வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

இவுங்க எப்பவுமே இப்படித்தான் பாஸ்...!!

"அனுபவம்" - இந்த வார்த்தை இடத்துக்கு இடம், நபருக்கு நபர், விஷயத்துக்கு விஷயம் என்று நிறம் மாற்றத்திற்கு உட்பட்டதேயானாலும், முடிவாய் அது ஒருவருக்கு கொடுப்பதென்னவோ படிப்பினைகளே...!  சியோலிலிருந்து  சிங்கப்பூர் வழியாக சென்னை பயணம்.  சிங்கப்பூரில் வசிக்கும் சகோதரரை சந்திப்பதாகவும் திட்டம்.  இந்த நெடிய பயணத்திலும், எமது மண்ணில் எமது மக்களுடன் கழித்த சில நாட்களிலும்,  எம்மை உற்று நோக்கி சிந்திக்க வைத்த சில நிகழ்வுகளே இந்தப் பதிவு.  இனி பயணத்திலிருந்து துவங்குவோம்....

சில அனுபவங்களுடன் இந்தியா செல்கிறேன். இங்கே நான் சுமந்து செல்வது படிப்பினைகளா என்பதில் எனக்கும் ஐயப்பாடே.!  ஏனெனில் நான் தவறிழைத்து எதையும் கற்றுக் கொள்ளவில்லை.  எனக்கு அறிமுகமானவைகள் எல்லாமே மன்னிக்கவும்....நான் அறிந்து கொண்டவைகள் எல்லாமே எனக்கு புதியவைகளே..!  கற்றுக் கொண்டவைகளே...!  அவற்றை இங்கே எழுத்தாக்கிடவும்  விருப்பமில்லை. அவைகள் தானாகவே இங்கும் அங்குமாய், உண்மைகளும் உதாரணங்களுமாய்,  வெறுப்பும் ஆற்றாமையுமாய்,  ஏக்கங்களும் துக்கங்களுமாய்,  பிதற்றல்களும் பினாத்தல்களுமாய்,  இதுவும் அதுவுமாய், இன்னும் ஏதேதுமாய் என்னையும் மீறி பிறப் பதிவுகளில் வந்தே தீரும். பொறுத்துக் கொள்வீர்களாக..!  அதிகாலையிலேயே ஆயத்தம்.  விமானப் பயணங்கள் எப்போதுமே எனக்கு எரிச்சல்களை தருபவைகளே...இரு விஷயங்களைத் தவிர்த்து..!  ஒன்று, நெடு நாட்களாக படித்து முடிக்கப்படாமல் இருக்கும் நாவலை எந்த தொந்தரவும் இன்றி படித்து முடிக்க நேரம் கிடைப்பது, மற்றொன்று...., நான் விரும்பும் உலகத் திரைப்படங்களை காணும் வாய்ப்பு கிடைப்பது.

'இஞ்சியான்' சர்வதேச விமான நிலையம், சியோல்.  இந்த நிலையத்தின் பிரம்மாண்டம் எப்போதுமே கண்களை விரியச் செய்யும்.  போர்டிங் சமயத்தில் தான் அந்த தம்பதியரை கண்டேன்.  நாற்பதுகளின் இறுதியில், வட இந்தியர்கள். படித்த மேட்டுக் குடி மக்கள்.  வசதியின் வனப்பு அவர்களின் சரீரத்தில் தங்க ஆபரணங்களாய் பளபளத்துக் கொண்டிருந்தன. ஆண் சினகேப் புன்னகையொன்றை உதிர்த்தார். எனக்கு பின்னிருக்கைகளில் தான் இருவரும் அமர்ந்திருந்தனர்.  ஆரம்பத்திலிருந்தே பெண்மணி தொலைப்பேசியில் உரையாடிக் கொண்டே இருந்தார். பயணியர் பாதுகாப்பு அறிவிப்பில் கைப்பேசிகளை அணைக்குமாறு வேண்டுகோள் விடுத்த பிறகும் தொடர்ந்தன உலகின் அதி முக்கியம் வாய்ந்த அவருடைய "ஹேவ் யு டன் யுவர் ப்ரேக் பாஸ்ட்..?"  உரையாடல்கள்.  விமானம் ஓடு பாதையை நோக்கி நகர ஆரம்பிக்க இருந்ததால், பணிபெண் தேவதை ஒருவர் அவரை அணுகி கைப்பேசியை அணைக்குமாறு தன் அதி சிவந்த உதடுகளின் வழியே ஆங்கிலத்தை உதிர்த்து விட்டுச் சென்றார்.  பெண்மணியின் உரையாடல்கள் நின்ற பாடில்லை. விமானம் ஊர்ந்து மெல்ல நகரத் தொடங்கியது. கைப்பேசியை கைவிடாத நம் கதாநாயகியை கண்ட அப்பணிப்பெண் மறுபடியும் அருகே வந்து வேண்டுகோள் விடுத்துச் சென்றார். நமக்கே எரிச்சலாக இருந்தது.  "டோன்ட் யு ஹேவ் சென்ஸ்? சுவிட்ச் ஆப் யுவர் ப்ளடி மொபைல்..!  யு மே நாட் கேர் பார் யுவர் சேப்டி, பட் வி கேர் அவர்ஸ்...!", வார்த்தைகள் சீறிப் பாய்ந்து அந்தப் பெண்மணியை துளைத்தன அவருக்கு நேர் இடது திசையில் அமர்ந்திருந்த வெள்ளைக்கார இளைஞனிடமிருந்து.  பிரிட்டிஷ்  அஸ்ஸன்ட்...!  கைப்பேசி உரையாடல் அதி விரைவாக துண்டிக்கப்பட்டது.  தம்பதியரால் பதில் பேச முடியவில்லை.  ஆண் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன.  எனக்கு உள்ளூர பெரு மகிழ்ச்சி.  பின்னர் தொடர்ந்த பயணத்தில் தன் கோபத்தை பலவிதமாய் அப்பணிப்பெண்ணை அலைக்கழிப்பதிலும், அதட்டலாய் ஏவல் இடுவதிலும் வெளிப்படுத்தினார் அந்தக் கனவான்.  தன் கோபத்தை எங்கேயாவது, யார் மீதாவது  இறக்கி வைத்து விட வேண்டும் நம்மவர்களுக்கு...!  இவர் இட்ட கூச்சல் தாளாமல், கேபின் சீப் வந்து சமாதான படுத்த முயன்றார் இவரை.   தம் தவறுகளை திருத்திக் கொள்ள முயல்வதே இல்லை நம்மில் சிலர்.  இவர்களை போன்றவர்களால் தான் சில சமயங்களில் ஒட்டு மொத்த இந்தியர்களும் ஒழுங்கீனர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். அறிவின் முதிர்ச்சி நடத்தையின் வெளிப்பாடே...!

