சனி, 13 ஆகஸ்ட், 2016

பாட்டி...!!!

ரெங்கா பாட்டி என்று தான் அந்த தெரு முழுக்க பரிச்சயம். கோட்டோவியம் போல் மிக மெல்லிய உருவம், நைந்து போன நார் போன்ற அடர்த்தியற்ற முடியில் சின்னதாய் ஒரு கொண்டை, ஒரு கையளவுக்கும் சற்றே கூடுதலான நீள்வட்ட முகம், தெற்றுப்பல், ஒடுங்கிய கன்னம்...இது தான் ரெங்கா பாட்டி. எழுபதை கடந்த சோர்வு அவள் முகத்திலோ செயலலிலோ தென் படவே படாது. யார் பார்த்தாலும் முதலில் ஒரு பரிதாபமும், பின் வாரி அணைத்து கொள்ள வேண்டும் என்ற அன்பும் உடனே தோன்றும் ஒரு ஜீவன். பாட்டிக்கு பிடித்தவர், பிடிக்காதவர், உறவினர், எதிரி என்ற வித்தியாசமெல்லாம் கிடையாது, எல்லோரும் ஒன்றே! யார் வந்து எது கேட்டாலும், தன்னிடம் உள்ள அனைத்தையும் கொடுத்துவிடுவாள். அடுத்தவர் கஷ்டம், பசி பொறுக்க மாட்டாள்.

ரோஷக்காரிதான்....என்றாலும் அவளை பிடிக்காதவரும் உண்டா என்ன...! அவள் தூங்கி பார்த்திருக்க மாட்டார் யாரும். ஒரு நிமிடம் ஓய்வென்று இருக்க மாட்டாள். கோழி கூவும் முன்பே விழித்துவிடும் அவள் கண்கள். அனைவரும் அடங்கியபின் தான் ஓரிடத்தில் நிலை கொள்ளும் அவள் கால்கள். இரு மகள்களை கட்டி கொடுத்து, மகன்களுக்கு மணமுடித்து மருமகள்கள் வீடடைந்த பின்னும் கூட கருக்கலில் குளித்து, வாசல் தெளித்து, கோலம் போட்டு, பாத்திரம் துலக்கி, தண்ணீர் பிடித்து, மூன்று மகன் வயிற்று பேரன் பேத்திகளுக்கு தேநீர், சிற்றுண்டி தயாரித்து, தாத்தாவிற்கு வெந்நீர் வைத்து என்று நீளும் அவள் காலை பணிகள். அவள் தன சின்னஞ்சிறிய வயிற்றுக்கு சிறிது தீனி போட அது ஆகும் பகல் 11 அல்லது 12. துரதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் யாரேனும் வாடிய முகத்தில் வாசல் நின்றால் தன் ஒட்டிய வயிறை பாராமல் உணவை வந்தவர்க்கு ஈந்து விடுவாள் பாட்டி. மூன்று வேளையும் நிற்காமல் ஓடி கொண்டே இருப்பாள். தன்னை பற்றி கொஞ்சமும் நினைக்கமாட்டாள். ஆச்சரியம் என்னவென்றால்....இப்படி தன் வயிற்றை பார்க்காமலேயே வற்றலாகி வெறும் கூடாய் போன அவ்வுடம்பில் எங்கிருந்துதான் நாளெல்லாம் பாடுபட தெம்பு வருகிறதோ தெரியவில்லை.

