும் இறைச்சலிடத் தொடங்கி இருந்தது.  "நீ தேர்ந்தெடுத்த பாதை உனக்கு கொடுத்ததென்ன தெரியுமா...???  நீ உன் அருகாமையை விட வேறு என்ன பேரின்பத்தை கொடுத்து விட முடியும் உன் தந்தைக்கு...??"

மயான அமைதி...மனமோ பேரிரைச்சலில்...!!!

(படம் தந்த கூகுள்' க்கு நன்றி)
--விளையாடும் வெண்ணிலா....

18 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

சுட்டியை சொடுக்கி படிக்கவும்.

தமிழன் ஒரு இளிச்சவாயன். ‍ ஜடம்.

துளசி கோபால் சொன்னது…

ஒரு த்ரில்லர் வாசிப்பதுபோல் ஆரம்பம். என்னவாகுமோன்னு......திக் திக் உணர்வு.

அப்புறம் பார்த்தால் நரக (எழுத்துப்பிழை இல்லை)வாழ்க்கையில் நாம் இழந்தவைகள்................:(

வயசாகுதுல்லெ.............

VELU.G சொன்னது…

உண்மை தான் நண்பரே

மிகவும் நெகிழ்ச்சியான கட்டுரை

Sathish Kumar சொன்னது…

//பெயரில்லா சொன்னது…
சுட்டியை சொடுக்கி படிக்கவும்.//

வருகைக்கு நன்றி. படிக்கிறேன்..!

சக்தி கல்வி மையம் சொன்னது…

Nice..

Sathish Kumar சொன்னது…

//துளசி கோபால் சொன்னது…
ஒரு த்ரில்லர் வாசிப்பதுபோல் ஆரம்பம். என்னவாகுமோன்னு......திக் திக் உணர்வு.//

வருகைக்கு வாழ்த்துக்கும் நன்றி கோபால்...! பயணத்தின் திகில் அனுபவத்தை மறக்கச் செய்துவிட்டது அந்த மக்களின் வாழ்க்கை...!!

Sathish Kumar சொன்னது…

//VELU.G சொன்னது…
உண்மை தான் நண்பரே
மிகவும் நெகிழ்ச்சியான கட்டுரை//

மனம் திறந்த கருத்துரைக்கு..
நன்றி நண்பர் வேலு அவர்களே...!

Sathish Kumar சொன்னது…

//sakthistudycentre-கருன் சொன்னது…
Nice..//

நன்றி கருன்...!!!

ஆனந்தி.. சொன்னது…

கிராமம்..நீங்கள் விவரிச்ச விதம்...ம்ம்..எதையோ தேடி ஓடிட்டு இருக்கோம்..பக்கத்தில் இருக்கும் அழகான விஷயங்களை எல்லாம் தொலைத்து விட்டு தேடிட்டும் இருக்கோம் இல்லையா..எனக்கும் இந்த இயற்கை சூழ்நிலைகள் மேலே பெரிய காதலே இருக்கு சதீஷ்..அது பத்தி கூட ஒரு போஸ்ட் டில் போட்டு இருந்தேன்...

http://ananthi5.blogspot.com/2010/12/%E0%AE%87%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%A9%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%A9.html

நீங்க விவரிச்ச விதம்..அந்த மனிதர்கள்..அப்பா வை பற்றிய உங்கள் உணர்வுகள்..ம்ம்...எல்லாமே ரொம்ப உணர்வு பூர்வமா இருந்தது சதீஷ்...உண்மையில் நீங்க ரொம்பவே நல்லா ப்ரெசென்ட் பண்றீங்க...ஏற்கனவே இந்த இணையம்..என் இழக்கும் அற்புத நிமிடங்கள் னு கொஞ்சம் யோசனியிலே இருக்கும் என்னை...இன்னும் அதிகமாய் யோசிக்க வச்சுட்டிங்க..இது தான் ரியாலிட்டி சதீஷ்...அழகை பக்கத்தில் வச்சுட்டே காசுக்காய் ஓடுறோம் எங்கயோ ஒரு திசையை நோக்கி...ம்ம்...படிக்க ரொம்ப இதமாய் இருந்தது இந்த பதிவு..நன்றி சதீஷ்...