சிங்கப்பூர் சங்கி விமான நிலையம். டெர்மினல் மூன்று மிகவும் வசீகரம். ஏதோ தோட்டத்தில் நடந்து செல்வது போன்றதோர் உணர்வு. இந்த டெர்மினல் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்த சில நாட்களில் இதைப் பற்றி ஒரு டாகுமெண்டரி நிகழ்ச்சியை டிஸ்கவரி சேனலில் கண்டு மலைத்தேன். அதை விட நேரில் பேரழகுடன் இருக்கிறது. ஏற்கனவே சில முறை சென்றிருந்தாலும், இம்முறை தான் சில மிக அழகான தமிழ் பெண்களை தகவல் மைய அதிகாரிகளாக கண்டேன்.  மகிழ்ச்சியில் துள்ளியது மனம். கடலை சாகுபடி செய்ய எத்தனித்து நான் ஒருவரை அணுக, கேட்ட கேள்விகளுக்கு தெளிவாக, கை பிடித்து அழைத்து செல்லாத குறையாக அவர் அளித்த விளக்கங்கள் மூலமாகவும்,  தன் அழகிய மந்திரப் புன்னகையாலும் என் ஜொள்ளருவியை   அணை கட்டி தேக்கி நிற்க வைத்தார்.  அவ்விடத்தை விட்டு நகரும் முன் அவர் கண்கள் சிமிட்டி பை சொன்னது, வாயை தொடச்சிக்கோ...என்று சொல்வது போலவே இருந்தது.  ஹீ...ஹீ...கானக்குயில்கள் கூவினாலே அழகு தான் போங்கள்....!  சிங்கப்பூர் மட்டுமல்ல, சிங்கைத் தமிழ் பெண்களும் சிங்காரமே...!  தமயனை சந்தித்துவிட்டு சென்னை செல்லும் ப்ளைட்டில் அமர்ந்தேன்.  என்ன ஆச்சரியம்...! அதே முதிய ஜோடி என்னை கடந்து சென்றது...!

காமராஜ் சர்வதேச விமான நிலையம், சென்னை. வந்தாச்சு...சென்னை..!  விமான நிலையம் 'சர்வதேச' என்ற வார்த்தையை தாங்கிப் பிடிக்க பல விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டி இருப்பது அப்பட்டமாக தெரிந்தது.  சிங்கப்பூரில் தங்கள் உடைமைகளை தாங்களே காத்திருந்து எடுத்து வந்த ஜோடி, சென்னை விமான நிலையம் வந்து இறங்கியதும், தங்கள் லக்கேஜ்களை எடுக்க ஒருவரை அமர்த்தி எடுக்கச் செய்து, அவருக்கு ஐம்பது ரூபாய் பணத்தையும் திணித்தது.  டாலர்களாய் சம்பாதித்து  ரூபாய்களாய் செலவழிப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லைதான்...ஆனால், இந்திய மண்ணை மிதித்த அடுத்த நிமிடமே இவர்களை ஆண்டான்-அடிமை எண்ணம் பற்றிக்கொள்கிறதே அதன் ரகசியம் தான் நமக்கு புரிவதே இல்லை.

சென்னை நகர் முழுக்க அழுத்தமாய் பதிந்திருக்கும் குப்பை கூளங்களும், சாலையோர  சாக்கடைகளும்,  துர்நாற்றங்களும்  பல வருடங்களாய் வாய் நோக நாம் சொல்லிக் கொண்டிருக்கும் சிங்காரம்  எங்கே என்று ஏங்கி தேட வைத்தது.  அஷோக் பில்லர் அருகில் ட்ராபிக்கில் சிக்கி எமது வாகானம் நின்றது.  இடது பக்கத்தில் சீருடையில் ஒரு ஆட்டோக்காரர். கைகளில் வைத்து எதையோ சாப்பிட்டுக் கொண்டிருந்தார். சாப்பிட்டு முடித்ததும், அந்தக் காகிதத்தை அப்படியே கீழே போட்டு விட்டு  கைகளை தன் நீண்ட நாவினால் நக்கி, நக்கி தூய்மை படுத்தினார்.  எலி வலையில் இருந்து மலைப் பாம்பு சீறியது போல் இருந்தது அக்காட்சி. பின்னர், கைகளை தூரமாக நீட்டி வைத்து, நன்றாக உதறிவிட்டு, பின் தன் காக்கி சீருடையில் துடைத்துக் கொண்டார். என்ன ஒரு தூய்மை உணர்வு, பாருங்கள்...!  கரங்களை தூய்மையாய் வைத்திருப்பதில் தான் எத்தனை அக்கறை.  வியந்து தலை சுற்றிப் போனேன். மஞ்சளரைத்த மாவு மில் போல்  இருந்த தன் வாயை விரியத் திறந்து  இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த என்னை பார்த்து ஒரு மந்தகாசப் புன்னகை வேறு. அட ராமா...! அவர் உண்டது மசாலா தோசையாக இருக்குமா...இல்லை வாழைக்காய் பஜ்ஜியாக இருக்குமா...?  விட்டுத் தள்ளுங்கள்....!  அவர் வாயிலும், வாய்க்குள் இருக்கும் வஸ்திலும் நமக்கென்ன ஆராய்ச்சி...!