தாத்தாவும், மகன்களும், மருமகள்களும் சரி....இந்த ஜீவனின் நிலையை யாரும் உணர்ந்ததும் இல்லை, பொருட்படுத்தியதும் இல்லை. அவளும் அது வேண்டும், இது வேண்டும் என்றோ....,"எனக்கு யார் இருக்கா", என்று ஏக்கமோ அங்கலாய்ப்போ எதுவும் செய்வாள் இல்லை. பகல் உச்சிப்பொழுதில் நெல், கடலை, மிளகாய், உளுந்து என்று எதையாவது புடைத்து வாசலில் காயவைத்து கொண்டிருப்பாள். அவள் முறத்தில் தானியங்களை புடைக்கும் அழகே தனி. ஒவ்வொரு முறை தானியங்கள் முறத்தை விட்டு மேல் எழும்போது விரல்களால் முறத்தை தட்டி ஒரு ஓசை எழுப்புவாள். தானியங்கள் மேலெழும்போது அவளுடைய புருவங்களும் ஜோடியாக மேலெழும்பும். தானியங்கள் மீண்டும் முறத்தில் தங்கி பதறும், தோலும் தனியே பிரிந்து கீழே விழும்போது  'உச், என்று ஒரு ஓசை கொடுப்பாள். ஒவொவொரு புடைத்தலிலும் தன் விரல்கள், புருவங்கள், உதடுகள், கைகள் கொண்டு இப்படியொரு தேர்ந்த அபிநய கச்சேரியே நடத்திக் காட்டுவாள். பார்க்கவே அலாதியாய் இருக்கும்.

ஓய்வென்று சிறிது நேரம் கிடைத்துவிட்டால், நாளிதழ்களை படிக்க தொடங்கிவிடுவாள். தேதியோ வருடமோ அவளுக்கு ஒரு பொருட்டே அல்ல. அவளை பொறுத்த வரையில் வாசிக்க வேண்டும். அதற்குமேல் அருகில் சென்றால் நாளிதழ் கண்ணை குத்திவிடும் என்னும் அளவுக்கு கண்களுக்கு அருகில் நாளிதழை வைத்து தன் ஆட்காட்டி விரலால் ஒவ்வொரு எழுத்தாய் கூட்டி கூட்டி ஒரு குழந்தையை போல் படிப்பாள். ஓய்வுபெற்ற அரசு பள்ளியின் ஆசிரியரான தாத்தா தன்  கண்களையும், கண்ணாடியையும் பாதுகாத்து கொள்ளும் சிரத்தையில் கால் பங்கு கூட பாட்டியின் பார்வை குறைவில் காட்ட மாட்டார். அவள் சோர்வடையும் வரை தொடரும் இந்த வாசிப்பு. படித்த செய்தியை அருகில் யார் இருந்தாலும் சொல்லி நியாயம் பேசுவதும் உண்டு. பெரும்பாலும் அக்கம்பக்கத்தில் உள்ள அவள் வயதை ஒத்த நண்பர்களிடம் தான் இந்த பகிர்தல் இருக்கும். அவர்களும் அது எந்த காலத்து செய்தி, எப்போது நடந்தது என்ற விவரங்களை எல்லாம் பற்றி கவலைபடாதார் தாம்.


மாமியார் மருமகள்கள்  சண்டை அற்ற ஒரே குடும்பம் பாட்டியின் குடும்பமாக தானிருக்கும். பாட்டியை யாருக்கும் விரோதமாய் பாவிக்க மனம் வரவே வராது. 'அது ஒரு அப்பிராணி, ஒரு ஈ, எறும்புக்கு கூட கேடு நினைக்காத உசுரு' என்பார்கள் மருமகள்களும். பாட்டிக்கு பேரன் பேத்திகள் மேல் அளவுகடந்த பாசம். அவளுக்கு பேரப்பிள்ளைகளில் எல்லோருமே ஒன்றுதான். மாலை வேளைகளில் அனைவரும் பாட்டியை சூழ்ந்துகொண்டு பாடம் படித்து கொண்டும், கதைகள் கேட்டுக்கொண்டும், அவள் மடியில், தோளில் தொங்கிக்கொண்டும் விளையாடிக் கொண்டிருப்பார்கள். காக்கா கதை, குருவி கதை, சிங்கம் கதை, குதிரை கதை, ராஜா கதை என்று ஏகப்பட்ட கதை கூறுவாள். கதைகள் கேட்டுக்கொண்டே ஒவ்வொன்றாய் தூங்கிவிடும். ஒவ்வொரு கதையிலும், குழந்தைக்கான அம்சமும், நன்னெறிகளும் இருக்கும். சொர்க்கமாய் திகழும் அந்த மாலை வேளைகள்.