குறையொன்றுமில்லை. சொன்னது…

நிஜம் சுடத்தான் செய்கிரது. அருமை.

Sathish Kumar சொன்னது…

ஆனந்தி.. சொன்னது…
//படிக்க ரொம்ப இதமாய் இருந்தது இந்த பதிவு..நன்றி சதீஷ்...//

நன்றி ஆனந்தி...!
//ஏற்கனவே இந்த இணையம்..என் இழக்கும் அற்புத நிமிடங்கள் னு கொஞ்சம் யோசனியிலே இருக்கும் என்னை...இன்னும் அதிகமாய் யோசிக்க வச்சுட்டிங்க..//
அப்படி எல்லாம் சொல்லிட்டு மூட்டைய
கட்டிடலாம்னு நெனக்காதீங்க...!! தொடர்ந்து எழுதிட்டே இருங்க...!! நான் ப்ளாக்'லிருந்து காணாப் போகும்போதெல்லாம், தலையில தட்டி மறுபடியும் நீங்க தானே கூட்டி வருவீங்க..!!

Sathish Kumar சொன்னது…

//Lakshmi சொன்னது…
நிஜம் சுடத்தான் செய்கிரது. அருமை.//
ரொம்ப நன்றிம்மா...!! உங்க கமெண்ட் எனக்கு ரொம்ப சந்தோஷத்த தருது..!!

ஆனந்தி.. சொன்னது…

சதீஷ்...ப்லாக் நேத்து மதியம் இருந்து ஓபன் பண்ணவே முடியல..கூகிள் இல் ப்ராப்ளம் னு கேள்விபட்டேன் . நிறைய பேருக்கு சேம் ப்ராப்ளம்..இப்போ தான் ஓபன் பண்ண முடிஞ்சது ..சரி..எப்போ அடுத்த போஸ்ட் போட போறீங்க..ஐ ஆம் waiting....

Kousalya Raj சொன்னது…

தற்செயலாக உங்கள் தளம் இன்று வந்தேன்...உங்கள் எழுத்துக்கள் மிக ரசிக்க வைத்தன...ஒன்றை பெற ஒன்றை இழந்து தான் ஆகவேண்டும் என்று நம்மை நாமே சமாதானம் செய்து கொண்டாலும், ஏதோ ஒரு சந்தர்ப்பம் நம் மனதை குத்தி கிழித்து விடுகிறது.

கடைசி ஐந்து பாராக்கள் கவித்துவமாக இருந்தது. உங்களின் இந்த பதிவைப் பற்றி இன்னும் சொல்லி கொண்டே போகலாம்...உங்கள் எழுத்தை தொடர்ந்து படிக்கணும் என்று தொடர ஆரம்பித்துவிட்டேன்...தொடர்ந்து அதிகம் எழுதுங்கள்.

Sathish Kumar சொன்னது…

ஆனந்தி.. சொன்னது… //சரி..எப்போ அடுத்த போஸ்ட் போட போறீங்க..ஐ ஆம் waiting....//

ஆனந்தி..! நெகிழ்வான சம்பவம் ஒன்னு...! சீக்கிரம் சந்திக்கிறேன்...!! உங்க நட்பு கெடச்சதுல எனக்கு ரொம்ப மகிழ்ச்சி..! நீங்க என்னோட பெரிய ட்ரைவிங் போர்ஸ்...!...!

Sathish Kumar சொன்னது…

//Kousalya சொன்னது… உங்கள் எழுத்தை தொடர்ந்து படிக்கணும் என்று தொடர ஆரம்பித்துவிட்டேன்...தொடர்ந்து அதிகம் எழுதுங்கள்.//
வருகைக்கும் கருத்துரைக்கும் ரொம்ப நன்றிங்க கௌசல்யா...!!

ஷர்புதீன் சொன்னது…

:)
வருகையை பதிவு செய்ய ..

Sathish Kumar சொன்னது…

//ஷர்புதீன் சொன்னது…
:)
வருகையை பதிவு செய்ய ..//

ஹா...ஹா...ஹா.... வருகைக்கு நன்றி

கருத்துரையிடுக