பின் ஒரு நாள் நண்பர் ஒருவரை பார்க்க வடபழனி சென்று விட்டு, வீடு திரும்ப ஏழைகளின்  ஏர்ப்போர்ட்டாம் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு சென்றிருந்தேன்.  வழி நெடுக பழரசாமாய் பருகியதால், இயற்கை அழைக்க அருகிலிருந்த ஆண் கழிவறைக்கு  நடையை கட்டினேன். கடவுளே...! அருகில் செல்லவே முடியவில்லை. அந்தளவு துர்நாற்றம் குடலை புரட்டியது. நான் விழி பிதுங்கி, நெஞ்சடைத்து தலை தெறிக்க ஓடி வருவதை கண்ட ஒரு நடுத்தர வயது மகளிரணி 'கெக்களிக்கே' என்று நக்கல் நகைப்பு நகைத்தார். எனக்கு மானமே போய்விட்டது போல் இருந்தது இந்த ஆம்பளப் பயபுள்ளைகளால...! அந்த வசந்த மாளிகை அருகிலேயே  ஒருவர் சுடச்சுட சப்பாத்தி குருமாவை ஓப்பன் அட்மாஸ்பியரில்  வைத்துக்கொண்டு  உறுமி அடித்துக் கொண்டிருந்தார். வாழ்க... சுத்தம்(!) சோறு என்ன...சப்பாத்தி குருமாவே போட்டு விட்டது...!  மறைந்த தலைவர்களுக்கு சிலை திறப்பதிலும், மணிமண்டபம் அமைப்பதிலும் காட்டும் அக்கறையில் சிறிதளவாவது, பல மாநில மக்கள் வந்து செல்லும் ஒரு மாநகரத்தில் கழிப்பிட வசதிக் குறைவுகளை நீக்கி சுகாதாரத்தை பேணிக் காக்கும் நடவடிக்கைகளில் காட்டினால் வளமான, நோயற்ற வருங்கால தமிழகத்தை நாம் அடையலாம்.   இந்த விஷயத்தில், பெண்களின் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியது...! 


இன்றைய இளைஞர் சமுதாயத்தை ஜனநாயகத் தூண்களில் ஒன்றான பத்திரிகைகள் வழி நடத்தும் விதத்தையும் பார்ப்போமே...!  இப்போது,   "நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா..!  அஜீத்தும், விஜய்யும் ஒன்றாக அரசியல் கட்சித் தொடங்குவார்களா...!", போன்ற அதி முக்கிய,  அத்தியாவசிய வாதத்தை சுற்றித்தான் பத்திரிகைகள் தங்கள் தர்மத்தை நிலை நாட்டி கொண்டிருக்கின்றன.  ஒரு கல்லூரி மாணவனை அழைத்து துனிசியாவில், எகிப்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது தெரியுமா என்று கேட்டேன்,  நீங்கள் சியோலில்-அரபு தேசத்தில் வசிப்பதால் உங்களுக்கு தெரியும், எங்களுக்கு எப்படி தெரியும் என்று ஒரு பொது அறிவு கொக்கி போட்டதில் விழுந்தவன் தான்....., எழுந்திருக்க இரண்டு நாள் ஆனது..!   சரி அத விடு, வெளிநாட்டு பிரச்சினை,  "S-Band  விவகாரம் என்னவென்று தெரியுமா?", என்று கேட்டால், நான் ஏதோ நம் முதல்வர் மனம் கவர் நடிகை நமீதா தழைய, தழைய சேலை கட்டி வருகிறார் பார்த்தாயா..என்று கேட்டதைப் போல் ஒரு பேரதிர்ச்சி பார்வை ஒன்றை விடுத்தார்.  "சரி போ ராஜா...!  உன் தலைவன் கட்-அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்ய டைம் ஆயிட்ச்சு...", என்று அவர் தன் கடமையாற்ற வழி விட்டு விலகி நின்றேன். 



விஜய்க்கு வெண்கல சிலை வைக்கலாமா, அஜீத்திற்கு அலுமினிய சிலை வைக்கலாமா என்று ஒரு கூட்டம் சி.எம். கனவுகளில் மிதக்கும் சில நடிகர்கள் பின் அணிவகுக்க, சொந்தமாக நாலு வார்த்தை கோர்வையாக பேசத் தெரியாத,  இந்தியாவின் கடந்த இரண்டு ஆண்டு நிகழ்வுகள் பற்றிக் கூட அறிவற்ற அந்நடிகர்களை அரசியலுக்கு அடையாளம் காட்டுவதிலேயே குறியாய் இருக்கின்றன நம் பத்திரிக்கைகள்.  ரசிகர்கள் என்ற பெயரில் லஞ்சத்தாலும், ஊழல்களாலும் எலும்பு கூடாகி அழிந்து கொண்டிருக்கும் தேசத்தை பற்றிய எந்த சுரணையுமின்றி படிப்பிலும் கவனமின்றி பெருங்கூட்டம் ஒன்று தறிகெட்டு அலைந்து அழிந்து கொண்டிருக்கிறது.  இவர்களே, இந்தக் கூட்டமே  இன்று மிகச் சுலபமாக பலரால் வீழ்த்தப்படுகிற கூட்டம்.  முதலில் ரஜினியை மக்கள் அரசியலுக்கு அழைக்கிறார்கள் என்று கூவிக் கூவியே காசு பார்த்த பத்திரிக்கைகள்,  பின்னர் விஜயகாந்த்தை முற்றுகையிட்டன.  இப்போது விஜய், அஜீத் என்று தமிழனை ஆள்வதற்கு தகுதி என்னவோ நடிகர்களிடம் மட்டும் தான் கொட்டிக் கிடைப்பதைப் போல் எப்போ வருவீங்க..எப்படி வருவீங்க...எந்த சந்து வழியா வருவீங்க...எந்த பஸ்ஸ  பிடிச்சி வருவீங்க... என்று தூண்டிவிட்டு  தங்கள் பணியை செவ்வனே செய்து கொண்டே இருக்கின்றன.  மக்களை இப்படி சூன்யம் வைக்கப்பட்டவர்கள் போல் வைத்திருப்பதில் இப்பத்திரிக்கைகள் பெரும் முனைப்புடன் இருக்கின்றன.  இதுவரை எதெதற்கோ முன்னுரைகளையும், விளக்கவுரைகளையும் முழம் நீளத்திற்கு வெளியிட்டு கொண்டிருந்த பத்திரிக்கைகள்,  மக்களுக்கு ஒரு நல்ல மனிதரை அடையாளம் காட்டி இருக்கின்றனவா என்றால், ஏமாற்றமே...! ஒவ்வொரு பத்து வருடமும் ஒரு தலைமுறை என்று கணக்கில் கொண்டால், எத்தனை புதிய தலைமுறைத் தலைவர்களை நாம் உருவாக்கி இருக்கிறோம் என்பதில் நமக்கு தெரிய வரும் கடந்தாண்டுகளில் பத்திரிக்கைகள் புரிந்த பெருந்தொண்டு..!  இவைகள் நல்ல தலைவர்களை, மாநிலங்களை, தேசத்தை உருவாக்க வல்ல செய்திகளை எங்கோ ஒரு மூலையில்,  பூதக் கண்ணாடி துணை கொண்டு தேடும் இடங்களில் அச்சிட்டு, இது போன்ற தேசத்துக்கு தேவையான நமீதா ரக செய்திகளை, சேவை மனப்பான்மையுடன் முதல் பக்கத்திலும், நடுப்பக்கத்திலும் இட்டு சமுதாயத்தின் அறிவுப் பசியைத் தீர்க்கின்றன. அடுத்த முறை இந்தியா திரும்புகையில்,  