பட்டணத்தில் வசிக்கும் மகள் மேல் தாத்தா, பாட்டி என்று அனைவரும் உயிராய் இருப்பார்கள். வாரிசுகள் தங்காமல் போன வேதனையால் வேண்டி, தழைத்த முதல் வாரிசு என்பதால் மிகுந்த பாசத்தோடு வளர்த்தார்கள். மருமகன் மேல் மிகுந்த மதிப்பும் பாசமும் கொண்டிருந்தார்கள். என்னவோ சில காரணங்களால் தாத்தவிற்கும் பட்டணத்து மகள் குடும்பத்திற்கும் சிறு உறவுச்சிக்கல். தவறென்னவோ தாத்தாவின் மேல்தான். ஆதலால் சிறிது காலம் பேச்சுவார்த்தையோ, போக்குவரத்தோ இன்றி இருந்த நேரம் அது. பாட்டிக்கு தன் மகளையோ, பேரப்பிள்ளைகளையோ பார்க்காமல் இருப்பு கொள்ளவில்லை, துடித்துதான் போனாள். ஒருநாள் நெய்முறுக்கு , அதிரசம், சத்துருண்டை, லட்டு என்று தன் கையாலே அனைத்தையும் செய்து, சோளம், கம்பு, கேழ்வரகு என்று நகரத்தில் கிடைக்காத தானியங்களையும் கட்டி எடுத்துக்கொண்டு தாத்தாவையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டுவிட்டாள்.

மகளின் கோபமோ இத்தனை காலங்களில் தீரவேயில்லை, ஆதலால் இவர்களை ஏற்றுக்கொள்ளவே இல்லை. மனைவியின் கோபத்தில் நியாயம் இருப்பதை உணர்ந்து நல்லிதயம் கொண்ட மருமகனும் அவளை தடுக்கவும் இல்லை. மிகவும் அழுது கொண்டே , பேரப்பிள்ளைகளையாவது பார்த்து செல்கிறோமே....என்று கெஞ்சினர். அதெல்லாம் கூடாது அவர்கள் பள்ளி சென்றிருக்கிறார்கள் என்று கூறிவிட்டாள் மகள். பேரப்பிள்ளைகள் பச்சிளம் பாலகர்கள்; பள்ளி சென்றிருந்தனர். இந்த இரண்டு தொண்டு கிழமும், அக்கம்பக்கத்தில் பேரப்பிள்ளைகள் படிக்கும் பள்ளியை விசாரித்து, மூட்டை முடிச்சுகளுடன் நடந்தே அந்த உச்சி வெயிலில் பள்ளியை அடைந்தனர்.



வியர்க்க விறுவிறுக்க, இரண்டு முதியவர்களை மூட்டை முடிச்சுகளுடன் கண்டதும் ஆசிரியர்களுக்கும், அலுவலர்களுக்கும் குழப்பமாய் இருந்தது. அப்பள்ளியின் தாளாளர், மகளின் சிறுவயது தோழி. இவர்களின் வியர்வை வடிந்து, சோர்வுற்று, வேதனையால் வாடிப்போயிருக்கும் முகத்தினை கண்டதும், தாங்கமாட்டாமல், உள்ளழைத்து தன் அறையில் உட்காரவைத்து ஆசுவாசப்படுத்தினாள். பேரக்குழந்தைகளை பார்க்க வேண்டும் என்று கேட்டு கண்ணீர் விட்டு துடிக்கும் இரு வயதான தம்பதிகளை பார்த்து அருகில் இருந்த ஆசிரியர்கள் யாவரும் கலங்கி விட்டனர். ஒரு ஆசிரியர் சென்று குழந்தைகளை அழைத்து வந்தார். இத்தனை நாட்கள் கழித்து பேரப்பிள்ளைகளை கண்டதும், பாட்டி வாரி அணைத்துக்கொண்டு முத்தமிட்டு அழுததும், அவள் பாடிய பாட்டும், இப்போதும் அந்த பள்ளியில் எதிரொலித்துக்கொண்டே இருக்கும். தான் ஆசையாசையாய் செய்து கொண்டுவந்த பலகாரங்களை எடுத்து ஒவ்வொவொரு குழந்தைக்கும் அழுதுகொண்டே, பாடிக்கொண்டே, ஊட்டிக்கொண்டே இருந்தாள். குழந்தைகளும் பாட்டி அழுவதை பார்த்து தாங்களும் அழத்தொடங்கிவிட்டனர். கண்ணீர் தரை நனைத்தது. அந்த பாசப்போராட்டத்திலிருந்து மீள முடியாமல் ஊர் திரும்பினர்  இருவரும்.