இன்று....
புலிவேட்டையில்....,  
2016 இல்....,
தங்கத் தளபதி 'சஞ்சய் ஜோசப் விஜய்' கோட்டையில்...!"

என்ற செய்தி நம்மை வரவேற்றாலும் வரவேற்கலாம்.  எவ்வளவோ தாங்கிவிட்டோம்,  இத்த தாங்கமாட்டோமா...!  இரும்பு இதயம் வேண்டும் சகோதரா...!  திடமாய் இரு...! வாழ்க... பாரத சமுதாயம்...!

சில நல்ல விஷயங்கள் கண்களை, செவிகளை மற்றும் இதயத்தை குளிரச்செய்தன.  SBI  இன்சுரன்ஸ் விளம்பரத்தில் தெரியும் "அந்தக் குட்டி குட்டி சந்தோஷத்தில் சொர்க்கம்",  பொது கழிவறைகளை சுத்தபடுத்த "Domex" சமூக அக்கறையுடன் எடுத்த இனிஷியேடிவ், பாவை பள்ளியின் 'வீ கிரியேட் லீடர்ஸ்' விளம்பரம், ஹேரிஸ் ஜெயராஜ் இசையில்-கேட்ட முதல் தடவையே மனதை சில்லிடச் செய்த நெஞ்சில் நெஞ்சில் பாடல் 'எங்கேயும் காதல்' திரைப்படத்திலிருந்து என்று அனைத்துமே அருமை...!  பல முறை பார்த்து, கேட்டு மகிழ்ந்தேன்.  நீங்களும் பார்த்திருப்பீர்கள்..., கேட்டிருப்பீர்கள்.  மகிழ்ந்த அவைகள் அனைத்தையும் விட முக்கியமானாதாக நான் கருதும் ஒரு சந்திப்பை, உரையாடலை மட்டுமே தங்களிடம் பகிர விரும்புகிறேன்...!  இதோ அந்த நிகழ்வு...!

ஒரு முறை, பிரதி எடுக்க அருகிலிருந்த கடைக்கு சென்றேன். கடை உரிமையாளர் ஐம்பதுகளை கடந்த பெண்மணி. பல வருடங்கள் கழித்து சந்தித்ததால், சில மணி நேரங்கள் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டோம். தூய்மையின்மை, லஞ்சம், அக்கறையின்மை, என்று நம் மக்களின் குணங்களை பற்றி திரும்பியது பேச்சு...!  மக்கள் தொகைப் பெருக்கமே இவை எல்லாவற்றிற்கும் மூலம் என்றார் அப்பெண்மணி.  "நானும் நம்முடைய மக்கள் தொகையைத் தான் காரணமாக எண்ணியிருந்தேன். ஆனால் மக்கள் தொகை பெருக்கம் என்பது ஒழுக்கத்தின் அளவீடாக ஆக முடியாது என்ற உண்மையை உணர்ந்து பின்னர் நானே என் எண்ணத்தை மாற்றி கொண்டேன். மக்கள் தொகை பெருக்கம் என்பது மாற்றத்திற்கான ஒரு இடைஞ்சல் என்று வேண்டுமானால் கூறலாம். அதுவே முழு காரணமாக முடியாது.  இந்தியாவை உள்ளிருந்து,  ஒரு அமைப்பின் அங்கமாய் பார்த்தலை விட, அதை வெளியிலிருந்து பார்த்தால் தான் நாம் எவ்வளவு பின்தங்கி ஒரு காட்டுமிராண்டி வாழ்க்கை வாழ்கிறோம் என்பது தெரியும். வல்லரசு ஆவதெல்லாம் அடுத்த விஷயம், முதலில் நாகரீகமாக வாழ கற்றுகொள்வோம் நாம்.  இந்த தேசிய குற்றங்களின் தொடக்கம் தனி மனித ஒழுக்கமின்மையே ஆகும்.....! ", என்று கூறி அவ்வாதத்தில் என்னிலையை நான் விளக்கினேன். 

அதை பெரிதாக ஆமோதித்த அவர்,  உங்களைப் போன்று வெளிநாட்டில் முன்னேறிய வாழ்வை அனுபவிப்பவர்கள், NRI'கள் இங்கே பின் தங்கி இருக்கும் மக்களின் வாழ்வை வளமாக்க என்ன பெரிதாக செய்கின்றீர்கள்...?  இங்கேயே படித்து பட்டம் பெற்று வெளிநாட்டில் டாலர், டாலர்களாக சம்பாதித்து, அவர்களின் இயலாமையை சுட்டி, சுட்டி குற்றம் சுமத்தும் நீங்கள் அவர்கள் வாழ்வில் மேன்மையுற இவை போன்ற வார்த்தைகளை தவிர ஆக்கப்பூர்வமாய் என்ன கொடுத்திருக்கிறீர்கள்....? பல ஏற்ற இறக்கங்களை கண்டு விட்ட பழுத்த  அனுபவசாலியின் கேள்விக்கணை.

முகத்தின் குறுக்கே சாட்டையடி...!  பதிலில்லை...என்னிடம்...! தேடலில் நான் இப்போது...! 


(படம் தந்த கூகுள்' க்கு நன்றி)
--விளையாடும் வெண்ணிலா....


வியாழன், 17 பிப்ரவரி, 2011

பொண்ணப் பெத்தவன்...!

அவர் பெயர் கணேசன். எனது நெருங்கிய நண்பன் ஒருவனின் பள்ளித் தோழர். உத்தேசமாக, என்னை விட ஐந்தாறு வயது மூத்தவர். மிக ஏழ்மையான பின்னணியில் இருந்து வந்திருந்தாலும், தான் படிக்கவில்லை என்ற ஏக்கமும், தன் சந்ததியை படிப்பறிவு பெற்ற சமூகமாக விதைக்க வேண்டும் என்ற வெறியும் இருந்ததாலும், கூலித் தொழிலாளியான கணேசனின் தந்தை அவரை எனது நண்பன் படித்த அந்த வட்டாரத்திலேயே சிறந்த பள்ளியொன்றில் சேர்த்து பயில வைத்தார். நாளடைவில், அந்த தொழிலாளி குடும்பத்தை வறுமை அரக்கன் தன் அகோரப் பசியால் முடக்க கணேசனின் படிப்பு நூலறுந்த பட்டமாய் பாதியிலயே அறுந்து வீழ்ந்தது. பின்னர் குடும்ப சூழலை உணர்ந்து, வீட்டிலுள்ள உருப்படிகளின்  அத்தியாவசிய தேவைகளை  பூர்த்தி செய்ய குடும்பச் சுமையை தன் தோளில் சுமக்கலானார். தொடக்கத்தில் பல்வேறு கூலி வேலைகளுக்கு போக தொடங்கிய அவர், சில வருடங்களில்  வருமானத்திற்கு  நிரந்தர தீர்வாக கருதி தனக்கென ரிக்க்ஷா ஒன்றை வாங்கி முழு நேர ரிக்க்ஷா தொழிலாளியானார்.  


திருமணம், குழந்தைகள், குடும்பம் என்று வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை தனது சிறிய வயதிலேயே கடக்க துவங்கி விட்டார். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். குடும்பம், பொருளாதார நெருக்கடி என்று எத்தனை பிரச்சினைகள் இருந்தாலும் எங்களை கண்டு விட்டால் அந்த பள்ளிக்கால கணேசனாக மாறி சிரிக்க சிரிக்க பேசி எங்களை மகிழ்விக்கும் பாசமிக்கவர். கல்லூரி கடந்த பிறகு பணிக்காக வட இந்தியாவிலேயே நான் அதிக வருடங்கள் வசிக்க நேரிட்டதால், அவரை பார்த்தே ஏழெட்டு வருடங்கள் கடந்திருந்தது.  சமீபத்தில் டில்லியிலிருந்து விடுமுறைக்கு நான் எனது வீடு சென்றிருந்த நாட்களில் ஒரு நாள் அவரை ஏதேச்சையாக சந்தித்தேன்.  நான் சாலையை கடக்க காத்திருந்த போது, பின்னிருந்து சார்...என்னங்க..., சார்...என்னங்க... என்று குரல் ஒலித்துக் கொண்டேயிருந்தது.  குரல் மெலிதாக ஒலிக்க தூரத்தில் யாரையோ நோக்கி இருக்கும் என்று கருதியதாலும், சிக்னலில் சாலையை கடக்கும் தீவிரத்தில் இருந்ததாலும், நான் பொருட்படுத்தவில்லை. சாலையை கடந்து, ஏதோ நினைவில் பின் திரும்பிப் பார்த்தால்...கணேசன். சார்...சார்..என்று என்னை நோக்கி ஓடோடி வந்து கைகளைப் பற்றினார் மிக்க மகிழ்ச்சியுடன்.  பல வருடங்களுக்கு பிறகு அவரை பார்த்ததில் எனக்கும் மிக்க ஆனந்தம். இருவரும் பரஸ்பர விசாரிப்புகளை பரிமாறிக்கொண்டோம்.  "ரொம்ப நேரமா கூப்டிட்டே இருந்தேன்.. நீங்க திரும்பி பார்க்கவே இல்ல..சுற்றி இருந்த எல்லாரும் என்ன ஒரு மாதிரி பாக்க ஆரம்பிச்சிட்டாங்க சார் ...", என்றார் வருத்தத்துடன்.  "அப்படியா..நான் யாரோ யாரையோ  கூப்பிடறாங்கன்னு நெனச்சிட்டேன் சாரி..நீங்க பேர சொல்லி கூப்பிட வேண்டியது தானே..", என்று அவரின் தோளைப் பற்றினேன். கூச்சத்துடன் நெகிழ்ந்து என் பிடியிலிருந்து நழுவ முயன்றார்.  அருகில் இருந்தவரிடம் "என்னுடைய பிரண்ட், டில்லியில இருக்கார்..", என்று பெருமையுடன் கூறினார் நண்பனின் வளர்ச்சி உயர்வில் ஆனந்தமடையும் அந்த உயிர் நண்பன்.  உலகில் இன்னும் முழுமையாக கெட்டழியா உறவுகளில் முதன்மையான 'தாய்/தந்தை-சேய்'  உறவுக்கு அடுத்த நிலையில் நான் வைத்து வியந்து பார்க்கும் உறவு -'நட்பு'.  நெகிழ்ந்தேன் அவரின் அன்பில்.  மறுதினம் குடும்பத்துடன் என்னுடைய வீட்டில் விருந்தில் கலந்து கொள்ளுமாறு அழைத்தேன் அவரை. கூச்சத்துடன் மறுத்து விட்டார். "மறந்து விடாதீர்கள்" என்ற அவரின் பாச வார்த்தைகளில் இருந்து மீள முடியாமல் கைப்பேசி எண்ணை கொடுத்து விட்டு விடை பெற்றேன் மறு நாளே அவரை அப்படியொரு குமபலுக்கிடையில், ஒரு அசாதாரண சூழ்நிலையில் சந்திப்பேன் என்பதை அறியாமலே....!