இதோ காலங்கள் ஓடி விட்டது. ஓய்வன்றி உழைத்த தன்னிகரில்லா பாட்டி சில வருடங்களுக்கு முன்னர் மறைந்து விட்டாள். தாத்தா ஒரு இரும்பு மனிதர், அவர் அழுது மற்றவர் பார்த்தது அன்றுதான் முதலும், கடைசியும். "என் அம்மா என்னை விட்டு போயிடிச்சா",....என்று அவர் வெடித்து அழுத்தது, தன் ஆழ்மனதில் பொதிந்திருந்த இத்தனை ஆண்டுகால தங்களின் வாழ்க்கையின் பிரதிபலிப்பே. "இருக்கும் போது கிழவி அருமை தெரியலை, போனதுக்கப்புறம் அழுது துடித்தென்ன பயன்", என்ற வார்த்தைகளும் கேட்காமலில்லை. தாத்தாவிற்கு, பாட்டி இல்லாமல் நாட்கள் நகர்வது வெறுப்பாய் இருந்தது. இந்த துக்கத்திலேயே அவரும்  அடுத்த சில வருடங்களில் போய் சேர்ந்துவிட்டார்.


குடும்பம் விரிவடைந்துவிட்டது, பேரப்பிள்ளைகளே குழந்தை பெற்றுவிட்டனர். இங்கொன்றும் அங்கொன்றுமாக தொழில், உத்தியோகத்தின் காரணமாக நாலா திசைகளுக்கும் பறந்து போனாலும், முடிந்தவரை தாத்தா, பாட்டியின் நினைவு நாளுக்கு மட்டுமாவது அனைவரும் கிராமத்தில் ஒன்று கூட முயல்வர். இன்று பாட்டியின் பத்தாம் ஆண்டு நினைவு நாள். குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்திருந்தனர். பூஜை முடித்து, குழந்தைகளுக்கு தாத்தா, பாட்டி பற்றிய நினைவுகளை எடுத்து சொல்லி அவர்களை போல நாம் வாழ வேண்டும் என்று போதிப்பது வாடிக்கை. குழந்தைகளும் தங்களின் கொள்ளுத்தாத்தா, பாட்டி பற்றி ஆர்வமாய் கேட்பார்கள்.

சின்னஞ்சிறிய மழலை ஒன்று தன்  அம்மாவிடம் கேட்டது, "சாமின்னா என்னம்மா".
சாமின்னா, எல்லாருக்கும் நல்லது செய்யும், யார் என்ன கேட்டாலும் கொடுக்கும், நல்ல அறிவை கொடுக்கும், எல்லாரையும் பத்திரமா பாத்துக்கும், அது தான்மா சாமி", என்றாள் அந்த வாண்டின் தாய்.

"அப்போ பிள்ளையார் சாமியா?", என்றது அந்த பிஞ்சு.

"ஆமாடா, முருகன், சிவன், பிள்ளையார், எல்லோரும் சாமி தாண்டா", என்றாள் தாய்.

"அப்போ நம்ம பாட்டியும் பிள்ளயார் மாதிரி தானே.....!!".

சில நொடிகள் அடர்ந்த அமைதி நிலவியது அங்கே. பாட்டியின் மகள், பேத்தி, கொள்ளுப்பேத்தி மூன்று பெரும் ஒரே நேர்கோட்டில். பாட்டியின் மகளின் கண்களில் தரதரவென்று கண்ணீர். ஆத்தா, அம்மாவாகி இன்று மம்மி என்று உருமாற்றம் பெற்றிருப்பதில் தொடங்கி, பல்வேறு வாழ்வியல் மாற்றங்களை கண்டுவிட்ட மூன்று தலைமுறையும் ஒத்து நின்றார்கள் "ஆமாம்....பாட்டியும் சாமி தான்...!!!"

(படம் தந்த கூகிள்'க்கு நன்றி)
--விளையாடும் வெண்ணிலா....