அன்று வெள்ளிக் கிழமை. மாலை ஆறரை மணி வாக்கு. எனது தாயாருடன் கோவிலுக்கு சென்றிருந்தேன். வழக்கம் போல ஏழு மணி பூஜை. திவ்ய தரிசனம்.  சிறிது நேரம் கோவிலில் அமர்ந்துவிட்டு நானும் என் தாயாரும் தெற்கு வாயிலின் வழியாக வெளியே வந்தோம். எப்போது ஆலயத் தொழுகை வந்தாலும் நான் வழக்கமாக எனது காலணியை விடும் அதே கடையில் தான் அன்றும் நானும் எனது தாயாரும் காலணிகளை விட்டிருந்தோம்.  ஆனால் அன்று அந்த நேரத்தில் அந்த கடையை சுற்றிலும் வழக்கத்துக்கு மாறான கும்பலும், கூச்சலுமாக இருந்தது. "நாலு சாத்து சாத்துங்க, திருட்டு கழுத..." "அப்படியே கழுத்த நெரிச்சு கொன்னு போடுங்க திருட்டு நாய...", என்றும் இன்னும் புரியாத 'சில பல நாலு கால் பிராணிகளை ஈற்றில் கொண்ட வார்த்தைகளும்'  எல்லா திசைகளிலிருந்தும் சீறி காற்றில் மிதந்து வந்தன. என் தாயாரை கொஞ்சம் தூரத்திலேயே நிற்கச் சொல்லிவிட்டு நான் உள் நுழைய முயன்றேன்.

ஒரு கை பிரம்புடன் தரையில் கிடந்த ஒரு உருவத்தை விளாசு விளாசென்று விளாசிக் கொண்டிருந்தது. "இனி இப்படி பண்ணுவியா...கொழுப்பெடுத்து அலையற...உன்ன இப்போ என்ன பண்றேன் பாரு..." என்று உறுமியவாறு கீழே கிடந்த அந்த உருவத்தை தோலுரித்துக் கொண்டிருந்ததது அந்தக் கை.  இன்னும் சிறிது தூரம் உள்ளே சென்றால் மட்டுமே என்னால் அங்கு என்ன நடக்கிறதென்று புரிந்து கொள்ள முடியும். ஆனால்,  இது ஏதோ இரு குடிகாரர்கள் இருவருக்கும் இடையேயான பிரச்சினையாகவோ, திருடி மாட்டிகொண்ட ஒருவனை பிடித்து விட்ட திருட்டு கொடுக்க இருந்த ஒருவனுடைய பிரச்சினையாகவோ இருக்கலாம் என்று தோன்றவே,  நான் எங்களுடைய காலணிகளை திரும்பப் பெற வழிவகை தேடி கண்களை அலை பாயவிட்டேன். இவ்வளவு குழப்பத்துகிடையிலும் அங்கே ஒரு மூலையில் கடை உரிமையாளப் பெண்மணி ஒரு ருபாய் விகிதம் ஒரு ஜோடி காலணிக்கு பெற்றுக் கொண்டு செருப்பை உரியவர்களிடம் கொடுத்துக் கொண்டிருந்ததை கிடைத்த ஜனத்திரளின் இடுக்குகள் வழியே கண்டேன்.   அந்தத் திசையை நோக்கி நடக்க அந்த கூட்டத்திலிருந்து வெளியேற  எத்தனித்து பின் திரும்பிய போது தான் வந்து விழுந்தன அந்த வார்த்தைகள் குழப்ப கும்பலின் நடுவிலிருந்து,  "கணேசா..டேய் கணேசா..விட்ரா..செத்து கித்து தொலைய போறா...".   யூகித்துக் கொண்டேன்,  "உதைத்து நொறுக்கப்படுவது பெண்ணினமோ...?".   நீங்க சும்மா இருங்கண்ணே...உங்களுக்கு தெரியாது..", பதிலுரைத்தது ஒரு கோபக் குரல், மூர்க்கமாக.  அக்குரல் எனக்கு பரிச்சயப்பட்ட குரலாகப் தோன்றவே  சற்று நிதானித்தேன். தொலைவில் என் தாயார் என் மீது வைத்த கண்களை எடுக்காமல் என்னையே பின் தொடர்ந்து கொண்டிருந்ததை பார்த்து அவருக்கு சிறிது நிமிடங்கள் காத்திருக்குமாறு சமிக்ஞை கொடுத்துவிட்டு, குரல் ஒலித்த திசையில் வலுகொண்டு முன்னேறினேன்.


கோபக்கார அந்தக் குரலுக்கு உடையவராக குழப்ப கும்பலின் நடுவிலிருந்து ஒரு குரலால் குறிப்பிடப்பட்ட அந்த கணேசன், எனது "ரிக்ஷா நண்பன்" கணேசன் தான்.  பிரம்பை பிடித்திருந்த அந்தக் கைக்கு சொந்தக்காரரும் அவர்தான் என்பதை அவர் கை பற்றியிருந்த பிரம்பும் உணர்த்த சற்றே அதிர்ச்சி எனக்கு. அவர் கண்களில் நெருப்பாய் தெரிவதென்ன..? அவர் உணர்ச்சிக் கொந்தளிப்புகளின் அர்த்தமென்ன...? அவர் கோபத்தின் நியாயமென்ன...?  கீழே கந்தலாய், தலை மயிர்கள் மண்ணில் புரள, அணிந்திருந்த பாவாடை கிழிசல்கள் வான் நோக்க, முகத்தை பூமித்தாயினுள் புதைத்து தேம்பிக்கிடந்தது அவ்வுருவம்.  இவ்வளவு ஆண் கூட்டத்துக்கு நடுவில் ஒரு பெண்ணில்லை. என் கோபத்தீ என்னை திமிறிக்கொண்டு உள் நுழையச் செய்தது. கணேசனை நேருக்கு நேர் பார்த்து "கணேசன், என்ன இது..?" என்று கேட்டுக் கொண்டே கீழே கிடந்த அந்த பெண்ணை நோக்கினேன்.  நிலவிய சூழ்நிலை அவர் என்னை எப்போது சந்தித்தாலும் உதிர்க்கும் சிநேக சிரிப்பை அவரிடம் கட்டுப் படுத்தியிருந்தது. ஆனால் அவர் கண்களில் இருந்த கோப வெறி அடங்கி தலையை கீழே தொங்கவிட்டிருந்தார்.  அந்தக்  கந்தல் பெண்ணின் பாவாடை கிழிசல்களில் தெரிந்தது அவளின் வறுமை மாத்திரமல்ல, சுற்றி மௌனித்து நின்ற அந்தக் கோர மனிதர்களின் கொடூர மனங்களும், ஈவு, இரக்கமற்ற அவர்களின் காமப்பார்வையும் தான்.  என்னையுமறியாமல், ஓங்கி ஒரு அறை விட்டேன் கணேசனை.  கொஞ்சம் பலமாகத்தான். அவர் சிறிதும் எதிர்பார்க்க வில்லை, சுற்றி நின்ற கூட்டமும் தான். ஒரு பெண்ணை அத்தனை பேர் வேடிக்கை பார்க்க விலங்கை அடிப்பதை போல் அடித்தது அநியாயம் என்று தோன்றியதால் மட்டுமே நான் கணேசனை அடித்து விடவில்லை. அந்த அநியாயத்தை நிகழ்த்தியவர் எனக்கு நன்கு அறிமுகமான ஒருவரே என்ற அந்த நினைவு கொடுத்த தைரியமே என்னை எனது கைநீளச் செய்திருக்கும் என்று நினைக்கிறேன். அங்கு வேறு யாராவது  ஒருவர் அந்த சூழ்நிலைக்கு காரணமாயிருந்தால் என்னுடைய எதிர்வினை இவ்வளவு வீரியமாய் இருந்திருக்குமா என்பதில் எனக்கும் சந்தேகமே. ஏனெனில், இந்த இழி சமூகம் நம் பலரது எதிர்ப்புக் குரல்களை ஊமையாக்கும் காரணிகளாக குடும்ப அமைதியை குலைத்தல், பொறுக்கிகளுடன் போராட வேண்டி வரும் கோர நிலை என்பது போன்ற கேடுகெட்ட 'ப்ராக்டிகல் உண்மைகள்' அனைத்தையும் தன்னகத்தே கொண்டு இருப்பதால், அவைகள் என்னையும்  மௌனித்தே இருக்க செய்திருக்கும். 


கணேசனின் கண்கள் பனிக்கத் தொடங்கி இருந்தன. "எல்லோரும் போங்க, எது நடந்தாலும் எல்லாத்தையும் விட்டுட்டு அப்படியே வேடிக்கை பார்க்க வந்துடுவீங்களே...., அடுத்தவன் வீட்டு விவகாரம்னா  நமக்கு வெண்பொங்கல் சாப்பிடற மாதிரி தானே..., எடத்த காலி பண்ணுங்க..!  கணேசன்...!,  எல்லாரையும் போகச் சொல்லுங்க.." என்று கத்தி விட்டு கீழே நிலை குலைந்து போயிருந்த அந்த பெண்ணை..இல்லையில்லை...சிறுமியை எழுப்பி மூலையில் உட்கார வைத்தேன்.  கூட்டம் "யார்ராவன்..?, இவர் பெரிய இவரு..., ஹேய் வந்துட்டருயா....போன்ற வார்த்தைகளை உதிர்த்துவிட்டு கலையத் தொடங்கியது.  கரைந்த கூட்டத்தினால் எனது தாயார் என்னை இப்போது தெளிவாக பதற்றத்துடன் பார்த்து கொண்டிருந்தார். அவரை கையமர்த்தி அமைதியாக இருக்கச் சொன்னேன்.  அவர் அமைதியானதாக தெரியாமல் போகவே,  என்னை நோக்கி வர எத்தனித்தவரை எனது செயற்கை புன்னகை தொற்றிய முகத்தின் மூலம் அமைதி காக்க வைத்தேன்.  "அந்தப் பொண்ண  கூட்டிச் சென்று வேறு உடை மாற்றுங்கள் ", என்று அந்த உரிமையாளப் பெண்மணியிடம் கூறினேன். அந்தச் சிறுமி அழைத்துச் செல்லப்பட்டாள்.

குனிந்த தலை நிமிராமல் கணேசன் என் முன்.  "சார், என்ன நடந்ததுன்னு தெரியாம என்னை அடிச்சிட்டீங்களே....!", என்றார்.   "என்ன நடந்திருந்தாலும் ஒரு பொண்ண இப்படியா நடு ரோட்ல போட்டு அடிப்பாங்க...?", நான். "சார்...பதினாலு வயசு சார், தோ...செருப்ப பாத்துகிட்டு காலத்த தள்ளிகிட்டு இருக்குதே இது தான் அந்தப் பொண்ணோட அம்மா...!  மூணு வருஷத்துக்கு முன்னாடி, இதே கோவில்ல யாசகம் எடுத்து சாப்டிட்டு இருந்ததுங்க. இங்க ஏற்கனவே யாசகம் எடுத்துகிட்டு இருந்தவங்க அடிச்சு தொல்லைப் படுத்தியதால, தற்கொல பண்ணிக்கலாம்னு போனதுகள தடுத்து நிறுத்தி, எனக்கு தெரிஞ்ச சில கோவில் பிரமுகர்கள புடிச்சி நான்தான் இந்த தொழில ஏற்பாடு பண்ணேன்.  இப்போ ஒரு வேளையாவது கௌரவமா சாப்பிடுதுங்க...! நேத்து ராத்திரி இந்த புள்ளைய நாலு குடிகார நாய்ங்க பஸ் ஸ்டாண்டு பக்கத்துல வச்சி...சொல்லவே நாக்கு கூசுது சார்...! நல்ல வேளையா அந்தப் பக்கம் சவாரி போன என் தோஸ்து ஒருத்தன் சரியான நேரத்துல போய்  சில நண்பர்கள்  துணையோட அந்த பிச்சைக்கார நாய்ங்கள, தேxxx பயலுங்கள  வெரட்டி இந்தப் பொண்ண வீட்ல கொண்டு போய்  விட்டுட்டு வந்திருக்கானுங்க...! எனக்கு சேதி இப்போதான் தெரிஞ்சி ஓடி வந்து, கடையில தானே உன்ன உக்காரச் சொல்லி வுட்டுட்டு போனா ஒன் ஆத்தா, நீ அந்த நேரத்துல எங்கடீ போனேன்னு கேட்டா, அந்த அண்ணனுங்க தான் சினிமாவுக்கு வரியான்னு கூப்டு போனாங்கன்னு சொல்றா...! வந்துச்சி கோவம், அதான் சார் யாரு எதுக்கு கூப்ட்டாலும் போயிருவியான்னு விளாசு விளாசுன்னு விளாசிட்டேன்", என்றார் ஒரே மூச்சில். "அங்க பாருங்க சார் அந்த பொண்ணோட ஆத்தாவ..., என்று இந்த குழப்பத்துகிடையில் தன் கடமையை ஆற்றிக் கொண்டிருந்த உரிமையாளப் பெண்மணியை நோக்கி என் கவனத்தை திருப்பினார். அந்தத் தாயார் கண்களில் தாரை தாரையாக கண்ணீருடனும், கும்பிட்ட கைகளுடனும் நேராக என்னை நோக்கி நடந்து வந்தார். எனது கண்கள் கலங்க எத்தனிக்க அடக்க முயன்று தோற்றேன். "அத ஒன்னும் சொல்லாதீங்க சாமி..., அது என் குல சாமிங்க", என்று என்னுடைய காலில் விழ வந்தவரை, ஐயோ...என்று தடுத்தேன். "என்னை மன்னிச்சுடுங்க கணேசன்", வேறு வார்த்தைகளில்லை என்னிடம் . ஊமையானேன். என் மனதில் உச்சத்தில் கணேசன்.

"நானும் ரெண்டு பொண்ணப் பெத்தவன்  சார்..எனக்கும் இதோட வலி என்னன்னு தெரியும் சார்..! அந்தப் பொண்ணு நல்லா இருக்கணும்னு தான் இப்படி நடந்து கிட்டேன்.  மானத்துக்காக சாவப் போனவ சார்  இவ ஆத்தா...! காசு பணம் இல்லாதவங்க மானத்தோட உயிர் வாழக் கூடாதான்னு  இவ ஆத்தா அப்ப கேட்டது இன்னும் என் காதுல கேட்டுகிட்டே இருக்கு....!  இன்னும், நான் தப்பு பண்ணியிருந்ததா  நீங்க நெனச்சா என்ன உங்க செருப்பாலயே அடிங்க சார்..", என்று காலணி அணியாத என் கால்களை பார்த்தவாரே கூறினார்.  அவரை சமாதனப்படுத்தினேன். அவர் என் நண்பர் என்பதில் மிக்க பெருமிதம் அடைவதாக சிலாகித்தேன். அவர் கொஞ்சம் சகஜ நிலைக்கு திரும்பினார்.  அவர் கண்களில் நெருப்பாய் தெரிவதென்ன..? அவர் உணர்ச்சிக் கொந்தளிப்புகளின் அர்த்தமென்ன...? அவர் கோபத்தின் நியாயமென்ன...? என்னுடைய இந்தக்  கேள்விகளுக்கு விடைகள் கிடைத்துவிட்டன அந்த கவரிமான் சாதியிடமிருந்து.

நானும் என் தாயாரும் காலணிகளை பெற்றுக்கொண்டு புறப்பட்டோம். யாரது என்று கேட்ட தாயாரிடம் நண்பர் ரிக்ஷாக்காரர் என்று சொன்னதும், உனக்கு இவங்கல்லாம் கூட பிரெண்டா என்று ஒரு ஆச்சரியப் பார்வை பார்த்தார்  என்னுடைய வீட்டு முகம் மட்டுமே கண்ட என் அன்புத் தாய். ஆனால், ஒரு விஷயம் மட்டும் நெஞ்சை அறுத்துக் கொண்டே இருந்தது.
அந்த சிறுமி என்ன தவறு செய்தாள்?  குற்றவாளிகள், வெகு ஜனத்தை மற்ற விஷயங்களில் இருந்து திசை திருப்பும் சினிமா மோகத்தை அந்த பிஞ்சிடம் விதைத்த இந்த சமூகமும், அதை தங்களின்  சதை வெறிக்கு சாதகமாக பயன்படுத்த  முயன்ற அந்த நான்கு குடிகார வேசிமகன்களும் அல்லவா? தண்டனை ஏன் அந்த பிஞ்சு குழந்தைக்கு. இன்னும் இந்த கேடுகெட்ட சமூகம் பெண்ணுக்கான பாதுகாப்பில் பெண்ணையே குற்றவாளியாக பார்ப்பது ஏன்?  ஒரு பெண்ணின் கற்பை உயிரினும் மேலானதாக குறிக்கும் இச்சமுதயாமே அதனை பாதுகாக்கும் பொறுப்பையும், உரிமையையும் தட்டிக் கழிக்கும் நோக்கில், "வீக்கர் செக்ஸ்" என்று சொல்லப்படும் அவர்களே காத்துக் கொள்ள வேண்டும் என்று நிர்பந்தித்து, அதை பறிப்பதற்கான எல்லா வழிகளையும் திறந்து வைத்துவிட்டு பெண்களையே குற்றவாளிகளாக, பலி ஆடுகளாக ஆக்குவது எந்த விதத்தில் நியாயம்.

அதே  சமூகத்தின் ஒரு அங்கம் என்று நினைக்கும் போது என் மேலேயே எனக்கு அருவெருப்பாய் இருக்கிறது.


(படம் தந்த கூகுள்' க்கு நன்றி)
--விளையாடும் வெண்ணிலா....